வெற்றிகரமாக ? ஆறாவது ஆண்டில் ஜி.எஸ்.டி!
பரிசாக ! மக்கள் வாங்கும் மோர், தயிர்க்கு எல்லாம் வரி!

“ஒரு தேசம். ஒரு வரி” என பந்தாவாக முழங்கி, ஜி.எஸ்.டி வரிமுறையை துவங்கினார்கள். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. அரசு அதை கொண்டாடும் விதத்தில் 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சண்டிகாரில் கூடி, பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு புதிதாக வரியும், சில முக்கிய பொருட்களுக்கு கூடுதல் வரியும் போட்டிருக்கிறார்கள்.

தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் பாக்கெட் தயிர், மோர்க்கு எல்லாம் இப்பொழுது வரி விதித்திருக்கிறார்கள். பிஜேபி ஆதரவு வழக்கறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் ‘வசதியில்லாதவர்கள் வீட்டில் உறை ஊத்திப் பயன்படுத்துவார்கள். வசதியானவர்கள் தான் கடைகளில் பாக்கெட் தயிர் வாங்குகிறார்கள்’ என கூசாமல் முட்டுக்கொடுக்கிறார்.

கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிக்கட்டணமும், கல்லூரிக் கட்டணமும் கட்டுவதற்காக மக்கள் கடன் வாங்குவதற்கு அலையாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மாணவர்கள் பயன்படுத்தும் பேனா இங்க் போன்ற பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

பம்புசெட்க்கு 12% வரியிலிருந்து, 18%ஆக உயர்த்தியிருக்கிறார்கள். வரி உயர்ந்ததின் விளைவாக பம்புசெட்டின் திறனுக்கேற்ப ஏழு ஆயிரத்திற்கு மேலே விலை உயரும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இதனை கணிசமாக உற்பத்தி செய்யும் கோயமுத்தூர் உற்பத்தியாளர்கள், ‘குறைந்த விலையில் மூலப்பொருட்கள் குஜராத்தில் கிடைப்பதால் அவர்களோடு ஏற்கனவே விலையில் போட்டி போடமுடியவில்லை. அதனால் விலையைக் குறையுங்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் ‘ என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விவசாயம், நிலத்தடி நீரை மட்டுமே பிரதானமாக நம்பி செயல்பட்டு வருகிறது. 1,000 அடி, 1,500 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை,’ போர்வெல் பம்ப்செட் ‘ பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றோம். மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில்’ பம்ப்செட் ‘முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக அதிகரித்துள்ளது இந்த விலையேற்றம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே பலர் விவசாயத்தில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் விவசாயம் அழிந்து வருகிறது. எனவே விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப்செட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு முற்றிலும் நீக்க வேண்டும் என’ தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ‘- “பழனிசாமி “கருத்து தெரிவிக்கிறார்.

‘ஒரு பக்கம் சூரிய சக்தியில் பயன்படுத்தும் பொருட்களுக்கு இதே ஆண்டிலேயே மானியமும், இன்னொரு பக்கம் சூரிய சக்தி அடுப்புகளுக்கு வரியை அதிகப்படுத்தவும் செய்கிறார்கள்’ என்கிறார், ‘ புதிய தலைமுறை நெறியாளர்’ -“கார்த்திகேயன்”.

“கொரானா அலைகளில் நிறைய தொழில்கள் நொடித்து இலட்சக்கணக்கான குறு, நடுத் தொழில்கள் செய்பவர்கள் விழி பிதுங்கி நிற்கும் பொழுது இப்படி அடிப்படை பொருட்களுக்கு விலை ஏற்றம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது !”என்கிறார், ‘இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர்’ -“ரகுநாதன் “அவர்கள்.

ஒரு அரசின் அச்சாணியே வரி தான்! மாநிலங்களின் வரி வசூலிக்கும் உரிமையையும் பறித்ததே ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி சிஸ்டம்.

மாநில கட்சிகள், அடிப்படையில் இதை ஏற்றுக்கொண்டிருக்கவே கூடாது. அவர்கள் பணியவைத்தார்கள். இவர்களும் பணிந்தார்கள்.

படிக்க

ஜி.எஸ்.டி அமுலாக்கத்தின் விளைவால் தொழிற்துறையில் முன்னேறி நிற்கும் மாநிலங்களுக்கு பெரும் இழப்புதான். அந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் இழப்பீடு தருவதாக சொன்னார்கள். இவர்களும் தலையாட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

இதோ ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மேலும் ஐந்து ஆண்டுகள் இழப்பீடு தரவேண்டும் என பாதிக்கப்படும் மாநிலங்கள் இப்பொழுது ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் மறுத்துவிட்டால், அந்த சுமையையும் மக்கள் மீது தான் மாநிலங்கள் சுமத்தப்போகின்றன.

இலங்கையில் அரசு திவாலாகி மக்கள் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியும் பொழுது, இங்குள்ள, ‘ இந்திய அதிகார வர்க்கம்’ , ‘ மாநில தேர்தல்களின் பொழுது தேசிய கட்சிகள், மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள்! இதனால் , இலங்கையை போல இங்கும் நிலைமை மோசமாகிவிடும்! ‘ என ஒன்றிய அரசுக்கு அறிவுரையை அள்ளி வழங்கினார்களாம்!

ஒரு நாடு ,நேர்முக வரியான வருமானவரி போன்ற வரிகளை அதிகரித்து, மறைமுக வரிகளான ஜி.எஸ்.டி போன்றவற்றை குறைப்பது தான் ஒரு நல்ல அரசுக்கு இலக்கணம் என்கிறார்கள். நடந்து கொண்டிருப்பது கார்ப்பரேட்- காவி அரசு: இது ‘மக்கள் விரோத அரசு ‘என்பதால் மறைமுக வரியை ஏற்றி, மக்கள் மீது சுமையை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள்!

ஏற்கனவே சில பொருளாதார சமிக்ஞைகள் தெரிய ஆரம்பத்துள்ளன.
இந்தியாவில் டாலரின் மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது: அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறார்கள்: இதனால் ஆசிய நாடுகளின் பணமதிப்பு இன்னும் வீழ்ச்சி அடையலாம் என்கிறார்கள்!
இந்திய பங்கு சந்தையிலிருந்து நிறைய முதலீடுகளை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது:மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துகொண்டே வருகிறது: ஏற்கனவே பெரும்பலான மக்கள் மீது மீண்டும் மீண்டும் சுமையை சுமத்துகிறவர்கள் வர இருக்கும் பொருளாதார ஆபத்துகளையும் சுமத்துவார்கள் என நினைக்கும் பொழுதே பகீரென இருக்கிறது.

இலங்கை மக்கள், கடும் நெருக்கடி வந்த பின்பு தான் உக்கிரமாக போராட துவங்கினார்கள். மக்கள் விரோத ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்து துரத்தினார்கள்!

நெருக்கடி வரும்முன்விழித்துக்கொண்டு போராடுவது நமக்கு நல்லது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here