உயர் சாதி ஏழைகளின் வெற்றி

பாவம் உயர் சாதி ஏழைகளுக்கு எருமைமாடு மேய்க்கத் தெரியுமா?செருப்பு தைக்கத் தெரியுமா? நகரக் குப்பைகளை அள்ளத் தெரியுமா? இடுகாட்டில் பிணம் எரிக்கத் தெரியுமா? மலம் அள்ளத் தெரியுமா? கக்கூஸ் கழுவத் தெரியுமா? 

உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டு வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் 3 நீதிபதிகள் 10% ஒதுக்கீடு செல்லும் என்றும், தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் ஆகியோர் எதிராகவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இருப்பினும், மெஜாரிட்டி ஆதரவால் 10%இட ஒதுக்கீடு செல்லும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமாக பா.ஜ.க வினரால் பார்க்கப்படுகிறது. பரப்பப்படுகிறது. வறுமை ஒழிப்பு வேறு. சமூக நீதி வேறு.

ஒரு காலத்தில், தலித்துகளிடம் காசு இருந்து. ஆனாலும் அவர்களால் பேருந்துகளில் பயணம் செய்யமுடியவில்லை. நாடகக் கொட்டகையில் காசுகொடுத்தாலும் டிக்கெட் தர மறுத்தார்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், விடுதிகளில் பணம் செலுத்துகிறோம், என்றாலும் தலித்துகளுக்கு இடம் மறுக்கப்பட்டது.

இந்தியாவில் மனிதர்களுக்கான சமூக மதிப்பை தீர்மானிப்பது காசு அல்ல, சாதி!

இந்தியாவில் தலித்துகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முடியும். கோவில் கருவறைக்குள் நுழையமுடியாது. பெண்கள் நாடாளுமன்றத்தில் காலெடுத்து வைக்க முடியும். அய்யப்பன் கோவிலில் அவர்களது காலடிபட முடியாது.

இந்துத்துவாவை ஏற்றுக்கொண்ட மோடியால் பிரதமராக முடியும். ஆனால், அவரை சங்கராச்சாரியாக ஏற்றுக்கொள்ள இந்து மதம் தயாரில்லை!

மனிதர்களிடையே நிகழும் ஏற்றத்தாழ்வை அகற்ற விரும்புவது பொதுவுடமைச் சித்தாந்தம். சாதி ஏற்றத் தாழ்வைக் களைய விரும்புவது சமூகநீதி சித்தாந்தம். இந்தியாவில் மனிதர்கள் ஏழ்மையால் மட்டும் பின்தங்கவில்லை.  சாதியால் பின்தங்கினார்கள்!

இதையும் படியுங்கள்: நீதிமன்றம் உன் ஊர்த்தெரு அல்ல சாதிபதி அவர்களே!

சாதியின் பெயரால்தான் இங்கு ஆண்டாண்டு காலமாக,பஞ்சமர்களுக்கு, சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இந்த ஏற்றத் தாழ்வை அகற்ற உருவானதே சமூகநீதிக் கொள்கை. சமூகநீதி சிந்தனையின் விளைவே இட ஒதுக்கீடு.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கல்ல, சமூகரீதியாக பின்தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்கிறது!

ஆனால் மோடி அரசோ உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது. உயர்சாதி ஏழைகளை முன்னேற்ற, மோடி விரும்பினால், வங்கிகள் மூலம் லோன் தரட்டும். இட ஒதுக்கீடா தருவது?

இது இந்தியாவின் சமூகநீதி சித்தாந்தத்தையே குழிதோண்டிப் புதைக்கிற செயல்!

ஏழ்மையிலும் உயர்சாதி ஏழ்மைக்கும் ஒடுக்கப்பட்ட சாதி ஏழ்மைக்கும் இடைவெளி இருக்கிறது.

மாதம் 70,000 ஆயிரம் சம்பாதிப்பவர்கள், 5 ஏக்கர் நிலமுள்ளவர்கள், நகர்ப்புறத்தில் சிறிய வீடுள்ளவர்களே உயர்சாதி ஏழைகள், என்கிறது பிஜேபி அரசு. இவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே 10% இட ஒதுக்கீடு.

456 மில்லியன் இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குங் கீழ் வாழ்கிறார்கள். உலகத்தின் மூன்று ஏழைகளுள் ஒருவர் இந்தியர் என்கிறது உலகவங்கி. இவர்களது சராசரி ஒரு நாள் வருமானம் 100 ரூபாய்கூட கிடையாது.

2012 ஆம் ஆண்டு சென்சஸ்படி 65 மில்லியன் மக்கள் நகர்ப்புற சேரிகளில் வசிக்கிறார்கள். மும்பையில் மட்டும், அதன் மக்கள் தொகையில் 60% பேர் சேரிகளில் வாழ்கிறார்கள். இந்தச் சேரிகளின் பரப்பளவு மும்பையின் மொத்த பரப்பளவில் 8% மட்டுமே!

இந்த லட்சணத்தில்தான் உயர்சாதி ஏழைக்கும் ஒடுக்கபட்டசாதி ஏழைக்குமான இடைவெளி உள்ளது.

பாவம் உயர் சாதி ஏழைகளுக்கு எருமைமாடு மேய்க்கத் தெரியுமா?செருப்பு தைக்கத் தெரியுமா? நகரக் குப்பைகளை அள்ளத் தெரியுமா? இடுகாட்டில் பிணம் எரிக்கத் தெரியுமா? மலம் அள்ளத் தெரியுமா? கக்கூஸ் கழுவத் தெரியுமா?

இதையும் படியுங்கள்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடையாக 10% EWS இட ஒதுக்கீடு! கலகம் செய்!

இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ரயில்விட்டபோது, காரல் மார்க்ஸ், ‘ இது, இந்தியாவின் சாதிஅடுக்குகளைத் தகர்த்துவிடும்!’ என்றார். ஆனால் கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலும் பார்ப்பனர்களுக்கு தனி அறை ஒதுக்கினார்கள்.

நேருவின் சோஷலிசக் கட்டுமானத்தால் இந்தியாவின் சாதியை அசைக்க முடியவில்லை. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், நகரமயமாக்கல் எது ஒன்றாலும் இந்தியாவில் சாதியை ஒழிக்க முடியவில்லை.

சாதியை ஒழிக்கக்கூட அல்ல, சாதி இடைவெளியைக் குறைக்க உதவக்கூடியதே இட ஒதுக்கீடு. அதுவும் பொறுக்கவில்லை, சனாதனிகளுக்கு!

இந்தியா பெரிய அளவில் வளரமுடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அதன் உற்பத்தி உறவுகளில் புரட்சிகரமான, சாதி வேறுபாடற்ற ஒருங்கிணைப்பு இல்லாததே!

வழக்கம்போல், இத்தீர்ப்பின்வழி, இந்தியாவில் உச்சநீதி மன்றம் யாருடைய நலனுக்காக இயங்குகிறது? என்பதை மறுபடியும் ஒருமுறை புரிந்து கொள்ள வைத்திருக்கிறது!

  • கரிகாலன்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here