உலகெங்கும் அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் முதலாளித்துவ அமைப்பு முறையானது, நுகர்வு வெறியை பல்வேறு வகைகளில் ஊட்டி வளர்க்கிறது. அழகு சாதனப் பொருட்கள், விதவிதமான ஆடைகள் போன்றவற்றை விற்பனை செய்வதற்காகவே பெண்களின் இயல்பான உடலமைப்பு மற்றும் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையை விளம்பரங்கள் மூலம் முதலாளித்துவம் உருவாக்குகிறது. 

“நீங்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் இந்தப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்” என்ற வகையில் நுகர்வு கலாச்சாரம் பரப்பப்படுகிறது. ஆண்களுக்கான விளம்பரங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் பெண்களின் உடலும், உணர்வுகளும் ஒரு விற்பனைப் பண்டமாக (Commodity) காட்சிப்படுத்தப் படுகின்றன. அனைத்து விளம்பரங்களிலும் பெண்களின் பிம்பமே பயன்படுத்தப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவது ஏன்? 

மனிதர்கள் அனைவருக்குமே தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருப்பது இயல்புதான். குறிப்பாக பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பல்வேறு ஊடகங்களின் விளம்பரங்கள் வழியே வலிந்து உருவாக்கப் படுகிறது. எனவே

சிகப்பு / வெள்ளை நிறத்தின் மீதான மோகம் மென்மேலும் அதிகரித்து வருகிறது.  இதற்கு மனித உளவியல், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் போன்றவை முக்கிய காரணங்களாகின்றன. 

தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் போது மனதில் ஒருவித தன்னம்பிக்கையும், மன நிறைவும் ஏற்படுவது உண்மைதான். மேலும் புதிதாக ஒரு பொருளை வாங்கும் போது மூளையில் சுரக்கும் டோபமைன் என்ற வேதிப்பொருள் மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே நமது மனம் அது போன்ற பொருட்களை மீண்டும் மீண்டும் வாங்கத் தூண்டுகிறது. மேலும் வயதான தோற்றம் ஏற்படுமோ என்ற பயமும், தோலில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை குறைபாடாக கருதும் மனநிலையும் இப்பொருட்களை தொடர்ந்து சார்ந்து இருக்க வைக்கிறது. 

படிக்க: எது அழகு என்று புரியாமல்  பலியாகும் நடுத்தர வர்க்க- மேட்டுக்குடி பெண்கள்!

சந்தைப்படுத்தலுக்கான தொடர் விளம்பரங்களும், அப்பொருட்களின் மீதான ஆசையைத் தூண்டுகின்றன. எனவே தான் அழகு சாதனப் பொருட்களின் சந்தையும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக  ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய சூழலில், தரமற்ற பொருட்களும் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. வெள்ளையாக காட்சி தருவதே அழகு, கருப்பாக இருப்பது அசிங்கமானது என்ற கருத்துரு வணிக நோக்கில் வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது. 

உடல் நலனை பாதிக்கும் நச்சு உலோகங்கள்!

உடனடியாக கருப்புத் தோலை வெள்ளையாக மாற்றுவதாக கூறப்படும் கிரீம்கள் மற்றும் பல அழகு சாதனப் பொருட்கள் தோலில் பல்வேறு அலர்ஜி, சருமப் பிரச்சனைகள் மற்றும் தோல் புற்று நோய்களையும் கூட உருவாக்குகின்றன. இத்தகைய அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் அளவுக்கதிகமான வேதிப்பொருட்கள் மற்றும் உலோகங்கள் தோல் வழியே ஊடுருவி ரத்தத்தில் கலந்து பல்வேறு உடல் நல பாதிப்புகளை உருவாக்குகின்றன.

ஆர்சனிக், பாதரசம், ஈயம், அலுமினியம், துத்தநாகம் குரோமியம் போன்ற உலோகங்கள் அழகு சாதனப் பொருட்களான வெண்மையாக்கும் கிரீம்கள், உதட்டுச் சாயம், நகச்சாயம், கண் மை, முடிக்கு பூசும் சாயங்கள், சூரிய ஒளி தடுப்பான்கள் (Sunsreen) போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரத்தத்தில் கலக்கும் போது நரம்பியல் பாதிப்புகள், ஹார்மோன் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைத்தல் போன்ற கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய உலோக நச்சுக்கள் சருமம் வழியே உறிஞ்சப்பட்டு, நீண்டகாலப் பயன்பாட்டில் நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரக மண்டலங்களை பாதிக்கின்றன.

படிக்க: உலக அழகிகளும்,உள்ளூர் அழகு பொருட்கள் சந்தையும்!

இத்தகைய கொடிய விளைவுகளுக்கான சமீபத்திய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு தீவிரமான சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. இதற்கான காரணத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது அதிர்ந்து விட்டனர். சமூக ஊடகங்களில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அந்தப் பெண் வாங்கி உபயோகித்த சருமத்தை வெள்ளையாக்கும் கிரீமின் விளைவால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனையில் அந்த கிரீமில் 1.25 % பாதரசம் இருந்தது கண்டறியப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவு அதிகபட்சம் 0.007 % மட்டுமே.

இது போன்ற கன உலோகங்கள் சருமத்தை மென்மையாக்கவும், வெண்மையாக்கவும் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களில் வரையறுக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.  பெண்கள் மத்தியில், குறிப்பாக வளரிளம் பெண்கள் மத்தியில் இது போன்ற ஆபத்தான அழகு ஏற்படுத்தும் (?) கிரீம்கள் குறித்த தீவிரமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது என்கிறார் மாநில மருந்து கட்டுப்பாட்டு நிபுணரான சுஜித் குமார்.

 “அழகு சாதனப் பொருட்கள் விற்பனையாகும் கடைகளில் இருந்து அதிக அளவிலான பாதரசம் கலந்த பொருட்களை கைப்பற்றியிருக்கிறோம். ஆனால் ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களை பரிசோதிக்கவோ, கண்காணிக்கவோ எந்த வழியும் இல்லாமல் உள்ளது” என்கிறார்கள் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள். இந்திய தோல் மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஃபைசல், இன்றைய காலகட்டத்தில் கன உலோகங்கள் கலந்த ஸ்டீராய்டு கிரீம்களை முகங்களில் பூசுவது அதிகரித்து வருகிறது. அவை கண்டிப்பாக சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார். 

படிக்க: உழைக்கும் மகளிர் தினம்: பெண்கள் மீதான சுரண்டலுக்கு முடிவுக் கட்டுவோம்!

முகம் மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கம், சிறுநீரில் நுரை வருவது போன்றவை சிறுநீரகப் பிரச்சனைக்கான ஆரம்ப அறிகுறிகளாகும் என்கின்றனர் மருத்துவர்கள். நச்சுத்தன்மையுள்ள அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து விற்பதில் முதலாளிகளுக்கு எந்த தயக்கமும் இல்லை‌. அந்த அபாயத்தில் இருந்து மக்களைக் காப்பது குறித்து அரசாங்கத்துக்கும் எவ்வித அக்கறையும் இருப்பதில்லை. இத்தகைய பொருட்களை உரிய முறையில் பரிசோதித்து கண்காணிக்கும் கடமையைச் செய்வதில்லை. இத்தகைய நிறுவனங்களுக்கு அம்பலப்படுத்துவதும், தண்டனைகள் பெற்றுத் தருவதும் நம் கையில் தான் உள்ளது.

மேலும், நாம்தான் நம் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் இயற்கையான பொலிவைத் தரும் மற்றும் உடல் நலனையும் பேணிப் பாதுகாக்கும். அதேபோல போதுமான அளவு நீர் அருந்துவதும், 7 – 8 மணி நேரத் தூக்கமும் உடலில் உள்ள நச்சுக்களை உரிய முறையில் வெளியேற்றி உடல் புத்துணர்ச்சி அடைய உதவும். 

இது மட்டுமல்லாமல் தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால், அதன் பலனாக இயற்கையான அழகு தானாகவே வெளிப்படும். செயற்கை அழகு ஆபத்தையே விளைவிக்கும்!

குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here