லகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற மறுகாலனியாதிக்க கொள்கைகளால் இலங்கையின் பொருளாதாரம் திவாலாகிப்போனது. இதனால் வாழ்விழந்த மக்கள் வெகுண்டெழுந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்திய போராட்டத்தின் மூலம் அப்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்சே சகோதரர்களை நாட்டைவிட்டே விரட்டியடித்தனர். அதன் பின்னர் “பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன்” என்று சவடால்விட்டு பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே எந்த ஒரு மாற்று பொருளாதாரத் திட்டத்தையும் முன்வைக்காமல் அதே பாதையில் போனதால் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் முட்டுச்சந்தில் நின்றுவிட்டது. அதனால், இதுநாள்வரை கடன் கொடுத்துக் கொண்டிருந்த சீனா உள்ளிட்ட நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு நிர்ப்பந்தம் கொடுக்கத் தொடங்கின.

ஏற்கனவே நாள்தோறும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வுடன் இரட்டிப்பாகியுள்ள வருமானவரி மற்றும் 65 சதவீதம் அதிகரித்துள்ள மின்கட்டணத்தால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்நிலைமைகளை சமாளிக்க முடியாமல், இலங்கை அரசு உலக நாணய நிதியத்திடம் (IMF) 290 கோடி (2.9 பில்லியன்) அளவுக்குக் கடன் கேட்டுக் கையேந்தி நிற்கிறது.

உள்ளூர் ஈட்டிக்காரனாவது கடன் கொடுத்தால் வட்டியுடன் சரியாக திரும்ப வந்தால்போதும் என்று நினைத்துதான் கடன் கொடுப்பான். ஆனால் உலகமகா ஈட்டிக்காரனான உலக நாணய நிதியம் கடன் கொடுக்க ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது. அவற்றுள் குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, மக்களுக்கான அரசின் செலவினங்களைக் குறைப்பது, இராணுவத்துக்கான செலவினங்களைக் குறைப்பது போன்ற “சிக்கன நடவடிக்கைகளை” மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

இதன்படி ஏறக்குறைய 15 இலட்சமாக உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு மீண்டும் ஊழியர்களை நியமிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட 20,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலும், ஓய்வுபெரும் வயதை 65-லிருந்து 60-ஆகக் குறைத்தும் உத்தரவு போட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்: இலங்கை: தேவை புரட்சிகர கட்சி – ஐக்கிய முன்னணி – படை எனும் மந்திர ஆயுதங்கள்!

மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதமாக உள்ள இராணுவ செலவினங்களையும் சுருக்கவேண்டும் என IMF வலியுறுத்தியுள்ளது. இதனால் தற்போது பணியிலுள்ள சுமார் 16 ஆயிரம் ராணுவத்தினரை பணியிலிருந்து விடுவிக்கும் திட்டத்தில் இலங்கை அரசு உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இளைஞர்களுக்கும், ஏழை கிராமப்புற இளைஞர்களுக்கும் பிழைப்பதற்கான ஒரே வழியாக இருந்த இராணுவப் பணியும் தற்போது இல்லை என்று ஆகியுள்ளது. இது மேலும் பல நெருக்கடிகளை இலங்கை சிவில் சமுதாயத்தில் கொண்டுவரவுள்ளது. ‘இலங்கையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், போதை மருந்து கடத்தல் என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும், ரவுடி கும்பல் தலைவர்களாகவும் முன்னாள் ராணுவத்தினர் இருக்கிறார்கள்’ என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்நிலையில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும், இராணுவத்திலிருந்து விரட்டப்படும் இளைஞர்களாலும் இலங்கையின் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தின் காரணமாக அடிக்கடி இயற்கை பேரழிவு ஆகும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இத்தகைய இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இராணுவத்தின் அளவை சுருக்கும் அரசின் முடிவு இயற்கை சீற்ற காலங்களில் மக்களுக்கு பெரும் பாதிப்புகளை கொண்டுவரப்போகிறது. மேலும் ஈழ தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்க தேவைப்பட்ட இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் போர் முடிந்த இந்த தருவாயில் இலங்கை அரசுக்கும், IMFக்கும் தேவையற்ற செலவாக மாறிவிட்டார்கள்

கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடவும், உலக நிதியாதிக்க கும்பலின் நச்சு வலையிலிருந்து இலங்கை மக்கள் வெளியேறவும், ஒரே வழி! நாட்டின் இந்த நிலைக்குக்காரணம் நபர்கள் மட்டுமல்ல அவர்கள் சேவை செய்யும் மறுகாலனியாக்க கொள்கைகளே! என்பதை புரிந்து கொண்டு, ஒரு புரட்சிகர தலைமையின் கீழ் அணிதிரண்டு புரட்சியை நடத்துவதேயாகும்.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here