மக்கள் அதிகாரம்
தலையங்கம்
ஒன்றிய மோடி அரசு இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் என்ற ஒய்வு பெற்ற IAS அதிகாரியை நியமித்ததில் காட்டிய “மின்னல் வேகத்தை” தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அங்கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு அனுப் ராவல் என்பவர் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக தொடுத்த வழக்கில் கடந்த இரு நாட்களாக நடந்த விசாரணையின் போது தேர்தல் ஆணையர் நியமிக்கப்படும் முறை பற்றிய கேள்வி எழுந்துள்ளது.
அதுவும் குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 324(2) தேர்தல் ஆணையம் பற்றி தனியே சட்டம் இயற்ற வேண்டும் என வழிகாட்டியபோதும் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 72 ஆண்டுகளில் அதற்கான சட்டம் இயற்றப்படவில்லை. மாறாக, 1990 களில் டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த போது கொண்டு வந்த விதிகள்; அரைகுறை சீர்திருத்தங்களையே வைத்து ஒப்பேற்றி வருகின்றனர். தேர்தல் ஆணையர்கள் தங்களுக்கு சாதகமானவராக இருக்க வேண்டும் என்று இதுவரை இருந்து வந்த ஆட்சியாளர்கள் கருதியதே இதற்கு காரணம் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதுவே பிற துறைகளிலும் நடைபெற்றதை பார்த்து வந்துள்ளோம்.
முந்தைய ஆட்சிகளுக்கும் பாஜக மோடியின் ஆட்சிக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு அந்த நியமனங்கள் நடத்தப்படும் வேகம்.
அருண் கோயல் விருப்ப ஒய்வு பெற்ற ஒரிரு நாட்களுக்கு உள்ளாகவே இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையர் வழக்கை விசாரணை நடத்திய நாட்களில் அவசர அவசரமாக நியமிக்கப்பட்டார். ஒரே நாளில் சட்டத்துறை முதல் பிரதமர் வரை பல படிக்கட்டுகளை அருண் கோயலை நியமிக்கும் கோப்புகள் கடந்துள்ளன.
“கடந்த மே 15ந்தேதி முதல் காலியாக ஒரு பதவிக்கு திடீரென ஒரே நாளில் பரிந்துரை, ஒரே நாளில் அனுமதி, ஒரே நாளில் விண்ணப்பம், ஒரே நாளில் நியமனம் செய்ததன் காரணம் என்ன? 24 மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளாது மின்னல் வேகத்தில் நடத்தி முடித்ததற்கான காரணம் என்ன?” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பி ஒன்றிய மோடி அரசின் நோக்கத்தை அம்பலப்படுத்தி உள்ளனர்.
மேலும் “தேர்தல் ஆணையத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் தலைமை தேர்தல் ஆணையராக 6 ஆண்டுகள் பணியில் இருப்பதற்கு பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையர் நியமனத்திற்கான சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால், ஒன்றிய அரசு பரிந்துரை பட்டியலில் வைத்துள்ள 4 பேருக்கும் அது பொருந்தவில்லையே. இது சட்டமீறல்” என தெரிவித்தனர்.
அருண் கோயல் நியமனத்தை பொருத்து உச்சநீதிமன்றத்தில் நடந்தவற்றை சுருக்கமாக கூறுவதெனில் “கரடியே காறித் துப்பியது” என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவிற்கு சாதகமாக நடந்துகொண்டதை போல் அடுத்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் தயார் செய்கிறது என்பதே உண்மை.
இதையும் படியுங்கள்: நேர்மை என்பது சொல் அல்ல செயல் !பிரதமர் மோடிக்கு ஒரு மனம் திறந்த கடிதம்!
ஒன்றிய மோடி அரசு தனக்கான அதிகாரிகளை நியமிப்பதில் கேடுகெட்ட முறையில் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல. தனக்கு சாதகமான ‘ராகேஷ் அஸ்தானா’ என்ற அதிகாரியை காப்பாற்ற மத்திய புலனாய்வு முகமை (CBI)யின் இயக்குனராக இருந்த ‘அலோக் வர்மா’வை விதிகளை மீறி நீக்கியது. அந்த நடவடிக்கை விதிகளை மீறியது என்று பின்னர் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் அலோக் வர்மா எந்த புதிய முடிவுகளும் எடுக்க அதிகாரமற்ற இயக்குனராக தனது இறுதி பதவி காலத்தை கழித்தார்.
இதுபோல, தற்போதைய ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை” நீதிபதி முரளிதரை” சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரைத்தும் அதனை ஒன்றிய மோடி அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளின், நீதிபதிகளின் நியமனங்களை தாமதப்படுத்துவது, துரிதப்படுத்துவது, தவிர்ப்பது என அனைத்தும் எட்டு ஆண்டு மோடி ஆட்சியில் நடந்தேறியுள்ளது. அதன்மூலம் எதிர்கட்சிகள் மீதும் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, CBI, NIA, நீதித்துறை என அனைத்து சட்டப்பூர்வ பரிவாரங்களையும் கொண்டு பாசிச தாக்குதலில் ஈடுபட்டு வருவதுடன் இணைத்து பார்த்தால் நியமனங்களுக்கு பின்னால் இருக்கும் பாசிச அபாயம் புரியும். சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சேதல்வாத்தை “பயங்கரவாத தடுப்பு படை” அதிகார வரம்பை மீறி, பொய் வழக்கில் கைது செய்த விதத்தைப் பரிசீலித்தால் புரியும். பேராசிரியர். சாய்பாபா விடுதலையை சனிக்கிழமை நீதிமன்றம் அவசரமாக தடை செய்ததை பார்த்தால் ஒன்றிய மோடி அரசின் நோக்கம் புரியும்.