நடந்து முடிந்த மோசடி தில்லுமுல்லு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியுற்றதும் ‘பரம ஏழை’யான ஆதவ் அர்ஜூன் “மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது” எனப் பிதற்றினார். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தவெக மாநிலப் பொருளாளருமான பார்ப்பனர் வெங்கட்ரமணன், நடிகை சங்கீதா கணவன் கிரீஷ் இன்னும் ‘இதுகள்’ போன்றோர் ‘இனி பார்ப்பனீயம், சனாதனம் குறித்து எவன் வாய் திறந்து பேசுகிறான் என்பதைப் பார்ப்போம்…’ என்று சவால் விடுக்கும் வகையில் பார்ப்பனக் கொழுப்பெடுத்துத் திமிர்த்தனமாகப் பேசியதைப் பார்த்தோம்.
இப்படிப்பட்ட சவடால்களை இந்த அரசியல் பொறுக்கிப் பிழைப்புவாதிகள் பேசாமல் இருந்திருந்தால் கூட உதயநிதி ஸ்டாலின் இப்படி உடனடியாக சனாதனம் குறித்து கருத்து ஏதும் கூறாமல் இருந்திருப்பார். இவர்களது சவடால்களும், சவால்களும் ஆத்திரத்தை மூட்டிவிட்டதோ என்னவோ, விஜய் ஆட்சிக்கு வந்து எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த பின், தமது முதல் உரையிலேயே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் மண்ணில் மக்களைப் பிளக்கும் சனாதனம் ஒழிக்கப் பாடுபடுவோம்’ என்ற பாணியில் ஓங்கி ஒலித்து சட்டமன்றப் பதிவேடுகளிலும் அக்கருத்தைப் பதிவுபெறச் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
சவடால் விட்டவர்களுக்கும், சவால் விடுத்தவர்களுக்கும் முகத்தில் கரி பூசினார்.
அந்த வகையில் இது விடயத்தில் உதயநிதி ஸ்டாலினை நாம் பாராட்டுவோம். இவர் இதற்கு முன் தமுஎகச நடத்திய சனாதன எதிர்ப்பு அரங்குக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, ‘டெங்கு, மலேரியா கொசு எதிர்ப்பு என்று சொல்ல மாட்டோம்; அவற்றை ஒழிப்பு என்றுதான் கூறுவோம்; எனவே இந்த கூட்டத்திற்கு சனாதன எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக மக்களைப் பிளக்கும் சனாதன ஒழிப்பு என்ற தலைப்பில் கூட்டம் நடத்தியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்…’ என்ற பாணியில் சிறப்பான கருத்துப் பதிவை செய்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை சங்கிகள் மத்தியில் உருவாக்கி நீதிமன்றம் வரை கொண்டு சென்றனர்.
சனாதன எதிர்ப்புப் போரில் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுக்கும் “மக்கள் அதிகாரம்” சார்ந்த அமைப்புகள் உதயநிதிக்கு இவ்விடயத்தில் ஆதரவுக் கரம் நீட்டினோம். இப்பொழுதும் நீட்டுகிறோம்! இத்தகைய விடயங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்!
ஊளையிடும் பார்ப்பனர்களும், சங்கிகளும்!
உதயநிதி சட்டமன்றத்தில் பேசி முடித்தது தான் தாமதம்; பாஜகவின் வானதி சீனிவாசன் ‘இவ்வளவு தோல்விக்குப் பிறகும் உதயநிதி திருந்தவில்லை’ எனத் ‘திருவாய் மலர்ந்திருக்கிறார்’! நாராயணன் திருப்பதியோ, ‘இப்படியே பேசிக் கொண்டிருந்தால் திமுக முற்றிலுமாக அழிந்து விடும்’ என்று ‘சாபம்’ இடுகிறார்.
பல மாதங்களாக வாயே திறக்காமல் பக்கவாதத்தில் முடங்கிக் கிடக்கும் எச். ராஜாவோ சனாதன எதிர்ப்புக் குரல் அரசல் புரசலாகக் காதுக்கு எட்டிய உடனேயே, திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு துள்ளிக் குதித்தது போல் எம்பிக் குதித்து, ‘திருப்பரங்குன்றம் பிரச்சனையில் இந்து மதவாதம் என்று முத்திரை குத்திப் பேசியவர்கள், தற்போது சட்டமன்றத்திலேயே உதயநிதி சனாதனம் குறித்துப் பேசியதை என்ன வாதம் என்று கூறுவார்கள்’ எனப் புலம்புகிறார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் இன்னும் ஒரு படி மேலே போய் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். ‘தமிழகத்தின் 17- வது சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தனது உரையை முடிக்கும் முன்பு சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியுள்ளார். உதயநிதியின் இந்த பேச்சு சட்டப்பேரவையின் மாண்பையும், மரபையும் அவமதிப்பதாகும். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசு போல ஒழிக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். முதல்வர் விஜய் பதவி ஏற்பு விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என இந்த அரசு பாகுபாடு காட்டாது எனப் பேசி இருந்தார். அனைத்து வகை மக்களின் பிரதிநிதியாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பதிலாக இந்து மத சனாதன வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசி இருப்பது சபை மரபை மீறுவதாகும். உதயநிதி ஸ்டாலினின் இந்து விரோத பேச்சைக் கண்டித்து மே 17ஆம் தேதி கோவை, திருப்பூர், சென்னை, மற்றும் மதுரை ஆகிய நான்கு நகரங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’-என்பதாக அறிவிப்பு செய்துள்ளார்.
படிக்க: சனாதன எதிர்ப்பு, ஆதரவு நீங்கள் எந்த பக்கம்?
நல்லது, இந்து மத வெறியர்களே! ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். ஆனால் நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பும் – போராடும் சிலவற்றிற்கு மட்டும்விடை அளித்துவிட்டு உங்கள் ‘பயணத்தை’த் தொடருங்கள்! பார்ப்பனீய சனாதனம் போற்றும் மனஷ்மிருதி, பகவத் கீதை உள்ளிட்ட இந்து மத வேத இதிகாசங்களில் பிரம்மனின் நெற்றியில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் சத்ரியன், தொடையில் பிறந்தவன் வைஷ்ணவன், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன்; வேறு எங்குமே இடம் இல்லாததால் பெருமாளின் அழுக்கில் இருந்து பிறந்தோர் பள்ளுப்-பறை- சக்கிலி என்று எமது மக்களை வெட்டிப் பிரித்து வைத்திருக்கின்றீர்களே? பொறுக்கவே இயலாத கொடுமைகளை இன்று வரை செய்து கொண்டிருக்கிறீர்களே? இது எந்த வகையில் நியாயம்? எவ்வளவு காலத்திற்கு இந்த அநியாயங்களை இந்து மத முத்திரை குத்தப்பட்ட உழைக்கும் மக்களான நாங்கள் பொறுத்துக் கொண்டிருப்போம்?
இவ்வளவு மட்டுமா செய்தீர்கள்? கொடுந்துயரப் பட்டியல் நீளுமே!
தொட்டால் தீட்டு; பார்த்தால் பாவம்; கோவில்களில் நுழையத் தடை; ‘அக்ரஹார’ வீதிகளில் நடக்கத் தடை; தேவதாசி முறை; பெண் அடிமைத்தனம்; தோல் சீலை அணிய தடை; உடன்கட்டை ஏறல்; பார்ப்பனர்கள் தவிர்த்த அனைவரும் கல்வி கற்கத் தடை; அப்பன் தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் குலக்கல்வித் திட்டம்; பார்ப்பனனை தவிர்த்து வேதம் ஓத முனையும் பிறரது நாக்குகள் அறுக்கப்படல் வேண்டும்; செவிகளில் கேட்டால் அதனுள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் தடை; சிறு வயது பார்ப்பானைக்கூட, வயது முதிர்ந்த மற்ற சாதியினர் எல்லாம், ‘சாமி’ என்றும், ‘கும்பிடுறேன் சாமி’ என்றுமே அழைக்க வேண்டும்… இப்படிப்பட்ட எண்ணற்ற கொடுமைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாமே படுபாவிகளா!!
இவற்றில் சில பல ஒழிக்கப்பட்டிருந்தாலும், அதற்காக முன்பு வாழ்ந்த சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் ராஜாராம் மோகன் ராய், அய்யா வைகுண்டர், ஜோதிராவ் பூலே, நாராயண குரு, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் இடதுசாரி இயக்கத்தினர் முதலானோரின் பங்களிப்பு அளப்பெரிது.
ஆனாலும் உங்கள் சனாதன கோட்பாடுகளின் படி எஞ்சியிருக்கும் மிச்ச சொச்சங்கள் இன்று வரை எமது உழைக்கும் மக்களை பெரும் அளவில் பல்வேறு வடிவங்களில் துயரத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
படிக்க: சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதே! உரக்கச் சொல்வோம்!
நீங்கள் எப்பொழுதுமே அமைதியை விரும்புவோர் அல்ல; கொலை – கொள்ளை – பாலியல் தொல்லை – கலவரம் – சாதி வெறி – மதவெறி அனைத்தும் உங்களின் ரத்தத்தோடு கலந்தவையாகி விட்டன. அண்மையில் நடக்கின்ற ஆணவப் படுகொலைகளுக்கு ஆதிக்க சாதி வெறியர்கள் ஒருபுறம் இருந்திட்டாலும், இதில் பார்ப்பனர்கள் நேரில் பங்கு பெறுவதில்லை- என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் ஆணிவேராக பார்ப்பன சனாதனமே அடிப்படையாக விளங்குகிறது. அண்மைக்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் – மத நல்லிணக்கத்திற்கு விரோதமாக மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் மதக் கலவரத்திற்கு வித்திட்டுக் கொண்டிருக்கும் – இஸ்லாமியர்களின் சிக்கந்தர் தர்காவிற்குச் சொந்தமான எல்லைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றத் துடிக்கும் ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ பாசிசக் காவிக் கும்பல் தமிழ்நாட்டை ஆட்சி மாற்றம் மூலம் எந்த நிலைக்கு கொண்டு வந்து விடப் போகிறதோ என்ற கவலை சமூக உணர்வு படைத்த – ஜனநாயக உணர்வுள்ள அனைவரது கவலையாக உள்ளது.
மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப் பட்டேயாக வேண்டும்!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அரசியலமைப்பு சட்டத்தின் படி நீதிபதியாக பதவியேற்றுவிட்டு தற்போது இப்படிக் கூறுகிறார்: ‘எனக்கு இன்னும் நான்கரை ஆண்டு பதவிக்காலம் இருக்கிறது; இப்பணிக் காலத்தில் நான் முற்றிலும் சனாதன தர்மத்தின் வழியே பணியாற்றி ஓய்வு பெறுவேன்…’ என்ற பாணியில் பேசியிருக்கிறார். கொழுந்துவிட்டு எரியும் திருப்பரங்குன்றம் பிரச்சனையில் இவரே மூல காரணமாக இருக்கிறார் என்பது மட்டுமல்ல; சிக்கந்தர் தர்காவிலுள்ள எல்கைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதைப் போன்ற ‘மாதிரி கார்த்திகை தீபத்தை’ ஏற்றிக் காண்பித்து ஊடக வெளிச்சத்தில் மக்கள் பார்க்கும்படி செய்துள்ளார். இந்தக் கொடுமைகளை எல்லாம் எவ்வகைப் பட்டது என்று கூறுவது?
‘நான் சனாதன ஒழிப்பு குறித்து பேசுவது என்பது மக்களை சாதி ரீதியாக உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனப் பிரித்து வைத்திருப்பதைத் தானேயொழிய,மக்கள் கொண்டுள்ள கடவுள் நம்பிக்கை, பத்திக்கு எதிரானதல்ல; திராவிட இயக்க தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தான் எனது கருத்துக்களை மக்கள் முன் வைக்கின்றேன். அனைவரையும் இந்து என்று பசப்பிவிட்டு ‘சனாதன தர்மத்தின்’படி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என கற்பிதம் செய்வது கொடுமையிலும் கொடுமை! கடவுள் நம்பிக்கை- பத்தி என்பது வேறு; மக்களைப் பிளக்கும் சனாதனம் என்பது வேறு…’ என்பதை உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்திய பின்னரும் பார்ப்பனக் கும்பலும், சூத்திர சங்கிகளும் குய்யோ முறையோவென்று கதறுகின்றனர்.
இப்பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்கள் ஆர் எஸ் எஸ் – பாஜக – இந்துத்துவ பாசிசக் காவி கும்பலின் துற்போதனைகளுக்கு இறையாகி விடாமல் எச்சரிக்கையாக இருந்து சரி எது? தவறு எது? என்பதை ஆய்ந்தறிந்து எதிரிகளை நிர்மூலமாக்க அணி திரள வேண்டும்!
சற்றேறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பே மாபெரும் சமூக விஞ்ஞானி ஆசான் கார்ல் மார்க்ஸ் மதம் குறித்த பிரச்சினையில் அது மக்களை ஏய்க்கும் ஒரு போதை வஸ்து என்பதாக இப்படிக் கூறினார்:
“மனிதன் தான் மதத்தை உண்டு பண்ணுகிறான்; மதம் மனிதனை உண்டு பண்ணவில்லை…மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு பிராணியின் புலம்பல். மனமில்லாத ஓர் உலகத்தின் உணர்ச்சி. உயிர் இல்லாத நிலைமைகளின் உயிர். அது ஜனங்களுக்கு அபினி. ஜனங்களுக்கு சந்தோஷத்தை அளிப்பதாகப் பிரமை காட்டுகின்ற மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது ஜனங்களுடைய உண்மையான சந்தோஷத்தைக் கோருவதாகும்…”
இந்த ஆழமான உண்மை விடயத்தைத் தான் ஆசான்கள் லெனின் ஸ்டாலின் மாவோ அவரவர் கண்ணோட்டத்தில் இருந்து விளக்கிக் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அண்ணா, மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கர் போன்றோரும் அவர்களது கண்ணோட்டத்தினின்றும் மக்களுக்கு விளக்கிக் கூறியுள்ளனர். மதம் சார்ந்த கருத்துக்கள் யாவும் கடவுள் நம்பிக்கைக்கும் பொருந்தக் கூடியதே! இந்த மதமும் கடவுளும் தான் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு மூல காரணம் எதுவென்று அறியா வண்ணம் – கற்பனைப் பாத்திரங்களான இவற்றின் முன் உழைக்கும் மக்களை சரணாகதி அடையச் செய்துள்ளனர். விடியல் எப்படியும் ஏற்பட்டு விடும் என்று காலாகாலத்திற்கும் காத்துக் கிடக்க செய்கின்றனர்.
திராவிட இயக்கம்/மாடல் என்று கூறிக் கொள்ளும் பலரிடமும்கூட அறியா நிலையில் உள்ள மக்களை பகுத்தறிவு கண்ணோட்டத்தில் வளர்ப்பதற்குப் பதில் இவர்களே, கரங்களில் பல்வேறு வண்ணக் கயிறுகளை கட்டிக் கொள்வது; நெற்றியில் ‘மல்டி கலர்’ பட்டையடித்துக் கொள்வது; சாதி மத பக்தி ஈடுபாடுகளில் தம்மை ஐக்கியப் படுத்திக் கொள்வது; கொள்ளையடிப்பதில் குறியாய் இருப்பது… போன்ற சீர் கெட்ட பண்பாடுகளில் மூழ்கி முத்தெடுக்கின்றனர்.
எனவே இடதுசாரி மற்றும் முற்போக்கு புரட்சிகர இயக்கங்கள் மட்டுமின்றி பெரியார் வழி; அண்ணா வழி என்று சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவு சார்ந்த இயக்கங்களும், தமிழ்த் தேசிய இயக்கங்களும் சரியான திசை வழியில் களப்பணி ஆற்றாவிட்டால் – போராட்ட வியூகங்கள் அமைக்காவிட்டால் மக்களைப் பிளக்கும் பார்ப்பன சனாதனத்தைக் குழி தோண்டிப் புதைப்பது என்பது வெகு காலத்திற்கு நீண்டு செல்லும்.
செயற்பாடுகளை – களப்பணிகளைத் துரிதப்படுத்துவோம்!
மக்களைப் பிளக்கும் பார்ப்பன சனாதனத்தை வெட்டி வீழ்த்துவோம்!
- எழில்மாறன்






