மரணங்களுக்குப் பிந்தைய மதிப்பீடுகளும் புரட்சிகர அரசியலின் நேர்மையும்!
முன்னாள் மகஇக தோழர் காளி மரணம் உணர்த்தும் பாடம்!
மனிதர்களின் மறைவுக்குப் பின் அவர்களை மதிப்பிடும் விவகாரத்தில் நமது சமூகத்தில் இரண்டு விதமான முரண்பாடான போக்குகள் நிலவுகின்றன.
ஒன்று, மரணமடைந்தவர்கள் எத்தகைய பின்னணியைக் கொண்டிருந்தாலும், அவர்களின் எதிர்மறைப் பக்கங்களை மறந்துவிட்டு வெறும் ‘ஞான தர்மங்களை’ அல்லது நேர்மறை பிம்பங்களை மட்டுமே கட்டமைக்கும் மரபு. (எ.கா: சுரண்டும் பண்ணையார்களின் நல்லவர் பிம்பம், ஊழல்வாதிகளின் சமூகப் பணிகள் அல்லது ரவுடிகளின் பராக்கிரமங்கள், திரைத் துறையினர் மீதான பிம்பம் போன்றவை). முன்னிறுத்தப்பட்டு இறப்புக்குப் பின் அவர்களை விமர்சிக்கவே கூடாது என்ற புனிதப்படுத்தும் கண்ணோட்டம்.
அதேசமயம், ஹிட்லர் அல்லது முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் விஷயத்தில் அவர்களின் எதிர்மறை அம்சங்கள் மட்டும் பிரதானமாகப் பேசப்படுவதும் நடக்கிறது. அவர்களின் சொந்த வாழ்க்கைக்கும், அவர்கள் முன்னிறுத்திய அரசியலுக்கும் உள்ள உறவை முழுமைப்படுத்தி பரிசீலிப்பதற்குப் பதிலாக ஒற்றைத் தன்மையுடன் பரிசீலிப்பது என்ற அனைத்தையும் நிராகரிக்கும் அராஜக கண்ணோட்டம்.
இதில் இயக்கவியல் அணுகுமுறை என்ன? ஒவ்வொரு பொருளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் எதிரெதிரான பல்வேறு அம்சங்கள் அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. அந்த அம்சங்களில் எந்த அம்சம் பிற அனைத்தையும் கட்டுப்படுத்தி முன்னிலை வகிக்கின்றதோ அந்த குணாம்சம்தான் அவருடைய சாராம்சம் அல்லது அந்தப் பொருளுடைய சாராம்சம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கண்ணோட்டத்திலிருந்து இறந்தவர்களை மதிப்பீடு செய்வதுதான் சரியான இயக்கவியல் பொருள் முதல்வாத அணுகுமுறையாகும்.
இத்தகைய அணுகுமுறையிலிருந்து, உண்மையான முற்போக்கு மற்றும் புரட்சிகர முகாம்களில் செயல்பட்டவர்களின் மரணத்தை அணுகும்போது வெறும் பாசாங்குத் தனமான புகழுரைகளுடன் நிறுத்திக் கொள்வது சரியான அணுகுமுறை இல்லை. அதற்கும் அப்பால், அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைச் சம அளவில் பரிசீலிக்கும் நேர்மை இருக்க வேண்டும்.
தனிநபர் வாழ்க்கையும், அமைப்பு ரீதியான அர்ப்பணிப்பும்
புரட்சிகர இயக்கங்களில் ஒரு காலத்தில் பங்கெடுத்துவிட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் விலகிச் சென்று சாதாரண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர்களை எப்படி மதிப்பிடுவது என்பது இங்கு ஒரு முக்கியமான கேள்வியாக எழுகிறது.
சிலர் தங்களின் இளமைக் காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) போன்ற நக்சல்பாரி அரசியலை முன்னெடுத்துச் செல்லும் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து, எழுச்சிகரமான பாடல்கள் மூலமாகவும் கலைப் பணிகளாலும் இயக்கத்திற்கு ஊக்கமளித்திருக்கலாம். அந்தச் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பும், போராட்டக் களத்தில் அவர்கள் ஊட்டிய உணர்வும் எப்போதும் நினைவு கூரத்தக்கவையே. அதை எவரும் மறுக்க முடியாது.
ஆனால், ஒரு நபர் அமைப்பிலிருந்து விலகி, பல தசாப்தங்களாகத் தங்களது சொந்த குடும்ப வாழ்க்கை, வேலை, வசதிகள் என்று தனிப்பட்ட பாதையில் பயணித்துவிட்டு எந்த அமைப்பிலும் செயல்படாமல் சொந்த வாழ்க்கையை பிரதானமாகப் பார்த்து வாழ்ந்து விட்டு இறந்து போகிறவர்கள் பற்றி மதிப்பிடும்போது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் அல்லது மறைவுக்குப் பின் மீண்டும் புரட்சிகர அடையாளத்தோடு மட்டுமே பார்க்கப்படுவதில் சில நடைமுறை முரண்பாடுகள் உள்ளன.
புரட்சியின் பெயரிலான கட்டுக்கதை பிம்பங்கள்
வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்தில் நின்று, அடக்குமுறைகளைச் சந்தித்து, வேலை இழந்து, வறுமையிலும் தங்களின் கொள்கைக்காக உறுதியாக நின்ற எத்தனையோ உண்மையான தோழர்கள் இருக்கிறார்கள்.
கடந்த 35 ஆண்டுகளில் மகஇக போன்ற அமைப்புகள் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்து, தியாகங்களைச் செய்துள்ளன. இத்தகையப் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து பல்வேறு அடக்குமுறைகளையும் வழக்குகளையும் சந்தித்தத் தோழர்கள் எண்ணற்றோர் உண்டு.
இந்தச் சூழலில், வாழ்க்கையின் பெரும்பகுதியை அமைப்புப் பணிகளோடு தொடர்பில்லாமல் வாழ்ந்துவிட்ட ஒருவரை, வெறும் ஆரம்பகால கலைப் பங்களிப்புக்காக மட்டும் எல்லையற்ற புரட்சியாளராகவும், லட்சியத்தை ஏந்தியவராகவும் சித்திரிக்க முற்படுவது களத்தில் நின்று உழைக்கும் உண்மையான தோழர்களை அவமானப்படுத்துவதாகும்.
இதற்கும் மேலே சென்று எந்த ஒரு முற்போக்கு புரட்சிகர அமைப்பிலும் சேர்ந்து செயல்படாமல் நடைமுறை வேலைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, சொந்த வாழ்க்கையில் நாட்டம் செலுத்தியவர்களை நக்சல்பாரி புரட்சியாளர் என்று அடைமொழியுடன் இறுதிச் சடங்குகளையும் அஞ்சலியையும் செலுத்தும் போது நக்சல்பாரி அரசியல் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. நாடாளுமன்ற சரணடைவுப் பாதை மற்றும் ஆயுதம் தாங்கிய சாகச வழிமுறை ஆகிய இரண்டையும் நிராகரித்து மக்கள் திரள் வழி என்ற அறிவியல் நடைமுறையில் செயல்படும்போது போலியான புகழ்ச்சிகள், பாசாங்குத்தனம் எதுவும் இல்லாமல் இயக்கவியல் அணுகு முறையில் வாழ்க்கையைப் பற்றி மதிப்பீடு செய்து அவர்களை அணுகுவதுதான் சரியான மார்க்சிய லெனினிய சிந்தனையாகும்.
தேவை சமரசமற்ற வர்க்க பார்வை
ஒரு மனிதனின் மரணம் எப்போதுமே ‘எமோஷனலான’ தருணம்தான். அதற்காக, தனிப்பட்ட வாழ்க்கையின் சறுக்கல்களையும், அமைப்பை விட்டு விலகிய நீண்ட கால இடைவெளியையும் மூடி மறைத்துவிட்டு, ஒரு மாயையான புரட்சிகரப் பிம்பத்தைக் கட்டமைப்பது எந்த வகையிலும் ஆரோக்கியமான அரசியல் பார்வை அல்ல.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர் ஆற்றிய கலைப் பங்களிப்பை மனதாரப் பாராட்டலாம்; அந்தத் தருணத்துக்காக அவரை நினைவு கூரலாம்.
அதேசமயம், அவரைப் புரட்சிக்கு ஒரு முன்னுதாரணமாகவோ அல்லது லட்சியத்தை முழுமையாக நிறைவேற்றியவராகவோ சித்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மரணங்களுக்குப் பிந்தைய மதிப்பீடுகள் என்பவை உணர்ச்சிவசப்பட்ட புகழுரைகளாக இல்லாமல், யதார்த்தமான, வரலாற்றுப் பூர்வமான மற்றும் நேர்மையான சுய பரிசீலனை அடங்கிய மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்துடன் இருக்க வேண்டும் என்பதே இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடமாகும்.
நன்றி:
தமிழ்மணி
21-10-2026
(புகைப்படம்: 1986 ஆம் ஆண்டு)






