ரசு ஊழியர்கள், ஆர் எஸ் எஸ் போன்ற அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்காற்றும் இயக்கங்களின் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது; அவற்றின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று கர்நாடக மாநிலத்தில் விதிமுறை உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் ராய்சூர் மாவட்டத்தில் சிர்வார் தாலுகாவில் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக (Panchayat Development Officer) உள்ள பிரவீன் குமார் இந்த விதிமுறையை மதிக்காமல் அக்டோபர் 12ஆம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் இன் சீருடை அணிந்து கையில் தடிய ஏந்தியபடி ஆர் எஸ் எஸ் இன் அணிவகுப்பில் (ஊர்வலத்தில்) கலந்து கொண்டிருக்கிறார்.

இப்படி, அரசு விதிமுறையை மீறி ஆர் எஸ் எஸ் -ன் ஊர்வலத்தில் கலந்து கொண்டதற்காக அரசு அலுவலர் பிரவீன் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அரசு விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக – ஆர் எஸ் சங்கிகள் குய்யோ முய்யோ என்று கூக்குரலிட்டு கர்நாடகாவை ஆண்டு வரும் காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசு பள்ளிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆர் எஸ் எஸ் தனது நிகழ்ச்சிகளை நடத்துவதை தடுக்கும் வகையில் “Regulation of Use of Government Premises and Properties Bill – 2025” என்று ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்து மதவெறி பிடித்த சங்கிகள் இதைக் கண்டு கொதித்து எழுந்து காங்கிரசின் இந்த முயற்சிக்கு எதிராக தங்களது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் அரசு கல்வி நிறுவனங்களில் ஆர் எஸ் எஸ் தங்களது முகாம்(சாக்கா) நடத்துவது மூலம் மாணவர்களை இந்து மதவெறி கருத்துக்களுக்கு ஆட்படுத்துவது என்பதை தொடர்ந்து செய்து வருகின்றது. தமிழகத்திலும் கூட தனியார் கல்வி நிறுவனங்களில் ஆர் எஸ் எஸ் சாக்காக்களை நடத்தி மாணவர்களிடையே இந்து மதவெறி கருத்துக்களை பரப்பி வருவதை தமிழகம் அறியும்.

டிசம்பர் 15, 2019 அன்று கர்நாடகாவின் தட்சணக் கன்னடா மாவட்டத்தின் கல்லட்கா நகரில் உள்ள (ஆர் எஸ் எஸ் சார்பான கல்வி நிறுவனமான) ஸ்ரீராம் வித்யா கேந்திரா பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்ச்சியை மாணவர்கள் ஒரு நாடகமாக நடத்தினர். இந்த நாடகத்தின் போது பள்ளி மைதானத்தில், பாபர் மசூதியின் படம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. “பாரத் மாதா கீ ஜே”, “போலோ ஸ்ரீ ராமச்சந்திரா கீ ஜே” என்று முழக்கமிட்டபடி பாபர் மசூதியின் படத்தை அடித்து கிழித்து நொறுக்குவது போன்று மாணவர்கள் நடித்துக் காட்டி பார்வையாளர்களுக்கு இந்து மதவெறியூட்டினர்.

இப்படி இந்து மதவெறியூட்டும் நிகழ்ச்சியில் பாசிச பாஜகவின் ஒன்றிய அமைச்சர் சதானந்த கவுடாவும் அப்போதைய டெல்லி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் கலந்து கொண்டு மாணவர்களின் இந்து மதவெறியூட்டும் இந்த நாடகத்தை கண்டு ரசித்தனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்கப்பட்டது? நீதிமன்ற தீர்ப்பு என்பது சட்டத்தின் அடிப்படையில் – சாட்சியங்களின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே ஒழிய நீதிபதியின் தனிப்பட்ட நம்பிக்கை அடிப்படையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தும் கூட பாபர் மசூதி யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் “கடவுளிடம் கேட்டு” தீர்ப்பளித்ததாக உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளதை நினைத்துப் பாருங்கள்.

‘இந்துக்களுக்கு உரிமையான வழிபாட்டு இடங்களை நீதிமன்றத்தின் மூலமாகவே பெற்றிட முடியும் என்பதால் இனி வரும் காலங்களில் காசி மற்றும் மதுரா நகரங்களில் உள்ள மசூதிகளை அகற்றுவதற்காக களத்தில் இறங்கிப் போராட வேண்டிய அவசியம் இல்லை’ என்று ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பாகவத் கூறியதையும் இங்கு சற்று நினைவு படுத்தி பாருங்கள்.

படிக்க: 

 கர்நாடகா: சித்தராமையா முதல்வர், ஆனால் சிலிக்கான் வேலி-யின் ஆட்சி

 பிரக்ஞா தாக்குர்: பார்ப்பன இந்துமதவெறி நெருப்பை கர்நாடகத்தில் பரப்பும் படை!

தங்களுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பு, இந்து மதவெறியூட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதும், அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய அமைச்சரும் துணை நிலை ஆளுநரும் கலந்து கொள்வதும் இந்து மதவெறியர்களுக்கு மிகப்பெரும் பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தும். இந்து மதவெறியர்களுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்திர சூட்டின் பேச்சு மிகப்பெரும் நம்பிக்கையை கொடுக்கும். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான் ஆர்எஸ்எஸ் -ன் தலைவர் மோகன் பகவத் பேச்சு.

ஏற்கனவே வி.எச்.பி மாநாட்டில் முன்னாள், இன்னாள் நீதிபதிகள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் ன் சீருடையுடன் கையில் தடியை ஏந்தி ஆர்எஸ்எஸ் -ன் ஊர்வலங்களில் செல்வது என்பது இந்து மத வெறியர்களுக்கு மாபெரும் உத்வேகத்தை கொடுக்கும். இது மதவெறியை பரப்பி, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, மோத விட்டு இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான பணிகளை விரைவுப்படுத்தும். இதற்கான முன் தயாரிப்பாக, பயிற்சி பட்டறையாக கல்வி நிறுவனங்களில் சாகாக்களை ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தி வருகிறது.

ஆர் எஸ் எஸ் சங்கிகள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை அரசு பள்ளிகளிலும் அரசு சொந்தமான இடங்களிலும் நடத்துவதை தடை செய்வதற்காக கர்நாடக காங்கிரஸ் அரசு ஒரு சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பது பாராட்டுக்குரியது. அதே சமயம் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆர் எஸ் எஸ் -ன் இந்து மதவெறியூட்டும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கும் படியாக இந்த சட்டம் இயற்றப்படவில்லை என்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதை காங்கிரஸ் அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.

மேலும் ‘அனுமதி பெறாமல் அரசு நிறுவனங்களில் கல்விக்கூடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தக் கூடாது’ என்று தான் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் அரசின் அனுமதி பெற்று நடத்தலாம் என்றும் இந்த சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அனுமதி கொடுக்கும் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி ஆர் எஸ் எஸ் சங்கியாக இருக்கும் பட்சத்தில் இந்த சட்டத்தால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை காங்கிரஸ் அரசு கவனத்தில் கொண்டு சட்டத்தின் சரத்துக்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று நமது கருத்தை தெரிவிப்பதுடன்
ஆர் எஸ் எஸ் -ன் மதவெறி நடவடிக்கைகளுக்கு தடை போட முயலும் கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சிகளை வரவேற்போம். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் தடைக்குப் போராடுவோம்

குமரன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here