டந்த மாரச் 26ஆம் தேதி தேர்தல் பத்திர வழக்கில் SBI யின் பொய்களை நீதிமன்றத்தில் வாதங்களாக முன்வைத்த லண்டன்வாழ் சட்ட அறிஞர் ஹரிஷ் சால்லே, தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்க குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் அதீஷ் அகர்வாலா உள்ளிட்ட 600 வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், “சில சுயநலன் கொண்ட வழக்கறிஞர்கள் தங்களுக்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்புகள் வராத போது நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் விதமாக நீதிமன்றத்திலும் மாலை வேளையில் சமூக ஊடகங்களிலும் பேசி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர். அவர்கள் ஊழல்வாதிகளை வெளியில் எதிர்த்துப் பேசுகின்றனர். நீதிமன்றத்தில் ஆதரித்துப் பேசுகின்றனர். கடந்த காலத்தில் நீதித்துறை ‘பொற்காலம்’ ஒன்று இருந்தது. தற்போது அப்படி இல்லை இல்லை என்கின்றனர். தங்கள் அரசியல் சார்புக்கு ஏற்ற முடிவுகளை எதிர்பார்க்கினறனர்‌. அதற்கு ஆதரவாக தீர்ப்பு வரும்போது அதை புகழ்ந்தும், எதிராக வரும்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வேலையை செய்கின்றனர்‌.  இந்த வேலையைக் குறிப்பாக, தேர்தல் நேரத்தில் செய்கிறார்கள். இவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் இதையே செய்தனர். மேலும், குறிப்பிட்ட நீதிமன்ற அமர்வுக்கே தங்கள் வழக்குகள் வர வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தாங்கள் இத்தகைய போக்கை அனுமதிக்கக் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த கடிதத்தை X தளத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் 50 ஆண்டு கால கலாச்சாரம் இதுதான் எனப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பாஜகவின் தூண்டுதலிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்திவிட்டார். தனது கொண்டையை மறைக்க தவறிவிட்டார்.

இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்த காலத்தில் நீதித்துறையை தனது கைப்பாவாயாக பயன்படுத்த முயற்சித்தார் என்பது உண்மைதான். இப்போது கேள்வி மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அதே வேலையை செய்கிறதா? இல்லையா? என்பதுதான். கடந்த காலத்தில் நடந்த குற்றங்களைப் பேசி நிகழ்காலத்தில் தான் செய்யும் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறது மோடி கும்பல். இவர்கள்தான் வெங்காய விலையேற்றத்துக்கு நேருவை குற்றஞ்சாட்டுபவர்களாயிற்றே.

சரி விஷயத்துக்கு வருவோம். நீதித்துறைக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல். நீதிமன்றத் தீர்ப்புகளை, நீதித்துறையை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  1. சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் மாதவிடாய் சுழற்சி நிற்காத பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் – பாஜக காலிகள் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ ஒருபடி மேலே போய் “நீதிமன்றங்கள் நடைமுறைப்படுத்த வசதியான தீர்ப்புகளையே வழங்க வேண்டும்” என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
  2. அமலாக்கத்துறை இயக்குனர் நியமனம்: அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலத்தை ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து நீட்டிப்பு செய்தது சட்டவிரோதம், உடனடியாக, புதிய இயக்குனரை நியமிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. அதனை மதிக்காமல் தொடர்ந்து நீட்டித்தது.
  3. டெல்லி அரசு அதிகாரிகளை நியமிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அந்த தீர்ப்பை செல்லக்காசாக்கியது.
  4. தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யும் குழு பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்கட்சி தலைவர் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி ஒரு கேபினட் அமைச்சர் என சேர்த்து சட்டமாக்கி உச்சநீதிமன்ற தீர்ப்பை கேலிப்பொருளாக்கியது.
  5. தேர்தல் பத்திரம் விவரங்களை வெளியிடப்படுவதை தடுக்க SBI மூலம் செய்த தகிடுத்தித்தங்கள் சமீபத்திய எடுத்துக்காட்டு.

இப்படி தனது கட்சியின் அதிகாரத்துக்கும், சித்தாந்தத்துக்கும் எதிரான தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கும்போதெல்லாம் அதை தூக்கியெறிந்த இந்த கும்பல் நீதித்துறையை மதிப்பது குறித்து மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கிறது.

தற்போது ஏன் இந்த கடிதம்?

இந்த கடிதம்- நீதித்துறையை மதிப்பதாக காட்டும் மோடி கும்பலின் நாடகம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மையப் புலனாய்வு துறை ஆகியவற்றை போன்று நீதித்துறையும் முழுமையாக தனது அடியாளாக வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் விருப்பத்தை வெளிப்படுத்துவதே இந்த கடிதம்.  குறிப்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு நெருக்கடி கொடுப்பதே இந்த‌ கடிதத்தின்‌நோக்கம்.

இதையும் படியுங்கள்: 

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த முறைகேட்டை “ஜனநாயகத்தின் படுகொலை” என விமர்சித்தது உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரம் வழக்கில் உறுதியாக இருந்து தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளிக்குக் கொண்டு வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அதை தொடர்ந்து அம்பலமான மோடி அரசின் ஊழல், வசூல் வேட்டை ஆகியவை அம்பலமானது. இனி இது போன்ற தீர்ப்புகள் வரக்கூடாது என்பதே கடிதத்தின் நோக்கம். தேர்தல் நேரத்தில் தங்களுக்கு எதிராக வேறு ஏதேனும் தீர்ப்பு வந்தாலும் அவற்றை இந்த காங்கிரஸ் கட்சியால் மிரட்டிப் பெறப்பட்டது என அவதூறு செய்வதே அவர்கள் நோக்கம். நீதித்துறையுடன் சேர்த்து இவர்கள் குறிவைப்பது ஒன்றிய மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை தொடர்ந்து நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தும் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, துஷ்யந்த் தவே போன்ற சிவில் உரிமைகளுக்காக வாதாடுபவர்களை. இந்த கடிதத்தைத் தொடர்ந்து இந்திய பார்கவுன்சில் மூலம் அவர்கள் வழக்காடுவதைத் தடுப்பது அடுத்த கட்டமாக நடக்க வாய்ப்பு உள்ளது.

அநீதியான அயோத்தி தீர்ப்பு, உமர் காலித் உள்ளிட்ட மக்கள் உரிமை போராளிகளுக்கு ஜாமீன் மறுப்பது, PMLA போன்ற கருப்புச் சட்டத்தைத் தடுக்கத் தவறியது என நீதித்துறையின் பல்வேறு தீர்ப்புகள் பாசிஸ்டுகளுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. மேலும் நீதிபதிகள் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. இவற்றை நாம் விமர்சிக்கிறோம். ஜனநாயகத்தை, மக்கள் உரிமைகளை நீதித்துறை உயர்த்திப் பிடிக்க வேண்டும் எனக் கோருகிறோம். தொடர்ந்து கோருவோம்.

  • திருமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here