ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, மற்றும் தொகுதி மறு வரையறை மசோதா இரண்டையும் அவசரமாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வாக்கெடுப்பின் போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாசிச கும்பல் தோல்வியை சந்தித்துள்ளது. பெரும்பான்மைக்கு 352 தேவை என்ற நிலையில் ஆதரவு 298, எதிர்ப்பு 230 என வந்ததால் தொகுதி மறு வரையறை மசோதா தோல்வியடைந்தது.
நேற்று (ஏப்ரல் 16, 2026) இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் முக்கியமாக 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543லிருந்து 850 வரை அதிகரிக்க முன்மொழிவு; தொகுதிகள் மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய அனுமதி, மகளிர் 33% இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்த வழி அமைத்தல்; டெல்லி, புதுச்சேரி, ஜம்மு & காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் தொகுதி மறுவரையறை. இந்த 3 மசோதாக்களும் வாக்கெடுப்பில் சுமார் 251 ஆதரவு vs 185 எதிர்ப்பு வாக்குகளுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
தொகுதி மறு வரையறை மசோதா தாக்கல் செய்யப் போகிறார்கள் என அறிவித்தவுடன் முதல் எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுந்தது. ஏற்கனவே இது குறித்து விவாதங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்படுமானால் தமிழ்நாடு ஏற்கனவே உள்ள 39 தொகுதிகளில் இருந்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும், இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதே இதை எதிர்த்து போராடுபவர்களின் கருத்து.
தமிழகத்தின் எதிர்ப்பை மட்டுப்படுத்த முனைந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையாது அதிகரிக்கும் என எந்தெந்த எந்தவிதமான புள்ளி விவரங்களும் இன்றி வாய் வார்த்தையாகவே அறிவித்தார். இதை அறிவிக்கும் முன்னரே பாஜகவின் அடிமை அதிமுக, பழனிச்சாமி தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என்று பாசிஸ்டுகளின் குரலாய் தமிழ்நாட்டில் ஒலித்தார்.
ஆனால் உண்மை எதுவென்று Thewire இணையதளம் Fact check மூலம் நிரூபித்துள்ளது. அமித்ஷா அவிழ்த்த பொய் மூட்டைகளை அம்பலப்படுத்தி உள்ளது. அதன் சாரத்தை தொகுத்து வெளியிடுகிறோம். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகாரத்தை ஓரிடத்திலேயே குவிக்கும் பாசிச மோடி அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவை இப்போது மட்டுமல்ல எப்போதும் நிறைவேற்ற விடாமல் தடுக்க ஓரணியில் அணிதிரண்டு போராடுவோம்.
தொகுதி மறுவரையறை குறித்த உள்துறை அமைச்சரின் மக்களவை உரை – ஒரு உண்மைச் சரிபார்ப்பு (The Wire கட்டுரைத் தொகுப்பு).
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பல உறுதிமொழிகளை அளித்தார், ஆனால் அவற்றை கூர்ந்து கவனிக்கும்போது அவை எவ்வளவு தவறாக வழிநடத்துகின்றது என்பது புரிகிறது. தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்களை அவரே முன்வைத்த போதிலும், அவரது உரை தெளிவான சட்ட விளக்கத்திற்கு பதிலாக அரசியல் ரீதியாக மக்களை அமைதிப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருந்தது. தென் மாநிலங்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தைப் போக்க, அவர் புனையப்பட்ட புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தினார்.
ஆதாரங்களின் அடிப்படையில் அந்த உரையின் விரிவான உண்மைச் சரிபார்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
கூற்று 1: “இடங்களின் எண்ணிக்கையில் சுமார் 50% அதிகரிப்பு இருக்கும்… தமிழ்நாடு எந்த இழப்பையும் சந்திக்காது… கேரளாவுக்கு 30 எம்பி-க்கள் இருப்பார்கள்.”
உண்மை: இது சட்ட ரீதியாகவும் கணித ரீதியாகவும் சாத்தியமற்ற ஒன்று.
அனைத்து மாநிலங்களுக்கும் சீரான 50% அதிகரிப்பு இருக்கும் என்று அமைச்சர் கூறினார். ஆனால், 2026 தொகுதி மறுவரையறை மசோதாவிலோ அல்லது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிலோ இத்தகைய சூத்திரம் (Formula) எங்கும் குறிப்பிடப்படவில்லை. புதிய மசோதாவின் பிரிவு 8, “சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில்” இடங்களை ஒதுக்க ஆணையிடுகிறது. அதே நேரத்தில், அரசியலமைப்பின் 81(2)(a) பிரிவு, நாடு முழுவதும் மக்கள் தொகைக்கும் இடங்களுக்கும் இடையிலான விகிதம் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. 1971 முதல் உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை மிக அதிகமான நிலையில், கேரளாவின் மக்கள் தொகை நிலைபெற்றுள்ளது. எனவே, இரண்டிற்கும் சமமாக 50% அதிகரிப்பு வழங்குவது அரசியலமைப்பின் 81-வது பிரிவை நேரடியாக மீறுவதாகும்.
கூற்று 2: “தற்போது தமிழகத்தின் இடப்பகிர்வு சதவீதம் 7.18%, இது 7.23% ஆக உயரும்… தென் மாநில எம்பிக்களின் ஒட்டுமொத்த பலம் 24% ஆக இருக்கும்.”
உண்மை: இது எந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடனும் தொடர்பில்லாத ஒரு புனையப்பட்ட சூத்திரம்.
எதிர்கால நாடாளுமன்றத்தின் 816 இடங்களில் தென்னிந்தியாவின் விகிதாசார அதிகாரம் அப்படியே இருக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார். ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 816 இடங்களைப் பிரித்தால், தென் மாநிலங்களின் பங்கு கணிசமாகக் குறையும். அமைச்சர் தமிழகத்திற்கு 7.23% என்பதை எப்படிக் கணக்கிட்டார் என்றால், தமிழகத்தின் தற்போதைய 39 இடங்களை 1.5 ஆல் பெருக்கி (39 x 1.5 = 58.5) அதை 59 என மாற்றியுள்ளார். பின்னர் 59 ஐ 815 ஆல் வகுத்து 7.23% என்று கூறியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை, ஏனெனில் மசோதாவின் பிரிவு 8, இடங்களை “சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு” படி ஒதுக்கச் சொல்கிறதே தவிர, பழைய இடங்களை 1.5 ஆல் பெருக்கச் சொல்லவில்லை.
கூற்று 3: “இந்த மசோதாவை முன்மொழிந்த அமைச்சர் என்ற முறையில் இந்த அதிகாரப்பூர்வ விளக்கங்களை நான் முன்வைக்கிறேன்.”
உண்மை: அமைச்சர்களின் உரைகள் சட்ட விதிகளுக்கு (Statutes) மேலானவை அல்ல.
சட்டத்தின் எழுத்துப்பூர்வமான வாசகங்களுக்கு முரணாக அமைச்சர் அளிக்கும் வாய்மொழி உறுதிமொழிகளுக்கு எந்த சட்டப்பூர்வ மதிப்பும் இல்லை. நீதிமன்றங்கள் மற்றும் தொகுதி மறுவரையறை ஆணையம் அரசாணையில் உள்ள வாசகங்களைத்தான் பின்பற்றுமே தவிர, நாடாளுமன்ற உரைகளை அல்ல. தென் மாநிலங்களின் 24% அதிகாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உண்மையிலேயே நினைத்திருந்தால், 1971-ம் ஆண்டின் விகிதாச்சாரமே தொடரும் என்று சட்டத்தில் ஒரு சிறு விதியைச் சேர்த்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதைச் செய்யாமல், மக்கள் தொகை கணக்கெடுப்புத் தடையை நீக்கும் விதியையே எழுதியுள்ளது.
கூற்று 4: அவையின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்காக மட்டுமே.
உண்மை: அதிகாரத்தைக் கைப்பற்ற பெண் உரிமைகள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அவையின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது என்பது ஒரு “மயக்க மருந்து” போன்றது. இதன் மூலம் தென் மாநிலங்கள் தங்களின் தற்போதைய இடங்களின் எண்ணிக்கையை (உதாரணமாக கேரளா 20 இடங்களைத் தக்கவைப்பது) இழக்காமல் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த அவையில் அவர்களின் ‘விகிதாசார’ அதிகாரம் (Proportional power) முற்றிலும் வீழ்ச்சியடையும்.
படிக்க:
♦ தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும், மாநில உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறு சீரமைப்புச் சட்டம்.
♦ பாராளுமன்ற தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களை அரசியல் ரீதியில் அடிமையாக்க வரும் பாசிச ஆயுதம்
கூற்று 5: “தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தில் நாங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை… நாங்கள் எதையும் முறைகேடு செய்ய மாட்டோம்.”
உண்மை: முறைகேடு என்பது ஆணையத்தில் இல்லை, அரசியலமைப்புத் திருத்தத்திலேயே உள்ளது.
அரசாங்கம் 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை முடக்கத்தை நீக்குவதன் மூலமே முறைகேட்டைத் தொடங்கிவிட்டது. இது வட மாநிலங்களுக்கு ஆதரவாக அதிகாரத்தை மாற்றும் ஒரு செயலாகும். மேலும், 850 இடங்களாக அதிகரிப்பது ஆளும் கட்சிக்கு சாதகமாக தொகுதிகளை மாற்றியமைக்க (Gerrymandering) வழிவகுக்கும். அமைச்சரின் உரை விளக்கமல்ல, அது தென் மாநில வாக்குகளின் மதிப்பைக் குறைக்கும் ஒரு திட்டமிட்ட ஏமாற்று செயலாகும்.
நன்றி: Thewire
- நந்தன்








டபிஜேபி என்றாலே பொய் பேசுபவர்கள் தான் அமித்ஷா மட்டும் விதிவிலக்கு அல்ல?
இந்து ராஷ்டிரத்தை என்ற நோக்கத்திற்காக எத்தனை மாநிலத்தை வேண்டுமானாலும் பலியிடலாம் என்பது தான் தொகுதி மறு வரையறை சட்டத்தின் மூலமாக பாசிச மோடி அரசு செய்ய துடிக்கிறது.
இது வாக்கு செலுத்தும் அனைத்து மக்களுடைய பிரச்சனை ஆகையால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த முறையில் போராடுவதை சரியான தீர்வாக இருக்கும்.