திரு. அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம்,

நேற்று (27.05.22) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் உங்களிடம் எழுப்பிய கேள்வி நியாயமானது.

பொது இடங்களில் பேனர் வைப்பது குறித்து, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், கட்சி வேறுபாடின்றி இந்த விதிமுறைகள் மீறப்பட்டதால் தமிழகத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அந்தவகையில், பிரதமர் வருகையின் போது விதிகளை மீறி பாஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது குறித்து அந்த பத்திரிகையாளர் உங்களிடம் கேள்வி எழுப்பினார்.
இது பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்டது என்பதால் மிக மிக அவசியமான கேள்வி. ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதென்பது ஒரு பத்திரிகையாளரின் கடமை.

ஆகவே, தன் கடமையை மிகச் சரியாக செய்த அந்த பத்திரிகையாளரை, நீங்கள் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியது, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

அத்துடன், அவரை மிரட்டும் வகையில் கையை நீட்டிப் பேசியதும், உங்களைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் சிலர் அவரை மிரட்டும் வகையில் குரலை உயர்த்திப் பேசியதும் எந்த வகையில் நியாயம்?

அதே பத்திரிகையாளர் சந்திப்பில், “YouTubeகளுக்கு கூட இடமளித்துள்ளோம் என்று” பெருந்தன்மையாக பேசுவதைப் போல், டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தியுள்ளீர்கள்.

டிஜிட்டல் மீடியாவின் வளர்ச்சியை கருத்தில்கொண்டுதான் பாஜக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள THE OCCUPATIONAL SAFETY, HEALTH AND WORKING CONDITIONS CODE, 2020 என்ற தொழிலாளர் சட்டத் தொகுப்பில், உழைக்கும் பத்தரிகையாளர் என்றால் யார் என்பதை “Working Journalist” means a person whose principal avocation is that of a journalist and who is employed as such, either whole-time or part-time, in, or in relation to, one or more newspaper establishment, or other establishment relating to any electronic media or digital media…” என்று விளக்கியுள்ளனர்.

ஆகவே, டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றுபவர்களும் பத்திரிகையாளர்களே என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

அடுத்ததாக, பிரதமர் சென்னை வருகையின் போது செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் தவறாக நடந்துகொண்டார் என்ற புகார் தங்களிடம் அன்றைய தினமே (26.05.22) தெரிவிக்கப்பட்டது. அந்த நிர்வாகியின் புகைப்படமும் உங்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இரண்டு நாட்கள் கழிந்தும் இதுவரை அவர் மீது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதுகுறித்தும் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிப்பது உங்கள் பொறுப்பு இல்லையா? இதை உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்கள்? இதைக்கேட்டதற்கு “சரி 3000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று நீங்கள் பதில் அளித்தது, எப்படி அர்த்தப்படுகிறது என்பதை நேற்று நீங்கள் புரிந்துகொள்விட்டாலும் இதை படித்த பிறகாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

பொதுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றால், பத்திரிகையாளரை சந்திக்கும் நபரும், அவரோடு இருவர் அல்லது மூன்று பேர் கலந்துகொள்வார்கள். ஆனால், நீங்கள் ஒவ்வொரு முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும்போதும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ நடத்துவது ஏன் என்று தெரியவில்லை? இது, எந்த அரசியல் கட்சித் தலைவரும் பின்பற்றாத நடைமுறை. இப்படிப்பட்ட சூழலே பத்திரிகையாளர்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தலை கொடுப்பதாகும். அதை நீங்கள் தெரிந்து செய்கிறீர்களா இல்லை தெரியாமல் செய்கிறீர்களா என்று தெரியவில்லை.

ஆகவே, நியாயமான கேள்வியை எழுப்பிய பத்திரிகையாளரை அவமானப்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட நீங்கள் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை உங்களை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.

பத்திரிகையாளர் மீது உங்களுக்கு அன்பும் பாசமும் உள்ளது என்று கூறியுள்ளீர்கள். நன்றி

ஆமாம். நீங்கள் கூறியதுபோல ஒரு நாணயத்தில் இரண்டு பக்கம் உள்ளது. மரியாதை கொடுப்பதை பொறுத்துதான் அதை திரும்ப எதிர்பார்க்க முடியும்.

செய்தியாளர்களை அணுகிய விதம் தான், பலரை மேதாவியாகவும், சிலரை கோமாளியாகவும் மாற்றியது தமிழக அரசியல் களம் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

  • மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here