நீதிபதி சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஓராண்டுக்கு முன் பொறுப்பேற்ற (நவம்பர் 2022) சில நாட்களுக்குப் பிறகு, “வழக்குகள் பட்டியலிடப்படுவதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன்” எனக் குறிப்பிட்டார். ஆனால் நடைமுறையைப் பார்க்கும் போது, அவர் அப்படிக் கண்காணிப்பது போலத் தெரியவில்லை அல்லது அவருக்கு தெரிந்தேதான் விதிகள் மீறப்படுகிறதா என்பதும் ஐயமாக உள்ளது.

ஏனெனில் நீதிபதி பேலா மாதுர்யா திரிவேதி தலைமையிலான அமர்வின் முன் உள்ள 8 வழக்குகளை பகுப்பாய்வு செய்ததில், நீதிமன்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இது போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மூத்த நீதிபதிகள் முன்போ அல்லது இதே போன்ற வழக்குகளை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகளின் அமர்விலோதான் பட்டியலிடப்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் மோடி அரசின் அத்துமீறிய தலையீடு அச்சுறுத்துகிறது!

வழக்குகளை விசாரிப்பதற்கான அமர்வுகளை அமைப்பதற்கும், வழக்குகளை அவர்களின் முழு விருப்பத்தின் படி ஒதுக்கீடு செய்வதற்கும் தலைமை நீதிபதியின் சிறப்புரிமை மற்றும் நிர்வாக அதிகாரம் வகை செய்கிறது. இந்த சிறப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணிக்க எந்த வெளிப்படை தன்மையும், வழிகாட்டுதல்களும் இல்லாமல் உள்ளன.

இதுபோன்ற ஒதுக்கீடுகள் அரசாங்கம் விரும்புவது போல, அதன் நலன்களுடன் ஒத்துப்போகும் போதெல்லாம் இதில் அரசாங்கத்தின் தலையீடு உள்ளதோ என்பதை சந்தேகிக்கவும், நீதித்துறை ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் குறித்து கவலைப்படவும் வேண்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சமாக வழக்குகளை ஒதுக்குவதற்கு எதிராக கேள்வி எழுப்பி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத இந்தக் காட்சியை அப்போது நாம் பார்த்தோம்.

முன்னாள் உச்சநிதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா

தீபக் மிஸ்ரா வெளிப்படைத் தன்மை இன்றி, பகுத்தறிவுக்கு புறம்பான வகையில் தனது விருப்பத்தின் படி முக்கியமான சில வழக்குகளை சில அமர்வுகளுக்கு மட்டும் ஒதுக்கினார் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். தலைமை நீதிபதியின் கட்டற்ற அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனாலும் இதில் எந்தவித சீர்திருத்தங்களோ மாற்றங்களோ செய்யப்படவில்லை.

தலைமை நீதிபதியின் அதிகாரங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் அதே தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியவில்லை. இம்முறை நீதிபதி பேலா திரிவேதியின் அமர்வுக்கு பல வழக்குகள் விதிமுறைகளை மீறி ஒதுக்கப்படுவது மீண்டும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

நீதிபதி பேலா திரிவேதியின் பின்னணியும், அவருக்கு ஒதுக்கப்படும் வழக்குகளும்!

ஆகஸ்ட் 31, 2021 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பேலா திரிவேதி (3 பெண் நீதிபதிகளில் ஒருவர்) தற்போதுள்ள 34 நீதிபதிகளில் 16 வது நிலையில் உள்ளார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டவர் இவர். 2001 முதல் 2014 வரை மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மோடியின் அரசாங்கத்தில் சட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.

சென்ற மாதம் நவம்பர் 29 அன்று, அவர் முன்பாக மூன்று வழக்குகள் பட்டியலிடப்பட்டன. அதில் ஒன்று, தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் மாநில நெடுஞ்சாலைத் துறை டெண்டர் மோசடி தொடர்பான புதிய விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்காகும். இந்த வழக்கு இதற்கு முன்பாக மூத்த நீதிபதியான அனிருத்தா போஸ் அமர்வில் இருந்து எவ்விதக் காரணமுமின்றி திரிவேதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பேலா திரிவேதி

திரிவேதி விசாரித்த இரண்டாவது வழக்கு, சமூக செயற்பாட்டாளரான உமர் காலித்தின் ஜாமினை மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்காகும். டெல்லியில் பிப்ரவரி 2020 – ல் நடந்த கலவரத்தில் தொடர்புப்படுத்தி காலித் சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாக பிணைகூட மறுக்கப்பட்டு வருகிறது. அவரது ஜாமீன் மனு ஆரம்பத்தில் மூத்த நீதிபதி போபண்னா அமர்வில்தான் விசாரணைக்கு வந்தது. அடுத்த அமர்வு நீதிபதி போஸ் மற்றும் திரிவேதி அமர்வுக்கு மாற்றப்பட்டு, அதற்கு அடுத்த அமர்வு நீதிபதி திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்து, அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஆயிரம் நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உமர் காலித்!

அடுத்து UAPA எனும் ஆள் தூக்கி கருப்புச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளும் அன்று அவரது அமர்வில்தான் விசாரணைக்கு வந்தது.

பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ஊபா சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்குகள் முதலில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நடந்து வந்தது.

இந்த வழக்கானது திடீரென 15 மூத்த நீதிபதிகளையும் தாண்டி திரிவேதி தலைமையிலான அமர்வில் அன்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசின் விருப்பப்படிதான் அனைத்தும் அரங்கேறுகிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

மேற்கூறிய மூன்று வழக்குகளும் விதிமுறைகளை மீறி திரிவேதியின் முன் பட்டியலிடப்பட்டது மனுதாரர்களுக்கும் அவர்களது வழக்கறிஞர்களுக்கும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. புதிதாக பொறுப்பேற்ற சதீஷ் சந்திர சர்மா இவரது அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியாவார். எப்படியான கேலிக் கூத்துகள் நடக்கின்றன என்பதை பாருங்கள்!

விதிமீறல்களே நடைமுறையாய் உள்ளன!

இதே போலத்தான் தமிழகத்தின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட பண மோசடி வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் ஏழாவது மூத்த நீதிபதியான போபண்னா அமர்வில்தான் விசாரிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி சார்பாக அக்டோபரில் தாக்கல் செய்த மருத்துவ ஜாமீன் மனுவும் போபண்னா அமர்வுக்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற வழக்கை ஏற்கனவே அவர் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அரங்கேறும் காவி பாசிசம்! அமைச்சர் செந்தில் பாலாஜி கைது!

ஆனால் இந்த ஜாமீன் மனு வழக்கம் போல நீதிபதி போஸ் மற்றும் திரிவேதி அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது. நீதிபதி போஸ் இந்த வழக்கை விசாரித்து அடுத்து நவம்பர் 20 க்கு தள்ளி வைத்தார். ஆனால் நவம்பர் 20 அன்று எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் திரிவேதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஜாமினை தள்ளுபடி செய்து திரிவேதி அளித்த தீர்ப்பில், “செந்தில் பாலாஜியின் நோய் தீவிரமானதல்ல, இதை மருந்துகளால் சரி செய்ய முடியும் என கூகுளில் தேடி அறிந்து கொண்டேன்” என்று தெரிவித்தார். எங்கே போய் முட்டிக் கொள்வது?

பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் மகேஷ் ராவத்தின் ஜாமீன் மனுவும், கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடர்பான வழக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டு குற்றவாளியாக உள்ள திறன் மேம்பாட்டு ஊழல் தொடர்பான இரண்டு வழக்குகளும் இப்படித்தான் விதிமுறைகளை எல்லாம் மீறி இவரிடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

அலுவலக நடைமுறைகள் பற்றிய உச்ச நீதிமன்ற கையேட்டின் வழக்குகள், கோரம் மற்றும் பட்டியல் விதி 6 – ன் கீழ், முதல் கோரம் (தலைமை நீதிபதி) ஓய்வு பெறும் நிலையில், இரண்டாவது கோரம் (அடுத்த மூத்த நீதிபதி) முன்பு வழக்கு பட்டியலிடப்பட வேண்டும் குறிப்பிட்ட ஒரு நாளில் இரண்டாவது கோரமும் கிடைக்கவில்லை என்றால் அந்த வழக்கை அந்த நாளில் பட்டியலிடக் கூடாது எனத் தெளிவாக உள்ளது.

இந்த சட்ட விதிமுறைகள் மீறப்படுவது பற்றி முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில், “முக்கியமான சில வழக்குகள் ஏற்கனவே அது குறித்து விசாரிக்காத அமர்வுக்கு மாற்றப்படும் விதம் கவலை அளிக்கிறது. ஒரு வழக்கில் நோட்டீஸ் அனுப்பும் பெஞ்ச்தான் வழக்கு முடியும் வரை விசாரிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது” என சுட்டிக் காட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கபில்சிபில்.

மற்றொரு மூத்த வழக்கறிஞரான துஷ்யந்த் தவே, “இன்றைய காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் கூட எதுவுமே சரியில்லை. அமர்வுகள் உருவாக்கப்படுவதும், வழக்குகள் ஒதுக்கப்படுவதும் விரும்பத்தகாத வகையில் உள்ளன. இதன் விளைவாக நீதி திசை திருப்பப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 6 அன்று தலைமை நீதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த விவகாரம் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். உச்சநீதிமன்ற கையேடு மற்றும் நிறுவப்பட்ட நடைமுறை போன்றவற்றை மேற்கோள் காட்டிய அவர், “உங்களது தலைமையின் கீழ் உள்ள இந்திய உச்ச நீதிமன்ற அமைப்புக்கு இது நல்லதல்ல. உச்ச நீதிமன்றம் அனைவராலும் மிகவும் மதிக்கப்படுகிறது. அந்த மரியாதை தொடர வேண்டும். எனவே இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து சீர் செய்ய நடவடிக்கை வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

டிசம்பர் 5 அன்று உச்ச நீதிமன்றத்தில் சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலின் அமர்வு முன்பு நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களை தாமதப்படுத்தும் ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் திடீரென அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது மிகவும் விசித்திரமானது என மனுதாரர்களில் ஒருவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். இது குறித்து நீதிபதி கவுல் “நான் இதை நீக்கவில்லை. தலைமை நீதிபதிக்கு இது குறித்து தெரியும் என உறுதியாக நம்புகிறேன். சில சமயங்களில் சில விஷயங்களை சொல்லாமல் விடுவது தான் நல்லது” என்றார்.

இப்படியான குளறுபடிகள் நடப்பது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, “தலைமை நீதிபதியிடம் குவிந்துள்ள அதிகாரம் ஜனநாயகமற்றத் தன்மையை வெளிப்படுத்துகிறது. சில நேரங்களில் எந்த நீதிபதி எந்த விதத்தில் செயல்படுகிறார் என்பதை தலைமை நீதிபதி அறிந்து கொள்வார். நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது குறிப்பிட்ட முடிவுதான் வர வேண்டும் என நினைத்து சில வழக்குகள் எனக்கு ஒதுக்கப்படும். சில வழக்குகளை எனக்கு ஒதுக்காமல் தவிர்த்ததும் நடந்துள்ளது. நீதிபதிகளுக்கு வழக்குகளின் பட்டியலை தயாரிப்பதற்கும் கொலிஜியம் இருக்க வேண்டும். அதை தனி நபரிடம் விட்டு விடக்கூடாது” என்றார்.

நீதிமன்றங்களையும் கபளீகரம் செய்யும் காவி பாசிசக் கும்பல்!

மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே, நீதிமன்றங்களைத் தன் விருப்பம் போல ஆட்டுவிக்க ஆரம்பித்தது. நீதிபதிகளை இனி அரசே நியமிக்கும் என முடிவெடுத்து, கொலீஜிய முறையை ஒழிக்கப் பார்த்தது. அதற்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டதால், கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளில் தமக்கு சாதகமானர்கள் தவிர முரளீதர் போன்ற நேர்மையான நீதிபதிகளுக்கு நியமன ஒப்புதலே வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

மேலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், தமக்கு ஆதரவான நீதிபதியிடம் வருவதற்கு அனைத்தும் செய்கிறது. சில வழக்குகளை பட்டியலுக்கேக் கொண்டு வராமல் தாமதப்படுத்துவதும் நடக்கிறது. ஆக அனைத்து “சுயசார்பு” என சொல்லிக் கொள்ளப்படும் அமைப்புகளையும் தன் விரல் அசைவில் கட்டுப்படுத்தியதைப் போல, உச்ச நீதிமன்றத்தையும் தனது அஜெண்டாவை நிறைவேற்றும் ஒரு கருவியாக முழுமையாக மாற்றிவிட முயல்கிறது. அடுத்த முறையும் அரியணை ஏறத் துடிக்கும் இப்பாசிச கும்பலை வீழ்த்தாமல் விடிவில்லை நமக்கு!

செய்தி ஆதாரம்:
https://article-14.com/post/contrary-to-sc-s-rules-of-assignment-at-least-8-politically-sensitive-cases-moved-to-one-judge-in-4-months-65713ae124602

தமிழில் ஆக்கம்: குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here