2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்பட்டு கிடந்த மக்கள், கடந்த சில ஆண்டுகளாக படித்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெறப் போராடுகிறார்கள். இந்த இடத்திற்கு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் சாதரணமாக வந்துவிடவில்லை. இதை தடுக்க பார்ப்பன கும்பல் பல வழிகளை மேற்கொண்டாலும், இடஒதுக்கீடு என்ற சீர்திருத்தத்தை பயன்படுத்தியே குறிப்பிட்ட அளவு முன்னேற முடிந்துள்ளது.  இது பார்ப்பனர்களுக்கு பொறுக்குமா?

கோவில்களில் நுழையத் தடை, பார்ப்பனர்கள் வசிக்கும் தெருக்களில் செல்லத் தடை, செருப்புப் போடக் கூடாது, துண்டை தோளின் மீது போடக் கூடாது கக்கத்தில் தான் வைத்துக் கொள்ள வேண்டும், மேல் சட்டை அணியக் கூடாது, பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது, அய்யா சாமி என்று தான் அழைக்க வேண்டும். இப்படி சாமானிய மக்கள் அனுபவித்த அடக்குமுறைகள் ஏராளம்.

இதுபோன்ற தடைகளையெல்லாம் உடைக்க காரணமாய் இருந்தவர்கள் பெரியார், அம்பேத்கர், ஜோதிராவ் பூலே போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளும்,  அவர்களின் போராட்டங்களும் தான். பார்ப்பனர்கள் வீட்டில் அடிமை வேலை செய்து வந்தவர்களின் மகன்களும், பேரன்களும் இன்று மருத்துவராகவும், ஆசிரியராகவும், அரசுத் துறையில் அதிகாரிகளாவதும்  இந்த பார்ப்பன கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விசம் கக்குவது போல் கக்குகிறார்கள் பார்ப்பனர்கள்.

அப்படி நடந்த விசயம் தான் டிவிட்டர் சமூகவலைதளத்தில் நடந்தது . ரங்ககராஜன் நரசிம்மன் என்ற பார்ப்பனர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ராகுல்காந்தி மான நஷ்ட வழக்கு  முன்னோடியாக இருப்பதால், ப்ராமணர்களை ஒட்டு மொத்தமாக விமர்சித்து அவமதிப்பவர்களுக்கு எச்சரிக்கை!. தனிமனிதனை விமர்சிப்பது அவரவர் விருப்பம். ஆனால் ஒட்டுமொத்த பிராமணர் சமூகத்தை விமர்சிப்போர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக டிவிட்டரில் பார்ப்பன கும்பலை வரலாற்று ஆதாரங்களுடன் அம்பலபடுத்தி பதிவிடும்  ‘பூதம்’ என்பவர் அம்பேத்கர் தொகுப்பு  நூல்களில் பார்ப்பன கும்பலை அமபலப்படுத்தி எழுதியிருந்தவற்றை மேற்கோள்காட்டி  “ஓகோ அப்ப இவர் மீதும் வழக்கு போடுங்க” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பார்ப்பன திமிர் பிடித்த ரங்கராஜன் நரசிம்மன் அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதோடு, இட ஒதுக்கீடு குறித்தும் தனது விசத்தை கக்கியிருந்தார். “சாதிய ஒழிச்சுக் கட்டிய டிராவிட மாடலை தான் பார்த்தோமே! இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் இருக்கிறது. கேவலமான பிச்சை எடுக்கும் பிழைப்பு தான் இடஒதுக்கீடு. திறமை இல்லைன்னா இடஒதுக்கீடு கேட்டு வாழ வேண்டியது தான்” என்று பதிவிட்டிருந்தார்.

இப்போது அவர் போட்டிருந்த முதல் பதிவுக்கு வருவோம். பார்ப்பனர்கள் என்று சொன்னால் வழக்கு போடுவோம் என்று சொன்னாரே… இடஒதுக்கீட்டை பிச்சை எடுக்கும் பிழைப்பு என்று சொல்வதை பார்ப்பன திமிர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

பல ஆயிரம் ஆண்டு காலமாக வர்ணாஸிரமத்தின் அடிப்படையில் சூத்திரர், பஞ்சமர் என்று இழிவு படுத்தியது யார்? சாணார் (நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட  “18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக் கூடாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்.”   முலைவரி கட்ட வேண்டும் என சொன்னது யார்? வேதத்தை கேட்கும் சூத்திரர்கள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என சொன்னது யார்? இதையெல்லாம் செய்தது பார்ப்பனன் தான். இப்போது இடஒதுக்கீட்டை பிச்சை என்று சொல்வதும் பார்ப்பனன் தான். இப்படிப்பட்ட பார்ப்பனிய மேலாதிக்க சிந்தனை உடையவர்களை பார்ப்பனன் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது.

இதையும் படியுங்கள்: சம உரிமை – இட ஒதுக்கீடு=பார்ப்பன மேலாதிக்கம்!

ஒடுக்கப்பட்டவனை, தாழ்த்தப்பட்டவனை சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லும் போது இன்பத் தேன் வந்து காதில் பாய்கிறதோ!? உழைக்கும் மக்களை சுரண்டி 2000 ஆண்டுகளுக்கு மேலாய் வாழ்ந்து வந்த கும்பலுக்கு தமிழ்நாட்டில் சமூகநீதி சவக்குழி வெட்டி விடுமோ என்ற அச்சம் தான் ரங்கராஜன் நரசிம்மனின் பேச்சுக்கு காரணம். அதனால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டமாக்கியும் அமல்படுத்த விடாமல் தடுக்கிறது பார்ப்பன கும்பல். இத்தனை ஆண்டு காலம் கோவில் சொத்துக்களையும், உண்டியல் வருமானங்களையும் ஏகபோகமாக அனுபவித்து வந்த கும்பல் அறநிலையத்துறையின் நடவடிக்கையால் பறிபோய்விடுமோ என்று பதறுகிறது, வன்மத்தை கக்குகிறது. அதுமட்டுமில்லாமல் கோவில்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கோவில் விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது என்றும் சொல்கிறது.

இடஒதுக்கீட்டை  இனிமேல் தடுப்பது கடினம் என்று உணர்ந்த பார்ப்பன கும்பல், அதுநாள் வரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்தவர்கள், பாசிஸ்ட் நரேந்திர தாமோதரதாஸ்  ‘மோடி’ ஆட்சிக்கு வந்த பிறகு அரிய வகை ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி நடமுறைக்கு கொண்டு வந்தார்கள். இதை பார்ப்பனர் ரங்கராஜன் நரசிம்மன் பிச்சையாக தான் கருதுகிறாரா? ஆகமவிதி என்று பல ஆயிரம் ஆண்டுகளாக கோவிலில் தங்கள் சமூகத்தை தவிர வேறு யாரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று அறிவிக்கப்படாத இட ஒதுக்கீட்டை ஆகமவிதி என்ற பெயரில்  பயன்படுத்தும் பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது.

இடஒதுக்கீடு சமூகநீதி உரிமை. இதனை இந்தியாவில் வாழும் 97% மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சமூகத்தில் சாதிய படிநிலை அழியும் வரையிலும் அனைத்து மக்களும் சமம் என்ற நிலையை எட்டும் வரையிலும் இட ஒதுக்கீடு தொடரும். அதுவரை ரங்கராஜன் நரசிம்மன் போன்ற பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சல் குறைய போவதில்லை. அதே நேரத்தில் பார்ப்பன பாசிசம் தொடருமானால் இடஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து. இந்த பாசிச கும்பலை விரட்டாமல் சமூகநீதி தொடர்வது சாத்தியமில்லை.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here