இந்தியாவை முழுமையான இந்துராஷ்டிரமாக மாற்றுவதற்கு, பார்ப்பன பாரதி பாடிய மொழியில் கூறினால், ‘சேதமில்லா ஹிந்துஸ்தானத்தை’ உருவாக்குகின்ற முயற்சியில் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் தீவிரமாக குதித்துள்ளது என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதன் சட்டம்.
இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவும், பார்ப்பன-பனியா கும்பல்களின் அதிகாரத்தை நிறுவுகின்ற வகையில் தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கூட்டு சர்வாதிகாரத்தின் கீழ், இராணுவ ஒடுக்கு முறையின் கீழ் ஒரே நாடாக, ஒரே தேசமாக நிலைநாட்டப்பட்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் பாஜக முன்வைக்கின்ற இந்து-இந்தி-இந்தியா என்ற ஒற்றை தேச கோட்பாட்டை படிப்படியாக அமல்படுத்துவது என்ற நோக்கத்தில் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக போராடுகின்ற தென்னிந்திய மாநிலங்கள் மீது பாசிச தாகுதலைத் தொடுத்துள்ளது ஆர்எஸ்எஸ் பாஜக. குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை அடக்கி ஒடுக்குவது அதற்கு சட்டரீதியாகவே தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் குறைத்து கொடுப்பது என்ற அயோக்கியத்தனமான திட்டத்தில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் மொழி வழி அமைந்த தேசிய இனங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாநிலங்கள் தான் என்பதும், அந்த மாநில மக்கள் ஒரு மொழி பேசுபவராக இருப்பதால் எளிமையாக ஒன்று கூடுகிறார்கள் என்பதை முன்வைத்து ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களை துண்டாடியது போலவே நாடு முழுவதும் மாநிலங்களை துண்டாடுவதற்கு துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக தற்போது அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் மாநிலங்களுக்கு உள்ள பிரதிநிதித்துவத்துவத்தை ஒழித்துக் கட்டுவதற்கு முயற்சிக்கின்றது.
மக்கள் தொகை கட்டுப்பாடு என்பதை முன்வைத்து நேர்மையாக அதனை அமல்படுத்தி வந்த தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்பவே தொகுதிகள் மறு வரையறை செய்யப்படும் என்பதும், கட்டுப்பாடு இன்றி குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மக்கள் தொகை அதிகரிக்க காரணமாயுள்ள உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்பதும் மிகப்பெரும் அபாயமாக மாறியுள்ளது.
இதனை எதிர்த்தும் அதன் அபாயங்களை எச்சரித்தும் கடந்த ஓராண்டுக்கு முன்னதாக, அதாவது 2025 ஏப்ரல் மாதத்திலேயே புதிய ஜனநாயகம் தனிக் கட்டுரையாக வெளியிட்டது. தற்போது அதை அமலுக்கு கொண்டு வரப்படும் சூழலில் அதை எதிர்த்து நாடு முழுவதும் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தேசிய இனங்களின் உரிமையை பாதுகாக்கின்ற வகையிலும், இந்திய தேசியத்தை எதிர்த்து போராடுவதற்கு அணி திரட்டுகின்ற வகையிலும் உதவுகின்ற கண்ணோட்டத்தில் மீண்டும் அந்த கட்டுரையை இந்த சிறு முன்னுரையுடன் வெளியிடுகிறோம்.
தமிழகம் கிளந்தெழட்டும்! மாநில உரிமைப்போரில் இந்தியாவுக்கே முன்னணியில் நிற்ப்போம்!
தோழமையுடன்,
ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம். மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்!
மாநில உரிமைகளின் மீது
ஆர்எஸ்எஸ் பாஜகவின் பாசிச தாக்குதல்!
2026-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை ஒன்றிய பாஜக அரசு தொடங்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டப்படியான நடவடிக்கையாகும். இதனையொட்டி தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்திலும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிலும் தொகுதி மறு சீரமைப்பு கண்டிப்பாக செய்யப்படும் என நரேந்திர மோடியும், விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அமித்ஷாவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் கேரளா, தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என தமிழகம் முன்மாதிரியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து கர்நாடக மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் தொகுதி மறுசீரமைப்பில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழகத்தை ஆளும் திமுக பாதிக்கப்படும் 07 மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பும் உருவாக்கியது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால், திமுக அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காக இவ்விவகாரத்தை கையிலெடுத்து மக்களிடையே அச்சத்தை பரப்புவதாக பாஜக தாக்குதல் பாணியில் குற்றம்சாட்டி வருகிறது.
அரசியலமைப்பு சட்டமும்! தொகுதிகள் மறுசீரமைப்பு வரலாறும்!
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 82 மற்றும் 170 ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டுமெனக் கூறுகிறது.
இதற்காக 1952 ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயச் சட்டம் (Delimitaion act-1952) இயற்றப்பட்டது. இச்சட்டப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய ஒன்றிய அரசு எல்லை நிர்ணய ஆணையக் குழு (Delimitaion Commission) அமைக்க வேண்டும். குழு அமைத்த பிறகு, குழுவின் முடிவை பாராளுமன்றத்தாலோ, நீதிமன்றத்தாலோ மாற்றவோ நிறுத்தி வைக்கவோ முடியவே முடியாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது.
மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் மூன்று முறை 1951, 1961 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது. 1951 ஆம் ஆண்டிற்கு முன்பு நாடாளுமன்ற பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 489. ஆனால் 1951 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை 36 கோடியாக இருந்ததால் 494 தொகுதிகளாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 43.9 கோடியாக உயர்ந்ததால் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு 522 தொகுதிகளாக மாறியது. 1971 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 54.8 கோடியாக இருந்ததால் அதற்கேற்ப தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு 543 என்று உயர்ந்தது. இதில், 1961 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு இருந்த 41 நாடாளுமன்ற தொகுதிகள் 1971 கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறு வரையறையின் போது 39 தொகுதிகளாக குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க:
♦ பாராளுமன்ற தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களை அரசியல் ரீதியில் அடிமையாக்க வரும் பாசிச ஆயுதம்
♦ பாசிச மோடி அரசின் கீழ் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: நாட்டிற்கே ஆபத்து!
மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டி தொகுதிகளை அதிகரித்துக் கொண்டே சென்றால் அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சமநிலை பாதிக்கப்படும். நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சமநிலை உருவாக்க அன்றைய இந்திரா காந்தி அரசு தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டு களுக்கு நிறுத்தி வைக்கும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தையும், எல்லை நிர்ணய சட்டத்தையும் திருத்தியது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் 42-வது திருத்தமாகும். 1976 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட இந்த திருத்தத்தின் மூலம் 2001 வரை தொகுதி மறுசீரமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் 2001 ஆம் ஆண்டு வரையும் பல மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசால், அரசியல் அமைப்பு சட்டத்தில் 84-வது சட்டத் திருத்தத்தை செய்து நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கு பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தொகுதி மறுசீரமைப்புப் பணி தொடங்கப்பட வேண்டும் என்பதில் பாசிச பாஜக கும்பல் உறுதியாக உள்ளது. அதனால்தான் தொகுதி மறுசீரமைப்பு கண்டிப்பாக செய்யப்படும் என பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். வட மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப் படவில்லை என்பதும், இதனால் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் சமநிலை பெறாது என்பது தெரிந்தும் அரசியல் அமைப்பு சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்து தொகுதி மறுசீரமைப்பை தள்ளி வைக்காமல் இருப்பது பாஜகவின் சதித்தனங்களில் ஒன்றே.
திட்டங்களை செயல்படுத்தினால் தண்டனை! அலட்சியம் செய்தால் பரிசு!
தொகுதி மறுசீரமைப்பு 54 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டதற்குக் காரணமே மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, நாடாளுமன்றதில் சமநிலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம்தான். இதற்காக இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அப்போதைய ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தை கறாராகவும் முறையாகவும் செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களிலும் பஞ்சாப், ஒரிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலும் மக்கள் தொகை வளர்ச்சி கணிசமாகக் குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இதற்கு முக்கியமான காரணம் குடும்ப கட்டுபாடு திட்டம் மட்டும் கிடையாது. மருத்துவ வசதி. கல்வி அறிவு, மாநில கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவையும் காரணமே. வளர்ச்சி அதிகம் ஏற்படும்போது குழந்தை பெறும் விகிதம் (Fertility rate) குறைகிறது என்பது உலகளாவிய ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அலட்சியம் செய்த, கல்வி, சுகாதாரம், மாநில கட்டமைப்பு என மிகவும் பின்தங்கியுள்ள பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து கொண்டே சென்றுள்ளது.
உதாரணமாக, 1971 ஆம் ஆண்டில் 04.11 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டில் 07.21 கோடியாக மாறியது. ஏறக்குறைய 40 வருடத்தில் 03 கோடி மட்டுமே மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இது ஒப்பிட்டளவில் குறைவே. அதே நேரத்தில் 1971 ஆம் ஆண்டில் 08 கோடியாக இருந்த உத்தரப்பிரதேச மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டில் 19 கோடி என்ற அளவில் அதிகரித்து உள்ளது. ஏறக்குறைய 11 கோடி அதிகம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப் படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் ஒன்றிய அரசின் திட்டத்தை ஏற்று மக்கள் தொகை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்து மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்டதை பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் அலட்சியமாக செயல்பட்டு, 54 ஆண்டுகள் திட்டத்தை வீணடித்து மக்கள் தொகையை அதிகரித்துள்ள மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்களுக்கு தண்டனையும் அலட்சியப்படுத்தியவர்களுக்கு பரிசும் அளிப்பதுதான் பாஜகவின் புதிய நீதியாக உள்ளது.
படிக்க:
♦ கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்த ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்
♦ சூரியனை கைகளால் மறைக்க முடியாது! மாநில தன்னாட்சி உரிமை முழக்கம் தமிழகம் எங்கும் எதிரொலித்தது!
இசுலாமியர்களைப் பற்றி கட்டுபாடு இல்லாமல் அதிகம் குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் என ஏகடியம் பேசும் பார்ப்பனக் கும்பல் உபி, மபி, பீகார் மாநிலங்களில் குடும்பக்கட்டுப்பாடு இல்லாமல் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வது பற்றி தனது மேல்வாயையும், கீழ் வாயையும் பொத்திக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளி வைப்பு! பாஜகவின் திட்டமிட்ட சதி!
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் 1881 முதல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பாசிச பாஜக உள்நோக்கத்துடன் மக்கள் தொகை கணக்கெடுப்பை காலவரையின்றி தள்ளிப்போட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 150 ஆண்டு காலம் தொடர்ந்து நடந்து வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் முறையாக சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளி போனதற்கு கொரோனா பேரிடர் காரணமாக சொல்லப்பட்டாலும், பேரிடர் முடிந்து பிறகு அர்ஜென்டினா, வங்கதேசம், அல்ஜீரியா, நைஜீரியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் நடத்தப்படவில்லை. 2026 ஆம் ஆண்டிற்கு பிறகான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தான் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பதால் 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடும் வேலையை மோடி அரசு சதித்தனமாக செய்து வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமுல்படுத்தி மக்கள் தொகை குறைக்க ஆவண செய்ய வேண்டும். இதனை செய்தால் வட மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து தொகுதி மறுசீரமைப்பின் போது பாஜக நினைத்த அளவை விட வட மாநிலங்களில் பிரதிநிதித்துவம் குறையும் என்பதால் சதித்தனமாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் தள்ளி வருகிறது பாசிச பாஜக.
தொகுதி மறுசீரமைப்பு: பாராளுமன்றத்தில் நிரந்தர அதிகாரத்திற்கான முன்னெடுப்பு!
பாசிச பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கைகளை தடுப்பதற்கு தென் மாநிலங்களில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராடி வருகின்றன. அதேபோல், மாநில அரசுகளும் காவி பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இதனால் பாசிச பாஜகவினால் எந்த ஒரு மக்கள் விரோத சட்டங்களை – திட்டங்களை தென்மாநிலங்களில் எளிதில் நடைமுறைப்படுத்த முடிவதில்லை.
தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமலே எந்த பாசிச சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரத்தை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வடமாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறது பாசிச பாஜக. இதற்காகவே நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு வேலைகளை முன்னெடுத்துள்ளது. இந்த நோக்கத்திலே 848 இருக்கைகள் கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி வைத்து கொண்டும் உள்ளது.
அதாவது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை அதிகரிக்காமல் தொகுதிகளின் எல்லையை மட்டும் மறுசீரமைப்பு செய்தால் (தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையில் சமநிலை உருவாக்குவது) தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 39-இல் இருந்து 31-ஆகக் குறையும். ஒட்டுமொத்த தென்மாநிலங்களில் தற்போது உள்ள 129 தொகுதிகளின் எண்ணிக்கை 103-ஆகக் குறையும். ஆனால் உ.பி.யில் 80-இல் இருந்து 87-ஆகவும், பிகாரில் 40-இல் இருந்து 43 ஆகவும், ராஜஸ்தானில் 25-இல் இருந்து 29-ஆகவும் அதிகரிக்கும்.
2026 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு 10 தொகுதிகளும், ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் 35 தொகுதிகளும் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் பீகார், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கு மட்டும் 150 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். மேற்கண்ட 02 வழி முறைகளில் எதை செய்தாலும் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும். வட மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் அசுர பலம் பெற்று விடும். அதிலும், பீகார், உபி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 04 மாநிலங்களில் பாசிச பாஜக வெற்றி பெறுவதன் மூலமாக மட்டுமே கூட ஒன்றியத்தில் ஆட்சி செய்வதற்கான பெரும்பான்மையை பெற்று விட முடியும். இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாநிலங்களாக இந்த நான்கு மாநிலங்கள் மாறும் அபாயமும் உள்ளது.
இப்போதே பசு வளையம் என்ற அடையாளத்தின் கீழ் உள்ள மாநிலங்கள் பாசிச பாஜக எந்த மோசமான திட்டங்களைக் கொண்டு வந்தாலும், சனாதன அடிப்படையை அதிகரித்துக் கொண்டே போனாலும், சாதிய அடக்குமுறைகள் அதிகரித்தாலும், பார்ப்பன மதப் பண்டிகைகள், பார்ப்பன மதப்பழக்க வழக்கங்கள் திட்டமிட்டு ஊக்கப்படுத்தப் பட்டாலும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதை கண்கூடாக காணமுடியும்.
தொகுதி மறுசீரமைப்பு நடைமுறை! கூட்டாட்சி தத்துவத்திற்கு கல்லறை!
மக்கள் தொகை அதிகரிப்பு காரணம் காட்டி மக்களவை தொகுதிகளை அதிகரித்துக் கொண்டே சென்றால் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சமநிலை முற்றிலும் பாதிக்கப்படும். சமநிலையற்ற பிரதிநிதித்துவம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். மேலும்,நடைமுறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் நியமனம் மக்கள்தொகையின் அடிப்படையிலே அமைக்கப் படுகிறது. இதுவும் ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது.
கூட்டாட்சி தத்துவத்துவத்திற்கு உட்பட்டு செயல்படும் அமெரிக்காவில் 1911 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 9.1 கோடியாக இருந்தது. அந்நாட்டின் அப்போதைய மக்கள் சபை பிரதிநிதிகள் எண்ணிக்கை 435. தற்போது அமெரிக்க மக்கள் தொகை 32 கோடியாக அதிகரித்து உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தொகுதி மறுசீரமைப்பு செய்துள்ள போதும் 1911 ஆம் ஆண்டில் இருந்த அதே 435 தொகுதிகளே தொடர்ந்து இருக்கின்றன. ஏறக்குறைய 100 ஆண்டுகளில் 1959 ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே இரண்டு தொகுதிகள் அதிகரித்தது 437 தொகுதிகள் இருந்தது. மற்றபடி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும் அவர்களது தொகுதிகள் மாறாமல் அப்படியே இருக்கிறது.
அதேபோல் அமெரிக்காவின் மேல் சபையான செனட் சபை எனப்படும் மாநிலங்களுக்கான அவையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் இரண்டு பிரதிநிதிகள் நியமிக்கப்படுகின்றனர். மாகாணங்கள் சிறியவை, பெரியவை என்று வேறுபாடு இல்லை. இவைகளே உண்மையான கூட்டாட்சியைக் குறிக்கின்றன. ஆனால் இந்திய அரசியலமைப்பிலோ இத்தகைய கூட்டாட்சிப் பார்வை இல்லாமல், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை மூலம் மட்டுமே தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பதும், பிரதிநிதிகளை நியமிக்கும் முறையும் நடைமுறையில் உள்ள கூட்டாட்சிக்கு எதிரானதாகும்.
ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுப்போம்! மாநிலங்களின் உரிமையை பாதுகாப்போம்!
பாஜக ஆட்சியில் தொகுதி மறுசீரமைப்பு என்பது திட்டமிட்டு எதிர்கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகளை இல்லாமல் செய்யும் அபாயமும் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பை பயன்படுத்தி அப்படி ஒரு சதித்தனமான வேலையில் ஈடுபட்டது என்பதை News laundry ஊடகம் அம்பலப்படுத்தியதை கவனத்தில் கொண்டும் பார்க்க வேண்டியுள்ளது.
இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி வேகமாக செயல்பட்டு வரும் பாசிச பாஜக கும்பல் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மூலம் தனது பாசிச அதிகாரத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நடைமுறையில் பார்த்து வருகிறோம். ஆகவே, மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமையை பாதுகாக்க பழைய விகிதாச்சாரப்படி தொகுதிகள் கிடைப்பது மட்டுமே நியாயமாக இருக்க முடியும். இதற்காக மாநிலங்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக கலகத்தில் இறங்குவதே ஒரே வழி.
தற்போதுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தின் வரம்புகளின் கீழ் மாநிலங்களை சமமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஓரளவுக்கு மேல் வெற்றி பெறாது என்பதால் தான் மாநில உரிமைகளை பாதுகாக்க தன்னாட்சி அதிகாரமே தீர்வு என்று முன்வைக்கின்றோம்.
தொகுதிகள் மறு வரையறை என்பதை எதிர்த்து போராடிக் கொண்டே ஆக்கபூர்வமான தீர்வாக தேசிய இனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பாதுகாக்கின்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.
மக்கள் தொகையை மட்டும் கணக்கில் கொண்டு பரிசீலிக்காமல் தேசிய இனங்களின் உரிமைகளை பாதுகாப்பது என்ற அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு பொருத்தமாக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும்.
– தயாளன்.
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
(ஏப்ரல் – 2025)






