வரும் நவம்பர் 30 அன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் பாசிச பாஜக தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு தோல்வியடைந்திருந்த இந்த மசோதாவை சில பட்டி-டிங்கரிங் செய்து மீண்டும் தாக்கல் செய்யவிருக்கிறது. இந்த மசோதாவைத்தான் தற்போது திமுக ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அதற்கு விளக்கமாக தாங்கள் கேட்டிருந்த கோரிக்கைகளை பாஜக ஏற்றுக்கொண்டதாகவும். இந்த மசோதா மீண்டும் தோற்கடிக்கப்பட்டால் எதிர்வரும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் சீரமைக்கப்படும் என்றும் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு குறைவான தொகுதிகள் கிடைக்கும், அப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்வதற்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புத் தேவைப்படாது. அரசியல் சாசனத்தை திருத்துவதன்மூலம் பாஜக செய்துவிடமுடியும் ஆகையால் எதிர்வரும் பேராபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றவே தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் என்று விளக்கம் கொடுத்துள்ளது.

எல்லா மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக  தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளை பாரபட்சம் இல்லாமல் 50% உயர்த்துவதாக  பாஜக உறுதியளித்துள்ளதாகவும் இதனால் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 20 மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும் என்றும், தமிழ்நாட்டிற்கு இது ஒரு குறைந்தபட்ச நன்மை என்று பாஜகவின் Delimitation என்ற நரகலில் Fair Delimitation என்ற ஒரு நல்லரிசியைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறது திமுக. இதற்கு சப்பைக்கட்டாக அவர்கள் Fair Delimitation என்றுதான் தொடக்கத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுடன் கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள்தான் மாற்றிப் பேசுகிறார்கள் என்று கூறுகிறது. அது உண்மை தான் என்றாலும் தொகுதிகளை மறு வரையறை செய்யும்போது பாஜக பல மோசடிகளை செய்யக்கூடும் என்று அறிந்தும் இந்த  நிலைப்பாட்டை எடுப்பது இந்திய மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

இதே திமுக ஆட்சியில் இருந்தபோது அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய – மாநில உறவுகள் பற்றிய  குழுவை அமைத்தது.

  1. தென் மாநிலங்களுக்கும் வடமாநிலங்களுக்கும் இடையே மக்கள்தொகை பெருக்கம் சமமற்று இருப்பதால் அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றமின்றி உறையச் செய்ய வேண்டும்.2. தொகுதி மறுவரையறை ஆணையத்தை நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் கண்காணிக்கக் கூடிய சட்டத் திருத்தங்கள் வேண்டும். இப்போதுள்ள தேர்தல் ஆணையம் போலவே பாஜக அமைக்கக் கூடிய தொகுதி மறுவரையறை ஆணையமும் இந்துத்துவ ஆட்சியாளர்களுக்கு சேவை செய்வதாகவே இருக்கும்.3. மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிநிகரான பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால்தான் அது நியாயமான தொகுதி மறுவரையறையாக இருக்கும் என்று அக்குழு அளித்திருந்த பரிந்துரைகளைப் புறக்கணித்து அந்த கமிஷனையே தற்போது கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

    திமுக சொல்வதுபோல அப்படியே மறுவரையறை அவகாசம் 2026 ஆண்டுடன் முடிந்தபின்னர், மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யலாம் என்கிற அருமையான வாய்ப்பிருக்கும்போது, பாஜக இறங்கி வந்து 50% எல்லா மாநிலங்களுக்கு சீட்டை உயர்த்துவோம் என சலுகை தருவது ஏன் என்பதும், நாடாளுமன்ற தொகுதிகளை தற்போது அவசரம் அவசரமாக அதிகரிப்பதன் நோக்கம் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்துவது, நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதிகளை காஷ்மீரிலும், அஸ்ஸாமிலும் செய்ததுபோல தங்களது வெற்றிக்கேற்ப மாற்றியமைத்து தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் தங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்திக்கொள்வதும், ஒன்றியம் உட்பட எல்லா மாநிலங்களிலும் ஆட்சியில் நீடித்திருப்பதும், அதன்மூலம் தங்களின் இலட்சியமான இந்தியாவில் “இந்து ராஷ்டிராவை” அமைப்பதும் தான் இந்த Fair Delimitation-க்குப் பின்னாலுள்ள நோக்கம் என்பதெல்லாம் திமுக தலைமைக்குத் தெரியாமல் இல்லை. இருந்தபோதும் தற்போது ஏன் இந்த முடிவெடுத்துள்ளது என்பதற்கு சந்தர்ப்பவாதம் என்பதைத்தவிர வேறென்ன இருக்க முடியும்?

திராவிட அரசாங்கங்களால் போற்றி வளர்க்கப்பட்ட கவர்ச்சிபோதையால் கட்டுண்ட மக்கள் நேற்று முளைத்த நடிகரின் கட்சிக்கு ஓட்டுபோட்டதால் ஏற்பட்ட தோல்வி, எவ்வளவு செய்தாலும் இந்த மக்கள் நம்மை தோற்கடிக்கிறார்கள் என்ற விரக்தி, நம்மைவிட்டால் தமிழ்நாட்டை யார் காப்பாற்ற முடியும் என்ற மமதை, இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு பாஜக கொடுக்கும் நெருக்கடி, பல ஆண்டுகளாக ஆண்ட கட்சியாக இருந்துவிட்டு தற்போது 1970-கள் போல் கீழே இறங்கிவந்து மக்களை அல்லது குறைந்த பட்சம் தனது கோடிக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி போராட்டத்தைக் கட்டியமைக்கும் திராணி இல்லாமை ஆகியவை சேர்ந்து தங்களை விட்டு ஓடிப்போன காங்கிரசையும் மற்ற கட்சிகளையும், தங்களுக்கு ஓட்டுப்போடாத மக்களையும் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு பாஜாக-வின் சதிவேலைக்குத் துணைபோகும் துரோகத்தை செய்து “Fair Delimitation” என்ற குழியில் தன்னைத்தானே புதைக்கத் தாயாராகிறது திமுக.

ஏற்கனவே கலைஞர் 2002-ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணியமைத்து “Right Person in the Wrong Party” என்று வாஜ்பாயிக்கு முட்டுக்கொடுத்து ஒரு வரலாற்று தவறிழைத்தாரோ அதே பாதையில் அவரது மகனான மு.க. ஸ்டாலினும் தற்போது “Fair Delimitation” என்று மற்றுமொரு வரலாற்றுத் தவறிழைக்கிறார். அதை ஒருபோதும் தமிழ்நாடு மன்னிக்காது. ஏனென்றால் துரோகிகளை மன்னிக்கும் வரலாறு மக்களுக்கு இல்லை.

– ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here