தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட 9 பேர், அக்டோபர் 20, 2026 அன்று அதிகாலையில் கோவையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இக்கைதை கண்டித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தப் பட்டியலில் கார்த்திகாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட திமுக கட்சியும் அடங்கும்.
கார்த்திகா பேசிய பேச்சுக்கு, கலைஞரை குறிப்பிட்டு செய்த அலப்பறைகளுக்கு “அவர் அனுபவிக்க வேண்டும்” என்று ஒதுங்கி விடாமல், அடாவடி கைது நடவடிக்கையை திமுக கண்டிக்கவே செய்துள்ளது.
திமுக, அதிமுக, பாமக மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. இப்படி விஜய் அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பது சரியானதும் கூட.
நாம், சீமான் கட்சியினரின் அக்கப்போருக்குள் நுழையப் போவதில்லை. அதை கடந்து தமிழக அரசியலின் எதார்த்தம் குறித்து பார்ப்போம்.
முளைவிடும் ‘அவநம்பிக்கை’!
பொதுவாக தமிழக அரசியலின் மீது நாட்டம் கொண்டுள்ளவர்களில் முற்போக்காகவும் ஜனநாயக ரீதியிலும் சிந்திப்பவர்கள் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளாலும், அதைத்தொடர்ந்து அணி சேர்க்கை மாறுவது, தலைவர்களின் நிலைப்பாடுகள் மாறுவதை பார்த்து அதிருப்தியில் உள்ளனர்; அல்லது, அவநம்பிக்கைக்கு உள்ளாகி உள்ளனர்.
தமிழ்நாடு முற்போக்கான மண்; பகுத்தறிவு பூமி; சுயமரியாதை போராட்டங்கள் செழித்துள்ள இனம்; இங்கு பார்ப்பனியத்தால் காலூன்ற முடியாது; மக்களை அவ்வளவு எளிதாக வட இந்தியாவைப் போல் முட்டாளாக்கி வைக்க முடியாது என்றெல்லாம் கருதி இருந்தவர்கள் தற்போது தமிழக அரசியல் களத்தை பார்த்து கலக்கத்திற்கும், அவநம்பிக்கைக்கும் உள்ளாகி விட்டனர்.
திருவாளர் வைகோ அவர்கள், திடீரென ஞானோதயம் வந்து பிதற்ற ஆரம்பித்துள்ளார். எஸ் ஐ ஆர் குளறுபடிகளுக்கு அன்று ஆட்சி பொறுப்பிலிருந்த திமுக தான் முழு பொறுப்பு என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
வாங்கிய காசுக்கு மேல் கூவுவது வைகோவுக்கு வாடிக்கையான ஒன்றுதான். வாஜ்பாயின் ஆட்சியில் குஜராத் கலவரம் நடந்த பொழுது நரேந்திர மோடிக்கு வக்காலத்து வாங்கியதும் இதே வாய்தான். தடா சட்டத்தைப் போன்று கொண்டுவரப்பட்ட பொடோ சட்டத்தை கூச்சநாச்சம் இல்லாமல் ஆதரித்ததும் இதே வாய்தான். பின்னர் அதே சட்டத்தால் தூக்கி சிறைக்குள் வைக்கப்பட்ட போது கதறியதும் கூட இதே வாய்தான்.
படிக்க: திணிக்கப்பட்ட இடைத்தேர்தலும் CPI, CPI(M) கட்சிகளின் விசித்திர முடிவும்!
இவர்களின் நிலைப்பாடு, மாற்றங்களை பார்த்தால் பச்சோந்திகள் என்று கூட சொல்லக்கூடாது. ஏனென்றால், அந்த உயிரினம் ஒரு தேவைக்காக – தன் உயிரை தக்கவைத்துக் கொள்ளும் தேவைக்காக நிறத்தை மாற்றுகிறது. இவர்களை பச்சோந்தியுடன் ஒப்பிடுவது பச்சோந்திகளுக்கு செய்யும் அவமானமாகும்.
யு டர்ன் எடுக்கும் தலைவர்கள்!
பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இருந்தது அன்புமணி ராமதாஸின் பாமக. தற்பொழுது அவர்கள் விஜயின் தவெக்கா பக்கம் காய்களை நகர்த்துகிறார்கள். இது தவெக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், திருமாவளவனுக்கும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் வன்னிய ஆதிக்க சாதி வெறியரான அன்புமணியையோ, பாட்டாளி மக்கள் கட்சியையோ புறக்கணிப்பதற்கு விஜயின் தவெக- விடம் எவ்வித கொள்கை நிலைப்பாடுகளும் கிடையாது. எனவே தாராளமாக பாமக-வை கட்டி அரவணைத்துக் கொள்ளும்.
அப்படி பாமக கூட்டணிக்குள் வந்துவிட்டால் ஒரே கூட்டணியில், ஒரே மேடையில் பாமக உடன் கைகோர்த்து நிற்பது எப்படி என்று வன்னியரசும் திருமாவும் கலங்குகின்றனர்.
இத்தகைய ஊசலாட்டங்களால் தலைவர் தொல் திருமாவளவனின் பேச்சுக்கள் முன்னுக்குப் பின் முரண்பட்டவை யாக வந்து அரசியல் களத்தில் பரிகசிக்க தக்கதாக மாறி விட்டுள்ளன.
படிக்க: இந்திய நாட்டைக் கெடுக்கும் பாஜகவும் – தமிழ்நாட்டைக் கெடுக்கும் தவெகவும்!
தவெக மீது விஜயின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முந்தி கொண்டு வந்து பதில் சொல்லும், நியாயப்படுத்தும் திருப்பணிகளில் கூட்டணி கட்சி அமைச்சர்கள் இறங்கிவிட்டனர். இதில் வன்னியரசும் விதிவிலக்கு அல்ல.
அப்படி விசுவாசமாக முட்டுக் கொடுத்த போதும் அந்த கூட்டணியில், அந்த அரசாங்கத்தில் தமக்குரிய மதிப்பு என்பது உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது என்பதுதான் தற்போதைய பிரச்சனை. எனவே அன்புமணியின் அசைவுகளை கவனித்து எச்சரிக்கை அடைந்து தற்போது தவெக -வை மேலோட்டமாக விமர்சிக்கும் அளவிற்கு மாற்றத்தை காட்டி வருகின்றனர்.
உதாரணத்திற்கு கரூர் சம்பவத்தில், ஆரம்பத்தில் விஜய்யை கைது செய்யக் கோருவது அர்த்தமற்றது என்று கூறிய திருமாவளவன், பின்னர் விஜய் மீது ஏன் வழக்குப் பதியவில்லை என தி.மு.க அரசைக் கேள்வி எழுப்பினார்.
தற்போது கூட்டணி மாறிய பிறகு, “நானே அன்றைய முதலமைச்சரிடம் விஜய் மீது வழக்குப் பதியச் சொன்னேன், தி.மு.க தான் மெத்தனமாக இருந்தது” என்று தேர்தல் அரசியலுக்கு ஏற்ப அவர் தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
படிக்க: தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்
இப்படி தனது நிலைப்பாடுகளில் யுடர்ன் போட்டு, நியாயப்படுத்துவதாக திருமா தடுமாறி நிற்கிறார். அவர் தமிழகத்தில் முன்னெடுத்த சனாதன எதிர்ப்பு, பாசிச அபாயம் என்பதெல்லாம் தற்போது காற்றில் கரைந்த கற்பூரமாகி விட்டது.
விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தந்த கம்யூனிஸ்டுகள் அவரின் அரசாங்கத்தில் பங்கெடுக்காமல் எதிர்த்து களம் ஆடி வருகின்றனர். எஸ் ஐ ஆர் திருத்தம் குறித்தும், ஞானேஸ் குமாரை பதவியிலிருந்து நீக்க கோரியும் நடந்து வரும் போராட்டங்களில் ஊக்கமாக வினையாற்றுவதையும் செய்கின்றனர்.
பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று தவெக -வை ஆதரித்தார்கள். ஆனால் பாஜக கூட்டணியானது தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலுக்கு வராமலேயே அவர்களின் அனைத்து திட்டங்களும் தடை இன்றி அமலாவதை பார்த்து மனம் வெதும்புகின்றனர்.
ஒதுங்கி நிற்கும் திமுக!
தற்போது தேர்தல் கிடையாது என்பதால் திமுக பெரிதாக அரசியல் இயக்கங்களையும் போராட்டங்களையும் நடத்த ஆர்வம் காட்டவில்லை. பாஜக எதிர்ப்பிலும் கூட எஸ் ஐ ஆர் ஐ திணித்த தலைமை தேர்தல் ஆணையரை பதவி விலக நிர்பந்திக்கும் போராட்டத்திலும் கூட பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தரும் அலப்பறைகளுக்கு பதிலடி தருவது என்று உதயநிதி தலைமையில் செயல்பட்டு, அரசியல் விவாதங்களையே மலினமாக்கியும் வருகின்றனர்.
படிக்க: பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும்!
தமிழக அரசியல் களமானது திட்டமிட்டு திமுக X தவெக என்பதாக மடை மாற்றப்பட்டு விட்டது. மோடி பெரிய எதிர்ப்பே இல்லாமல் தமிழ்நாட்டிற்கு வந்து, மெட்ரோ ரயிலையும் தொடங்கி வைத்து பயணித்துச் சென்றுள்ளார்.
இப்படி தமிழக அரசியலில் கணிக்க முடியாத படி தற்குறிகளின் ஆட்சி நடப்பதும், அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கையும், அவர்களின் நிலைப்பாடுகள் தலைகீழாக மாறுவதையும் பார்த்து அவநம்பிக்கை கொள்வதற்கு எதுவும் இல்லை.
ஏனெனில் அரசியல் கட்சிகள் தாங்கள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகளோ, அந்த வர்க்கத்தின் நலனுக்காகவே செயல்படுகின்றனர். தமது இருத்தலை தக்க வைப்பதற்காக தேவையான நிலைப்பாடுகளையும் எடுக்கின்றனர்.
பாஜகவையோ பாஜகவின் கைப்பாவையாக உருவெடுத்துள்ள விஜயின் த வெ கவையோ வீழ்த்த வேண்டும் என்றால் அதற்குத் தேவைப்படுவது ஒரு ஐக்கிய முன்னணி அதை நோக்கிய பயணத்தை கம்யூனிஸ்டுகள் தொடங்கியாக வேண்டும். இதுதான் தமிழக அரசியலில் தற்போதைய நிலையைப் பார்த்து மனம் வெம்பியும், அல்லது அவநம்பிக்கை கொண்டும் இருக்கும் ஜனநாயக சக்திகளை மீண்டும் செயல்பாட்டிற்கு அழைத்து வரும்.
இளமாறன்






