பத்திரிக்கைச் செய்தி.

ஆளுநர் ரவியே தமிழகத்திலிருந்து வெளியேறு!

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநிலங்களுக்கு அவசியமற்ற ஆளுநர் பதவியை நீக்கு!


மிழகத்தின் ஆளுநராக ஆர் என் ரவி பதவி ஏற்றுக்கொண்டது முதல் மாநிலங்களின் உரிமையை காலில் போட்டு மிதிக்கின்ற வகையிலும், தனது அரசியல் சார்பான ஆர்எஸ்எஸ் இன் சித்தாந்தங்களை தனது பதவியை பயன்படுத்தி புகுத்துவதிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மரபுகள் மற்றும் தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்பதை தமிழ்நாட்டின் மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள்.

9.1.2023 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி நடந்து கொண்ட விதம் மக்களால் எந்த வகையிலும் தேர்ந்தெடுக்கப்படாத, அதிகார வர்க்கத்தை சேர்ந்த ஒருவரின் அராஜக செயல்பாடுகளின் உச்சகட்ட நடவடிக்கையாகும்.

குறிப்பாக, சட்டமன்றத்தில் அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை முறையாக படிக்காமல் தனக்கும், தனது அரசியல் சித்தாந்தத்திற்கும் பிடிக்காத பெண்ணுரிமை, சமூக நீதி, சமத்துவம், பல்லுயிர் ஓம்புதல், சுயமரியாதை, மத நல்லிணக்கம், அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி, திராவிட மாடல் போன்ற தமிழ்நாட்டில் நீண்ட காலமாக போராடிப் பெற்ற உரிமைகளின் அடிப்படையிலானசொற்களையும், தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் மதிக்கின்ற தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றவர்களின் பெயரையும், இவை போன்ற அம்சங்களை முன்வைக்கும் வகையில் அறிக்கையின் பாரா 65 ஐ முற்றாக நிராகரிக்கின்ற வகையில், தமிழ்நாடு என்று உச்சரிக்கவும், மேற்கண்ட சொற்கள், தலைவர்கள் பெயர்களை படிக்க மறுத்திருப்பதும் ஆளுநர் ரவி முழுக்க முழுக்க RSS கூலிப்படையாக செயல்படுகிறார் என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சமூக விரோத சக்தி என்பதையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆளுநர் என்ற அரசு அதிகாரப் பதவியைப் பயன்படுத்திக் கொண்டு பல்கலைக்கழகங்களிலும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் பார்ப்பனிய, இந்துத்துவ-காவி பாசிச நச்சுக் கருத்துக்களைத்தொடர்ந்து பரப்பி வருவதுடன் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சட்டத்தின் மீது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவே செயல்பட்டுவருகிறார்.

அவரே ஏற்றுக்கொண்ட அரசியல் சட்டத்தை மதிக்காமலும் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் செயல்படுவதற்கு ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன்வைத்த கோரிக்கைகளை தன்னிச்சையாக நிராகரிப்பது குறித்தும் பல்வேறு நிலைகளில் தமிழக மக்கள் தொடர்ந்து அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆயினும் அத்தகைய ஜனநாயக பூர்வமான எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் சற்றும் பொருட்படுத்தாமல் தன்னுடைய அதிகாரத்தின் வரம்பு மீறி அடாவடித்தனமாக, அப்பட்டமாக ஆர்எஸ்எஸ் இன் கூலிப்படை போல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அதேசமயம் ஆர் எஸ் எஸ் பாஜக, மோடி- அமித்ஷா கும்பலின் ஒரே நாடு – ஒரே ஆட்சி என்ற சீர்குலைவு நடவடிக்கைக்காகவே தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிற ஆளுநர் ரவி தொடர்ந்து இத்தகைய தமிழக விரோத மக்கள் விரோத அரசியல் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆகவே ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் உடனே திரும்ப பெற வேண்டும்.

முன்னாள் போலீசு அதிகாரியான, மக்களின் ஜனநாயக உரிமைகளை பற்றி சிறிதளவும் மதிப்பில்லாத ஆளுநர் ரவியின் இந்த அடாவடி நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

எனவே தமிழக மக்களும் அரசியல் சமூக இயக்கங்களும் ஒன்றுபட்டு இந்த தமிழ்நாடு விரோத ஆளுநர் ரவியை விரட்டி அடிக்கப் போராட வேண்டுமென மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தோழர்.காளியப்பன்.
மாநில பொருளாளர்

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு -புதுச்சேரி.

1 COMMENT

  1. இந்திய வரலாற்றில் ,இப்படி அசிங்கப் பட்ட ,அவமானபட்ட ஆளுநர் யாரும் இருக்கமுடியாது.,உண்மையில் சுயமரியாதை கொஞ்சமாவது இருந்தால் இந்நேரம் ஆளுநர்பதவியே வேன்டாம் என ஓடியிருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here