நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?
தமிழ்நாடு அரசுக்கு “மாணவர் கூட்டமைப்பு – தமிழ்நாடு” கண்டனம்
17.05.2026
மருத்துவக் கல்லூரியில் பயில விரும்பும் மாணவர்களுக்கு எதிராக ’நீட்’ என்ற நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டு, அதில் பெரும் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்தும் போராடியும் வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் (பா.ஜ.க. தவிர்த்து) நீட் எதிர்ப்புச் சிந்தனையில் உள்ளவையே!
அரசியல் கட்சிகளைத் தாண்டி மாணவர் அமைப்புகள் தனித்தனியாகவும், FSO கூட்டமைப்பாக இணைந்தும் தொடக்கம் முதலே போராடி வருகின்றன. இந் நிலையில், கடந்த மே 3-ஆம் தேதி இந்திய அளவில் நீட் தேர்வு நடந்தபோது, அதற்கு முன்னதாகவே கேள்வித் தாள்கள் கசிந்துவிட்டதாகச் சர்ச்சை உருவாகி, அக் குற்றச்சாட்டு உண்மை என்று கண்டறியப்பட்டு, அதன் மீது நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்தியா முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னணியில் பா.ஜ.க.வும், தேசியத் தேர்வு முகமையும் இருப்பது அம்பலப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளைக் கண்டித்து, கடந்த 3 நாள்களுக்கு முன்பு, சென்னை சாஸ்திரி பவன் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்ட “இந்திய மாணவர் சங்க (SFI)” மாணவர்களைக் கைது செய்தும், வழக்கு தொடுத்தும், சட்டையைக் கிழித்தும் காவல்துறை நடந்து கொண்ட போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் பாதிக்கப்படும் ஒரு பிரச்சினைக்கு மாணவர்கள் தான் முன்னின்று போராட முடியும். அதிலும், மிகப் பெரிய அநீதியும், மோசடியும் நடந்திருக்கும் சூழலில் அதற்கெதிராகப் போராடும் மாணவர்களைச் சட்டையைக் கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ள காவல்துறையின் போக்கு தமிழ்நாடு அரசுக்கு உடன்பட்டதா என்பதை புதிய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
எத்தனை அடக்குமுறைகள் தொடர்ந்தாலும், அவற்றுக்கெல்லாம் அஞ்சி ஒரு போதும் மாணவர்கள் ஒடுங்க மாட்டார்கள். இது எங்கள் பிரச்சினை மட்டுமல்ல – வருங்காலத் தலைமுறைக்குமான பிரச்சினை!
‘நீட்’டையும், தேசியக் கல்விக் கொள்கையையும் ஒழிக்கும் வரை அறவழியில் எங்கள் போராட்டமும், அறிவு வழியில் எங்கள் பரப்புரையும் ஒரு போதும் ஓயாது!
அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்போம்!
கல்வித் துறையில் காவி – கார்ப்பரேட் மயம் ஒழிக! மாணவர் ஒற்றுமை ஓங்குக!
வீரமணி ஜெயக்குமார்
தௌ.சம்சீர் அகமது
ஒருங்கிணைப்பாளர்கள்
ஒருங்கிணைப்புக் குழுவினர்:
அ.அப்துல் அஜீஸ், இரா.அருள் ஜோதி பாபா, ஏ.எம்.எச்.அன்சர் அலி, பால.சசிகுமார், இரா.செந்தூர பாண்டியன், பா.தினேஷ், தயா.நெப்போலியன், சிதம்பரம் பைசல், மணியரசன், ராகேஷ் ராஜசேகரன்
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு (FSO-TN)
உறுப்பு அமைப்புகள்:
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF),
இந்திய மாணவர் சங்கம் (SFI),
இந்திய மாணவ இஸ்லாமியர் அமைப்பு (SIO),
சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI),
திராவிட மாணவர் கழகம் (DSF),
திராவிட மாணவர் பேரவை (DMP),
திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி (DMK),
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி (RSYF),
மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி (MNM),
மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி (MDMK),
மாணவர் இந்தியா (MI),
முற்போக்கு மாணவர் கழகம் (RSF),
முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள்






