அம்பானிக்கும், அதானிக்கும் நாட்டை விற்க உரிமை உண்டு!
நீதி கேட்டு வீதியில் இறங்கினால் வீசப்படும் வெடி குண்டு!
ஊரைச் சுற்றும் ஊதாரிக்கு
உலக பாசிஸ்டுகள் சப்போர்ட்டு!
உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது ரப்பர் புல்லட்டு!
மூன்றாவது முறையும் மோடிதான் நமக்கு
இது சங்கிகளின் சபலக்குரல்!
பாசிஸ்டுகள் வரிசையில் முதலிடம் பிடிக்கத் துடிக்கும்
பணக்காரர்களின் பங்காளனை எதிர்த்து
எட்டுத்திக்கும் எழ வேண்டும் கலகக்குரல்!
மணிப்பூர் எரிவதைப் பற்றியோ
பொருளாதாரம் சரிவதைப் பற்றியோ
எந்தக் கவலையும் இல்லை!
அவர்களது கனவுகளெல்லாம் இந்துத்துவாவின் எல்லையற்ற விரிவாக்கத்தைப் பற்றியதுதான்!
அவர்களது அச்சமெல்லாம்
ATM வாசலில் இறந்தவர்களைப் பற்றியது அல்ல!
EVM இயந்திரங்களை தன் வசப்படுத்துவதைப் பற்றியதுதான்!
வரும் தலைமுறைக்கு விண்வெளியில் வீடு என்று காதில் பூவை சுத்துவதும்!
வரியையும் விலைவாசியையும் கேள்வி கேட்டால் ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்துவதும்
அவர்களது வாடிக்கை!
வளர்ச்சி
வல்லரசு
புண்ணாக்கு புடலங்காய் என்பதுதான் பத்தாண்டுகளாய் நாம் பார்த்துவரும் வேடிக்கை!
பசு பதுகாப்பு தொடங்கி பாகிஸ்தான் எதிர்ப்புவரை
தேர்தல் உத்தி என்பது பாமரனுக்கும் புரியம்!
தன் பெயரை சொல்லித்தான் நாட்டையே விற்கிறான் என்பது அந்த “கற்பனை”
ராமனுக்கும் தெரியும்!
இதோ!
வைக்கோல் போர் தயாரிப்பவர்கள் வைராக்கியத்தோடு நிற்கிறார்கள் வீதியில்!
வர்க்கப்போர் தான் சுரண்டலுக்கெதிரான தீர்வு என்பது புலப்படுகிறது! அவர்கள் உலகிற்கு உரக்க சொல்லும் சேதியில்!!
- சேதுராமன்