IIT, IIM மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலோர் தலித், பழங்குடிகள், முஸ்லிம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். மிக நுட்பமான வகையில் அன்றாடம் நடக்கும் சாதிய வன்மங்கள் கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படும் நிலைதான் உள்ளது.  இங்கு நிலவும் சாதிய மற்றும் கலாச்சார வேறுபாடுகள் தங்களை தாழ்வாக உணர வைப்பதாக ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் கூறுகின்றனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள்!

சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர் வைபவ் ஜாதவ் பிப்ரவரி 2023 – ல் செய்த டிவீட்டில், “எனது முதலாம் ஆண்டில்  சீனியர்கள் சூழ்ந்து கொண்டு எனது ரேங்க் குறித்து கேட்டனர். நான் எனது எஸ்சி பிரிவின் ரேங்க்கை சொன்னவுடன் மிக ஏளனமாக நடந்து கொண்டனர். மேலும் எனது 5 ஆண்டுகால படிப்பிலும் இந்த அவமானம் தொடர்ந்தது”  எனக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலங்களில் சாதிய ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பல மாணவர்களில் ஜாதவும் ஒருவர். மற்றொரு முன்னாள் மாணவர் கூறுகையில், இட ஒதுக்கீட்டின் காரணமாக சேர்பவர்கள் புகழ் வாய்ந்த ஐஐடி-களில் படிக்கத் தகுதியற்றவர்கள் என்ற பேராசிரியர் ஒருவரின் கருத்தை அம்பலப்படுத்தினார்.

புதுடெல்லியின் JNU-வில் முனைவர் பட்டம் பெற்ற அபக்ஷா பிரியதர்ஷினி, “சாதி வெறிக் கருத்துக்கள் வெளிப்படையாக இல்லா விட்டாலும், பட்டியலின மாணவர்களின் ‘செயல் திறன்’ குறித்து நுட்பமாக விமர்சிப்பார்கள். ஒடுக்கப்பட்ட மாணவர்களிடம் அவர்கள் நடந்து கொள்கிற வித்தியாசமான அணுகுமுறையை எளிதில் கண்டறிய முடியும்” என்றார். டிசம்பர் 2021-ல் JNU-வில் உள்ள மாணவர்கள், SC, ST, OBC பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மாணவர்களின் தன்மானம் பாதிக்கப்படுகிறது!

உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் மிக நுட்பமான சாதியப் பாகுபாடுகள் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்படுகின்றன. பாதிக்கப்படுவோர் நுட்பமான வகையில் சக மாணவர்களால் தனிமைப்படுத்தலை சந்திக்கின்றனர். இதனோடு, கல்வி சார்ந்த அழுத்தத்தையும் சேர்த்து சமாளிப்பது இந்த மாணவர்களுக்கு மிகவும் கடினமானது. JNU – வில் PhD – க்கு விண்ணப்பித்த சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் ஆய்வு மாணவர் “நான் ஒரு முஸ்லிம் என்பதால், ஒரு மேற்பார்வையாளர் எனது ஆராய்ச்சித் திட்டத்தை விவாதிக்கக் கூட தயாராக இல்லை.  பதிலாக ஜாமியா மிலியா பல்கலைக்குப் போக வேண்டியதுதானே! ” என  நக்கல் அடித்தார் என்றார்.

நன்றி: the Quint

உ.பி – யின் அலிகாரைச் சேர்ந்த 28 வயதான ஆராய்ச்சி மாணவர், “என்னிடம் ஆராய்ச்சி குறித்து எதுவுமே கேட்காமல் தலைப்பை மட்டுமே கேட்டுவிட்டு, உனது சிந்தனை காலனித்துவமாக உள்ளது எனக்கூறி எனது விளக்கத்தையே தடுத்து, முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்” என்கிறார். ஒரு முஸ்லிம் மாணவர் Viva எனப்படும் நேர்முகத் தேர்வில் ஒரு மதிப்பெண் மட்டுமே  பெற்றார். ஹிஜாப் அணிந்த முஸ்லிம் விண்ணப்பதாரர் முகமது நபி பற்றி விசாரிக்கப்பட்டார். எப்படியான அலங்கோலங்கள் அரங்கேறுகிறது என்பதைப் பாருங்கள்!

ஐஐடி, ரோபார்- ஐ (பஞ்சாப்) சேர்ந்த  B.Tech மாணவர், “மூத்த மாணவர்களால் எங்களது தரவரிசையை வெளிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டது. சில மாணவர்கள் தயக்கம் காட்டினர். ஒரு பெண் அழ ஆரம்பித்ததால், அது பதட்டத்தை ஏற்படுத்தியது” என்றார். இட ஒதுக்கீட்டில் வந்த மாணவர்கள் ஐஐடி-யில் இலவசமாக சாப்பிட்டு இலவசமாகப் படிக்கிறார்கள் என்ற கேலிப் பார்வையை எதிர்கொள்கின்றனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த  பேராசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான அனுப்குமார் 2016 – ல் “சாதி மற்றும் இந்திய வளாகங்கள்” என்ற கட்டுரையில், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ்(TISS)  போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இங்குள்ள ஏதோ ஒன்று அவர்களின் தன்மானத்தைப் பறித்து, அவர்களை ஒதுக்கி வைத்து விரும்பத்தகாத ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாதிவெறியால் தற்கொலைக்குத் தள்ளப் படும் மாணவர்கள்!

மே 2019 – ல் பழங்குடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பயல் தத்வி எனும் மருத்துவ முதுகலைப் படிப்பான MD படித்த மாணவி, உயர்சாதி மூத்த மாணவர்களின் சாதிய வன்மத்தால் தற்கொலை செய்து கொண்டார். அந்த சமூகத்தில் இருந்து MD-ஐ தொட்ட முதல் பெண்மணி அவர்தான். அவரது மரணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 2021- ல் நான்கு அமைப்புகளின் கூட்டுக்குழு, “நிறுவன சாதி வெறியின் நிலையான முழக்கம்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மருத்துவக் கல்வியில் சாதியப் பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மாணவர்களின் அனுபவங்களை அதில் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

மாணவர்களிடம்  மேற்கொண்ட ஆய்வில், இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்த மாணவர்கள் ‘தொழில் முறையில்’ திட்டங்களை வெற்றிகரமாக முடிக்க தகுதியற்றவர்கள் என்ற கருத்து நிலவுவதாக தெரிவித்தனர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்தவர்கள் அரசு மற்றும் அதிகாரிகளிடமிருந்து சிறப்பு சலுகைகளைப் பெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றனர். இந்த ஆய்வு விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள், 2 முஸ்லிம்கள், ஒரு ஓபிசி மற்றும் 6 ஆதிக்க சாதியினர் உள்ளிட்ட 19 மாணவர்களிடம் நடத்தப்பட்டது. செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தோரட் குழுவின் ஆய்வில் அறிந்த உண்மைகள்!

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முன்னாள் தலைவர் சுகாடியோ தோரட் (2007-ல் உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக அரசு நியமித்த முதல் குழுவை தலைமை ஏற்று நடத்தியவர்) கூறுகையில், “உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு பிரச்சனையாக உள்ளது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் நடைமுறைகளில் பிரதிபலிக்கிறது. சாதியப் பாகுபாடு, ஒதுக்குதல், அவமானப்படுத்துதல் போன்றவற்றால் தலித் மாணவர்களிடையே அதிக தற்கொலை நிகழ்வுகள் தொடர்கிறது” என அவர் கூறினார்.


இதையும் படியுங்கள்: 

டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் கழகத்தில் ,இட ஒதுக்கீடு மூலம் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட புகார்களை குழு விசாரித்தது. அந்த அறிக்கையில், 72% மாணவர்கள் வகுப்பறையில் ஏதோ ஒரு கட்டத்தில் சாதியப் பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், 85 % பேர் ‘உயர்சாதி’ மாணவர்களுடன் ஒப்பிடுகையில் எஸ்.சி மாணவர்களுக்கு தேர்வாளர்கள் போதிய நேரத்தை தருவதில்லை எனவும் கூறியுள்ளனர். ஏறக்குறைய 40% பேர் தங்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறினர். 69% எஸ்சி,எஸ்டி மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களுக்கு போதுமான உதவியை செய்வதில்லை எனக் கூறியுள்ளனர். 50% மாணவர்கள் அணுகுவதில் உள்ள சிக்கல்களை, அதாவது தவிர்த்தல், அவமதிப்பு, ஒத்துழையாமை மற்றும் ஊக்கமின்மை போல ஆசிரியர்களால் வேறுபட்ட முறையில் சாதியப் பாகுபாடுகள் காட்டப்படுவதாகக் கூறினர் என உள்ளது.

குழுவின் பரிந்துரையை நிராகரிப்பது ஏன்?

ஆய்வைத் தொடர்ந்து, தோரட் கமிட்டியின் பரிந்துரைகளில் பட்டியலின மாணவர்களுக்கு, அவர்களின் மொழித் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சியும், அடிப்படை படிப்புகளில் திறன் மேம்படுத்தும் பயிற்சியும் அவசியம் எனவும், பட்டியலின மாணவர்களுடன் நெருக்கமாக கலந்தாலோசித்து, இதை செயல்படுத்த எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. எஸ்சி,எஸ்டி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஆசிரியர்கள் உணர்வுபூர்வமாக முகம் கொடுப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறி இருந்தது. மும்பையில் உள்ள ஒரு உயர்மட்ட மருத்துவக் கல்வி நிறுவனத்தில் தத்வி தற்கொலை செய்து கொள்வதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2011 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்தப் பரிந்துரைகள் எதுவும் செயல்படுத்தப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நான் வழங்கிய சிபாரிசுகளைப் பார்த்து எய்ம்ஸ் நிர்வாகக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். சாதியப் பாகுபாடு குற்றச்சாட்டுக்கு தாங்கள் ஆளானதாக கருதியதால் பெரும்பாலான பரிந்துரைகளை நிராகரித்தனர்” என்றார் தோரட். மேலும் அவர் சாதியப்பாகுபாடுகளுக்கு எதிரான விதிமுறைகள் யுஜிசி- யில் இருந்தாலும் அவை உண்மையில் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என்றார். தத்வியின் தற்கொலைக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு ஜஸ்பிரீத் சிங் எனும் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர் பஞ்சாபின் மருத்துவக் கல்லூரி ஒன்றில், சாதிய வன்மத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதில் சாதியப் பாகுபாட்டை கடைபிடித்ததாக மூத்த மாணவர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனால் நடவடிக்கை ஏதுமில்லை.

விளிம்பு நிலை சமூகத்தினரே பாதிப்புக்கு ஆளாகின்றனர்!

2021-ல் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2014  முதல் 2021 வரை ‘122 மாணவர் தற்கொலைகள்’ அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் நடந்துள்ளதாகவும், இவர்களில் 24 பேர் SC பிரிவினர், 3 பேர் ST பிரிவினர், 41 பேர் OBC வகுப்பை சார்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தலித், பழங்குடி, முஸ்லிம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். இந்திய அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவும் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கவும், சாதியப் பாகுபாடுகளை களையவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளன என்றார் அமைச்சர்.


இதையும் படியுங்கள்: 

தேசியக் கல்விக்கொள்கை 2020” ஏன் எதிர்க்க வேண்டும் பேராசிரியர் ப.சிவக்குமார்
தேசிய கல்விக் கொள்கை 2020ல் பண்பாட்டு திட்டமும், அரசியல் பொருளாதாரத் திட்டமும்

UGC நெறிமுறைகளின் படி, சாதியப் பாகுபாடு எதிர்ப்பு அதிகாரிகள் உயர்கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்டு, இது தொடர்பான மாணவர்களின் புகார்களை விசாரிக்க வேண்டும். மேலும் சாதி, மதம், இனம், மொழி மற்றும் பாலினம் போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் மாணவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 2012 மற்றும் 2019 யுஜிசி நெறிமுறைகள் இருந்த போதிலும், ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் உதவித்தொகை பெறுவது, குறைந்த கட்டணம் செலுத்துவது, நூலகங்களில் இருந்து புத்தகங்களை அதிக எண்ணிக்கையில் பெறுவது போன்றவற்றை குத்திக் காட்டி கேலி செய்யப்படுவதாக மாணவர்களும், மாணவர் அமைப்புகளும் அம்பலப்படுத்துகின்றன. “இத்தகைய ஒதுக்கீட்டு மாணவர்கள் இந்த வளாகத்துக்கு உரியவர்கள் அல்ல என உணர வைக்கப் படுகின்றனர்” என்று ஐஐடி – பம்பாயின் PhD மாணவர் ஒருவர் தெரிவித்தார். அதேபோல இவர்கள் ஏதேனும் கேள்வி கேட்டால் “கோட்டா” மாணவர்கள் தானே என வாயை அடைப்பது, கண்டிப்பது போன்றவையும் அரங்கேறி இருக்கிறது.

ஐஐடி – பம்பாயின் முதலாண்டு பி.டெக் மாணவர் தர்ஷன் சோலங்கி பிப்ரவரி 12, 2013-ல் தற்கொலை செய்து கொண்டார். அகமதாபாத்தின் மணி நகரில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தின் முதல் தலைமுறை உயர்கல்வி பயில வந்த மாணவர்தான் சோலங்கி. கல்வி நிறுவனத்தில் சாதியப் பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், சக மாணவர்கள் அவரை இழிவாக நடத்தியதாகவும், அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் தர்ஷன் கூறியதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். அங்கு செயல்படும் APPSC, வளாகத்தில் நிலவும் கட்டமைப்பு சிக்கல்கள் மற்றும் அன்றாடம் நிகழும் சாதிய ரீதியிலான இழிவுகளைப் பற்றி விசாரிக்கக் கோரியது. மரணம் குறித்து விசாரிக்க நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட 12 பேர் கொண்ட குழுவின் இடைக்கால அறிக்கையின்படி, சோலங்கியின் JEE ரேங்க் வித்தியாசம், கணினியில் அனுபவம் இல்லாதது, மொழித் தடை போன்ற காரணங்களால் தனிமைப்பட்டிருந்ததாக தெரிவித்தது.

செப்டம்பர் 4, 2014 ஐஐடி- பாம்பேவின் மாணவர் அனிகேத் அம்போர், தனது விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இது விபத்தா அல்லது தற்கொலையா எனத் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அனிகேத் வகுப்பறையில் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரியவந்தது. அனிகேத்தின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, அவரது மரணம் சாதியப் பாகுபாட்டின் விளைவினால் அல்ல. மாறாக அவர் உள் முரண்பாட்டுடன் போராடியதே காரணம் என அறிக்கை அளித்தது. 2017 ஐஐடி – பாம்பேவில் பட்டியலின மாணவர்களின் கல்வி, எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்துவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அனிகேத்தின் மரணத்துக்குப் பின் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையாலும், அம்பேத்கர் – பெரியார்- புலே படிப்பு வட்டத்தின் (APPSC) கோரிக்கையாலும் இது ஏற்படுத்தப்பட்டது. APPSC- யின் உறுப்பினர் ஒருவர், இப்படி அமைக்கப்பட்ட குழுவானது 2021 வரை எந்த செயல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார். வளாகத்தில் உள்ள யாருக்கும் தெரியாத ரகசிய அமைப்பாகத்தான் அது இருந்தது. இந்த எஸ்சி, எஸ்டி குழுவில் இருந்த முன்னாள் உறுப்பினர்,” 2021 இல் புதிய உறுப்பினர்கள் இந்தக் குழுவின் பொறுப்பை ஏற்றனர். 2022 ல் 2 ஆய்வுகளை நடத்தினர். முதலாவது, Sc/St மாணவர்கள் வளாகத்தில் உண்மையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், இரண்டாவது அவர்களது மனநல பிரச்சனைகளை சரி பார்ப்பதாகவும் இருந்தது.

தனியார் கல்வி நிலையக் கொள்ளையர்கள்!

மும்பையில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் PhD பட்டதாரியான 34 வயதான திகம்பர் பாகுல் ” ஒடுக்கப்பட்ட பிரிவினைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடங்கி, சேர்க்கைகள் மற்றும் படிக்கும் காலம் முழுவதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த மாணவர்களில் பெரும்பாலோர் பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஆனாலும் அவர்களின் விடுதி மற்றும் உணவுக்கான கட்டணங்கள் பொதுப்பிரிவினருக்கு இருப்பதைப் போலவே உள்ளது. அவர்கள் மொழி பிரச்சினையால் தொடர்பு கொள்ளப் போராடுகிறார்கள். மேலும் அவர்கள் பேராசிரியர்களின் புறக்கணிப்பையும், மற்ற மாணவர்களுடன் இரண்டற கலப்பதில் சிரமத்தையும் சந்திக்கிறார்கள்”என்றார்.

பட்டியலின மாணவர்களுக்கான ஸ்வதர் போஜனா எனும் திட்டம் இல்லாவிட்டால், மகாராஷ்டிராவில் உள்ள TISS உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் அவர்களால் ஹாஸ்டல் மற்றும் மெஸ் கட்டணத்தை கட்டவே முடியாது. மாநிலத்தின் பட்டியலின மக்களின் குடும்ப ஆண்டு வருமானம் , இரண்டரை லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. நிதி வசதி இல்லாத நிலையில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. மாணவர்கள் படிப்பை முடித்த பிறகும் இந்தத் தொகைக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் அவர்களது ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பிப்பதற்கு முன்பாகவே முழுத் தொகையையும் கட்ட வேண்டும். குறைந்த வருமானப் பின்னணியில் இருந்து வரும் அவர்கள் அவ்வாறு கட்ட முடிவதில்லை. உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் தாமதம் அவர்களது படிப்பையே தாமதப்படுத்துகிறது என்றார் பாகுல். இந்த மாணவர்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு நகர மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட பிரிவினர், ஒதுக்கி வைக்கப்படும் அவலம்!

“பல்கலைக்கழகங்களில் சாதிய பாகுபாடும் ஒடுக்கப்படுதலும்” என்ற தனது புத்தகத்தில் தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் சுகுமார், வளாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதிய தப்பெண்ணங்களையும், ஒடுக்கப்பட்ட மாணவர்களை தாழ்வாக உணரவைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட அதன் செயல்பாடுகளையும் எடுத்துக்காட்டுகிறார். நிர்வாகிகளும், ஆசிரியர்களும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களை ஒதுக்கி வைக்க முனைகின்றனர். இந்த மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் நுழைகிறார்கள். தங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத மனிதர்களை எதிர்கொள்கிறார்கள் என்றார் அவர். மேலும்  ராகிங்கை போலவே வளாகத்தில் சாதிய பாகுபாடுகளையும் நிறுத்த வேண்டும் எனவும் கூறினார். உயர்கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களாகவும், எனவே அரசியல் அமைப்புக்கு எதிரானவர்களாகவும் உள்ளனர் என்றும் எழுதியுள்ளார்.

தற்கொலை எண்ணங்கள் எழுகின்றன!

ஐஐடி – பம்பாயில் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான குழுவினரால் 2022 – ல் நடத்தப்பட்ட ஆய்வில் 388 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 77 பேர் வளாகத்தில் தாங்கள் சாதியத் துன்புறுத்தலை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர். பட்டியலின மாணவர்களில் 37 சதம் பேர் தங்களது JEE ரேங்க்கை பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்தனர். இரண்டாவதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி மாணவர்களில் சுமார் 20 சதம் பேர் தங்களுக்கு தற்கொலை செய்து கொள்ள தோன்றுவதாக தெரிவித்தனர்.

நன்றி: The Quint (சாதிய வன்மத்தால் தொடரும் தற்கொலைகள்)

அடுத்த கட்டமாக மாணவர் ஆரோக்கிய மையத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் எஸ்சி, எஸ்டி மாணவர்களில் பலரும் இடஒதுக்கீடு எனும் ‘களங்கத்தில்’ இருந்து தப்பிக்க தங்களது சாதிய அடையாளங்களை மறைப்பதாக கூறினர். சில மாணவர்கள், பேராசிரியர்களின் சாதிய வன்மம் மற்றும் பாரபட்சமான மனப்பான்மையால் தங்களுக்கு மனநல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டனர். மனநல சிக்கல்களை சரி செய்வதற்கான மாணவர் நல வாழ்வு மையத்தின் மீதே தங்களுக்கு நம்பிக்கையில்லை. காரணம் அதன் தலைமை ஆலோசகராக உள்ள பெண்மணி இட ஒதுக்கீடு என்பது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்தை வெளியிட்டதாகவும் கூறினர். ஒதுக்கீட்டு மாணவர்கள் அவரிடம் சென்று தங்களது குறைகளை தெரிவிக்க வேண்டும் என சொல்வது எந்த வகையில் நியாயம்?

இங்கு நடத்தப்பட்ட பலகட்ட ஆய்வு முடிவுகளை வெளிப்படையாக வெளியிடவில்லை. மேலும் அதன் மீது எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் மாணவர் குழுவின் முன்னாள் உறுப்பினர். APPSC உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “பட்டியலின மாணவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என ஆரோக்கிய மைய உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் “கோட்டா”வில் சேரும் அவர்கள் வளாகங்களில் இலவசமாகப் படிக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்ற நினைப்பில்தான் அவர்களும் உள்ளனர்” என்றார். இது எப்படி வளாகத்தில் நிகழும் சாதியப் பாகுபாடுகளை தீர்க்க உதவும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்யும் உயர்கல்வி நிறுவனங்கள்!

மக்களவையில் 2021 ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகம் அளித்தத் தகவல்படி, 45 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்களில் தலா ஒரு எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பதாக தெரிய வந்தது. மத்திய நிறுவனங்களில் ஓபிசிக்கு 27 சதம் எஸ்சிக்கு 15 சதம் எஸ்டி- க்கு 7.5% இட ஒதுக்கீடு இருந்தபோதிலும் இதுதான் இன்றைய நிலையாக உள்ளது. இது குறித்து பேராசிரியர் சுகுமார் கூறுகையில்,”Sc, ST ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம் அவர்கள் உயர் பதவிகளை அடைந்தால், வளாகத்தில் நடைபெறும் சார்புத் தன்மையை கேள்வி கேட்பார்கள் என்பதுதான். இருக்கும் ஒரு சில ஆசிரியர்களும் பாகுபாட்டுக்கு எதிராக குரல் எழுப்பினால் பதவி உயர்வுகளை பெற முடியாது அல்லது பணி நீக்கத் தண்டனை கிடைக்கும் என அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட ஐஐடி இயக்குநர்கள் குழுவானது, டிசம்பர் 2020-ல் ஒரு பரிந்துரையை வெளியிட்டது. அதில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஐஐடி போன்ற ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. காரணம், இடஒதுக்கீடு கல்வியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்யுமாம்!  இயக்குநர்களில் பெரும்பாலோரின் மனநிலை இப்படி இருக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் “கோட்டா” மாணவர்கள் மீது எந்த மனநிலை இருக்கும்? மேலும் ஐஐடி, ஐஐஎம் – களில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் குறித்து உரிய சமூகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த சமூகப் பிரச்சினைக்கு தீர்வென்ன?

மும்பையில் உள்ள சாமல் ஜெய்கர் என்ற உளவியல் ஆலோசகர், “இன்றைக்கு சாதியப் பாகுபாடு மிகவும் இயல்பானதாக ஆக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பாகுபாட்டுடன் நடத்தப் படுவதை பெரும்பாலும் உணர்வதில்லை. சில நேரங்களில் சில சங்கடங்களை அனுபவிக்கலாம். ஆனால் அது ஏன் அப்படி நடக்கிறது என அவர்களுக்குத் தெரியாது என்றார். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ஐஐடிகளில் சேரத் தகுதியற்றவர்கள் என சொல்லப்படுவதை மேற்கோள் காட்டிய அவர், இப்படித் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டால் அவர்களே அதை நம்பத் தொடங்கி விடுவார்கள் என்றார்.

மும்பையில் உள்ள ஐஐடி – ஐச் சேர்ந்த ஆய்வு அறிஞர் ஒருவர், “உயர்சாதியினரின் மேலாதிக்கம் நிலவும் இடத்தில் எஸ்சி/எஸ்டி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அங்கு அந்நியமான சூழலை எதிர்கொள்கின்றனர். வளாகத்தில் மாணவரின் ரேங்க் 8000 என இருந்தால் அதை வைத்து அவரது ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவை எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர். இந்த தரவரிசையானது சமூகப் பிரிவு, வர்க்கம், சாதி ஆகியவற்றை தீர்மானிக்க உதவுகிறது” என்றார். மேலும், மற்ற மாணவர்கள் ஒரு மாணவரின் சாதியைப் பற்றி அறிந்தவுடன் சமூக மற்றும் கல்வி வட்டாரங்களில் இருந்து அவரை விலக்கத் தொடங்குகின்றனர்.

பேராசிரியர் சுகுமார்,”இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களிடம் கருணையுடன் கூடிய  தீவிரப் பரிவுணர்ச்சிதான் தேவை. மாறாக இரக்கமோ, அனுதாபமோ அல்ல. அதற்கு சமத்துவம் மற்றும் ஜனநாயகத் தன்மை கொண்ட நிறுவனங்கள் தேவை. இட ஒதுக்கீட்டு மாணவர்களை சமமாக ஏற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. மக்கள் ஒன்றிணைந்து இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக கடுமையான சட்டமும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமானது” என்றார்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில், ‘மூளை வலிமை’ மிக்கவர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதும், ஒடுக்கப் பட்ட பிரிவினர் புறக்கணிக்கப்படுவதும் மாபெரும் சமூக அநீதியாகும். APPSC போன்ற மாணவர் அமைப்புகள் வலுவாக கட்டமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் அதில் தங்களை இணைத்துக் கொண்டு ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக கருத்தியல் தளத்திலும், போராட்டக் களத்திலும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டும்.

மூலக் கட்டுரை:

https://article-14.com/post/-caste-on-campus-dalit-students-face-exclusion-alienation-in-india-s-higher-education-institutions–642b88a7149fe

தமிழில் ஆக்கம்: குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here