மக்களை கொள்ளை அடிக்க வரும் “ஸ்மார்ட் மீட்டர்” திட்டம் !

தனியார் முதலாளிகள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரிந்ததுதானே என்றும்,  அரசு இந்த மாதிரி எல்லாம் கட்டண கொள்ளையில் ஈடுபடாது என்றும் யாரேனும் நினைத்தால் அது தவறு.

0
246

மக்களை கொள்ளை அடிக்க வரும் “ஸ்மார்ட் மீட்டர்” திட்டம் !


“ஒரு டீ யோட விலை பத்து ரூபா. கடையில கூட்டமா இருக்குற காலை நேரத்தில், சாயந்திர நேரத்தில் டீ குடிக்க வேணும்னா 15 ரூபாய் கொடுக்கணும், அதுதான் சட்டம்.” அப்டின்னு சொன்னா ஏத்துக்க முடியுமா? முடியாது. இது என்ன பகல் கொள்ளையாய் இருக்குதே, அப்படின்னு தானே ஆத்திரம் வரும்?

அந்த மாதிரி வரும் காலத்தில் மக்களை பகல் கொள்ளை அடிப்பதற்காகத்தான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ‘ஸ்டேடிக்’ என்ற மின் அளவீட்டு மீட்டரில் மின் பயன்பாட்டை கணக்கிடுவது துல்லியமாக இல்லை; அதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இதனால் மின்வாரியத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. “ஸ்மார்ட் மீட்டர்” பொருத்தப்பட்டால் இந்த பிரச்சனைகள் எதுவும் இருக்காது. மக்களுக்கும் நன்மை மின்வாரியத்திற்கும் நன்மை என்று கூறுகின்றனர். இது உண்மையா?

ஸ்மார்ட் மீட்டரின் செயல்பாடு:

ஸ்மார்ட் மீட்டர் மூலம் காலை, மதியம், இரவு என ஒவ்வொரு நேரத்திலும் எந்த அளவிற்கு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஒவ்வொரு நாளும் துல்லியமாக கணக்கெடுக்க முடியும். இப்படி கணக்கெடுப்பதற்கு ஆட்கள் எதுவும் நியமிக்க தேவையில்லை. ஸ்மார்ட் மீட்டரில் மின்சாரம் கணக்கிடுவதற்கான தேதி, நாள், நேரம் என ஒவ்வொன்றையும் மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்துவிட முடியும். இதன் மூலம் மின் பயன்பாட்டு விவரங்கள் தொலைத்தொடர்பு வசதியுடன் கூடிய ஸ்மார்ட் மீட்டரில் இருந்து மின்வாரிய அலுவலக சர்வரில் சேமிக்கப்படும்.

துல்லியமாக கணக்கிடுவதன் நோக்கம் என்ன?

காலை, மாலை, மதியம், இரவு மற்றும் திருவிழா நாட்கள் என எப்பொழுது மின்சாரத்தை பயன்படுத்தினாலும் கட்டணத்தில் மாறுபாடு இருப்பதில்லை என்பதுதான் தற்போது உள்ள நிலைமை. ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் இந்த நிலை மாறிவிடும். காலை நேரம், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ள நேரங்களில் மக்கள் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். பண்டிகை நாட்களிலும் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட நேரங்களில், நாட்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அதிகமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது. என்ன நம்ப முடியவில்லை? அதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை

சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் செல்வதற்கு ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதே ஆம்னி பேருந்து பயணம் செய்வதற்கு மிக மிக அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணக் கொள்ளை குறித்து பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் கோபப்படுவதும் பிறகு வேறு வழியில்லாமல் அதிக கட்டணத்தை செலுத்தி பயணம் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இதைச் சொன்னால் தனியார் முதலாளிகள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரிந்ததுதானே என்றும்,  அரசு இந்த மாதிரி எல்லாம் கட்டண கொள்ளையில் ஈடுபடாது என்றும் யாரேனும் நினைத்தால் அது தவறு.

அரசு போக்குவரத்து துறையில் கட்டணக் கொள்ளை

விழாக் காலங்களில் கோவில்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு வழக்கமான கட்டணத்தை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவது நமக்குத் தெரிந்ததுதான். ரயில்வே துறையில் நடப்பதை பார்த்தால் போதும் இதை இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்.

ரயில்வே துறையில் கட்டணக் கொள்ளை

பண்டிகை காலங்களில் ” சுவிதா ரயில்” என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன அந்த ரயில்களில் வழக்கமான ரயில் கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் அதிகம் இருக்கிறது. அதுவும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை விட இந்த ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடிக்கு தனியார் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான ரயில் கட்டணம்ரூ.1,280 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தனியார் நிறுவனம் 2500 ரூபாய் வசூலிக்கிறது. அதேபோல மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட ரயில் கட்டணம் ரூ.2,360 உள்ள நிலையில், இந்த தனியார் சிறப்பு ரயிலில் ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு வகுப்பிற்கும் 100 சதவீதம் ரயில் கட்டணத்தை ஏற்றி தனியார் நிறுவனம் கொள்ளை அடிப்பதற்கு அரசே ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

ரயிலில் வழக்கமாக முன்பதிவு செய்வதற்கு ஒரு கட்டணம். ஆனால் ரயில் புறப்படும் நேரம் நெருங்கி வரும் நிலையில் “தட்கல் டிக்கெட்” எடுக்கலாம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அந்த தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் என்று நிர்ணயித்து விட்டார்கள்.

இப்படி அதே ரயில் அதே வசதியுடன் கூடிய இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணம் வசூலிக்கலாம் என்று அரசே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

ஓலா, உபர் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை

கால் டாக்ஸிகளில் பகல் நேரத்தில் ஒரு கட்டணமும் அதே தூரம் இரவில் பயணம் செய்வதற்கு அதிகப்படியான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது என்பதும் அதில் ஒரு பகுதியை ஓலா உபர் போன்ற நிறுவனங்கள் அபகரித்துக் கொள்கின்றன என்பதும் அனைவரும் அறிந்தது தான்.

மக்களின் தேவையை நெருக்கடியை வேறு வழி எதுவும் இல்லாத கையறு நிலையை பயன்படுத்தி மக்களிடம் கொள்ளை அடிக்கப்படும் பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும்.

அதே நிலைதான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்பு சில ஆண்டுகளில் மின்சாரத் துறையிலும் ஏற்பட போகிறது. ஒரே விதமான மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு நாள் நேரத்திற்கு ஏற்ப கட்டணத்தை ஏற்றி மக்கள் கொள்ளையடிக்கப்படுவார்கள். இவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில், உழைக்கும் மக்கள், குறைவான கட்டணத்தில் மின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்காக நள்ளிரவில் மாவு அரைப்பது துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் நிலை ஏற்படும்.

எனவே ஸ்மார்ட் மீட்டர் பற்றி ஒரு பரப்பப்படும் மாயையை உடைத்து மக்களுக்கு இதுதான் உண்மை என்பதை எடுத்துக்கூறி மின்சார கட்டண கொள்ளை வருமுன் காப்பதற்கான வேலையை தொடங்குவோம்.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here