2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சந்திரசூட்டை “இருளில் தெரிந்த ஒரு ஒளிக்கீற்று, நேர்மையாளர், மக்களின் பக்கம் நிற்பவர், ஒன்றிய அரசின் தவறுகளை, மக்கள் விரோதப்போக்குகளை தட்டிக்கேட்பவர், நீதி தவறாதவர்” என்று பலவாறாக பல பத்திரிக்கையாளர்களும், நடுநிலையாளர்களும், லிபரல்களும் ஊதி பெருக்கி வந்தனர். ஆனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதிபதி சந்திரசூட் கொடுத்துவரும் தீர்ப்புகள் அவரது இந்த பிம்பங்களை நொறுக்கிவருகின்றன.

பொதுவாக கருத்துசுதந்திரம், ஜனநாயகம், பெண்ணுரிமை, சிறுபான்மையினர் உரிமை பற்றி நீதிமன்றத்துக்கு வெளியே மேடைகளில் புரட்சிகரமாக முழங்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்திற்குள் இவற்றை வலியுறுத்துவதில்லை. கீழமை நீதிமன்றங்களில்கூட வழக்கறிஞர்களை கூழைக்கும்பிடு போடவைக்கும் வழக்கத்தையும் மாற்றிக்கொள்ளத் தயாரில்லை.

கலாச்சாரதுறை தொடர்பான வழக்குகளில் புரட்சிகரமான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதி சந்திரசூட், ஒன்றிய அரசு சம்பத்தப்பட்ட வழக்குகளில் பம்முகிறார். இன்னும் குறிப்பாக, இந்துத்துவ வன்முறை கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட பாபர் மசூதியை இடித்த அக்கும்பலிடமே தாரைவார்த்த “உலக பிரசித்திபெற்ற தீர்ப்பை” அளித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் சந்திரசூட்டும் ஒருவர். அது மட்டுமல்ல, அந்தத் தீர்ப்பை முன்மொழிந்தவரே அவர்தான் என்ற பேச்சும் உண்டு.

தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றபின் ஏறக்குறைய 52000 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாகவும், LGBT-யினரின் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்த தீர்ப்பில் அவர்களுக்கு சாதகமான மைனாரிட்டி தீர்ப்பை அளித்ததாகவும், முன்னாள் தலைமை நீதிபதி தத்து காலத்திலிருந்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் “சீலிடப்பட்ட கவர்களுக்கு” முடிவுகட்டியதாகவும், பீமா கோரேகான் வழக்கில் மஹாராஷ்டிரா போலீசின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகக் கூறியதாகவும், கேரளாவின் கவர்னருக்கு எதிராக தீர்பளித்ததாகவும் அவரை நீதிதேவனாக, பாமர மக்களின் ஆபத்பாந்தவனாக, ஹீரோவாக சித்தரித்து பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் இவர்கள் நினைத்ததெற்கெல்லாம் மாறாக, அமித்ஷாவுக்கு வாரண்ட் அனுப்பி மர்மமான முறையில் மரணித்த நீதிபதி லோயாவின் சந்தேக மரணம் பற்றிய வழக்கை முறைகேடாகத் தனக்கு ஒதுக்கிக்கொண்டதற்காக அப்போதைய தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவுக்கு எதிராக நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார்களோ அந்த நீதிபதி லோயாவின் மரணம் பற்றிய பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்து “இம்மாதிரியான பொதுநல வழக்குகள் நீதித்துறையின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இவற்றின்மூலம் நீதிபதிகளைக் கேடானவர்களாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது” என்று கூறி அதிகார வர்கத்தின் சுயரூபத்தை காட்டத்தொடங்கினார்.

சமூக செயற்பாட்டாளரான உமர் காலித்தின் ஜாமீன் மனு, UAPA கருப்புச் சட்டத்துக்கு எதிரான வழக்கு, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு, பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் மகேஷ் ராவத்தின் ஜாமீன் மனு, கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிரான வழக்கு, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழக்குகளும் பேலா திரிவேதி என்ற ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு விதிமுறைகளை மீறி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்னணியில் நீதிபதி சந்திரசூட் இருக்கிறார் என்பதுதான் இதில் குறிப்பிடவேண்டிய விடயம். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டதோ அதையே தற்போது நீதிபதி சந்திரசூட்டும் செய்துவருகிறார் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:

இவையெல்லாவற்றையும் விட காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் கூறிய “அரசின் ஒவ்வொரு முடிவையும் நீதிமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்த முடியாது,” “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைத்தரும் பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான்,” “அப்பகுதி இந்தியாவுடன் இணைந்தபிறகு அதற்கென்று ஒரு தனித்த இறையாண்மை என்பது இல்லை” போன்ற கருத்துக்கள் மிக அபாயகரமானவை. மாநிலங்களை தன்விருப்பத்திற்கு கூறுபோடவும், ஜனாதிபதி ஆட்சியின் கீழ் மாநிலங்களை நிர்வகிக்கவும் தயாராகிவரும் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தைத் தருபவை.

இப்படிப்பட்ட ஒரு ஓட்டை உடைசலான வாகனத்தைத்தான் பட்டி டிங்கரிங் செய்து நம்முன் நிறுத்துகிறார்கள் நமது மூத்த பத்திரிக்கையாளர்களும், லிபெரல்களும். நீதிமன்றங்களையும், தனிப்பட்ட நீதிபதிகளையும் ஹீரோவாக்கி தாங்கள் நம்பி ஏமாந்தது போதாது என்று பரந்துபட்ட மக்களையும் நம்பச்சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஏற்கனவே மாநில கவர்னர்களுக்கும், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும் தேர்வு அறைகளாக நீதிமன்றங்கள் இருக்கும் நிலையில் நீதிபதிகள் தப்பித்தவறி எழுதிவிடும் ஒன்றிரண்டு தீர்ப்புகளுக்காக நீதித்துறையை  முழுமையாக நம்பி சரண் அடைவது நமக்குநாமே கட்டிக்கொள்ளும் சவக்குழி என்பதை உணர்ந்திடுவோம் உறக்கச்சொல்லுவோம்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here