த்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது மைலாப்பூர் மாமாக்கள் மத்தியிலும், அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த சாப்ட்வேர்  அம்பிகள் மத்தியிலும், ‘நடுநிலை’ கருத்தாளர்கள் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. என்ன இருந்தாலும் கருத்துரிமை இருக்கா? இல்லையா? பாஜக பாசிசத்திற்கும்‌ இதற்கும் என்ன வித்தியாசம் என கொதித்தெழுகின்றனர்.

கிழக்கு பதிப்பகம் உரிமையாளரும் ‘நடுநிலை’வாதியுமான பத்ரி சேஷாத்ரி மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை நியாயப்படுத்தும் வகையிலும், அதனை கண்டிக்கும் தமிழ் மக்களை ‘தமிழர்கள் பொறுக்கிகள் என்றும்’ இழிவுபடுத்தி ஒரு இணைய ஊடகத்தில் பேசுகிறார்.

இந்த கருத்துக்களை கண்டிப்பதாக கூறிக்கொண்டே பலரும் பத்ரி சேஷாத்ரி கைதை கண்டிக்கின்றனர். அதற்கு ஒரு உதாரணம். மூத்த ‘நடுநிலை’ பத்திரிக்கையாளர் சமஸ் அவர்களின் இந்த கருத்து- “பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன். அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு  நேர் எதிர்த் தரப்பு அவர்; மணிப்பூர் விவகாரம் தொடர்பான அவருடைய பல கருத்துகள் எவ்வித அறிதலும் அற்றவை; கண்டிக்கபட வேண்டியவை. ஆயினும், அதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும்  இந்தக் கைது வன்மையான கண்டனத்துக்கு உரியது;  கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தமிழக அரசுக்குக் கண்டனங்கள்!”

என்னே ஒரு ஜனநாயக மாண்பு! எதிர்தரப்புக்கும் கருத்துரிமை அளிக்கும் பண்பு! ஆனால் யாருக்கு? “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற சொன்ன அண்ணாவை இந்தி விவாகரத்தில் முட்டாள் என இழிவுபடுத்தி பேசிய பத்ரி சேஷாத்ரிக்கு. அந்த அளவு தரமான பேச்சுக்கு ஜனநாயகம் தேவை தானே!

பத்ரி சேஷாத்ரி தற்போதைய காணொளியில் மணிப்பூர் பழங்குடி மக்கள் பற்றி அவதூறு பேசியுள்ளார்; தமிழர்களை பொறுக்கி என இழிவுபடுத்தியுள்ளார். இவருக்கு சிறை தண்டனை அதிகமா?

அதனை பரிசீலிக்க சற்றே பின்னோக்கி செல்வோம். இராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது ஏன்? அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேசிய ஒரு கூட்டத்தில் “திருடர்களெல்லாம் எப்படி மோடி என்ற பெயருடன் இருக்கிறார்கள்” என்று பேசியதுதான். மோடி என்ற சாதியை அவதூறு செய்து இழிவுபடுத்தினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

இப்போது பத்ரி சேஷாத்ரி விவகாரத்தைப் பரிசீலியுங்கள். பத்ரி சேஷாத்ரி ஒட்டுமொத்த பழங்குடி மக்களையும்  இழிவுபடுத்தி உள்ளார். தமிழர்களையும் இழிவுபடுத்தி உள்ளார். குறிப்பிட்ட ஒரு சாதியை இழிவாக பேசினால்தான் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமா? ஒட்டுமொத்த பழங்குடி மக்களையே, தமிழினத்தையே இழிவுபடுத்தியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

இதையும் படியுங்கள்: சங்கி முட்டாள்களுக்கு நன்றி!

பத்ரி சேஷாத்ரி கைதை பாஜக பாசிசத்துடன் ஒப்பிடுபவர்கள் யாருக்கேனும்‌ ஆயிரம் நாட்களுக்கு போலி குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் டெல்லி ஜேஎன்யூ மாணவர் உமர் காலித்தை தெரியுமா? ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் ஆயிரம் நாட்களுக்கு மேல் சிறையில் வதைபட்டது தெரியுமா? இல்லை, அவர்களைப் போன்றவர்கள் மீதான பாசிச ஒடுக்குமுறை குறித்து ஏதேனும் புரிதல் உள்ளதா? அவர்களை ஆயிரம் நாட்களுக்கு மேல் சிறையில் அடைத்த நீதிமன்றங்கள் பத்தியை அணைக்குமா என்ன? அவரை காப்பாற்ற அவா நீதிமன்றங்கள் இருக்கிறது. அதனால், மாமாக்கள் யாரும் புஜம் உயர்த்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வோம்.

ஆனால், தமிழர்களாகிய நம்மை ‘பொறுக்கிகள்’ என இழிவுபடுத்திய பத்ரி சேஷாத்ரி கைதை நாம் வரவேற்போம். தற்போது அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு அதற்கு‌ப் பொருத்தமாக இல்லை எனில் பொருத்தமான வழக்கைப் பதியக் கோருவோம்.

  • திருமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here