“ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை” என்றார் அண்ணா. 2014 – ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு அமைந்ததில் இருந்தே, நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் பல்வேறு அலங்கோலங்கள் அரங்கேற்றப் பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்களின்  மூலமாக அம்மாநில அரசுகளுக்கு கொடுக்கும் குடைச்சல்கள் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றன.

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு எதிராக ஆரம்பித்த ஆளுநர்களின் ஆட்டம், அடுத்தடுத்து மேற்கு வங்கம், மேகாலயா, மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா என ஒவ்வொரு மாநிலமாக பற்றிப் படர்ந்து இறுதியாக தமிழகத்தை அடைந்துள்ளது. ஆளுநர் எதிர்ப்பின் மையப்புள்ளியாக இப்போது தமிழ்நாடு மாறியுள்ளது.

ஆளுநர்களின் அத்துமீறல்கள்!

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கருக்கும் இடையில் பெரும் அதிகாரப் போட்டி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் மம்தா, “இங்கே ராஜ்பவனில் ஒரு அரசர் அமர்ந்து கொண்டுள்ளார். அவர் பிஜேபியின் அகில இந்திய தலைவரை போல தன்னை நினைத்துக் கொண்டு பேசி வருகிறார்” என்றார். பிஜேபி போடும் தாளத்துக்கு ஏற்ப ஆளுநர் ஆடுகிறார் என அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவர் மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டி அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சபாநாயகர் மூலமாக புகார் அனுப்பப்பட்டது.

கேரள மாநிலத்தைப் பார்த்தோமானால், அங்கு ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான், ஆட்சி புரியும் சிபிஎம் அரசுக்கு எதிராக தொடர் தொல்லைகள் கொடுத்து வருகிறார். அவர் சமீபத்தில் அங்குள்ள இரண்டு முக்கிய தொலைக்காட்சிகளுக்கு எதிராக, அவை பினராயி விஜயன் அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாகக் குற்றம் சாட்டினார். அந்த சேனல்களின் நிருபர்கள் இருந்தால் நான் பேட்டி அளிக்க மாட்டேன், அவர்கள் உடனே இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வீம்பு காட்டினார். அவரது இத்தகைய போக்குக்கு எதிராக பத்திரிகையாளர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர். ஆளும் சிபிஎம் கட்சியும், உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக விவகாரங்களில் அவரது தலையீட்டுக்கு எதிராக நவம்பர் 15 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. அங்கு எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காங்கிரஸின் சதீசனும், ஆளுநர் எப்போதும் தன்னைப் பற்றிய செய்தி வர வேண்டும் என்பதற்காக அரசமைப்புக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார்.

புதுவையில் முன்பு துணைநிலை ஆளுநராகப் பதவி வகித்த கிரண்பேடி, அங்கு காங்கிரஸ் அரசை செயல்படவே அனுமதிக்காமல் ஏராளமான முட்டுக்கட்டைகளை போட்டு, போட்டி அரசாங்கத்தை நடத்தி வந்தார். இப்போது பொறுப்பு ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனும், அங்கு முதல்வராக உள்ள ரங்கசாமி அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் முடக்குகிறார். அவர்  ஆளுநராகப் பதவி வகிக்கும் தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ் அரசு, அவரை பங்கப்படுத்தி ஓரங்கட்டியதால் இப்போது புதுவையே கதி என்று கிடக்கிறார். போதாக்குறைக்கு தமிழக அரசுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார். அவர் இங்கு மூக்கை நுழைக்கக் கூடாது என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டதற்கு, “நான் தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் கூட நுழைப்பேன்” என்று திமிராக பேசி வருகிறார்.

புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பேடி

தமிழகத்தைப் பொறுத்தவரை, பன்வாரிலால் புரோகித் என்ற ஆளுநரை வைத்து கடந்த அதிமுக ஆட்சியை தனக்கான அடிமை அரசாக நடத்தினார் மோடி. அடுத்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும் வகையில் கடிவாளமாக களமிறக்கப்பட்டவர்தான் இப்போதுள்ள கவர்னர் R.N. ரவி.

முன்னாள் IPS அதிகாரியான இவர்,  CBI, IB போன்ற மத்திய உளவுத் துறைகளிலும் சிலகாலம் பணியாற்றியவர். 2012 – ம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பிறகு, பிரதமர் அலுவலக உளவுப்பிரிவு தலைவரானார். பிறகு 2019 முதல் 2021 செப்டம்பர் வரை நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றி, அங்கிருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டார். அவர் அங்கிருந்து மாற்றப்பட்டபோது அம்மாநில மக்கள் “தொலைந்தது சனியன்” என பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அவரது பிரிவு உபச்சார விழாவை அனைத்து பத்திரிகையாளர்களும் புறக்கணித்தனர். இப்படியாக ‘ஜனநாயக’ப் பணியாற்றி ‘புகழ்’ பெற்றவர்தான் இந்த ஆளுநர் ரவி.

தமிழகத்தில் ஆளுநர் ரவியின் அட்டூழியங்கள்!

தமிழகத்தின் கவர்னராக R.N. ரவி கடந்த ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றதிலிருந்தே, திமுக அரசுடன் மோதல் போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து, ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை, பல்கலைக்கழக துணை வேந்தர்களை முதல்வரே நியமனம் செய்யலாம் உள்ளிட்ட 20 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளார் இவர். மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இவர் அதையெல்லாம் மதிக்காமல் எஜமானர்களின் கட்டளைப்படி செயல்படுகிறார்.

இதையும் படியுங்கள்: ஆர்.என்.ரவி: ஆளுநரின் பெயரில் ஆர்.எஸ்.எஸ். அடியாள்!

மேலும் தமிழக அரசுக்கோ, உயர்கல்வித்துறை அமைச்சருக்கோ தெரிவிக்காமல் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் மாநாட்டை நடத்துவது, சனாதன தர்மம் மற்றும் இந்துத்துவா குறித்து உயர்வாக பொது மேடைகளில் பேசுவது, சமஸ்கிருதம்தான் சிறந்த மொழி என்றும் திருக்குறளில் ஆன்மீக கருத்துகள்தான் அதிகம் உள்ளன என்றும் ஆய்வாளர் போல அள்ளி விடுவது என இவரது அட்ராசிட்டிகள் தொடர்கின்றன.

சமீபத்தில் “இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்கின்றனர். ஆனால் எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்துதான் இருக்க முடியும். மதச்சார்பற்ற நாடு என்று கூறுவதே தவறு” என முட்டாள் தனமாக பேசினார். அதேபோல கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பை ஒட்டி “தமிழக அரசு என்ஐஏ-விடம் இந்த வழக்கை ஒப்படைக்க நான்கு நாட்கள் கால தாமதமானது ஏன்? அதற்குள் சாட்சியங்கள் கலைக்கப்பட்டு இருக்கலாம், தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்” என ட்விட்டரில் கருத்து தெரிவிக்கிறார். நான்கு நாள் நடைமுறை தாமதத்திற்கே பொங்கி எழும் இவர், ஓராண்டு காலமாக 20 மசோதாக்களை தாமதப்படுத்துவதை பற்றி  கேள்வி கேட்டால், என்ன பதில் சொல்வார்? மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. ஒரு அரசியல்வாதி கூட பேசத் தயங்குவதை அல்லது அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகள் பேசுவதைப் போல இந்த ஆளுநரும் பேசுகிறார்.

ஆளுநர் ரவியின் தொடர் அராஜகப் போக்குக்கு எதிராக, சமீபத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் கவர்னர் ரவி, தான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்பட்டு வருவதாகவும், வெறுப்பைத் தூண்டும் வகையில் மக்களை பிளவுபடுத்தும் ஆபத்தான மதவெறி கருத்துக்களைக் கூறி வருவதாகவும், ஆளுநராகப் பதவி வகிக்கும் அடிப்படை அறிவும், நேர்மையும், பாரபட்சமற்ற தன்மையும் இல்லாத இவர், அரசுக்கும், மக்களுக்கும் தர்ம சங்கடமாக உள்ளார் எனவும், முக்கியமாக அரசியலமைப்பை கடைபிடிக்க லாயக்கற்றவர் என்பதால் உடனே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆளும் பாஜகவுக்கு விசுவாசமாக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு பிரதிபலனாக கவர்னர் பதவி வழங்கப்படுகிறது. அதன் உச்சமாக, மேற்கு வங்க அரசுக்கு தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்து, அங்கு கவர்னராக செயல்பட்ட ஜக்தீப் தன்கர் இப்போது இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் இந்தப் போக்கானது, சொல்லிக் கொள்ளப்படும் ‘கூட்டாட்சி தத்துவத்தை’ அழித்து, ஜனநாயகத்தை சிதைத்து வருகிறது.

இதே போலத்தான் மகாராஷ்டிரா  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ச்சியாக ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. இருந்த போதிலும் இப்போது பாசிச பாஜக ஆட்சியாளர்களுக்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள் கூட உறுத்தலாகத்தான் உள்ளன.

ஆளுநர்களின் அத்துமீறல்கள் குறித்து எத்தனை முறை புகார்கள் அளிக்கப்பட்ட போதும், மோடி அரசு அசைந்து கொடுக்காமல், தொடர்ந்து மௌனம் சாதிக்கிறது. ஒன்றிய அரசிடம் செல்வதற்கு பதிலாக மக்களிடம் போராட்டமாக எடுத்துச் சென்றால் ‘ஆட்சிக் கலைப்பு’ என்ற ஆயுதத்தை ஒன்றியம் கையில் எடுக்குமோ என அஞ்சி, கடிதப் புகாரோடு நிறுத்திக் கொள்கின்றனர். இன்றைக்கு ஆளுநர்களின் இத்தகைய மக்கள் விராத செயல்பாடுகளை வைத்தே அந்தப் பதவிக்கானத் தேவையை முடிவு கட்ட வேண்டியுள்ளது.

இந்திரா காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் “ஆளுநர் என்பவர் கட்சி சார்பற்றவராக, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே சுமூக உறவுக்கான பாலமாக இருக்க வேண்டுமே ஒழிய, மத்திய அரசுக்கு முகவர் போலவோ, அடியாள் போலவோ செயல்படக் கூடாது” எனக் கூறியுள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாகத்தான், அதாவது “ஆளுநர்கள் தங்கள் அலுவலகங்களை பாஜக கட்சித் தலைமையிடமாக மாற்றிக் கொண்டுள்ளனர்” என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு விமர்சிப்பதைப் போலத்தான் நடந்து கொள்கின்றனர்.

ஆளுநர் பதவியும், அதன் அதிகாரங்களும்.

ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் கவர்னர் என்ற இந்தப் பதவி, சட்டம், நிதி, உள்துறை போன்றவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பயன்பட்டது. கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி போன்றவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. ‘சுதந்திரம்’ பெற்ற பிறகு ஆளுநர் பதவி என்பது மாநில அரசுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஒன்றிய அரசுக்கு கங்காணி வேலை பார்ப்பதாக மாறியது.

இதையும் படியுங்கள்: RSS கைக்கூலி ஆளுநர் ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற்றுவோம்!

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே ஆளுநரின் பிரதானப் பணியாகக் கூறப்படுகிறது. மட்டுமல்லாமல், குற்றவாளிகளின் தண்டனையைக் குறைப்பது, தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது, ஏதாவது ஒரு கட்சியை ஆட்சி அமைக்கக் கோருவது, மாநிலத்தின் முதல்வருக்கும், தலைமை நீதிபதிக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது போன்றவை இவரது பணிகளாகும். ஆக இந்த தேவையற்ற வெட்டி வேலைகளைச் செய்வதற்கு, ஆளுநர் பதவி எனும் “தேவையற்ற ஆணி” எதற்கு என்பதைத்தான் இன்றைக்கு அனைத்து மாநில அரசுகளும், அதிலும் குறிப்பாக இப்போது நெருக்கடிகளை சந்திக்கும் மாநிலத்தை ஆள்பவர்கள் கேள்வி எழுப்பி,அந்தப் பதவியை ஒழித்துக் கட்ட வேண்டும். ‘சுதந்திரம்’ அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படி ஒரு பதவி நீடிப்பதே கேலிக்கூத்துதான் என்பதை உரத்துப் பேச வேண்டும்.

அடுத்து, ஆளுநரின் அனுமதிக்குப் பிறகுதான் எந்தவொரு மசோதாவும் சட்டமாக முடியும் என்ற நிலை உள்ளது. அவருக்கு சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் உள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை, மாநில அரசுகளைக் கலைத்த ஜனநாயகப் படுகொலை இங்கு அரங்கேறியுள்ளது.  பெருவாரியான மக்களால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கலைப்பது என்பது வாக்களித்த மக்களை மதிக்காத ஜனநாயக விரோத செயல்தானே. அதேபோல அந்த மக்களின் பிரதிநிதிகள் மூலம் சட்டமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானம் அல்லது மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் எதற்கு?

இந்த வேண்டாத வேலையைச் செய்வதற்கு, இவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பும், அதில் ஒரு சொகுசான மாளிகையும், அலுவலகம் மற்றும் ஏராளமான பணியாளர்களும் என மக்களின் வரிப்பணம் எதற்காக தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது? இவர் ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபர். இவருக்கு எதற்கு இந்த அதிகாரம்? மக்களாட்சியில், மக்களை விட மகத்தானவராக எப்படி இவரால் ஆக முடியும்?

இங்குள்ள பிரச்சினையே இரட்டை ஆட்சி முறைதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றமும், நாடாளுமன்றமும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்டவை. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, அதிகார வர்க்கத்தை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிமன்றம் போலீசு மற்றும் ராணுவம்தான். இதில் அதிகார வர்க்கம் தொடர்ச்சியாக அதிகாரத்தில் அமர்ந்து கொண்டுள்ளது. தேர்தல் முறையையே ரத்து செய்துவிட்டு, அதிகாரவர்க்க ஆட்சி அமைக்கவே பாஜக விரும்புகிறது. இன்றைக்கு உள்ள அரசியமைப்புச் சட்டம் அதற்குத் தடையாக உள்ளதால், அதை மதிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போக வைக்கும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

அடுத்து வரும் தேர்தலிலும் பாஜக எப்படியாவது தில்லுமுல்லுகள் செய்து ஆட்சியில் அமர்ந்து விட்டால், இப்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் நிராகரித்து சனாதன மனுதர்மமே நாட்டை ஆளும் சட்டமாக மாறும். இதற்கு மாற்றாக நாமும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்கவே விரும்புகிறோம். அதாவது, MLA, MP – க்களை தேர்ந்தெடுப்பதைப் போல, இந்த அதிகார வர்க்கத்தையும் மக்களே தேர்ந்தெடுத்து, தவறிழைத்தால் பதவியில் இருந்து இறக்கக்கூடிய அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

அப்படியொரு நிலை வந்தால்தான், ஆளுநர்கள் போன்ற அதிகார வர்க்கத்தின் ஜனநாயக விரோத அதிகார முறைகேடுகளை, அத்துமீறல்களை, அராஜகப் போக்குகளைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அத்தகைய அதிகாரம் தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் இல்லை. மக்களுக்கு உரிமை உள்ள அத்தகைய புதிய அரசியல் சாசனம் தேவையாக உள்ளது. அதன்மூலம்தான்,  அதிகார வர்க்கத்தின் கொட்டத்தை அடக்கி, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிட முடியும்.

இப்போதைக்கு அது சாத்தியமில்லை. எந்த தேர்தல் அரசியல் கட்சியும் அதை விரும்பவில்லை. இருந்தபோதும், ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிராகப் புகாரளிப்பதையோ,  மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என போராடுவதையோ விடுத்து, ஆளுநர் பதவியையே ஒழித்துக் கட்டுவதற்கான வேலையை, ஒன்றிய அரசை எதிர்க்கும், மாநில உரிமைகளைப் பாதுகாக்க விரும்பும் ஓட்டுக் கட்சிகள், மற்ற ஜனநாயக அமைப்புகளோடும், மக்களோடும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். “ஆளுநர் பதவியே தேவையில்லை” என்ற முழக்கம் இந்தியாவெங்கும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்.

ஆக்கம்: குரு.

1 COMMENT

  1. இதோ ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான தமிழக அரசின் மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார்.

    இன்னும் எத்தனை பேர் உயிரை காவு வாங்க போகிறதோ?

    “ஆளுநர் பதவியே தேவையில்லை” என்ற முழக்கம் இந்தியாவெங்கும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here