மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக இந்திய மக்கள் பட்டினியால் இறப்பதையும் பார்க்கிறோம். கொரோனா காலத்தில் உணவிற்காக மக்கள் கையேந்தியதையும் பார்த்திருப்போம். இவையனைத்தும் மோடியின் ஆட்சிகாலத்தில் நடந்தவை தான்.

கார்ப்பரேட் மீடியாக்களால் ஊதிப்பெருக்கப்பட்ட மோடியை இன்றளவும் பாதுகாப்பவை அதே கார்ப்பரேட் ஊடகங்கள் தான். நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு கும்பல் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் எது நடந்தாலும் குறிப்பிட்ட ஊடகங்கள் ஒளிப்பரப்புவது கிடையாது. மாறாக நாட்டில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தொடு டி.வி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகின்றன கோடி மீடியாக்கள்.

 

ஜூன் மாதத்தில் அக்னிபாத்திற்க்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்து கிளம்பின. வேலையின்மையின் விளைவால் ஏற்கனவே கொதித்திருக்கும் இளைஞர்களுக்கு, இராணுவத்தையும் காண்டிராக்ட்மயமாக்கும் அக்னிபாத் திட்டத்திற்க்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் பற்றிப் படர்ந்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இந்த நேரத்தில் மோடி ஆதரவு மீடியாக்கள் போராட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இந்தியாவை பொறுத்தவரை அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையும், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வும் தான் தலைப்பு செய்தியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கோடி(Godi) மீடியாக்கள் அது குறித்து ஒளிபரப்பவில்லை, முக்கியத்துவம் கொடுக்கவில்லை என newslaundry தளத்தின் TV Newsence நிகழ்ச்சி மூலம் ஆதாரத்துடம் அம்பலபடுத்தியுள்ளார்கள்.

மார்ச் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 8 செய்தி சேனல்களில், இணையதளங்களில், யூட்யூப் சேனல்களில் நடந்த விவாதங்கள், ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளை அவர்கள் கண்காணித்து அவற்றை ஏழு வகைகளாக பிரித்துள்ளார்கள். வகுப்புவாத பிரச்சினைகள், Anti-opposition , பாகிஸ்தான், உக்ரைன் போர், பணவீக்கம், வேலையின்மை மற்றும் பிற.

கியான்வாபி மசூதி, ராம நவமியின் போது வன்முறை, ஹிஜாப் பிரச்சினை, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மற்றும் “ஜிஹாத்” தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இந்து மற்றும் முஸ்லிம் விவாதங்கள் “வகுப்புவாத பிரச்சனைகளில்” அடங்கும்.

“மற்றவற்றில்”(Others) சித்து மூஸ்வாலாவின் மரணம், காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய சர்ச்சை , மாநில தேர்தல்கள், கருத்துக்கணிப்புகள், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பல போன்ற செய்திகள் அடங்கும்.

ஜீ நியூஸில் , சுதிர் சௌத்ரி டிஎன்ஏ  நிகழ்ச்சியில் 73 விவாதங்களை நிகழ்த்தியுள்ளார். அதில் வகுப்புவாதம் குறித்த நிகழ்ச்சி மட்டும் 28. பணவீக்கம் அதிகரிப்பது குறித்து 2 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். வேலையின்மை குறித்து ஒரு நிகழ்ச்சிக் கூட நடத்தவில்லை.

 

ஆன் சவால் பப்ளிக்கா டைம்ஸ்நவ் நவ்பாரத் நிகழ்ச்சியில் நவிகா குமார் மொத்த 68 விவாதங்களில் 29 விவாதங்கள் வகுப்புவாத தலைப்புகளில் பேசினார் , வேலையின்மை குறித்து இவரின் விவாதத்தில் இடமில்லை.

 

Republic Bharat’s Poochta Hai Bharat நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கபூர் 96 விவாதங்களை நடத்தியுள்ளார். இதில் மத மோதல்களை உருவாக்கக் கூடிய 45 விவாதங்களை நடத்தியுள்ளார். டிஆர்பி ரேட்டிங்குக்காக உக்ரைன் போர் தொடர்பான 35 விவாதங்களை நடத்தியுள்ளார். இந்த சேனல் அர்னாப் கோஸ்வமியின் ரிபப்ளிக் டிவி இந்தி பிரிவு. இதுவும் வேலையின்மை தொடர்பான விவாதங்களை நடத்தவில்லை.

 

நியூஸ் டிவி 18 இன் “நம்பர் ஒன் ஷோ” அமிஷ் தேவ்கனுடனான ஆர் பார் நிகழ்ச்சியில் மொத்தம் 68 விவாதங்கள் நடத்தியுள்ளார். அதில் 43 விவாதங்கள் வகுப்பு வாதம் தொடர்பானைவை. இவரும் வேலையின்மை தொடர்பான விவாதங்களை நடத்தவில்லை.

 

ஆஜ் தக்கின் அஞ்சனா ஓம் காஷ்யப், 88 விவாதங்களை நடத்தினார். அதில் 45 விவாதங்கள் வகுப்புவாத பிரச்சினை தொடர்பானவையே. இவரும் பணவீக்கம் குறித்து 4 விவாதங்கள் நடத்தியுள்ளார். ஆனால் வேலையின்மை குறித்து விவாதங்கள் இல்லை.

 

அர்னாப் கோஸ்வாமியின் தி டிபேட் ஷோ  ரிபப்ளிக் டிவி 182 “கலந்துரையாடல்களை” நடத்தியது. ஊடக உலகில் யாரும் நடத்தியிராத எண்ணிக்கையில் விவாதங்களை நடத்தியுள்ளார். அதில் வகுப்புவாதம் தொடர்பாக 60 விவாதங்களும், உக்ரைன் போர் குறித்து 38 விவாதங்களும் நிகழ்த்தியுள்ளார். வேலையின்மை குறித்தோ அல்லது பணவீக்கம் குறித்தோ அர்னாப் பேசியிருக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

ABP செய்தியில் ரூபிகா லியாக்கத்தின் ஹூன்கார் 56 விவாதங்களை நடத்தியுள்ளார். அதில் 36 விவாதங்கள் வகுப்புவாத பிரச்சினைகள் தொடர்பானவையே. வேலையின்மை பணவீக்கம் குறித்து இவர்களும் ஒரு நிகழ்ச்சி கூட நடத்தவில்லை.

 

இதில் கொஞ்சம் வித்தியாசமானது NDTV நிகழ்ச்சி தான். இவர்கள் வகுப்பு வாதம் தொடர்பாக 23 விவாதங்களை நடத்தியுள்ளார்கள். இருந்தும் பணவீக்கம் தொடர்பாக 8 விவாதங்களையும், வேலையின்மை தொடர்பாக 4 விவாதங்களையும் நடத்தியுளார்கள்.

 

மக்களிடம் உண்மையை கொண்டு செல்லக் கூடிய இடத்தில் உள்ள மீடியாக்கள் எல்லாம் இந்தியாவில் மதகலவரத்தை, மத பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் மும்மரமாக ஈடுபடுகிறது என இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க

இதனை உண்மையென நம்பி தான் வட மாநில மக்கள் வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றை பற்றி கவனம் செலுத்தாமல் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மதவெறிக்கு பலியாகிறார்கள். அவர்களை மீறி செயல்படும் ஒரு சில மீடியாக்களையும் முடக்க பார்க்கிறார்கள். பத்திரிக்கையாளர்களை கைது செய்துகிறார்கள்.

பத்திரிக்கைகளும், மீடியாக்களும் மக்களுக்கு உண்மையை உணர்த்த வே பொறுப்பில் இருந்து விலகும் போது நாம் சும்மா இருக்க வேண்டியதில்லை. இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களுக்கு உண்மையை பரப்புவோம். பொய்யை பரப்பி மத கலவரங்களை உருவாக்க நினைக்கும் கோடி மீடியாக்களை மக்களிடம் அம்பலபடுத்துவோம்.

நன்றி: NEWSLAUNDRY

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here