மணிப்பூர் விவகாரம் – பாஜக டபுள் என்ஜின் சர்க்காரின் அலட்சியமும், உச்சநீதிமன்றத் தலையீடும்!

ஒரு நீதிமன்ற உத்தரவுதான் மணிப்பூரில் வெடித்த வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்தது. ஆம், மணிப்பூரின் உயர் நீதிமன்றம் மார்ச் 27 அன்று மெய்த்தி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ஏற்கனவே இரு சமூகங்களுக்கிடையே உரசல் இருந்த நிலையில் இந்த உத்தரவானது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலானது.

மே 3 – ம் தேதி வரை பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் மக்களின் கும்பல் மனப்பான்மையானது வீடுகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களை அழிக்க வழிவகுத்தது. இது அடுத்தடுத்த நாட்களில் மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் விரைவாகப் பரவியது. டபுள் என்ஜின் சர்க்கார் என பீற்றிக் கொள்ளும் பாஜக -வின் மாநில அரசோ, ஒன்றிய அரசோ வன்முறையைக் கட்டுப்படுத்த அக்கறை காட்டாததோடு மட்டுமல்லாமல் குக்கிப் பழங்குடிகள் மீதான தாக்குதல்களுக்குத் துணை போனது. அங்கு இயல்பு நிலை திரும்ப உச்சநீதிமன்றம் ஓரளவு முயற்சித்தது.

மணிப்பூர் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான விடுமுறை கால சிறப்பு நீதிமன்ற அமர்வில், விசாரணையின் போது அரசியலமைப்பின் 342 – வது பிரிவின் ஆணைக்கு எதிராக எப்படி ஒரு நீதிபதி இத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். ஆனாலும் அதற்குள் மத்திய, மாநில அரசுகளின் ஆமைவேக செயல்பாட்டால் வன்முறையானது மிக மூர்க்கமான கட்டத்தை எட்டியது. உள்நாட்டுப் போர் என சொல்லும் அளவுக்கு அது மாறியது.

ஐரோப்பிய பாராளுமன்றம், மணிப்பூரின் கிறித்தவ சமூகம் போன்ற மத சிறுபான்மையினரை பாதுகாக்க இந்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அரசியல் தலைவர்கள் தங்களது ஆவேச அறிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை குற்றவாளிகளாக கருதக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தது.

வன்முறை தொடங்கி 8 மாதங்கள் ஆன நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஆயிரக் கணக்கானோர் காயமடைந்து, 70,000 – க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்து உள்ளனர். கிட்டத்தட்ட 5000 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. இவை தவிர பல தேவாலயங்களும், பள்ளிகள் மற்றும் அரசுக் கட்டிடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், வன்முறைகளுக்கு அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மணிப்பூர் – வரலாற்று ரீதியாக ஒரு பார்வை! 

மணிப்பூரில் 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடிப் பிரிவினர் உள்ளனர். அவர்கள் நாகா மற்றும் குக்கி பழங்குடிப் பிரிவில் அடங்குவர். மணிப்பூரின் 90% பரப்பளவானது பழங்குடியினர் வாழும் மலைப்பிரதேசங்களாகவும் எஞ்சிய 10 சதவீத இம்பால் பள்ளத்தாக்கு மெய்த்தி எனும் இந்து ஆதிக்க சமூகம் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. பழங்குடிகளில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களாகவும், பெரும்பான்மை மெய்த்திகள் இந்துக்களாகவும் உள்ளனர்.

மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 36.49 லட்சம் பேரில் 53% மெய்த்திகள் உள்ளனர். இவர்களில் 70% பேர் இம்பால் பள்ளத்தாக்கிலும், 30% பேர் பழங்குடியினரின் பிரதேசங்களிலும் வசிக்கின்றனர். மாநிலத்தின் 10 சதவீத நிலப்பரப்பில் வசிக்கும் மெய்த்திகள் பழங்குடியினர்களுக்கான பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளான 90% பகுதியின் நிலங்களை வாங்க முடியாத நிலையில், தங்களையும் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலையீடு!

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, நிவாரண முகாம்களில் தேவையானப் பொருட்களை வழங்குவதற்கும், இடம் பெயர்ந்தவர்களின் மறுவாழ்வுக்கும், வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு உத்தரவிட்டது.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் இழப்பீடு உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஆகஸ்ட் 7 அன்று ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. மேலும் சிபிஐ-யின் விசாரணையை மேற்பார்வையிட மகாராஷ்டிர காவல்துறை தலைமை இயக்குனர் தத்தாத்ரே பட்சல் கிகரையும் நியமித்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கு! 

ஜூலை – 20 அன்று மணிப்பூரில் ஒரு கும்பலால் இரண்டு குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட பாலியல் வன்கொடுமை வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. இச்சம்பவம் மே 4 – ம் தேதி நடந்த நிலையில், ஜூலை 19 அன்றுதான் வீடியோ வெளியானதால் வெளிச்சத்திற்கு வந்தது. உலகம் முழுவதும் மனித நேயம் மிக்க அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க கவுஹாத்தியில் உள்ள தலைமை மாஜிஸ்ட்ரேட் மற்றும் அமர்வு நீதிபதி பதவியில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களை நியமிக்குமாறு கவுஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அமர்வு உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களை நேரில் ஆஜராக வற்புறுத்தாமல் காணொளி காட்சி மூலம் விசாரணையை நடத்தவும் அனுமதி அளித்தது.

வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்கள், மற்றும் கல்வியாளர்கள் மீதான அடக்குமுறைகள்! 

மணிப்பூரின் உண்மை நிலவரம் குறித்து பேட்டி அளித்ததற்காக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியரான டாக்டர் கான் சுவான் ஹவுஸிங், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இவருக்காக ஆஜரான இரண்டு வழக்கறிஞர்களின் வீடுகள் இம்பாலில் தாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற கர்னலான டாக்டர் விஜய்காந்த் செஞ்சி ஆங்கிலோ – குக்கி போர் 1917 – 19 என்ற புத்தகத்தை எழுதியதற்காக குற்றம் சாட்டப்பட்டார்.

இதையும் படியுங்கள்:

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலைப்பின்னலான டெல்லி நெட்வொர்க் ஆப் பாசிட்டிவ் பீப்புளின் நிறுவனர் லூன் காங்டே, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தியப் பெண்கள் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா போன்ற பல உண்மை கண்டறியும் குழுக்களின் மீது மணிப்பூர் காவல் துறையினரால் சதி மற்றும் பல்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல் போன்றக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கான உத்தரவுகள்!

மணிப்பூரில் மே 4 முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட 11 முதல் தகவல் அறிக்கைகளை ஆகஸ்ட் 1 அன்று நீதிமன்றம் ஆய்வு செய்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதியைப் பெற்றுத்தர சிறப்புப் புலனாய்வுக்குழு அமைப்பது தொடர்பான பல்வேறு மனுக்களையும் அது ஆய்வு செய்தது.

உள்ளூர் காவல் துறையின் விசாரணை தாமதமாகவும், ஆர்வமின்றியும் நடப்பதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார். சம்பவங்கள் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு புகார்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மிகவும் தாமதமாகவே பதிவு செய்ததாகவும் குறிப்பிட்ட அவர், எஃப்ஐஆர் பதிவு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வது போன்றவற்றில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதால் அரசியலமைப்பு இயந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மாநிலக் காவல் துறையானது விசாரணையை மேற்கொள்ளும் திறனை இழந்து விட்டதாகவும் அவர் சாடினார். அவரது தலைமையிலான அமர்வு மாநில அரசிடம் குற்றங்கள் நடந்த தேதி, வழக்கு பதிவு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட பல்வேறு விபரங்களை பட்டியலிட்டு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

மற்ற விஷயங்களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்! 

மாநிலத்தின் வன்முறையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உணவு, மருந்துகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் வழங்குவதை உறுதி செய்யுமாறு செப்டம்பர் 1 அன்று மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல் நிலையங்கள் மற்றும் முகாம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை மீட்டு எடுப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் இறந்த உடல்களை கையாள்வது போன்ற பிரச்சனைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

மணிப்பூருக்கான அட்வகேட் ஜெனரலிடம் மாவட்ட சட்ட சேவைகள் துறைக்கு செயலாளர்களை நியமிப்பது குறித்த உத்தரவாதம் வழங்கக் கோரியது. ஏனெனில் நிபுணர் குழுவின் அறிக்கை மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் 9 செயலாளர்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்திருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்கப் போதுமான நிதியை மாநில சட்ட சேவைகள் ஆணையத்துக்கு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டது.

இதுவரை 60 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதால் மற்றவர்களுக்கும் உடனடியாக இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மணிப்பூருக்கு வெளியே தற்காலிகமாகக் குடியேறிய அல்லது இடம்பெயர்ந்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய டெல்லியில் ஒரு அதிகாரியை நியமிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

டிசம்பர் 4 அன்று உச்ச நீதிமன்றம் மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர முடியாமல் இடம்பெயர்ந்த மாணவர்கள், அஸ்ஸாம் அல்லது மேகாலயாவில் உள்ள இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களில் அல்லது ஆன்லைன் முறையில் தங்களது கல்வியைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

நவம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றம் மணிப்பூரின் பிணவறைகளில் பல மாதங்களாகக் கிடக்கும் உடல்களை எரியூட்டுவது அல்லது புதைப்பது குறித்தான வழிகாட்டுதல்களை வழங்கியது. அத்தகைய உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு உரிமை கோரப்பட்டால் அவற்றை உரிய முறையில் அவர்களிடம் ஒப்படைக்கவும், அடக்கம் செய்ய உதவவும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகும் உரிமை கோரப்படாத சடலங்களை உரிய முறையில் அரசே அடக்கம் செய்யவும் உத்தரவிட்டது. டிசம்பர் 15 அன்று மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினர் தங்களது பண்டிகைகளைக் கொண்டாடுவதை உறுதி செய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் உத்தரவிட்டது.

இப்படியாகத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அவ்வப்போது உரிய உத்தரவுகளைப் பிறப்பித்ததால்தான் ஓரளவாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், குற்றவாளிகள் கைதும் நடந்தது. இது அப்பட்டமாக ஆளும் பாஜக அரசுகளின் தோல்வியை, அதாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தவறிய அல்லது வேண்டுமென்றே குக்கிப் பழங்குடிகளுக்கு எதிரான வன்முறைகளை வேடிக்கை பார்த்த அவர்களின் இந்துத்துவ வெறியை அம்பலமாக்கி உள்ளது.

இந்தக் காவி பாசிசக் கும்பலை இனியும் ஆட்சியில் தொடர அனுமதித்தால் இந்தியாவெங்கும் மணிப்பூர் போல பற்றி எரிவதைத் தடுக்க முடியாது. மக்களின் நலன் மீது கிஞ்சித்தும் அக்கறையற்று, ராமன் கோயில் திறப்பை திட்டமிட்டு அரங்கேற்றி, அதன் மூலம் மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி ஓட்டுக்களைப் பெற முயற்சிக்கும் இக்கும்பலுக்கு வரும் தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவோம்.

  • குரு

மூலம்:

https://theleaflet.in/the-year-manipur-burned-government-failed-and-supreme-court-tried/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here