இலங்கை: தேவை புரட்சிகர கட்சி – ஐக்கிய முன்னணி – படை

எனும் மந்திர ஆயுதங்கள்!


கொரானா தொற்று உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை சின்னா பின்னமாக்கியது. அதில் இந்தியா, இலங்கை போன்ற இரண்டாவது முகாமில் உள்ள உலக நாடுகளும் அடங்கும். அதிலும் இலங்கை மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இலங்கையில் ஏற்கனவே கடைபிடித்து வரும் மோசமான பொருளாதாரக் கொள்கையால் அந்நிய செலாவணிக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் வெகுவாக குறைந்தது. இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன.

எரிபொருள் கொள்முதல் செய்வதற்கு கூட போதிய அந்நிய செலாவணி இல்லாமல் அரசு திண்டாடியது. எரிபொருள் பற்றாக்குறையினால், பல மணி நேர தொடர் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. மருத்துவமனைகளும் செயல்படவில்லை. நோய்களுக்கான மருந்துகளும் போதிய இருப்பு இல்லை. பெட்ரோல், டீசல் இல்லாததால், போக்குவரத்து முடங்கி விட்டது. மக்கள் உண்ண உணவின்றியும், வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டதாலும், கடந்த 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் தாராளமய கொள்கைகளுக்கும் எதிரான அரசியல் கோபாவேசமும் ஒன்று சேர பாராளுமன்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டத்தில் இறங்கினர்.

கொழும்பு – காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கிய மக்களின் எழுச்சிமிகு போராட்டத்தில் ராஜபக்சேவின் பூர்வீக வீடு உள்பட ஆளும் கட்சியினரின் பல இடங்கள் எரிக்கப்பட்டன. இறுதியாக பாராளுமன்றத்தினையும் மக்கள் கைப்பற்றினர்.

இலங்கை மக்களின் இப்போராட்டம் அந்த நாட்டு அரசை மட்டுமல்ல உலக முதலாளித்துவ சுரண்டல் அரசுகளை கதிகலங்கச் செய்துள்ளது. மக்களின் எழுச்சிமிகு போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, ஜூலை 14 அன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் மக்களுக்கு பயந்து நாட்டை விட்டே தப்பியோடினார்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 20-ம் தேதி அன்று இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரணில் அதிபராகத் தேர்வானவுடனேயே மக்கள் போராட்டக் களத்தில் இருந்து பின் வாங்கவில்லை. `எங்கள் போராட்டம் தொடரும்’ என்று அறிவித்தனர் அரசுக்கு எதிராகப் போராடி வரும் இலங்கை மக்கள். `கோ ஹோம் ரணில்’ என்ற முழக்கத்தோடு போராடியும் வருகின்றனர்.

இலங்கைப் பொருளாதாரமும்!

மக்களின் போராட்டமும்!

இலங்கையைப் பொறுத்தவரை, மூன்று டி எனப்படும் ஆடை உற்பத்தி, தேயிலை மற்றும் சுற்றுலா (Textile, Tea & Tourism) ஆகிய மூன்று துறைகள் மூலம் ஈட்டப்படும் பொருளாதாரமே, அந்நாட்டின் முக்கியமான மற்றும் முதுகெலும்பான வருவாயாக உள்ளது. இதில் ஆடை மற்றும் தேயிலை உற்பத்தி ஆகியன ஏற்றுமதி சார்ந்தும், சுற்றுலா வெளிநாட்டுப் பயணிகளைச் சார்ந்தும் உள்ளது.

இந்த மூன்று துறைகளின் வருவாய் மூலம் ஈட்டப்படும் அந்நிய செலாவணி மூலம், இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. மொத்தத்தில், இலங்கையின் வருவாயும், மக்களின் வாழ்வும் பிற நாடுகளைச் சார்ந்தே உள்ளது.

உலகளாவிய அளவில் ஏற்பட்ட கொரானா பொது முடக்கத்தால், சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதிக்கு தடை ஏற்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் இல்லாமல் போனது. அதனால், முக்கிய துறைகளின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதுடன், உற்பத்தியும் நின்று போனது. இதனால், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் திவால் நிலைக்கு சென்றுள்ளது.


இதையும் படியுங்கள் : இலங்கை : பொருளாதார நெருக்கடியும் விட்டுவிட்டுத் தொடரும் போராட்டங்களும்!


2014−ம் ஆண்டிலிருந்தே இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பெரும் பாய்ச்சலுடன் உயரத் தொடங்கிவிட்டது. 2019−இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 42.9 சதவிகிதமாக இருந்த கடன் தொகை, 2022 ஆண்டு ஜூலையில் 101 சதவிகித்தைத் தொட்டது.

இலங்கையின் வெளிநாட்டுக்கடன் சுமார் 51 பில்லியன் டாலர்களாகும். இந்த ஆண்டு மட்டும் திருப்பித் தர வேண்டிய உள்நாட்டு, வெளிநாட்டு கடன் தொகை 7 பில்லியன் டாலராகும். இதில் வெறும் 2.3 பில்லியன் டாலர்தான் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இலங்கை அரசின் வருவாயில் சுமார் 80 சதவிகிதம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகவே செலவிடப்படுகிறது. அந்த அளவுக்கு பொருளாதாரம் நொறுங்கி வீழ்ந்து விட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு படிப்படியாகக் குறைந்து இன்று, கடனுக்கு வட்டி கட்டவே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பைச் சரி கட்ட, அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ஆகஸ்டு மாத துவக்கத்தில் 360 ரூபாய் என்ற அளவில் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை, இதுவரையிலும் இல்லாத அளவிற்கு வாரந்தோறும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.

1970-களின் இறுதியில் திறந்த நிலை பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில், சில அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, மற்ற பெரும்பான்மையான பொருட்களுக்கு அரசாங்க விலை நிர்ணயக் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதை உறுதி செய்தது. தற்போதைய இந்த நெருக்கடியான சூழலில், ஏற்கனவே அரசின் விலை நிர்ணயக் கட்டுப்பாட்டில் இருந்த அரிசி, பருப்பு, பால் மாவு உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதால், விலை உயர்வு கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசு திணறியது. இதனால் மக்கள் போராடத் துவங்கினர்.

நாட்டின் முக்கிய பொருளாதாரத் தூண்களாக விளங்கி வரும் ஆடை உற்பத்தி, தேயிலை உற்பத்தி ஏற்றுமதிக்கான வாய்ப்பின்றி நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழப்புக்களுக்கு ஆளாகி வருவதுடன், சம்பள வெட்டு போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் தங்களது வேலை மற்றும் சம்பளத்திற்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காகித இறக்குமதி நிறுத்தப்பட்டதால், காகிதப் பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தங்களது படிப்பு வீணாகி விடும் என அச்சத்தில் மாணவர்களும் போரட்டத்தில் இறங்கினர்.

நாட்டை மறுகாலனியாக்குவது

 

சீனாவா? அமெரிக்காவுக்கா?

நெருக்கடியை சமாளிக்க யாருக்கு நாட்டை தாரை வார்ப்பது என்பதுதான் அங்குள்ள ஆளும் வர்க்க கட்சிகளிடையான தற்போதைய விவாதம். இதில் தற்போதைய சுற்றில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த கோத்தபய ராஜபக்சே கும்பலின் தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியானது சீன கைக்கூலிகளைக் கொண்ட சீன ஆதரவு கட்சி.

இக்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இலங்கையை சீனாவின் மேலாதிக்க வெறிக்கு நாட்டையே பலியிட்டு வந்தது. உதாரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது கோத்தபய அரசு. கொழும்பின் கடல் பகுதியில் 660 ஏக்கர் நிலத்தை தரையாக்கி, பெரும் நகரை நிர்மாணிப்பதுதான் துறைமுக நகரத் திட்டம். இது இலங்கையின் கனவுத் திட்டம் எனவும், இதனால் சுற்றுலாத் துறை மேம்பாடு அடைந்து அந்நிய செலாவணி வரத்து அதிகரிக்கும் எனவும் கூறியது அப்போதைய இலங்கை அரசு. இதுமட்டுமின்றி நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமும் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது

சீனாவோ, இலங்கைத் துறைமுகங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்துமாக் கடலில், தனது பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான வழித்தடமாகவும் தனது மேலாதிக்க நோக்கங்களுக்காகவும், உலக வல்லரசுக் கனவுக்காகவும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு துணை நிற்கிறது. ஏற்கெனவே, இலங்கையின் கடல் வளத்தையும் மீன்பிடித்தொழிலையும், கடல் அட்டை (sea cucumber) வளர்ப்பு மூலம் சீன கார்ப்பரேட்டுகள் சூறையாட தாரள அனுமதி வழங்கியது கோத்தபய அரசு.

ஏற்கனவே, ஜப்பான் – இலங்கை – இந்தியா நாடுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் “கிழக்கு சரக்குப் பெட்டக முனையம்” கட்டுவதற்காக ஒப்பந்தத்தை அமெரிக்க சார்பு கொண்ட மைத்ரிபால சிறிசேனா − ரணில் விக்கிரமசிங்க அரசு 2019−ஆம் ஆண்டு மே மாதம் போட்டுக் கொண்டன. இதனை ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் ரத்து செய்தது கோத்தபய அரசு.

அதேபோல், கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவின் தெற்காசிய பேட்டை ரவுடியாக இருக்கும் இந்திய அரசிடமிருந்து வாங்கிய 40 கோடி டாலர்களை (சுமார் ரூ.3,000 கோடி) தவணைக் காலம் முடிவதற்குள் திருப்பிக் கொடுத்து தனது சீன ஆதரவை பறைசாற்றியது கோத்தபய அரசு.

மக்களின் போராட்டங்களினால் நான்கு மாதங்களில் நான்கு அரசு மாற்றப்பட்டுள்ளது இறுதியாக சீனக் கைக்கூலிகளின் ஆட்சிக்கு பதிலாக அமெரிக்க கைக்கூலி ஆட்சியை பிடித்துள்ளார்.


இதையும் படியுங்கள் : இலங்கை மக்கள் எழுச்சி: கோத்தபய தப்பி ஒட்டம்!


தற்போதைய அதிபராக பதவியேற்றிருக்கும் அமெரிக்க சார்பு கொண்ட ரணில் விக்கிரமசிங்க, மார்ச் மாதத்திலேயே நெருக்கடியை தீர்க்க, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்) கடன் பெற அன்றைய ராஜபக்சே அரசுக்கு வழிகாட்டியது. முதலில் மறுத்து வந்த ராஜபக்சே கும்பல், அன்றாடம் நெருக்கடிகள் முற்றி வரும் நிலையில் தற்போது ஐ.எம்.எஃப் – யிடம் கடன் வாங்கத் தீர்மானித்து. அதற்குள் மக்கள் போராட்டம் வெடித்ததால் அமெரிக்காவிடம் கடன் பெறுவது நிறுத்தப்பட்டது.

நெருக்கடியைச் சரிகட்ட மீண்டும் உலக ரவுடி அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங் களிடமும், பிராந்திய பேட்டை ரவுடி இந்தியா போன்ற அண்டை நாடுகளிடமும் கடன் வாங்குவது என மீண்டும் அதே விஷச் சூழலில் நாட்டை தள்ளிக் கொண்டு போகிறது ரணில் விக்கிரமசிங்க கும்பல். பணப்பற்றாக்குறைய ஈடுகட்ட காகித பணத்தை அச்சடிப்பது என்று நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி செல்கிறது.

பசிபிக் பிராந்தியத்தையும், அட்லாண்டிக் பிராந்தியத்தையும் இணைக்கும், புவிசார் அரசியலில் மிகுந்த போர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான இந்துமாக் கடலில் இலங்கை அமைந்துள்ளதால், இலங்கையின் மீதான தனது ஆதிக்கத்தின் மூலம் இந்துமாக் கடல் பரப்பை தங்களது மேலாதிக்க நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பதால், அமெரிக்க – சீன வல்லரசுகள் இலங்கைக்கு கடன் கொடுத்து கபளீகரம் செய்யக் காத்திருக்கின்றன.

அதற்கான நல்வாய்ப்பாக இலங்கையின் இப்போதைய நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதில் இந்தியாவும் தன் பங்குக்கு கடன் கொடுத்து தாஜா செய்வதன் மூலம் இந்திய தேசங்கடந்த தரகு முதலாளிகள் இலங்கையில் போட்டுள்ள மூலதனத்தையும் எதிர்கால கார்ப்பரேட் நலன்களையும் பாதுகாக்கத் துடிக்கிறது.

இலங்கையை மட்டுமல்ல,

உலகையே திவாலாக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை!

1970-களுக்குப் பிறகு உலகைப் புதிய வடிவில் சுரண்டவும், சூறையாடவும் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற புதிய தாராளவாதக் கொள்கைகள் காலனி, அரைக்காலனி நாடுகளை மறுகாலனியாக்கத் துவங்கியது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகள் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளுக்கு பலியாகத் துவங்கின. பல நாடுகள் திவாலாகி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இலங்கையும் மறுகாலனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது திவால் நிலையில் உள்ளது. உள்நாட்டில் நிலவிய சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையின் காரணமாக தனி ஈழத்திற்கான விடுதலைப் போராட்டம் முன்னுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்தது. இந்த இன அழிப்புப் போருக்கான விலையாகவும், இன அழிப்பை ஏகாதிபத்தியங்கள் எதிர்க்காமல் ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ஆதரவைப்பெற வேண்டி பல அடிமைத்தனமான கொள்கைகளை ஏற்றுக்கொண்டன.

இலங்கையை ஆண்ட சிங்கள பேரினவாத அரசுகள். 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை நாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுயசார்பு பொருளாதாரக் கொள்கை எதுவும் முன் வைக்கப்படவோ, கடைபிடிக்கப்படவோ இல்லை. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பின்னும் சர்வதேச விசாரணையை எதிர்கொள்வதில் ஏகாதிபத்தியங்களும் இந்தியாவும் தம்மை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக பல அடிமைச்சாசனங்களை இலங்கை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவுகளை அந்த நாடும் மக்களும் இன்று சந்திக்கின்றனர்.

எந்தவொரு நெருக்கடியையும் ஏகாதிபத்தியங்கள் தனது லாப நோக்கத்திற்காகவே பயன்படுத்தும் என்பது இலங்கையில் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கு நிரந்தர வருமானம் இல்லாததால், அந்நிய செலாவணி கையிருப்பிலிருந்து தான் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது, கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போதைய இந்த நெருக்கடிக்கு ஏற்றுமதி சார்ந்த வருவாயை மட்டுமே நம்பி இருக்கும் வகையில் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியமைத்ததும், அமெரிக்கா, சீனா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைத்ததும் தான் முக்கிய காரணமாகும்.

 

ஆட்சி மாறினாலும்

அவலங்கள் மாறவில்லை!

புதிய அதிபர் வந்தவுடன் வெளிநாடுகள் கடன் கொடுக்கும்; பிரச்சனை தீரும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா மக்களுக்கும் மூன்று வேளை உணவை உத்தரவாதப்படுத்துவதே எனது பணி என்று பதவியேற்றவுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கயும் கூறினார். ஆனால் அவர் பதவியேற்ற போது மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இப்போது இரண்டு வேளையும் இரண்டுவேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிடும் நிலைக்கு தாழ்ந்து போனது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசிடம் குறுகியகால, நீண்டகாலத் திட்டங்கள் எதுவுமில்லை. இப்போதைக்கு அரசின் முதன்மை பணியாக அரசுக்கு எதிராக போராடுபவர்களை, கலகக்குரல் எழுப்புபவர்களை மெதுமெதுவாகக் குறிவைக்கப்படுகிறார்கள். எதிர்க்கருத்துக்களையும் விமர்சனங்களையும் அடக்குவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. மக்கள் பட்டினியில் சாவது பற்றி எவ்வித கவலையும் படாமல் அதே பழைய பாணியிலான அமைச்சர்கள் அதே பதவிகள், அதே பொறுப்புகள் என நீடிக்கிறது.

மக்களின் எழுச்சி சாதித்ததும்!

இலங்கைக்கு தற்போதைய தேவையும்!

மக்களின் போராட்டத்தால் சீன அடிவருடியான பாசிச கோத்தபய வீழ்த்தப்பட்டாலும் தற்போது அமெரிக்க அடிவருடி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்ந்துள்ளார். மக்கள் இனவாதமும்,, மொழிவாதமும், சாதியவாதமும், மதவாதமும் என அனைத்தையும் முறியடித்து வர்க்கமாக ஒன்றிணைந்து போராடுகின்றனர். ஆரம்பத்தில் ‘கோ ஹோம் கோத்தபய’ என்றனர். தற்போது ‘கோ ஹோம் ரணில்’ என்கின்றனர். வர்க்கமாக ஒன்றிணைந்தாலும் வர்க்க எதிரி யார் என உணராமல் உள்ளனர்.


இதையும் படியுங்கள் : இலங்கை போராட்டம் | போராட்ட வழியை மக்களே தீர்மானிப்பார்கள்!


தங்களின் உண்மையான எதிரி ஏகாதிபத்திய முதலாளித்துவமும், அதைச் செயல்படுத்தும் இன்றைய அரசும் தான் என்பதை இலங்கை மக்களுக்கு உணர்த்த வேண்டும். “கோ ஹோம் ரணில்” என ரணில் கும்பலை வீட்டிற்கு அனுப்புவதோடு, அரசின் அந்த இடத்தில் யாரை அமர்த்த வேண்டும் என்பதை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில், தீர்மானகரமாக அறிவித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு, ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்து நிற்கும் மக்களின் வர்க்க உணர்வை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதை இன்னும் தீவிரமாக வளர்த்தெடுக்க வேண்டும். இவை அனைத்தும் அங்கிருக்கும் புரட்சிகர அமைப்புகளின் உடனடி அரசியல் கடமையும், பொறுப்பும் ஆகும்.

வெறும் புரட்சிகர கட்சி மட்டும் இருந்தால் வெற்றியை சாதிக்க முடியாது. ஏகாதிபத்திய அடிவருடிகளான ஆளும் கும்பல், போராடும் மக்களை ஒடுக்குவதைப் போலவே, புரட்சிகர அமைப்புக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு நசுக்கி இல்லாதொழித்து விடும். எனவே, அரசியல் ரீதியாக மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும். அதன் பொருள் மக்களை வன்முறைக்கும், தாக்குதலுக்கும் தூண்டுவது என தட்டையாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

நாடுகடந்து வாழும் மார்க்சிய லெனியத்தை ஏற்பவர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும். நீண்ட காலமாக மக்கள் மத்தியில் செயல்பட்டு வரும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி மற்றும் கம்யூனிச குழுக்கள், தனிநபர்கள் போன்ற அனைவரும் புதிய சூழலை அவதானித்து மாற்று அரசியல் பாதையில் பயணிக்க வேண்டும். இவை நமது முன் மொழிதல் மட்டுமே. தீர்மானிக்கும் முழு உரிமையும் பொறுப்பும் இலங்கை மக்களுக்கே உள்ளது.

புரட்சிப் போராட்டத்தில் கட்சி – ஐக்கிய முன்னணி – படை ஆகிய மூன்றும் மந்திர ஆயுதங்கள் என்கிறார் மாவோ. எனவே, இலங்கையில் இருக்கும் புரட்சிகர அமைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதனை தாங்கி நிற்கும் அரசிற்கும் சீன ஆக்கிரமிப்புக்கும் எதிராக ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து அரசியல் ரீதியாக  ஐக்கிய முன்னணி கட்டியமைப்பது அவசியம். இதன் ஊடாகவே ஏகாதிபத்திய கைக்கூலி ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிராக மக்கள் படையைக் கட்டி வீழ்த்துவதும் இதற்கான திட்டங்களை முன்னுக்குக் கொண்டு வந்து செயலாற்றுவதும் தான் ஒரே அரசியல் தீர்வு!

  • இரணியன்
  • புதிய ஜனநாயகம்.
    ஆகஸ்ட் மாத இதழ்.படியுங்கள்!
    பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here