மீப காலமாகவே பாசிச மோடி அரசாங்கத்தை அரசின் பல்வேறு துறையினர் விமர்சித்தும், கண்டித்து போராடியும் வருகின்றனர். அதில் முக்கியமானது நீதித்துறையில் நடக்கும் போராட்டம்.

நீதித்துறையில் என்ன பிரச்சினை?

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முறையில்தான் முரண்பட்டு முட்டிக்கொள்கின்றனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மேலும் 4 மூத்த நீதிபதிகளை கொண்டு அமைக்கப்படும் ‘’ கொலீஜியம்’’   தான் அடுத்த பதவிஉயர்வு பட்டியலை இறுதி செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும். அப்பட்டியலில் உள்ளவர்கள் குறித்து அரசுதரப்பு  விளக்கம்,அல்லது மறுப்பு இருந்தால் கொலீஜியமே அதை கணக்கில் எடுத்துக் கொண்டு மீண்டும் பரிசீலித்து  இறுதியாக்கும். இந்த முடிவைத்தான் அரசு அமல்படுத்தி வருகிறது. இப்பொழுது சமூகத்தில் உள்ள முரண்பாடு நீதித்துறையில் வெடிக்கிறது.

 

சமூகத்தில் என்ன முரண்பாடு?

ஒறுபுறம் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலும், கொள்ளையும் கட்டுக்கடங்காமல் பெருகிவருகிறது. மறுபுறம் இதற்கெதிராக சிந்திக்க விடாமல் காவி பாசிசம் மத, சாதி,இன வெறியை பரப்பி கலவரங்கள், கூட்டு பாலியல் வல்லுறவுகள், படுகொலைகளை நடத்தி வருகின்றது. இதை விமர்சிப்பவர்களை கார்ப்பரேட் காவி பாசிஸ்ட்டுகள், சுட்டுத்தள்ளியும் UAPA வில் சிறையில் தள்ளியும் வருகின்றனர். இந்த வகையில் நியாயம், நீதி, நேர்மை, மனசாட்சி, பகுத்தறிவின் பக்கம் நிற்கும் யாராவது நீதிபதிகளாக வந்துவிட்டால் அவர்களையும் லோயாவைப்போல் ’’சொர்க்கத்துக்கு’’ அனுப்ப வேண்டி வருகிறது. எதற்கு தொல்லை? என கொலீஜியத்தை செல்லாக்காசாக்கிவிட்டு காவிகளையே ’’நீதிஅரசர்’’களாக்கிவிட  எத்தனிக்கிறது, பாசிசம்! இப்படி நாட்டில் நடப்பது நீதித்துறையிலும் பிரதிபலிக்கிறது.

இதையும் படியுங்கள்: கருத்தரங்கம் நீதித்துறை சுதந்திரமும், நீதிபதிகள் நியமனமும் இனி?

தற்போது ஆண்டுவரும் காவி பாசிஸ்ட்டுகள் காங்கிரசின் வழியில், மறுகாலனிய நோக்கில் ஒவ்வொரு துறையிலும் ஆணையங்களை உருவாக்கி வருகிறது. அதை சட்டமன்றம், பாராளுமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் எந்த அமைப்பும் கேள்வி கேட்கமுடியாதபடி உச்சநீதிமன்ற தீர்ப்புபோல அனைத்துக்கும் மேலானதாக ஏகாதிபத்திய கார்ப்பரேட் சேவைக்காக நிலைநிறுத்துகின்றனர். நேற்றுவரை இதை வேடிக்கை பார்த்த நீதித்துறையினருக்கு இன்று அடி விழுகிறது. 2015 இல் தேசிய நியமன ஆணையத்தை சட்டம்போட்டு மோடி கும்பல் கொண்டுவந்தது. அச்சட்டமே செல்லாது என உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பதிலடியாக நீதிபதிகளின் கொலீஜிய பரிந்துரைகளை மோடி கும்பல் கிடப்பில் போட்டு வருகிறது. சாராம்சத்தில் இந்த நாய்ச்சண்டைக்கு நாட்டுப்பற்று, மக்கள் பற்று காரணமா? இல்லை அதிகார வெறியா?

நீதித்துறையினரின் தகுதி!

சபரிமலை, ராமர்பாலம் பிரச்சினையில் தமக்குள் முரண்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் அமர்வில் இருந்தவர்கள் தந்துள்ளனர். அதில் பெரும்பான்மை அடிப்படையில் நடைமுறையாகிறது. ஆனால் நாம் இதை எழுதினால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடுகிறது. கூச்சநாச்சமின்றி கருத்துரிமையை பறித்து அருந்ததிராயை தண்டிக்கிறது. இப்படி நீதிக்கும் அநீதிக்குமான  மோதல் இப்போதைக்கு மட்டும் நடக்கவில்லை.

அடிப்படையிலேயே காலனிய கால மரபை ரசித்து, சுகித்து திரியும் மேன்மக்களாகவே நீதிபதிகள் வாழ்கின்றனர். நல்லவேளை தலையில் விக் வைப்பதுபோன்ற கோமாளித்தனத்தை மட்டும் கைவிட்டுள்ளனர். ஆனாலும் கடுங்குளிர் பிரதேச உடையை அப்படியே வெப்ப மண்டலத்திலும் பயன்படுத்துகின்றனர். அதிகாரத்தை குறிக்கும் செங்கோலையும், அடிமைத்தனத்தின் உச்சமான ’’மைலார்டு, நீதி அரசரே’’  என அழைப்பதை விருப்ப பூர்வமாக அனுபவித்துவரும் நவீனகால ஆண்டைகள்தான் இவர்கள். கடவுளுக்கேற்ற பூசாரியைப்போல கருப்பு கோட்டு, உள்ளே வெள்ளை சட்டை, கழுத்துப்பட்டை சகிதமாக ஆங்கிலேய அடிமை வழக்கறிஞர்களின் பாணியில்தான் நம்மூர் ‘’வழக்கறிஞர்’’ களும் நடக்கின்றனர்.  ‘வழக்கை பற்றி அறிந்தவர் _வழக்குரைஞர்’ என்பதைத்தாண்டி ‘’அறிஞராக’’ கூறிக்கொள்கின்றனர்.  குறைந்தபட்சம் தனக்கு ஒத்துவராத சீருடையை மாற்றவோ, குரலெழுப்பவோ  முடியாதபடி புனிதமரபு தடுக்கிறது.  பாசிசம் விரும்பியபடி நீதித்துறை ஒத்துழைக்கவில்லை என்ற ஒரு அம்சம் மட்டுமே நம் அக்கறைக்குரியது.

நாம் நீதித்துறையின் பக்கம் நிற்க வேண்டுமா?

அதைத்தவிர வேறுவழியில்லை. அதில் 0.01% மட்டும் நேர்மையானவர்கள் இருந்தாலும், அவர்கள் பாசிசத்தின் இலக்காவார்கள். அதேநேரம் காவிகள் பதவியில் அமர்ந்தால் என்னவாகும்? என்பதற்கு குஜராத் கலவர வழக்குகளே சாட்சியாக நிற்கிறது. பாசிசம் சட்டபூர்வமாக நம்மை அழிப்பதை தடுக்க நீதித்துறையில் நல்லதாக எஞ்சி இருப்பதை தக்கவைக்க உடன் நிற்பது அவசியமே! அதாவது, அதிகார வர்க்கத்துக்குள் வரும் பிளவு – மோதல்களை  நாம் பயன்படுத்தி பாசிசத்தை தனிமைப்படுத்தி தாக்க வேண்டும். அதற்காக இப்பொழுது முரண்பட்டுள்ள, நாளை ஒருவேளை போராட்ட களம்காணக்கூடிய வாய்ப்புள்ளவர்களுடன் ஒன்றிணைவோம். நீதித்துறை சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம்!

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here