தேர்தல் பத்திரம் வெளியாகி பாஜகவின் நவீன ஊழல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் அதனை மூடி மறைக்க பாஜக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், முதலாளிகளிடமும் நிதி பெற்றதை வெறும் ஊழல் என்று கடந்து போய்விட முடியாது. இதில் மக்களுக்கு ஊறு விளைவிக்கும் பேராபத்தும் உள்ளது.

சாதரணமாக நமக்கு கடன் கொடுத்து உதவுபவரிடம் நாம் ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என்று நினைப்போம். இது நமக்கு உதவியருக்கு நாம் திருப்பியளிக்கும் ஒரு நன்றியாக கருதுவோம்.

இதே விசயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெறும் கட்சிகளுடன் பொருத்தி பார்க்கும் போது பாஜக வாங்கிய கிட்டத்தட்ட 16,000 கோடி நிதியும் திருப்பியளிக்கப்படாத பணம். ஆனால் முதலாளிகள் பாஜகவிடம் பணமாக எதிர்பார்க்காமல் வேறு வழியில் எதிர்பார்ப்பதில் தான் ஆபத்து அடங்கியுள்ளது.

உதாரணமாக ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் 230 கோடி பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்துள்ளார். அதனால் தான் தூத்துக்குடி ஸ்ட்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னரும் தமிழக பாஜகவினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள். இதில் அனில் அகர்வால் கொடுத்த நிதி விளையாடியுள்ளது.

ஒருவேளை மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் திறக்கப்பட்டிருந்தால் தூத்துக்குடி மீண்டும் மாசு குறைபாடு ஏற்பட்டிருக்கும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இதனை தமிழ்நாட்டு மக்கள் போராடி முறியடித்ததனால் தடுக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல் இவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், பெரும் முதலாளிகளிடமும் பெற்ற நன்கொடையால் இயற்கை வளங்களும், மலைகளும், மாநிலங்களும், அதனை சார்ந்த மக்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதற்கு ஒரு ஆய்வு நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும்.

இதில் தற்போது வந்துள்ள விவரங்களின் படி மருந்து நிறுவனங்களிடம் இருந்து பாஜக பெரும் தொகையை நன்கொடையாக பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் பெற்றிருந்தாலும் அதிகாரத்தில் பாஜக இருப்பதால் இதனை ஆபத்தாக பார்க்கிறோம்.

மருத்துவம் சேவையாக இருந்த காலங்கள் போய் பெரும் வியாபாரமாக மாறியிருக்கும் இந்தக் காலத்தில் காய்ச்சல் என்று போனாலே மருத்துவமனைகளில் காசை புடுங்குகிறார்கள். மூலைக்கு மூலை மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளை திறந்து வைத்து மக்கள் பயத்தை பணமாக அறுவடை செய்கிறார்கள். இதனை அரசியல் பலம் இல்லாமல் செய்ய முடியாது. மருத்துவ துறையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் பணத்தை கொடுத்து சரி செய்யப்படுகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பல மருத்துவ நிறுவனங்கள் பலநூறு கோடி நிதியளித்துள்ளது தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வருகிறது. இதனை பிபிசி தமிழ் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை தொகுப்பாக பார்ப்போம்.

டோரெண்ட் ஃபார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் இந்த நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது. 77.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியஇந்த நிறுவனம் பாஜகவுக்கு 61 கோடி நிதி கொடுத்துள்ளது.

சிப்லா லிமிடெட்டின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனம் 39.2 கோடி ரூபாய் நிதி பத்திரங்கள் வாங்கியதில் 37 கோடி ரூபாய் பாஜகவுக்கும் 2.2 கோடி ரூபாய் காங்கிரசுக்கும் கொடுத்துள்ளது.

சன் பார்மா லேபரட்டரீஸ் 31.5 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாங்கியதில் முழுவதும் பாஜகவுக்கு நன்கொடையாக சென்றுள்ளது.

ஃஜைடஸ் ஹெல்த்கேர் லிமிடெட்டின் நிறுவனம் 25 கோடி தேர்தல் பத்திரத்தில் 18 கோடி ரூபாய் பாஜவுக்கு நிதியாக சென்றுள்ளது.

இண்டாஸ் ஃபார்மசூட்டிக்கல்ஸ் 20 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கி முழுவதும் பாஜகவுக்கு சென்றுள்ளது.

ஃஜைடஸ் ஹெல்த்கேர் லிமிடெட், ஐபிசிஏ லபோரட்ரீஸ் லிமிடெட், க்ளென்மார்க் ஃபார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் என பல நிறுவனங்கள் நிதி பத்திரங்கள் வாங்கியுள்ளன.

இவையல்லாமல் ரெய்டு விட்ட பிறகு தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனங்களும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது பெரும் முதலாளிகளோ நன்கொடை வழங்குகிறார்கள் என்றால் அதில் பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்ய மாட்டார்கள். இதில் மருந்து நிறுவனங்கள் நிதி கொடுத்திருப்பதால் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகள் அதன் பிறகு என்ன ஆனது என்ற விவரங்களை விசாரணை நடத்தி தான் தெரிந்துக் கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்: மருத்துவம் சித்த மருத்துவப் பொக்கிஷங்களுக்கு ஆயூர்வேத லேபிள்!

ஒருவேளை நிதி கொடுத்ததற்காக தோல்வியடைந்த மருந்துகளை அரசு அனுமதித்திருந்தால் பாதிக்கப்படபோவது அப்பாவி மக்கள் தானே.

அதனாலேயே இந்த விசயத்தை சாதாரணமாக கடந்து போக முடிவதில்லை. இதில் பாஜக மட்டுமல்லாமல் பல கட்சிகளும் நிதிப் பெற்றிருந்தாலும் அதிகாரத்தில் பாஜக இருப்பதால் மக்கள் மீது அக்கறை இல்லாத பாசிஸ்டுகள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் என்ற அச்சம் மேலிடுகிறது.

தேர்தல் பத்திரம் ஒருபுறம் இருந்தாலும் முறைகேடாக பல நிறுவனங்களிடம் பாஜக நிதிப் பெற்றிருக்கும். அப்படி நிதியளித்த நிறுவனங்களுக்கு நாட்டையும், மக்களையும் பலிகடா ஆக்கியுள்ளது பாசிச பாஜக.

இனிமேலும் பாஜகவை ஆளவிட்டால் காசுக்காக இந்திய மக்களை சோதனை எலிகளாக பாஜக மாற்றிவிடும். இந்த அபாயத்தினை உணர்ந்து பாஜகவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்து தேர்தல் அரங்கில் இருந்து வெளியேற்றுவோம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here