தொழில்நுட்ப ஜாம்பவான்களை கண்டு அலறும் ரிசர்வ் வங்கி! என்ன நடக்கிறது?
உலக அளவில் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான (big tech) கூகுள், ஃபேஸ்புக் (Meta), அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது இந்தியாவை பொருத்தவரை ரிசர்வ் வங்கிக்கு மிகப் பெரும் கலக்கத்தை கொடுத்துள்ளது.
“அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நான்கு பெரிய tech giant-கள் வங்கியில் நுழைந்து தங்கள் வாடிக்கையாளர்களை பின் தொடர்வார்கள் என்பது வங்கி நிர்வாகிகளின் மிகப்பெரிய அச்சங்களில் ஒன்றாகும்” என்று பாரெஸ்டரின் முதன்மை ஆய்வாளர் அலிசன் கிளார்க் என்பவர் 2020 ஆம் ஆண்டு தனது அறிக்கையில் எழுதியிருந்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் வங்கியின் சார்பில், “சில்லறை வணிகத்தில் பணபரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது பாரம்பரிய வங்கி சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும். தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொழில்துறையில் தனது நிதிமூலதன முதலீட்டை போடுவதை காட்டிலும் நிதித்துறையில் (financial investment) முதலீட்டைப் போடுவது பல மடங்கு லாபம் குவிக்கின்ற, தனது லாப வேட்டைக்கு உத்தரவாதமானது என்று நிதியாதிக்க கும்பல்கள் உலகை சூறையாடி வருகிறது. இதற்குப் பொருத்தமாக கடன் வலையை அகலமாக விரிக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் அமேசான் சிறுவணிக கடன், கடன் மற்றும் கடன் அட்டைகள் உள்ளிட்ட தனியார் வங்கி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு வசதியாக அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களான ஜேபி மார்கன் சேஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், சிங்கரெனி ஆகிய நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த அமேசான் நிறுவனத்தின் Amazon Web cloud service- ஐ அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளான கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் கேப்பிட்டல் ஒன் போன்ற வங்கிகள் பயன்படுத்துகின்றன.
இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் வங்கிகளில் உள்ள பயனாளர்களின் அல்லது வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடி கொள்கின்றன என்பதுதான். ஏனென்றால் அமேசான் ஆனது டேட்டா மற்றும் வேகமான தரவுகளை சேகரிக்கும் அகழியை தன்னகத்தே கொண்டுள்ளது.
இதுபோன்ற அளவிற்கு தொழில் நுட்பம் வாய்ந்த தகவல் திரட்டு பொறிகளை சாதாரண வங்கிகள் அமைத்துக் கொள்வது மிகவும் கடினம். இத்தகைய தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளுக்கு இணையான வங்கி சேவைகளை வழங்குவதாக களத்தில் இறங்குகின்றன.
அதன் ஒரு பகுதியாக சில்லறை வணிகத்தில் பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.
இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் தேசங்கடந்த தரகு முதலாளிகள் அனைவரும் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் என்ற பெயரில் வங்கிகளுக்கு இணையான நிழல் பொருளாதாரத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களை நுகர்வு சந்தைக்கு தள்ளி தவணை முறையில் நுகர்வு பொருட்களை வாங்குவதற்கு கடன் கொடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே பேடிஎம் போன்ற நிறுவனங்களின் மூலம் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு தான் வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளின் மூலம் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் தேர் சக்கரத்தில் இணைத்து பெரும்பான்மை மக்களை ஓட்டாண்டி ஆக்கவும், ஒருசிலர் கொழுக்கவும் வழிவகுத்து கொடுக்கிறது இந்திய ஆளும் வர்க்கம்.
படிக்க:
இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் 3000 குடும்பங்கள் இந்தியாவில் உள்ள 130 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உழைப்பு, செல்வங்கள், சேமிப்புகள் அனைத்தையும் பல்வேறு வகைகளில் சுரண்டி கொழுத்து வருகின்றனர்.
அக்னிபத் மூலமாக நாட்டின் பாதுகாப்பிற்கு என்று பீற்றிக் கொள்ளப்படும் இராணுவமே தனியார் மற்றும் ஒப்பந்த முறையில் மாற்றி அமைக்கப்படுகிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கு தனியாக ஒரு அடியாள் படையை ஒப்பந்த இராணுவத்தினருக்கு என்ற பெயரில் உருவாக்கி வருகிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவில் ராணுவம் என்ற ஒரு அரசு கட்டமைப்பு ஆர் எஸ் எஸ் கும்பலால் அரசு ராணுவத்திற்கு இணையான ஒரு குண்டர் படையும் இருக்கின்றபோது தற்போது கார்ப்பரேட்டுகளின் அடியாள் வேலைக்கு இளம் ரத்தம் தேவைப்படுகிறது.
இந்த லட்சணத்தில்தான் பணப் பரிமாற்றம் செய்வதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இறங்குவது பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அலறுகிறது ரிசர்வ் வங்கி.
இந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வங்கிகளுக்கு இணையாக சிறு வங்கிக் கடன் மற்றும் கடன் அட்டை வழங்கும் சேவையில் இறங்குவது மூன்று முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி கவலைப்படுகிறது.
1. அவர்களின் சேவை மற்றும் நிதி வழங்கல் தொடர்பான கண்காணிப்பு என்பதை ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ள அளவீடுகளுக்கு அதிகமாகவே அல்லது மீறுகின்ற வகையில் செயல்படுவதை தடுக்க முடியாது. 2. இத்தகைய நிதிநிறுவனங்கள் கையில் பல லட்சம் கோடி கையிருப்பு வைத்திருப்பதால் இந்தியாவிலுள்ள வங்கிகளை ஓரங்கட்டிவிட்டு விரைவில் நிதி துறையில் மேலாதிக்கம் செலுத்த துவங்கி விடும். 3. பொதுவாகவே இந்த தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களுக்குள்ள இணையதள தொழில்நுட்பம் மற்றும் தரமான கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் நிதித்துறையில் அனைத்தையும் ஒருங்கிணைத்து மேலே வந்துவிடும் என்று கருதுகின்றனர்.
படிக்க:
இந்தியாவின் நிதி சந்தையை யார் கைப்பற்றுவது என்ற போட்டி அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் நாட்டிற்கு வெளியே உள்ள நான்கு பெரும் தொழில்நுட்ப ஜாம்பவான்களும் இடையில் நடக்கிறது.
இத்தகைய போட்டியானது மக்கள் மற்றும் சிறு தொழில் முனைவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரின் கையில் இருக்கும் சேமிப்பையும் சம்பளத்தையும் சட்டப் பூர்வமாகவும் சட்டத்திற்கு விரோதமான பல்வேறு வகைகளில் உறிஞ்சி கொழுப்பதற்கு வழிவகுக்கும் என்பதே நமது அச்சம்.
நாட்டின் பாதுகாப்பு என்று கருதப்படும் இராணுவம் தனியார்மயமாவதும், இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கிக்கு போட்டியாக தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குதிப்பதும் நடக்கிறது. இன்னமும் இந்த நாடு சுதந்திரமானதுதான் என்று கருதிக் கொண்டு தேசபக்தி கூச்சலிடுவது வெட்கக்கேடானது.
- பா.மதிவதனி