ஜன கண மன (2022) மலையாளம் – திரைப்பார்வை

தற்கொலைகளுக்கான காரணங்களை ஏற்றுக்கொள்ளும் அரசு, தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்பொழுதும் போல ”மகிழ்ச்சி, உடற்பயிற்சி, யோகா” என மேலோட்டமாகவும், அலட்சியமாகவும் பேசுகிறது.

0

ஜன கண மன (2022) மலையாளம் – திரைப்பார்வை

ன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்”கொலை”களுக்கு நீதி கேட்கிறது!

கர்நாடகா மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஒரு கல்லூரி. அந்த கல்லூரியில் பெண் பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார்.  இந்த செய்தி ஊடகங்களுக்கு பரவுகிறது. அடுத்த நாள் தலைப்பு செய்திகளில் வெளிவருகிறது. நாடெங்கும் போராட்டங்கள் வெடிக்கிறது. போலீசு அடக்குமுறை தொடங்குகிறது.

இந்த வழக்கை விசாரிக்க ஒரு போலீஸ் உயரதிகாரி நியமிக்கப்படுகிறார். தன் விசாரணையில் உள்ளூரில் கஞ்சா மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிற நால்வர் இதில் ஈடுபட்டுள்ளதாக கண்டறிகிறார்.  மேலும் விசாரணையை துரிதப்படுத்துவதற்குள் அந்த வழக்கு வேறு ஒருவருக்கு கைமாற்றிவிடுவதாக தகவல் வருகிறது.

நால்வரையும் ஒப்படைக்க செல்லும் பொழுது, நால்வரையும் சுட்டுக்கொல்கிறார். அடுத்தநாள் அந்த உயரதிகாரியின் செயலைப் பாராட்டி மக்களும், ஊடகங்களும் கொண்டாடுகிறார்கள்.  இந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை கமிஷன் கேள்வி எழுப்புகிறது. வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

விசாரணையின் பொழுது அந்த பேராசிரியர் கொலை, மோதல் கொலையின் (Encounter) பின்னணியில் அடுத்தடுத்து நிறைய விசயங்கள் வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக வைக்கிறது.

படிக்க:

 ‘ஜெய்பீம்’ சினிமா மீதான பார்வை

படம் நிறைய விசயங்களை பேசுகிறது. மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் பல உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆதிக்கசாதி வெறி, அதை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள். ஆதிக்கசாதி வெறியுடன் நடந்துகொள்ளும் பேராசிரியர்களை காப்பாற்றும் நிர்வாகம். இது யதார்த்ததில் நடப்பது தான்.

ஐஐடி, ஐஐஎம், இந்திய அறிவியல் கழகம் போன்ற இந்திய உயர் கல்வி நிறுவனங்களில். கடந்த ஏழு ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கல்லூரியிலும், விடுதியிலும் தற்கொலை செய்துகொண்டவர்களைத் தான் கணக்கில் எடுத்துள்ளார்கள். வீடுகளில், வெளியிடங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்கிறார் திராவிட பகுஜன வேதிகாவின் நிறுவனரும் தலைவரும் ஹைதராபாத் மத்திய பல்கலை கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி அறிஞருமான முனைவர் ஜிலுகர ஸ்ரீனிவாஸ்.

படிக்க:

டாணாக்காரன் – திரைப்பார்வை

மாணவர்களின் பெரும்பாலான தற்கொலைகளுக்கு சாதியப் பாகுபாடு தான் காரணம். மாணவர்களிடையே, ஆசிரியர்களிடம் இருக்கும் ஆதிக்க சாதி மனோபாவத்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை இழிவுப்படுத்துகிறார்கள் என்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் மூத்த மாணவரும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் தலைவருமான முன்னா கூறுகிறார்.

தற்கொலை செய்த மாணவர்களை வகைப்பிரித்து பார்த்தால், 24 மாணவர்கள் பட்டியல் சாதியினர் (SC),  41 மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் (OBC),  பட்டியல் பழங்குடி பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் மூவர்,  சிறுபான்மையினர் பின்னணி சார்ந்தவர்கள் 3 மாணவர்கள் ஆக 58% மேலே முன்னா சொன்னது உண்மை என விளங்கும்.

தற்கொலைகளுக்கான காரணங்களை ஏற்றுக்கொள்ளும் அரசு, தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்பொழுதும் போல ”மகிழ்ச்சி, உடற்பயிற்சி, யோகா” என மேலோட்டமாகவும், அலட்சியமாகவும் பேசுகிறது.  எப்படி தடுப்பது? என ஆய்வு செய்த குழு,  ”விடுதிகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளை கழட்டிவிடுங்கள்” என்று சொன்ன ஆலோசனைகளில் ஒன்றை மட்டும் நாட்டின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விடுதி அறைகளில் உடனடியாக அமுல்படுத்தியிருக்கிறது.

இது தான் எதார்த்த நிலைமை. இப்படித்தான் ஒன்றிய அரசு மாணவர்களின் தற்கொலைகளுக்காக தீர்வையும் முன்வைக்கிறது.  சென்னை ஐஐடியில் சமீபத்தில் ஒரு முசுலீம் மாணவி தற்கொலை செய்துகொண்ட பொழுது, அந்த பெண்ணின் பெற்றோர், “உங்களை நம்பித்தானே தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்தோம். இப்பொழுது அந்த மகள் உயிரோடு இல்லை” என ஊடகத்தின் முன்பாக கேள்வி கேட்ட பொழுது, தமிழ்நாடு தலை குனியத்தான் வேண்டியிருந்தது.  அந்த ”கொலை”க்கு நீதிக்கேட்டு மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடினார்கள். தொடர் போராட்டங்களின் வழியாக தான் ஆதிக்கச்சாதி திமிரை மிதிக்க முடியும்.

அதே போல மோடி ஆட்சிக்கு வந்த கடந்த எட்டு ஆண்டுகளில் படத்தில் ”பேராசிரியர் கொலை” போல,”மாட்டுக்கறி வைத்திருந்தார் என சந்தேகத்தில் அடித்து கொலை” ”தலித்கள் அடித்தே கொலை” என்று வெளிவருகிற ஒவ்வொரு பரபரப்பான செய்திக்கு பின்னாலும் ஆளும் வர்க்கங்கள், ஆளும் அரசியல்வாதிகளின் நலன் இருக்கிறது. திசைதிருப்புதல் இருக்கிறது. மக்களாகிய நாமும் அவர்களின் விரிக்கும் வலையில் விழுந்துவிடுகிறோம். அப்படித்தான் போலி என்கவுண்டர்களை கூட வெளிப்படையாக ஆதரிக்கிறோம் என சாடுகிறது.

உண்மை தான். நாட்டில் நிறைய வதந்திகளை பரப்புவதில் முதலிடத்தில் சங்கிகள் தான் இருக்கிறார்கள். பா.ஜனதா அதற்காக ஒரு பெரும்படையை வைத்திருக்கிறது. அந்த படைக்கு தொடர்ந்து பெரும் கூலி கொடுத்து கொழுக்க வைத்திருக்கிறது. கட்சியில் பதவி கொடுக்கிறது. அந்த காவிப்படை தான் பா.ஜனதாவை விமர்சனம் செய்பவர்களை, பொதுப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பவர்களை, போராடுபவர்களை எல்லாம் அவதூறு செய்கிறது. இப்படித்தான் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்றது.  வதந்திகளைப் பரப்பி, கலவரங்களையும் அதுவே தூண்டிவிடுகிறது. இந்த வானரப்படைகளை தடை செய்தாலே போதும் நாடு நிம்மதியாய் இருக்கும்.

படத்தில் ஒரு காட்சி வரும்.  ஒரு அநீதியை எதிர்த்து போராடும் பேராசிரியருக்கு ஆதரவாக உடன் வேலை செய்யும் சக பேராசிரியர்கள் ஆதரவு தெரிவிக்கவிட்டார்கள். உண்மை அறிந்தும் மெளனம் காப்பார்கள்.  அதனாலேயே தனிமைப்படுவார். அநீதி இழைப்பவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். அடுத்த அநீதியை உற்சாகத்தோடு செய்வார்கள்.  அநீதி செய்பவர்களை விட, எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்ப்பவர்கள் அந்த அநீதியில் பங்குகொள்கிறவர்கள் தான்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக பொய்யையும், புளுகுகளையும் வைத்து, உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளாக்கி படம் எடுத்து வரும் ஒன்றிரண்டு இயக்குநர்களுக்கு மத்தியில், சமூக பிரச்சனைகளை தைரியமாக சொல்லி, அதற்கு பின்னணியில் இருப்பவர்களையும் அம்பலப்படுத்தியிருக்கும் இயக்குநர் டிஜோ ஜோஸ் அந்தோணிக்கு வாழ்த்துக்கள்.  படத்தை தயாரித்து முக்கியப் பாத்திரத்திலும் நடித்திருக்கும் பிருத்திவிராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.  இந்தப் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வெளிவர இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

மலையாளப்படம்.   தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். சென்னையில் சில திரையரங்குகளில் கடந்த ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

சாக்ரடீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here