ந்தியாவின் மிகப்பெரிய பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் செல்வாக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உருவாக்கிக் கொடுக்க ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் என்ற பெரிய லாபி நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி தேச விரோத ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முகத்திரையைக் கிழித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ப்ரிஸம் (Prism) என்ற செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த திருட்டுத்தனம் வெளிவந்துள்ளது.

இந்த செய்தி வெளியான மறுநாள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், “ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங், இந்தியாவில் மட்டுமே செயல்படுகிறது, எங்களுக்கும் அமெரிக்க லாபியிங் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை” என்ற அண்டப் புளுகைத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளரின் மறுப்புச் செய்தி பொய் என்பது ப்ரிஸம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை படிக்கும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனினும் முழு பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்க முயற்சித்துள்ளார் ’உத்தம புத்திரான’ ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் என்பது அம்பலமாகியுள்ளது.

லாபி நிறுவனத்தின் உண்மையும்!  ஆர்.எஸ்.எஸ் உள்ளடி வேலையும்!

ஆர்.எஸ்.எஸ் நேரடியாக லாபியின் நிறுவனத்தை அணுகவில்லை என்றாலும் வேறு ஒரு துணை நிறுவனத்தின் மூலம் லாபி நிறுவனத்தில் பதிவு செய்துள்ளது. அதாவது, அமெரிக்க லாபி வெளியீடு சட்டத்தின் (Lobbying Disclosure Act – LDA) கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் லாபி நிறுவனத்தின் வாடிக்கையாளராக ஆர்.எஸ்.எஸ் பட்டியலிடப்படவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஸ்டேட் ஸ்ட்ரீட் ஸ்ட்ராடஜீஸ் (State Street Strategies -மாநில தெரு உத்திகள்) நிறுவனம் தான் வாடிக்கையாளராக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஸ்டேட் ஸ்ட்ரீட் ஸ்ட்ராடஜீஸ் செயல்படுவதை Prism செய்தி நிறுவனம் தனது விசாரணையில் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க: 

 ஆர்.எஸ்.எஸ்க்குக் கட்டுப்பாடா? கர்நாடக அரசை மிரட்டும் சங்கிகள்!

 நக்சல்பாரி இயக்கம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது! பிபிசி&ஆர்எஸ்எஸ் கனவு பலிக்காது.

ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் லாபி நிறுவனம் அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களில் கடந்த 09 மாதங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் 3.3 லட்சம் அமெரிக்க டாலரை (ஏறக்குறைய 03 கோடி ரூபாய்) பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தனது நிறுவனத்தின் லாபிஸ்ட்டுகளாக பிராட்ஃபோர்ட் எல்லிசன், லூட்மில்லா காசல்கே, பில் ஷஸ்டர் மற்றும் ரெபேக்கா சுங்காலா ஆகிய நான்கு பேர் செயல்படுவதாக பட்டியலிட்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர்கள் பதிவு சட்ட தரவுகளின் படி, எல்லிசன் முன்பு எத்தியோப்பியா மற்றும் பெனின் நாடுகளில் செயல்பட்டுள்ளார். காசல்கே தென்கொரியா மற்றும் சிரியா எதிர்ப்பு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பில் ஷஸ்டரின் சகோதரர் பாப் ஷஸ்டர், One+ Strategies நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார் என்கிறது.

இதில், ஷஸ்டர் சகோதரர்கள் மற்றும் எல்லிசன் ஆகியோர் கடந்த ஜுன் மாதம் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின்படி, இந்த லாபிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சிகளுக்குச் சென்று உறுப்பினர்களைச் சந்தித்தனர்‌ என்பதையும், இந்த சந்திப்பை “இந்தோ-அமெரிக்க சிவில் சமூக ஈடுபாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க தருணம்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தக் குழுவில், The Wall Street Journal-இன் கட்டுரையாளர் வால்டர் ரஸ்ஸல் மீட் மற்றும் அமெரிக்கா-இந்தியா உறவுகள் பற்றி ஆய்வு செய்து வரும் சிந்தனைக் குழாமின் பில் ட்ரெக்சல் ஆகியோரும் இருந்தனர் என்கிறது prims செய்தி நிறுவனம். எனவே, ஆர்.எஸ்.எஸ் லாபி நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளது என்பதும், நேரடியாக ஈடுபடாமல் உள்ளடி வேலை செய்து துணை நிறுவனத்தின் மூலம் லாபி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

லாபி நிறுவனம்‌ எனும் அதிகார தரகர் வேலையும்!  ஆர்.எஸ்.எஸ் நிழல் உலக வேலைகளும்!

ஒரு நாட்டின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கத்தை உருவாக்கி கொண்டு அரசின் நகர்வுகளில் தாக்கத்தை உண்டாக்குபவர்களை `லாபியிஸ்ட் என்று அழைக்கப்படும் அதிகார தரகர்கள். அரசாங்கத்தில் எந்தக் காரியமானாலும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்களாக அதிகார தரகர்கள் சித்தரிக்கப்படுகின்றனர். அதிகாரத் தரகர்கள் மூலமாக போனால் தான் அரசாங்கத்தின் நெடிய கதவுகள் திறக்கும். பெருமுதலாளிகள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவோ, போட்டியாளர்களைக் கழுத்தறுக்கவோ, விதிமுறைகளை மீறி ஒரு புதிய தொழில் உரிமம் பெறவோ, தங்களுக்கு சாதகமாக அரசின் கொள்கைகளை மாற்றவோ அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். தற்போது தேர்தலில் வெற்றி பெற அதிகார தரகர்கள் கொண்ட லாபி நிறுவனங்களை அமர்த்திக் கொள்கின்றன கட்சிகள்.

அமெரிக்காவில் லாபி செய்வதற்கு உதவும் நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கமே சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கிறது. ஒரு குழுவோ, தனிநபரோ இது போன்ற லாபி நிறுவனங்களை அணுகி, அதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிமுகத்தைப் பெற முடியும். அதன் பின்னர், அரசால் இயற்றப்படும் சட்டங்களில், கொள்கை முடிவுகளில் தங்களது வாடிக்கை யாளர்களின் கருத்தைப் பதிவு செய்யவும், வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் விடயங்கள் குறித்து எடுத்துரைக்கவும் இந்த லாபி நிறுவனங்கள் உதவுகின்றன. இப்படிப்பட்ட லாபி நிறுவனத்தை தான் தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது செல்வாக்கை பெருக்க பணிக்கு அமர்த்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமர்த்தியுள்ள லாபி நிறுவனம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ஆவணத்தில், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகள் தொடர்பாக உதவுவதற்கே செயல்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியத் தூதரகமும், வெளியுறவுத் துறையும் செய்யவேண்டிய வேலையை ஒரு தனிப்பட்ட அமைப்பு செய்ய வேண்டியதின் அவசியம்‌ என்ன என்பதை உற்று கவனிக்க வேண்டியுள்ளது.

அதாவது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மீதான இந்த கவனம், நிறுவனத்தின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர்கள் பதிவு சட்டம் (Foreign Agents Registration Act – FARA) சட்டத்தின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் அமெரிக்க லாபி வெளியீடு சட்டத்தின் (Lobbying Disclosure Act – LDA) கீழ் பதிவு செய்யப்பட்டு‌ இருப்பது உள்நோக்கம் கொண்டது, என்கிறது Prism செய்தி‌ நிறுவனத்தின்‌ விசாரணை அறிக்கை. குறிப்பாக, அமெரிக்க FARA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால் லாபி நிறுவனம் தனது வாடிக்கையாளரான ஆர.எஸ்.எஸ் – வுடன் நடத்தும் சந்திப்புகள், மின்னஞ்சல்கள், ரசீதுகள் மற்றும் செலவினங்கள் போன்ற விவரங்களைப் பொதுவில் அதிகளவில் வெளியிட வேண்டும். ஆனால் LDA சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதால் ஆர்.எஸ்.எஸ்-சின் லாபி நிறுவனம் அத்தகைய விவரங்கள் எதையும் வெளியிடத் தேவையில்லை.

அமெரிக்க பிரபல லாபியிஸ்டான பென் ஃப்ரீமேன் கூறுகையில், “FARA-வின் கீழ் அல்லாமல் LDA-வின் கீழ் பதிவு செய்வதானது லாபி செயல்பாடுகளை நிழல் உலகில் வைத்திருப்பதாகும். இதனால், லாபியிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ்-க்காக என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நமக்கு அதிகமாகத் தெரியவில்லை” என்கிறார். மேற்கண்ட தகவல்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல்வேறு தகிடு தத்தங்கள் செய்து நிழல் உலக வேலைகள் மூலம் உலக‌ அளவில் கவனம் பெற முயற்சிக்கிறது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு லாபி நிறுவனத்துடன் தொடர்பு! லாபி நிறுவனத்திற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு லாபி நடவடிக்கைக்கு அமர்த்தியுள்ள ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்காகவும் அமெரிக்காவில் லாபி செய்யும் வேலைகளை செய்து வருகிறது. சமீபத்தில், டிரம்ப் பாகிஸ்தான் மீது 29% வரி விதித்தார். இந்த நிறுவனத்தின் மூலமாக பாகிஸ்தான் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரிடம் பல கோடி ரூபாய் பணம் செலவு செய்து லாபி செய்த பிறகே டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்குச் சாதகமாக வரியை 29 இல் இருந்து 19 சதவிகிதமாக குறைத்ததாக சில சமூக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது அகண்ட பாரத கனவிற்காக பாகிஸ்தானை‌ இந்தியாவின் எதிரியாகவும், இஸ்லாமியர்களை இந்துகளின் எதிரியாகவும் சித்தரித்து இந்து மதவெறிப் பிரச்சாரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பாகிஸ்தானுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களுடன் தொடர்பை உருவாக்கியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

கிரிக்கெட் விளையாட கூட பாகிஸ்தான் செல்ல கூடாது என தேசவெறியை கிளப்பும் சங் பரிவார கும்பல், வார்த்தைக்கு வார்த்தை தேச நலன் பேசுவது வெறும் நாடகம் என்பது பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தரகு வேலை செய்யும் நிறுவனம் பல நாடுகளுடன் ஒப்பந்தம் போடும் என்பது எதார்த்தம். அதன் அடிப்படையில் சங் பரிவார கும்பல் ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்றாலும், வேறு ஏதேனும் தனிநபரோ அல்லது அமைப்போ பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ள லாபி நிறுவனத்துடன் பேசியிருந்தால் கூட தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு முற்றிலும் ஒடுக்கப்பட்டிருக்கும்.

பாசிச நடவடிக்கைக்கு உலக அங்கீகாரம்! இதுவே‌ ஆர்.எஸ்.எஸ். லாபி நடவடிக்கையின் நோக்கம்!

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது தனது பிம்பத்தை மிகைப்படுத்துவற்காக 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க லாபி நிறுவனமான ஆப்கோ வேர்ல்டு வைட் என்ற நிறுவனத்தை மாதம் 25,000 அமெரிக்க டாலருக்கு பணியமர்த்திக் கொண்டார். குறிப்பாக, 2002 குஜராத் படுகொலை காரணமாக அமெரிக்க விசா இல்லை என அறிவிக்கப்பட்ட பிறகு தனது பிம்பத்தை ஊதிப் பெருக்கவும், வெளிநாடுகளில் செல்வாக்கை உருவாக்கவும் முன்னாள் நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா மற்றும் கஜகஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த நர்சுல்தான் நசர்பயேவ் போன்றவர்களை வாடிக்கையாளர்களாக கொண்டு சேவை செய்த லாபி நிறுவனமான ஆப்கோ வேர்ல்டு வைட் நிறுவனத்தை தேடிப்பிடித்து பணியமர்த்திக் கொண்டார். இந்த லாபி நிறுவனத்தின் மூலமே வைபரன்ட் குஜராத் என உலகம் முழுவதும் ஊதிப்பெருக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டில் மோடிக்கு பின்னால் இருந்து லாபி நிறுவனத்தை அமர்த்தி மோடியை பற்றி பொய்யான பிம்பத்தை கட்டியமைத்த சங் பரிவார கும்பல், தற்போதைய சூழலில் ஆர்.எஸ்.எஸ்-க்கான லாபி நிறுவனத்தை அமர்த்திக் கொண்டுள்ளது‌. இந்த லாபி நிறுவனத்தின் மூலம் அமெரிக்க நாடாளுமன்றமான செனட் மற்றும் அமெரிக்க எம்.பி,க்களிடம் பேசி அவர்களின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனக்கு அதிக செல்வாக்கு இருப்பது போலக் காட்டி, அந்த நாட்டின் நாடாளு மன்றத்தில் தனக்கு தேவையானவற்றை சாதித்துக் கொள்ள லாபி நடவடிக்கையை கையாள்கிறது. இதற்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறது. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மீது ரெய்டுகள் நடத்தும் வருமான வரித்துறை, இந்திய அரசிடம் பதிவு செய்யப்படாத வருமான விலக்கு பெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளிநாடுகளில் அரசியல் செல்வாக்கு பெற கோடிகளில் செலவு செய்வதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலக நாடுகளின் பார்வையில் பாசிச துணை இராணுவக் குழுவாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது என்பதே உண்மை. இதனை மாற்றி இந்தியாவில் மக்கள் மீது திணிக்கப்படும் பாசிச நடவடிக்கைகளையும், தனது இந்துத்துவா மதவெறி கலவர நடவடிக்கைகளையும் மறைத்து உலகளவில் பெரும் செல்வாக்கைப் பெற்ற அமைப்பாக தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த லாபி நடவடிக்கை தொடங்கியுள்ளது பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்திய மக்கள் மீது பாசிச தாக்குதலை தீவிரப்படுத்தும் போது ஆர்எஸ்எஸ் – பாஜகவிற்கு தேவையான ஆதரவுக் கருத்தை இப்போதே உருவாக்கத் தொடங்கிவிட்டது சங் பரிவார் பாசிச கும்பல்.

அரசியல் சிந்தனைக் குழாம் (think tank) ஒன்றின் நிர்வாக இயக்குநரான ராகியிப் ஹமீத் நாயக் ஆர்.எஸ்.எஸ் லாபி நடவடிக்கை பற்றி கூறுகையில் “அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் லாபி நடவடிக்கைகள், இந்தியாவிற்கு வெளியே அதன் மீதான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலில் முக்கிய சக்தியாக மாறியிருக்கலாம், ஆனால் உலகளவில், அது இன்னும் பாசிச துணை இராணுவக் குழுவாகவே பார்க்கப்படுகிறது. எனவே, கொள்கை வகுப்பாளர்களின் பார்வையை மாற்றும் நடவடிக்கையில் லாபி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளதை இணைத்து பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் நோக்கம் பாசிச நடவடிக்கைக்கு உலக அங்கீகாரம் பெற முயற்சிப்பது புரிந்துகொள்ள முடியும்.

100 ஆண்டுகால பாசிச‌ அமைப்பு! உலக பாட்டாளி வர்க்கத்தின் பொது எதிரி!

பெரும்பான்மையான உழைக்கும் மக்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கும் பார்ப்பனியத்தின் ஆட்சியை இந்தியா முழுவதும் நிலைநாட்டி, மனுதர்மத்தையே அரசியல் சாசனமாக்க மாற்றத் துடிக்கும் இந்துத்துவா இயக்கங்களின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ். கீழிருந்து கட்டியமைக்கப்பட்ட பாசிச அமைப்பாகும்.

இந்த பாசிச அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், 2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு நாடு முழுவதும் ஊடுருவி பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்தியாவின் அனைத்து துறைகளிலும் தனது ஆட்களை புகுத்தி பாசிச சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்புகள் மூலம் அங்கு உள்ள இந்து மக்ககளிடையே தனது பார்ப்பன சித்தாந்தத்தைப் பரப்பி வருவதுடன் இந்த நாடுகளில் உள்ள பிற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு தனது பாசிச அடித்தளத்தை விரிவுபடுத்தி வருகிறது.

சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பன (இந்து) மதவெறியை பயன்படுத்தி இந்தியாவில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து மதக்கலவரத்தை உருவாக்கியது போன்றே உலக நாடுகளில் உள்ள மக்களின் ஒற்றுமை சீர்குலைக்க அங்குள்ள பிற்போக்கு அமைப்புகளுடனும், லாபி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அரசியல் அரங்கிலும் செல்வாக்கு செலுத்த தொடங்கி விட்டது. இத்தகைய கொடிய பார்ப்பன பாசிச பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துவது இந்திய பாட்டாளி வர்க்கத்தின் கடமையாக மட்டுமல்ல. அது உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகவும் மாறிவிட்டது.

விஜயன்.

| புதிய ஜனநாயகம் டிசம்பர் 2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here