இன்று ஜூலை 28ம் தேதியில் என்எல்சி முற்றுகை போராட்டத்தை பாமகவின் அன்புமணி ராமதாஸ் முன் நின்று நடத்திக் கொண்டுள்ளார். திடீரென என்எல்சி விவகாரம் முன்னுக்கு வந்தது எப்படி? ஏன்?
வியாழக்கிழமை தினசரியில் வந்துள்ள செய்திகளை தொகுத்துப் பார்த்தால், தமிழகத்தில் காவிகளால் திட்டமிட்டு சில போராட்டங்கள் அல்லது போராட்டங்களை தூண்டும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தெரிய வருகிறது.
நாடு தழுவிய அளவில், அதாவது தேசிய அளவில் மணிப்பூர் பிரச்சனை பற்றி எரியும் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பழங்குடியின மக்களை ஒடுக்கி தனது இந்துராஸ்டிரத்தின் படிக்கட்டுகளுக்கான அடிக்கல்லாக போட்டுக்கொள்ள எத்தனித்து கலவரங்களை முன் நின்று நடத்தி வரும் பாஜகவினரின் பைரேன் சிங் முதல் மோடி – அமித் ஷா கும்பல் வரை அனைவரும் சர்வதேச அளவில் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.
திட்டமிட்டு அனுமதிக்கப்படும், தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படும் மணிப்பூர் கலவரத்துக்கு எதிரான கண்டன போராட்டங்கள் இந்தியாவெங்கும் பற்றி பரவுகின்றன. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் முதல் மாணவர் அமைப்புகள் வரை அனைவரும் காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இதை எப்படி மடை மாற்றுவது என அண்ணாமலையும், ஆட்டுக்குட்டி ரவியும் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இவர் வரையும் தமிழகம் கோமாளிகளை போல் பார்த்து ட்ரோல் செய்வதால் மத்திய அரசு வேறு வகையில் மூக்கை நுழைத்துள்ளது. ஒரு பிரச்சனையை திசைதிருப்ப புதிதாக மற்றொன்று கிளப்ப வேண்டும். இதுதான் பாசிஸ்டுகளின் வழக்கமான தந்திரமாக உள்ளது.அதைத்தான் காவிக்கும்பல் தமிழகத்தில் அமல்படுத்தியுள்ளது.
நேற்றைய செய்தித்தாளில் என்எல்சி தனது சுரங்க உருவாக்கத்திற்காக கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி பகுதியில் அறுவடைக்கு காத்திருக்கும் நெல் வயலில் கால்வாய் வெட்டுவதையும், இந்த அக்கிரமத்திற்கு எதிராக மக்கள் கொந்தளிப்பதாகவும் செய்தி வந்துள்ளது.
அதே தினகரன் நாளிதழில் வந்துள்ள மற்றொரு செய்தி, அரசியல் கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நடத்தி வரும் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் பற்றி சொல்கிறது.
மற்றொரு செய்தியில் குறிப்பாக, கோவையில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் சங்கம் தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளது பற்றியும் படிக்க முடிந்தது. கடந்த சில நாட்களாக சென்னையிலும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் நமக்குத் தெரியும்.
அதே நாளிதழில் மற்றொரு செய்தியானது, சென்னை பல்கலைக்கழகம் முதுகலை மாணவர்கள் அரசியல் கட்சிகளிலோ இயக்கங்களிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் துறை தலைவரே மாணவர்களை கல்லூரியிலிருந்து நீக்கலாம். என்றெல்லாம் உத்தரவிட்டுள்ள செய்தியும் வந்துள்ளது. அதில் இந்நடவடிக்கையை தோழர் முத்தரசன் கண்டித்தும் உள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எல்சி நிறுவனம் திடீரென அறுவடைக்கு தயாராக உள்ள வயலில் கால்வாய் அமைக்க களம் புக வேண்டிய அவசியம் என்ன? சென்னை பல்கலைக்கழகம் குறிப்பிட்ட பிரிவு மாணவர்களின் அரசியல் உரிமையை திடீரென காலில் போட்டு மிதிக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழகத்தில் மத்திய அரசின் பிடியில் உள்ள துறைகள் மூலம் முன்னெடுக்கப்படும் இதற்கு பதில் ஒன்றுதான். அதாவது, அம்பலமாகும் ஒன்றிய அரசு தன்னை பாதுகாத்துக் கொள்ள எடுத்து வரும் எதிர் நடவடிக்கையாகத்தான் இவற்றை பார்க்க முடியும்.
18 வயதை தொட்ட எவரும் வாக்குரிமையின் மூலம் நாட்டின் பிரதமர் வரை தீர்மானிக்கக்கூடிய அரசியல் பொறுப்பு கொண்டவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றோ, தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கட்சிகளிலோ, இயக்கங்களிலோ ஈடுபடக்கூடாது ; உறுப்பினராக இருக்கக் கூடாது என உத்தரவிடுவதன் நோக்கமும் ஒன்றேதான். இந்த காவி கும்பல் தனது நெருக்கடியை தீர்த்துக் கொள்ள சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்து அடக்குமுறையை ஏவுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமித்து, வேந்தராக மூக்கையும் நுழைத்து வழி நடத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு பின் உள்ளார் என்பது நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது தான்.
தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இனி தவிர்க்க முடியாமல் என்எல்சியின் அராஜகத்தை கேள்விக்குட்படுத்தி போராடியே தீர வேண்டும். இது மத்திய அரசு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பற்ற வைத்துள்ள கலவர நெருப்புக்கு எதிரான கண்டனக் குரல்களை மடைமாற்றும் நரித்தனமே ஆகும்.
நாம் விழித்துக் கொள்வோம் ! மாணவர்களின் அரசியல் உரிமையை பறிப்பதாகட்டும், அல்லது நெய்வேலி என்எல்சி விளைநிலங்களை ஆக்கிரமித்து கால்வாய் அமைக்கும் விரிவாக்க பணியாகட்டும் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை.
இதையும் படியுங்கள்
- மணிப்பூர் போராட்ட வரலாறு உணர்த்தும் உண்மைகள்!
- மணிப்பூர் பாலியல் வன்முறை! ஆர்எஸ்எஸ் பாஜக காரனை நடமாட விடாதே!
எனவே சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரான போராட்டம் ஆகட்டும், என்எல்சி நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் ஆகட்டும் இவை அனைத்தும் மத்தியில் உள்ள மோடி அமித்ஷா கும்பலின் கேடுகெட்ட அரசுக்கு எதிரான போராட்டமாக ஒன்று குவிக்கப்பட வேண்டும்
குறிப்பாக மணிப்பூரில் பற்ற வைத்துள்ள கலவர நெருப்பை கண்டிப்பதிலிருந்து, பாலியல் வல்லுறவுகளையும், படுகொலைகளையும், தீ வைப்புகளையும் முன்னெடுத்து வரும் கிரிமினல்களான காவி கும்பலை தண்டிப்பதிலிருந்து நாம் திசை மாறி விடக்கூடாது. நம்மை மடைமாற்றி தப்பித்துக்கொள்ள எத்தணிக்கும் காவிக்கும்பலை அவ்வளவு எளிதில் நாம் விட்டுவிடக் கூடாது.
தமிழகம் அப்படி விடாது. இலக்கு வைத்து அடித்து துவைக்கும் என்ற அச்சத்தில்தான் இங்கு இத்தகைய குறுக்கு வழிகளை கையில் எடுக்கிறது ஒன்றிய மோடி அரசு. நாம் விழித்துக் கொள்வோம்.
- இளமாறன்
NLC தொழிலாளர்கள்(ஜீவா தொழிற்சங்கம்) போராடுகிறார்கள்,விவசாயிகள் போராடுகிறார்கள்.இந்தச் சூழ்நிலையை சாதகமாகக் கொண்டு தமிழக மக்களை,மாணவர்களை ஒன்று திரட்டி NLCநிர்வாகத்தை, மோடி அரசை நிர்பந்திக்கச் செய்யும் வழிமுறைகளைச் செய்யாமல் பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற திமுக கூட்டணி கட்சிகள்,அமைப்புகள் என்ன செய்கின்றன?
மாநில அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்துப் போராடினால் அது பாஜக தூண்டிவிடும் போராட்டம் என்று முத்திரை குத்தி அமைதி காப்பது எதற்கோ?
சிறப்பான கட்டுரை…
வெட்டி விவாதம் செய்து கொண்டு அலையும் ஜென்மங்களை கண்டுகொள்ளாமல், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முண்னனிகான வேலைகளை செய்யலாம்.