ஐரோப்பாவின் மகிழ்ச்சியான இந்தியர்கள், இந்தியாவின் பரிதாபகரமான இந்தியர்கள் – டிவி செய்திகளில் இரட்டை இந்தியா கதைகள்!!

மோடியின் சமீபத்திய ஐரோப்பிய சுற்றுப்பயணத்தைக் குறித்து உள்நாட்டில் காட்டப்பட்ட “படங்களைப்” போலல்லாமல், டிவி செய்திகள் வேறு இந்தியாவைப் பற்றி பேசுகின்றன – ஜோத்பூரின் “வகுப்புவாத மோதல்கள்” முதல் “ராஜஸ்தானின் வெறுப்பு அரசியல்” வரை.

பிரதமர் நரேந்திர மோடி இந்திய தொலைக்காட்சி செய்தி சேனல்களைப் பார்ப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றாலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் இவற்றைப் பார்ப்பதில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. ஏனெனில் அவர்கள் கண்களில், முகங்களில் பிரகாசிக்கும் இந்தியா, நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் இந்தியா அல்ல.

டென்மார்க்கின் கோபன்ஹேகனில் ஒரு ஆடிட்டோரியத்தில் கூடியிருந்த இந்தியர்களிடம் பிரதமர் “அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவும் அதன் கலாச்சார பன்முகத்தன்மையும்” என்று வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார். அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜெர்மனியின் பெர்லினில், இந்தியாவின் “ஜனநாயகம்,” “சட்டத்தின் ஆட்சி” மற்றும் “நாட்டின் எதிர்காலத்தை நோக்கிய பீடுநடைக்கு” வணக்கம் செலுத்தினார்.

பரவசமடைந்த இந்தியர்கள், “பாரத் மாதா கி ஜெய்!” “வந்தே மாதரம்,” “மோடி, மோடி, மோடி,” “2024, Modi once more” என முழக்கமிட்டனர். பிரதமரின் மூன்று நாள் ஐரோப்பியப் பயணத்தைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற Godi media-வைச்சேர்ந்த தொலைக்காட்சி நிருபர்கள் பெர்லின் மற்றும் கோபன்ஹேகனில்'”நரேந்திர மோடி ஷோ” (TV9 Bharatvarsh) உருவாக்கிய “உற்சாகம்,” “திருவிழா,” “சக்தி,” “மின்னேற்றப்பட்ட சூழல்” ஆகியவற்றைக் குறிப்பிட்டனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் தொலைக்காட்சி செய்திகள் வேறு இந்தியாவைப் பற்றி பேசுகின்றன: ஜோத்பூரில் “வகுப்பு மோதல்கள்” (CNN News18); “ராஜஸ்தானில் வெறுப்பரசியல் “; “இந்திய ரத்தம்” (இந்தியா டுடே); “வாளைக் காட்டி மிரட்டும் கும்பல்” (Republic TV); ரமலான் பண்டிகையின் போது நகரத்தில் நடந்த “பெரிய அளவிலான” வன்முறையை (TimesNow) அவை விவரித்தன.

இது ஒரு கலவையான அனுபவம். அங்கே NRI-கள் சிறிய இந்தியக் கொடிகளை அசைப்பதைப் பார்த்தோம், ஆனால் ஜோத்பூரில் (NDTV India) “என் கொடிக்கு எதிராக உன் கொடி” என்ற கூத்தையும் பார்த்தோம். பெர்லினில் ஒரு இளைஞன் “pole dance” ஆடிக்கொண்டிருந்தபோது, ஜோத்பூரின் தெருக்களில் பெரிய கம்புகளுடன் குண்டர்கள் பவனி வந்தனர்.

மகாராஷ்டிராவில் “பாரத் மாதா கி ஜெய்” என்பதற்குப் பதிலாக, “பாங்கு v/s ஜெய் ஹனுமான்” (Zee News), “பாங்கு v/s ஹனுமான் சாலிசா” (ABP News) தெருக்களில் ஒலிப்பதை டிவி செய்திகள் அறிவித்தன. மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவரான ராஜ் தாக்கரே மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளுக்கான “இறுதி எச்சரிக்கையை” (Republic TV) அரசுக்கு விடுத்தார் – மாநிலம் முழுவதும் உள்ள மத வழிபாட்டு இடங்களிலிருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று கோரினார்.

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே

பிரதமர் “டிஜிட்டல் இந்தியா”, “ஸ்டார்ட்அப் இந்தியா” பற்றி பெருமிதம் கொண்டார். இந்தியாவில் முதலீடு செய்ய டேனிஷ்   அறிவுறுத்தினார். ஆனால் இந்த சேனல்களைப் பார்க்கும் டேனிஷ் மக்கள் இந்தியாவில் நிலவும் நிலக்கரி நெருக்கடி மற்றும் டெல்லி உட்பட பல பகுதிகளில் கொடூரமான “வெப்ப அலை” சூழ்நிலையில் “இந்தியாவின் தண்ணீர் துயரங்கள்” (MirrorNow) பற்றிய செய்திகளைப் பார்த்திருப்பார்கள்.

ஜோத்பூரில் நடந்த வன்முறை மற்றும் காவல்துறையின் லத்தி சார்ஜ் போன்ற வீடியோக்களை பார்த்திருப்பார்கள். பெர்லினில் உள்ள ஒரு இந்தியப் பெண் (DD News), பிரதமரைப் பார்க்க மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், “எங்கள் கண்ணீரை” கட்டுப்படுத்துவது கடினம் என்றும் கூறினார். அதேவேளையில் ஜோத்பூரில் சண்டையிடும் சமூகங்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. டெல்லி, போபால் மற்றும் பல நகரங்களில் பரவிவரும் “வகுப்புவாதத் தீ” (IndiaToday) – தொலைக்காட்சிகளின் “burning news”-களாக பிறகு வருகின்றன.

இரண்டு நாட்களாக ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் உள்ள இந்தியர்கள் “மோடி வித்தையை” (TV9 Bharatvarsh) கொண்டாடி வருகின்றனர். பெர்லினில் உள்ள ஒரு மோடி ரசிகர் “அவரது கனவு நனவானதாக’(IndiaTV) கூறினார். கோபன்ஹேகனில் உள்ள மற்றொருவர் “சொர்க்கத்தையே அடைந்துவிட்டதாக” (AajTak) “பாரத் மாதா கி ஜெய்!” என்றார்.

ஜோத்பூரின் வன்முறை மற்றும் மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி அரசியலைத் தவிர, டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் மாநகராட்சியால் திட்டமிடப்பட்ட “இடிக்கும் இயக்கம்” போன்ற பாரதத்திலிருந்து வரும் செய்திகள் அவர்களை மூர்ச்சையடைய செய்திருக்கும். ஜஹாங்கிர்புரியில் டெல்லி மாநகராட்சியால் நடத்தப்பட்ட “இடிக்கும் இயக்கத்தில்” அப்பகுதியில் நடத்தப்பட்ட மதவாத மோதல்களைத் தொடர்ந்து சட்டவிரோத கட்டுமானம் என்று கூறி புல்டோசர்கள் மூலம் பல ஏழை முஸ்லிம்களின் வீடுகள்/கடைகள் இடித்தொழிக்கப்பட்டன.

ஐரோப்பிய நாடுகளில் மோடி அப்படி என்னதான் பேசினார்? இந்திய ரிசர்வ் வங்கி “எகிறிவரும் பணவீக்கம்” (NDTV 24×7) காரணமாக ரெபோ (Repo) வட்டிவிகிதத்தை உயர்த்தியதை பற்றியா? மோடி பேசிய இந்தியா இதுதானா?

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இந்திய செய்தி சேனல்களைப் பார்ப்பார்களேயானால் “ராகுல், பார்ட்டி, மற்றும் அரசியல்” (IndiaToday) என்ற செய்திக்குள் மூழ்கடிக்கப்படுவார்கள். காத்மாண்டுவில் உள்ள ஒரு இரவு விடுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவரின் 12 வினாடி காட்சிதான் அரசியல்வாதிகள் மற்றும் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர்களை அவ்வளவு எரிச்சலூட்டுகிறது. “ராஜஸ்தான் பற்றியெரிகிறது, ராகுல் பார்ட்டிகளில் திளைக்கிறார்” என்று ஊளையிடுகிறது Republic TV. “காத்மாண்டில் கூத்தடிக்கும் ராகுல், எங்க எம்.பி. எங்கே என்று வயநாடு கேட்கிறது” என்று TimesNow-வில் விவாதம் நடந்தது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் – அவர்கள் எப்போதுமே தனி வகைதானே? ஒரு கட்டத்தில் கோபன்ஹேகன் உரையில் மோடி, இந்தியாவில் உள்ள (கதியற்ற) இந்தியர்கள் ஆடிட்டோரியம் நிரம்பியிருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்வார்கள் என்று கூறினார்.

பெல்லா ஆடிட்டோரியத்தில் (Bella auditorium) பொங்கிய களிப்பும், மகிழ்ச்சியும் முன் எப்போதும் இருந்திராத ஒன்று. இதைவிட மகிழ்ச்சியான இந்தியர்களை நீங்கள் எங்கும் பார்த்திருக்க முடியாது – அவர்கள் கேமராக்களுக்கு முன் நடனமாடினர், சிரித்தார்கள், சந்தோச கூச்சலிட்டார்கள். பெர்லின் மற்றும் கோபன்ஹேகனில் உள்ள ஆடிட்டோரியங்களில், விழா ஏற்பாட்டர்களின் முழக்கங்களுக்கு அங்கிருந்த இந்தியர்கள் அதீத நேர்மையுடனும், கடமையுணர்ச்சியுடன் பதில் முழக்கமிட்டனர்.

கோடி மீடியா (godi media) அழைத்தது போல் இந்த “மினி இந்தியா” மோடியின் வருகையால் “சூப்பர் டூப்பர்” உற்சாகத்தில் மூழ்கியதை நிருபர்கள் இந்தியாவிற்கு மீண்டும் மீண்டும் காட்டுவதில்தான் அதிக நேரத்தை செலவிட்டனர். “நாங்கள் உங்களை நேசிக்கிறோம், மோடி வந்ததற்கு நன்றி” கோபன்ஹேகனில் (AajTak) ஒரு பெண் கூறினார். “இனிமேலும் காத்திருக்க முடியாது – மோடி, மோடி, மோடி” என்று பொறுமையிழந்த ஒரு மனிதர் கூச்சலிட்டார்.

“பிரதமரின் வருகை ஹோலி அல்லது தீபாவளி போன்ற ஒரு பண்டிகை” என்று பெர்லினில் (News18 India) சத்ரபதி சிவாஜி போல் உடையணிந்த ஒரு இளைஞர் விளக்கினார்.

பெர்லினில் ஒரு பெண்மணி கூறுகையில், “மோடியின் கணநேர தரிசனத்துக்காகவே”நான் வந்துள்ளேன் என்றார். “நான் அதிகாலை 4 மணி முதல் இங்கு இருக்கிறேன்” என்று ஒருவர் தெரிவித்தார். “இது ஒரு வாழ்நாள் வாய்ப்பு” “என் வாழ்க்கை இன்றுமுதல் மாறிவிட்டது” என்று மற்றொருவர் கூறினார். எப்படி? என்று AajTak செய்தியாளர் கேட்டார்.

“எப்போதெல்லாம் நான் வருத்தத்தில் இருக்கிறேனோ…இந்தத் தருணத்தை நினைவில் கொள்வேன்…” என்று விளக்கிய அவர், பிரதமரின் “ஆற்றலால்” ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். அந்த “ஆற்றல்” தான் பிரதமரை சந்திப்பதற்காக ஒரு நபரை பிராங்பேர்ட்டில் இருந்து பெர்லினுக்கு 600 கி.மீ தூரம் பயணிக்க வைத்தது.

“என் இதயம் அதிவேகமாகத் துடிக்கிறது” என்று ஒப்புக்கொண்ட ஒரு இளைஞனின் நெஞ்சில் அறிவிப்பாளர் மைக்கை வைத்து அவனுடைய இதயத்துடிப்பை மற்றவர்களை கேட்கவைக்க முயற்சித்தார்.

மோடியின் காலை நக்கும் போட்டியில் “டஃ ப்” கொடுக்கும் News18 India-வின் நிருபர் மோடியின் புகழ்பாடுவதை நிறுத்தியபாடில்லை. “இதற்கு முன் (வெளிநாடுவாழ்) இந்தியர்கள் ஒரு இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்ல தயங்கினார்கள்… இனிமேல் அப்படி இல்லை. பிரதமர் இந்தியாவுக்காக மட்டுமே உழைக்கிறார், மூச்சு விடுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை” என்றார்.

மகிழ்ச்சியான மக்களின் மகிழ்ச்சியான காட்சிகள் அவ்வாறாகத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. ஆனால் உள்ளூரில் நாம் பார்க்கும் செய்திகளில் மோடியின் 8-ஆண்டுகால நாசகார பொருளாதார திட்டங்கள் மற்றும் காவி மயமாக்கும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட கோபமுற்ற இந்தியர்களையே நாடுமுழுவதும் பார்க்க முடிகிறது.

எனவே, ஒரு விடயத்தைப் புரிந்துகொள்வோம் மோடி வெளிநாடுகளுக்குப் போய் “புதிய மறுமலர்ச்சி இந்தியா” என்ற படத்தை வரைகிறார் – ஆனால் உள்நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளோ நமக்கு உணர்த்துவது வெறும் அழிவு, இருட்டு, வெறுப்பு, மற்றும் வன்முறை.

இவற்றில் எந்த படம் உண்மையானது?

ஆங்கிலத்தில்: SHAILAJA BAJPAI (theprint.in)

தமிழில்: செந்தழல்

https://theprint.in/opinion/telescope/so-happy-indians-in-europe-so-angry-indians-back-home-the-two-india-stories-on-tv-news/942722/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here