தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்து வருகின்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்து முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தம்தான் என்று மகிழ்ச்சி பொங்க உரையாற்றியுள்ளார்.

அவருக்குப் பின்னால் அவரது உரையை வழிமொழிந்து பேசிய அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா “உண்மைதான் இந்திய மக்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஜாதி அரசியல், திருப்திப்படுத்தும் அரசியல், மற்றும் குடும்ப ஆட்சி போன்ற காரணங்களினால் இந்தியாவின் வளர்ச்சி தடை பட்டுக்கிடந்தது. ஆனால் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்திற்கும் முடிவு கட்டி விட்டார்கள். இந்தியாவில் இன்னும் தெலுங்கானா, மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்றவை மட்டும்தான் உள்ளது விரைவில் அவற்றிலும் பாஜக ஆட்சி அமைக்கும்.

அது மட்டுமல்ல, குஜராத் இன கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆலகால விஷத்தை உண்ட சிவனைப் போல தவித்து வந்த மோடி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு தங்கத்தை போல் ஜொலிக்கிறார்” என்று மோடி புராணம் பாடியுள்ளார்.

இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளது என்பது வடிகட்டிய பித்தலாட்டமாகும் என்று முதலாளித்துவ பொருளியல் அறிஞர்களே அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம் சுதந்திரம் வாங்கியதாக கூறிய காலத்தில் இருந்து அதிகபட்சமாக தலை விரித்து ஆடுவது மோடியின் ஆட்சியின் கீழ் தான்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கண்ணோட்டத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் சீக்கியர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த இந்தியாவில் மதக்கலவரங்களும் இன வெறுப்பு அரசியல் மேலோங்கி படுகொலைகளும் அதிகரித்திருப்பது மோடியின் ஆட்சியின் கீழ் தான்.

கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவின் வளங்களை வாரிக் கொடுப்பதும், தேசத்தின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று தள்ளுவதும், குறைந்தபட்ச கூலிக்கு உழைப்பாளிகளை சுரண்டுவதற்கு அனுமதிப்பதும்  தான் வளர்ச்சிப்பாதை என்று மோடி கும்பல் மீண்டும் மீண்டும் மக்களை ஏய்த்து வருகிறது.

5  ட்ரில்லியன் பொருளாதாரம் என்று வாய்ச்சவடால் அடித்த மோடி 8 ஆண்டுகளில் மூன்று  ட்ரில்லியனை கூட தாண்ட முடியவில்லை. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையை தீவிரப்படுத்துவதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவின் வளங்களை வாரிக் கொடுப்பதும், தேசத்தின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று தள்ளுவதும், குறைந்தபட்ச கூலிக்கு உழைப்பாளிகளை சுரண்டுவதற்கு அனுமதிப்பதும்  தான் வளர்ச்சிப்பாதை என்று மோடி கும்பல் மீண்டும் மீண்டும் மக்களை ஏய்த்து வருகிறது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவின் மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் அனைத்தும் மோடியின் ஊதுகுழலாக மாறி உண்மை நிலவரத்தை இருட்டடிப்பு செய்து மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறது.

நாட்டை மறுகாலனியாக்கி அமெரிக்காவின் காலடியில் கிடத்துவதன் மூலம் கிடைக்கின்ற கமிஷன் தொகையையும், பேரங்களின் மூலம் கிடைக்கின்ற பண அன்பளிப்புகளையும் பங்கிட்டு கொள்வதில் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் யோக்கியதை ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளது.

தனது கட்சியின் செயற்குழுவில் தனது தொண்டர்களை உசுப்பேற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால் அவர்களின் விருப்பத்தை இந்திய மக்களின் தலையில் கட்டுவதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்க கூடாது.

தேர்தல் அரசியல் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்திக்கொண்டு சட்டபூர்வமாகவே பாசிசத்தை திணிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்படுகிறது. அதே சமயத்தில் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியில் இணையான பொருளாதாரம் மற்றும் ராணுவத்தை கட்டமைத்து இன்னும் அரை நூற்றாண்டுக்கு இந்தியாவை தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற வெறித்தனத்துடன் பாரதிய ஜனதா கட்சி செயல்படுவதை தான் ஹைதராபாத்தில் நடந்துள்ள செயற்குழு நமக்கு தெரிவித்து இருக்கும் செய்தியாகும்.

பாரதிய ஜனதா கட்சி என்ற ஆர்எஸ்எஸ் இன் பார்ப்பன பாசிச பயங்கரவாத ஆட்சியின் கீழ் இந்தியாவை அனுமதிக்க போகிறோமா அல்லது பொது திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து அவர்களை வீழ்த்த போகிறோமா என்பதுதான் நம் முன்னே உள்ள ஒரே கேள்வி.

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here