சென்னையை மிரட்டி வெள்ளத்தில் மூழ்கடித்து சென்ற மிக்ஜாம் புயலின் தாக்கமே முழுமையாக நீங்கவில்லை. அதற்குள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களை புரட்டி எடுக்கிறது கனமழை.

சென்னையில் புறநகர் மட்டுமல்லாது நகர்புறத்திற்குள்ளும் கூட 40 சென்டிமீட்டரைத் தாண்டி மழை பெய்தது போலவே, தற்போது தென் மாவட்டங்களில் அதைவிட இரு மடங்கு மழை பொழிவு பதிவாகிறது. குறிப்பாக, திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் 90 சென்டிமீட்டரை தாண்டியும் மழை பெய்துள்ளது. இது ஞாயிறு இரவு வரை பெய்துள்ள கணக்கு தானே தவிர, இன்னும் ஒன்றரை நாள் மழை எஞ்சியுள்ளது என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. அதற்கேற்ப அரசு மீட்பு நிவாரண பணிகளை முடுக்கி விடவும் வேண்டியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக கணக்கெடுக்க போதிய வசதி இல்லை. இப்பகுதியில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் அதிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

1993இல் வந்த வெள்ளத்தை நினைவுபடுத்தியபடி ஒரு லட்சம் கன அடி நீரைசுமந்து கொண்டு சீறிப் பாய்கிறது தாமிரபரணி ஆறு.

இது இயற்கை விடும் எச்சரிக்கை!

பருவமழைக் காலங்களில் பல நாட்கள் விடாமல் பெய்யும் அடை மழையை பற்றி நமக்குத் தெரியும். ஆனால் தற்போது அத்தகைய அடை மழை பெய்வது இல்லை. கடலில் மேற்பரப்பில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியோ அல்லது புயல்களோ தான் மழையை கொண்டு வருகின்றன. அவையும் சீரான, மிதமான மழையாக இல்லாமல், தற்போது பார்த்து வருவது போல் பேய் மழையாக மாறிவிட்டது.

மழை வெள்ளத்திற்கு தாமிரபரணியின் கரையோர வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் தமது  விளைச்சலை இழப்பது ஒரு புறம் என்றால், நகரவாசிகளின் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டு அவர்களது உடமைகள் நாசமாவதும் தொடர்கிறது.

ஆட்சியாளர்கள்  வெள்ளம் வடிந்த பின் ஆய்வு செய்து விட்டு ஒரு நிவாரணத் தொகையையும் அறிவிப்பார்கள். தற்போது சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 6,000 என விநியோகம் நடக்கிறது. இது வரவேற்கக் கூடியதுதான் என்றாலும் பாதிப்புகளை முழுமையாக மீட்டு எடுக்க உதவுமா?

2015 இல் சென்னையில் வந்த வெள்ளத்திற்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது அப்படி இறப்புகள் ஏற்படவில்லை என்பதுதான் ஆறுதலான தகவல்.

மாறிவரும் புதிய ஒழுங்கு!

இனி எதிர்பாராத அதி தீவிர கனமழைக்கும், புயலுக்கும், பெருகிவரும் வெள்ளத்திற்கும் நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டுமா?

விதிவிலக்காக பெய்ய வேண்டிய அதிக கன மழை ஒரு விதியை போல் அடுத்தடுத்து பெய்கிறது. இதற்கும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலுக்கும் தொடர்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:

வானிலை முன்னறிவிப்புகள் வருகிறதோ இல்லையோ நாம் எதற்கும் தயாராவோம். நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளவற்றை, நீர் வழித்தடங்களை மறித்து நிற்கின்ற அனைத்தையும்  அப்புறப்படுத்துவோம்.  இதற்கான இழப்பீட்டை ரியல் எஸ்டேட் கிரிமினல் கும்பல்களிடம் இருந்தும், அவர்களுக்கு துணை நின்ற அதிகாரிகளிடமிருந்தும் பறித்தெடுப்போம். பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க உரிய ஏற்பாடுகளை செய்ய ஆட்சியாளர்களை நிர்பந்திப்போம்.

நாம் நம் வீட்டை, ஊரை மட்டுமல்ல; புவியையும் காக்க தீவிரமாக செயல்பட்டாக வேண்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here