இந்த மாதம் 16 ஆம் தேதி அன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் அளிப்பது மற்றும் பாராளுமன்ற தொகுதிகளின் மறுவரையறை குறித்த சட்டங்களைக் கொண்டுவர பாசிச பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
இதில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் அளிப்பது தொடர்பான சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால், பாராளுமன்றத் தொகுதி மறுவரையறையை தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.
தற்பொழுது உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய தென்மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். இந்தி பேசும் வடமாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் உயர்ந்துவிடும்.
இதனால் தென்மாநிலங்களில் எதிர்ப்புகளை மீறி வடமாநில உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு எந்த ஒரு சட்டத்தையும், திட்டத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விட முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடும். வடமாநிலங்களுக்கு அரசியல் ரீதியாக தென் மாநிலங்கள் அடிமைப்படும் நிலை ஏற்பட்டு விடும். எனவே தென்மாநிலங்கள் மக்கள்தொகை அடிப்படையில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யப்படுவதை எதிர்க்கின்றன.
ஆனால், பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் குறையாது, மாறாக உயரும் என்று பாசிச பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு உயரும் அதே விகிதத்தில் (அதாவது பீகார் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எத்தனை சதவீதம் தொகுதிகள் உயர்கின்றனவோ அதே சதவீதத்தில்)தென் மாநிலங்களுக்கும் உயருமா? என்று கேட்டால் அதைப்பற்றி சங்கிகள் வாய் திறப்பது இல்லை.

இன்னும் தெளிவாக அனைவருக்கும் புரியும்படி கூறுவதானால் தற்பொழுது பீகாருக்கு உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 40. அதே சமயம் உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தமிழகத்திலும் புதுவையிலும் சேர்த்து மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
தமிழ்நாட்டுக்கு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று கூறும் மோடி, அமித்சா உள்ளிட்ட பாசிஸ்டுகள் இப்பொழுது நடத்தப்படும் தொகுதி மறுவறையறையில் பீகாருக்கு கொடுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை அளவிற்கு சமமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சேர்த்து தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றோ அல்லது உத்தரப்பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சரிபாதி அளவிற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சேர்த்து ஒதுக்கப்படும் என்றோ உறுதியளிக்கத் தயாரா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. அதற்கு இவர்கள் வாயே திறப்பது இல்லை.
ஆர்எஸ்எஸ் – பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்ககக்கூடிய தென்மாநிலங்களுக்கு பாராளுமன்றத்தின் உள்ள பிரதிநிதித்துவத்தை குறைத்து விட வேண்டும் என்பதுதான் பாசிச பாஜகவின் திட்டம். இதனால்தான் மேற்கண்ட கேள்விகளுக்கு சங்கிகள் யாரும் பதில் சொல்வதில்லை.
ஒரு குடும்பத்தில் தாய் தந்தையும் மற்றும் அவர்களுக்கு நான்கு பிள்ளைகளும் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்தின் சொத்தை பிரிக்கும் பொழுது அந்த நான்கு பிள்ளைகளுக்கும் சமமாக பிரிப்பது தான் சரியாக இருக்கும். அப்படியில்லாமல் ஒரு பிள்ளைக்கு நான்கு குழந்தைகள் இருப்பதால் அவர்களுக்கு அதிகமான சொத்தும் ஒரு பிள்ளைக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் இருப்பதால் அவர்களுக்கு குறைவான சொத்தும் ஒரு பிள்ளைக்கு ஒரு குழந்தை மட்டும் இருப்பதால் அவருக்கு அதைவிட குறைவான சொத்தும் என்ற வகையில் சொத்துக்களை பிரிப்பதை அயோக்கியத்தனம் என்று தானே கூறுவார்கள்? தற்பொழுது உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை மறுவரை செய்வது என்பதும் அப்படிப்பட்ட ஒரு அயோக்கியத்தனம் தான்.
இதைப் புரிந்து கொள்வதற்கு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்த வரலாற்றை சுருக்கமாக வேனும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் தொகுதிகளை மறுவரை செய்ய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அப்படி மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு 1963 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்ற தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கு (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) 39 பாராளுமன்ற தொகுதிகளும் பாண்டிச்சேரிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதியும் கிடைத்தன. பீகார் மாநிலத்திற்கு 53 உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 86 தொகுதிகளும் கிடைத்தன.
1973 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடத்தப்பட்ட போது இந்திய மாநிலங்களின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் எதுவும் ஏற்படாத காரணத்தால் மாநிலங்களுக்கான பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையிலும் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. உதாரணமாக உத்தரப்பிரதேசத்தின் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 86 இருந்து 85 ஆக குறைந்தது. பீகாரின் எண்ணிக்கை 53 இருந்து 54 ஆக உயர்ந்தது. கேரளாவின் எண்ணிக்கை 18 லிருந்து 20 ஆக உயர்ந்தது. அதேசமயம் தமிழ்நாட்டில் எண்ணிக்கை 39 எவ்வித மாற்றமும் இன்றி 39 ஆகவே நீடித்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதி என்ற நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
பிறகு, பீகார் மாநிலத்திலிருந்து ஜார்க்கண்ட் என்ற பெயரில் ஒரு மாநிலமும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் என்ற ஒரு மாநிலமும் பிரிக்கபட்டது. இப்படி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பீகார் மாநிலத்திற்கு 40 பாராளுமன்ற தொகுதிகளும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 80 பாராளுமன்ற தொகுதிகளும் என்று நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை இந்த நிலை நீடிக்கிறது.
இந்தியாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று 1952 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு கூறிவந்த நிலையில் 1970களில் அதை தீவிரமாக வலியுறுத்தியது. மத்திய அரசின் வழிகாட்டுதலை முழு மனதுடன் ஏற்று தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மக்களிடையே கொண்டு சென்று சேர்த்தன. ஆனால் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை.
இதன் காரணமாக வட மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி மிகப்பெரும் அளவு இருந்த நிலையில் தென் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சியில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டது. அதாவது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தில் வட மாநிலங்களின் மக்கள் தொகை பெருமளவு உயர்ந்துவிட்டது. அதற்கு இணையாக தென்மாநிலங்களின் மக்கள் தொகை உயராமல் மக்கள் தொகை குறைந்து விட்டது.
இந்த நிலையில் மக்கள் தொகையின் அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்தால் அது இந்திய அரசின் வழிகாட்டுதலை ஏற்று மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் தொகுதிகளில் எண்ணிக்கையை குறைக்க வேண்டி வரும் மத்திய அரசின் வழிகாட்டுதலை மதிக்காமல் செயல்பட்ட வடமாநில தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிவரும்.
இது மத்திய அரசின் வழிகாட்டுதலை மதித்த தென் மாநிலங்களை தண்டிப்பதாகவும்; மதிக்காமல் புறக்கணித்த வடமாநிலங்களுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுப்பதாகவும் அமைந்துவிடும் என்பதால் 1973 -க்கு பிறகு தொகுதி மறவரையறை செய்யப்படவில்லை. அதற்கு மாறாக 1976 ஆம் ஆண்டு ஒரு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு, அதாவது 2001 வரை, பாராளுமன்ற தொகுதி வரையறை செய்யப்படாமல் தள்ளி வைக்க வகை செய்யப்பட்டது.
2021லும் மக்கள் தொகை வளர்ச்சியில் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே மிகப் பெரும் ஏற்றத்தாழ்வு நீடித்ததால், அப்பொழுதும் ஒரு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, மேலும் 25 ஆண்டுகளுக்கு(2026 வரை) பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்யப்படுவது தள்ளி வைக்கப்பட்டது. இப்பொழுதும் வட – தென் மாநிலங்கள் இடையிலான மக்கள் தொகையில் உள்ள ஏற்றத்தாழ்வில் அதே நிலை தான் நீடிக்கிறது.
இந்த நிலையில் தற்பொழுது உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் பாராளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தால் ஒப்பிட்ட அளவில் தென் மாநிலங்கள் மிகப்பெரும் அளவில் தொகுதிகளை இழக்க வேண்டி இருக்கும்.
இந்திய பாராளுமன்றத்தில் குறிப்பாக மக்களவையில் தற்போது உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543. இதை 100% என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் பீகாரருக்கு 40 தொகுதிகளும் (7.36%), உத்தரப்பிரதேசத்திற்கு 80 தொகுதிகளும் (14.73%), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளும் (7.36%), கேரளாவிற்கு 20 தொகுதிகளும் (3.68%) உள்ளன.
படிக்க:
♦ பாசிச மோடி அரசின் கீழ் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: நாட்டிற்கே ஆபத்து!
♦ 14-04-2026 – அண்ணல் அம்பேத்கரின் 136-வது பிறந்த நாள்! அவரது சமூகப் பங்களிப்பைப் போற்றுவோம்!
மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் விகிதாச்சார அடிப்படையில் வட மாநிலங்கள் எப்படி அதிக தொகுதிகளை பெறும் அதே சமயம் தென் மாநிலங்கள் எப்படி தொகுதிகளை இழக்கும் என்பதை பார்க்கலாம்.
2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாததால் தற்பொழுது இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு என்பது தற்பொழுது நமக்குத் தெரியாது. அதேசமயம் தற்பொழுது இந்தியாவில் மொத்த வாக்காளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்; ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் உள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 97 கோடி (இதை 100% என்று நாம் வைத்துக் கொள்ளலாம்). சுமாராக உத்திரபிரதேசத்தின் வாக்காளர் எண்ணிக்கை 15.5 கோடி (16%) பீகாரில் 7.5 கோடி ( 7.98%) தமிழ்நாடு புதுச்சேரியில் 6.3 கோடி (6.5%) கேரளாவில் 2.7 கோடி( 2.78%) என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் மொத்தம் 888 உறுப்பினர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் உயர்த்தப்பட்டால் மாநில எந்த அளவுக்கு தொகுதிகள் உயரும் என்பதை உத்தேசமாக பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசத்திற்கு 142 தொகுதிகளும் பீகாருக்கு 69 தொகுதிகளும் தமிழ்நாட்டுக்கு 58 தொகுதிகளும் கேரளாவிற்கு 25 தொகுதிகளும் உத்தேசமாக கிடைக்கலாம். இப்படி தொகுதிகள் பிரிக்கப்பட்டால் மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பெருமளவில் மாறிவிடும். உத்திரபிரதேசத்தின் பிரதிநிதித்துவம் 14.73% இருந்து 16% ஆகவும் பீகாரின் பிரதிநிதித்துவம் 7.98% இருந்து 7.73% ஆகவும் உயரும்.

அதேசமயம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் பிரதிநிதித்துவம் 7.36% இருந்து 6.5% ஆகவும் கேரளாவில் பிரதிநிதித்துவம் 3.68% இருந்து 2.78% ஆகவும் குறைந்துவிடும். இதேபோன்று கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் குறையும்.
இந்த நிலை ஏற்பட்டு விட்டால் பாராளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரல்கள் எடுபடாமல் போகும். தென் மாநிலங்களின் ஒப்புதல் இன்றி வட மாநிலங்களில் இருந்து வந்துள்ள மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு, தென் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி, எந்த விதமான சட்ட, திட்டங்களையும் நிறைவேற்றி விட முடியும். இதன் மூலம் தென்மாநிலங்கள் அரசியல் ரீதியாக வட மாநிலங்களிடம் அடிமைப்பட்டு கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்.
இதை தடுப்பதற்கு இந்தத் தொகுதி மறு வரையறையால் பாதிக்கப்பட போகும் பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் பிரமாநிலங்களுடன் தென் மாநிலங்களும் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்க்கக்கூடிய புரட்சிகர ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும்.
– குமரன்






