ந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை 2026 மார்ச் மாதத்திற்குள் முற்றாக ஒழித்துக் கட்டப் போவதாக உள்துறை அமைச்சரான அமித்ஷாவும், ஆர்எஸ்எஸ் பாஜக சங்க பரிவார கும்பலும் தொடர்ச்சியாக கொக்கரித்து வருகின்றன. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் ஏவலாளிகளாகவும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளாகவும் செயல்படுகின்ற இந்த தேச விரோத மக்கள் விரோத கும்பல் இந்துத்துவா என்ற பெயரில் முன் வைக்கப்படும் பார்ப்பன பாசிசத்தை முன்வைக்கும் பார்ப்பனியத்தையும், சனாதனத்தையும், நால்வர்ண பாகுபாட்டையும் தனது சித்தாந்தமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த பாசிச பயங்கரவாதிகள் கம்யூனிசத்தையும், புரட்சிகரமான போராட்ட வழிமுறைகளின் மூலம் நிலவுகின்ற அரசு கட்டமைப்பை வீழ்த்துகின்ற நடவடிக்கைகளை வன்முறை என்றும், கலவரங்கள் என்றும், தேசவிரோத நடவடிக்கை என்றும் முத்திரை குத்தி, ஒடுக்குவதற்கும் சட்ட விரோதமாக அவர்களை படுகொலை செய்வதற்கும் முழு உரிமையை பெற்றுள்ளதாக கருதிக் கொள்கின்றனர்.

70களில் இந்தியாவில் வசந்தத்தில் இடி முழக்கமாக உருவெடுத்த விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுவதற்கு உருவான நக்சல்பாரி இயக்கத்தை பற்றி எமது தோழமை அமைப்புகள் வெளியிட்ட வெளியீடு நக்சல் பாரி அரசியலைப் பற்றி சுருக்கமான வரலாற்றை முன்வைக்கின்றது.

நக்சலைட்டுகள் என்றாலும், நக்சல்பாரிகள் என்றாலும் ஏதோ விரக்தி அடைந்த இளைஞர்கள் செய்யும் கலக நடவடிக்கையாக ஊடகங்களும் அரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. “நக்சல் இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் எழுதியுள்ள பிபிசி என்ற ஊடக கார்ப்பரேட் எழுதியுள்ள கட்டுரையானது 70களில் இந்தியாவில் நிலவிய வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வின் காரணமாகவே நக்சல்பாரி இயக்கம் தோன்றியது என உண்மையை திரித்துப் புரட்டுகிறது.

அதே நேரத்தில் சிபிஎம், சிபிஐ போன்ற திருத்தல்வாத கம்யூனிஸ்டுகளும் தங்கள் பங்கிற்கு நக்சல்பாரி இயக்கத்தை பற்றி ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் பல்வேறு அவதூறுகளை தனது வெளியீடுகளாக கொண்டு வந்துள்ளனர்.

பேராசிரியர் விஜய் பிரசாத் முதல் முன்னாள் மாவோயிஸ்டான கோபட் காந்தி, நக்சல்பாரி இயக்கத்தில் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறிய பல்வேறு குட்டி முதலாளித்துவ அறிவுத்துறையினர், இயக்க நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்ட சிலர் நக்சல்பாரி இயக்கத்தின் மீது அவநம்பிக்கையையும், அதிருப்தியையும் பரப்புகின்றனர்.

70களில் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேறிய இந்திய புரட்சியை நேசித்த நக்சல்பாரி தோழர்களை மேற்கண்ட திருத்தல்வாத கம்யூனிஸ்டுகளோ சிஐஏ ஏஜெண்டுகள் என்றெல்லாம் கூட அவதூறு செய்து வந்தனர்.

உண்மையில், 1967 மார்ச் 18 அன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிலிகுரி வட்டத்தை சேர்ந்த நக்சல்பாரி கிராம் எப்படி நாடாளுமன்ற போலி ஜனநாயகம் மூலம் குத்தகை விவசாயிகளுக்கு விடிவு இல்லை என்பதைக் காட்ட வட்டார மாநாட்டில் எடுத்த புரட்சிகர முடிவின்படி செயல்படத் துவங்கியது என்பதை இந்நூலின் பக்கங்கள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன. ஜோதிதார் போன்ற பண்ணையார்கள், தேயிலை தோட்ட முதலாளிகளின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுகிறது.

நிலப்பிரபுக்களுக்கு துணையாக நிற்கும் போலி கம்யூனிஸ்டு மாநில கூட்டணி அரசை எதிர்த்து அக்கட்சியின் வட்டார விவசாயிகள் மாநாடு நடைபெறும் போதே ஹரி கிருஷ்ண கோனார் போன்ற கட்சியின் பிற அமைச்சர்கள் கீழிருந்துதான் முன்முயற்சி வர வேண்டும் என ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தனர். கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற வட்டார தலைவர்கள் இந்த போலித்தனத்திற்கு மாறாக உண்மையிலேயே இப்புரட்சியை துவக்கினர்.

அப்பகுதியில் இருந்து 15 ஆயிரம் விவசாயிகள் முழுநேர ஊழியராக மாறி விட்டனர். கொல்கத்தா நகரத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இப்புரட்சி பற்றிப் படர்ந்த்து. பல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் வெளியேறினர்.

நக்சல்பாரி புரட்சியில் விவசாயிகளும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாகத்தான் இம்மாநாடு அப்பகுதி மக்களையும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்த புரட்சியாளர்களையும் கிராமங்களை நோக்கி திருப்பியது. மாணவர்கள் ஒரு பையில் வேட்டி சட்டையுடன் நகரங்களில் இருந்து கல்வியை துறந்து கிராமங்களை நோக்கிக் கிளம்பினர். பட்டாக்கள், கடன் பத்திரங்கள் பறிக்கப்பட்டதோடு, பண்ணையார்களின் நூற்றுக்கணக்கான தலைகளும் கீழே உருண்டன. அரசின் அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டு மோதல் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.

உடனடியாக இதனை அடக்காவிடில் மாநில ஆட்சி போய்விடும் என்பதால் போலி கம்யூனிஸ்டு அமைச்சர்கள் தமது பதவியை காப்பாற்றும் பொருட்டு நக்சல்பாரிக்கு விரைந்து மூக்குடைபட்டதையும் புத்தகம் விளக்கிச் செல்கிறது.

மத்திய அரசு அதன் பிறகு சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து போன சோவியத் யூனியனுடன் இணைந்து பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. முதலாளிகளுக்கு ஆதரவாக அடிக்கட்டமைப்பை உருவாக்குவதே இந்த பொதுத்துறையின் நோக்கம். இந்நிலையில் தனது ஆட்சிக்கு ஆபத்து என்றவுடன் இந்தியாவுக்கே ஆபத்து என அவசர நிலையை கொண்டு வருகிறார் இந்திரா. அதையும் போலி கம்யூனிஸ்டுகளின் ஒரு பிரிவினர் ஆதரித்தனர்.

60-களின் இடி முழக்கமாக பிறந்த நக்சல்பாரி எழுச்சி சில பின்னடைவுகளை அடைந்திருந்தாலும் இன்றும் இந்தியாவின் விடிவெள்ளியாக மார்க்சிய லெனினிய கட்சியே திகழ முடியும். சிதறுண்ட நக்சல்பாரி குழுக்களில் அடிப்படை நிலைப்பாடுகளில் ஊன்றி நின்று போராடும் கட்சிகளே இன்றும் ஊக்கமாக செயல்படுகின்றன. அரசு அடக்குமுறை காரணமாக முடக்கப்பட்ட நக்சல்பாரியின் குரல் மீண்டும் எழுந்து வரும்.

மேலும் ராஜீவ், அவரது தனியார்மய கொள்கை, பின்னர் வந்த நரசிம்மராவின் ஆட்சியில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை எப்படி பிறப்பெடுத்து இன்று மீண்டும் பொதுத்துறை தாரை வார்க்கப்படுகிறது என்பது வரை சொல்கிறது இந்த புத்தகம். இன்றும் எப்படி நிலைமை மாறி விடவில்லை. மாறாக இன்னும் மோசமாகி உள்ளது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுவதோடு, இதற்கு என்ன தீர்வு என்பதை ஆக்கப்பூர்வமாகவும் முன்வைத்துள்ளது, இப்புத்தகம்.

மறு காலனியாக்கத்தை தீவிரமாக அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அரசியல் கட்சியாக, ஏகாதிபத்திய முதலாளிகளும், உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளும் தேர்ந்தெடுத்த ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆட்சியில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் வறுமை, ஏற்றத்தாழ்வுகளும் சுரண்டல் கொள்ளையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இத்தகைய சூழலில் இந்தியாவில் தீவிரவாத நக்சல்பாரி இயக்கம் என்று முத்திரை குத்தப்பட்டு மாவோயிஸ்டு இயக்கம் முழுமையாக நரவேட்டையாடப்பட்டு வருகிறது

2000 முதல் 2025 வரை, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய வன்முறையில் மொத்தம் 12,041, பேர் உயிரிழந்தனர். இதில் 4,944 மாவோயிஸ்டுகள், 2,717 பாதுகாப்புப் பணியாளர்கள், 4,128 பொதுமக்கள் அடங்குவர். இதில் அடையாளம் தெரியாத நபர்கள் 252. (SATP). என்று நக்சல்பரி இயக்கத்தின் பின்னடைவை எழுதி குதுகலிக்கின்றது பிபிசி.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை புரிந்து கொண்டு சித்தாந்த ரீதியாக கம்யூனிசம் மட்டுமே அதனை வீழ்த்தும் என்பதை முன்வைத்து இன்றளவும் நாடு தழுவிய அளவில் போராடுகின்ற மகத்தான இயக்கமாக நக்சல்பாரி இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகள் அவதூறுகள் பொய் பிரச்சாரங்கள் இயக்கத்தில் உருவான துரோகங்கள் அனைத்தையும் முறியடித்து மீண்டும் நாடு தழுவிய பேரெழுச்சியாக நக்சல் பாரி உருவெடுக்கும் என்பதை உறுதிபட முன்வைக்கின்றோம்.

புதிய தலைமுறை வாசகர்களுக்காக எமது தோழமை அமைப்புகள் மூலம் வெளியிடப்பட்ட நக்சல்பாரி நூலை மீண்டும் வெளியிடுகிறோம்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

000

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் !


நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் இந்தச் சொல்லை ஏதாவது ஒரு வகையில் நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது.

நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அந்தச் சொல்லுக்கு நல்லவிதமான கருத்தைத் தரும் வகையில் அவை ஒரு போதும் செய்திகள் கொடுத்ததே இல்லை.

“நிலப்பிரப்புகள், அரசியல்பிரமுகர்கள் நக்சல்பாரிகளால் சுட்டுக்கொலை”, “நக்சல்பாரிகள் போலீசு நிலையங்களை தாக்கி துப்பாக்கிகள் பறிமுதல்”, “நக்சல்பாரிகள் வைத்த நிலக்கண்ணி வெடித்து போலீசார் பலி”, “ரயில்நிலையவங்கள், பாலங்களைத் தீவிரவாதிகள் தகர்த்தனர்”, “வெடிகுண்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் கைது”, “போலிசுடன் நடந்த மோதலில் நக்சல் பாரிகள் கொல்லப்பட்டனர்”.

– இப்படியான செய்திகளைக் கொண்டு நக்சல்பாரிகள் என்றாலே நோக்கமற்ற, சமூக விரோத பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்ற எண்ணம் பரப்பப்படுகிறது.

“தனிநபர் அநீதிக்கு இலக்கானவர்கள், வேலை வாயப்பற்ற இளைஞர்கள் நக்சல்பாரிகளாக மாறி தவறாக வழிநடத்தப்பட்டு அப்பாவி மக்களையும் சமூகத்தையும் பழிவாங்கத் துடிப்பவர்கள்” என்று கோமல் சுவாமிநாதன், கமலஹாசன் போன்ற சினிமாக்காரர்களால் கொச்சைப்படுத்தப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.

“சமூக விரோதிகள்”, “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”. “நக்சலைட்டுகள்”, நக்சல்பாரிகள்”, “தீ கம்யூனிஸ்டுகள்”, இப்படிப் பலவாறு எதிரிகளால் குறிப்பிடப்படும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் எவரும் இதனாலெல்லாம் வருந்தவோ, வெட்கப்படவோ கிடையாது.

ஏனென்றால் சாவுக்கு அஞ்சாதவர்கள்தாம் நக்சல்பாரிகள். “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்படுவதில் இருந்து பிழைத்தவர்களைப் பிடித்து வந்து குற்றுயிரும் குலையுயிருமாக வழக்குமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் நக்சல்பாரிகள் சொன்னார்கள் “ஆம்! நாங்கள்தான் பண்ணையார்களைக் கொன்றோம்; மக்கள் எதிரிகளை அழித்தொழிப்பது குற்றமில்லை! தூக்குத் தண்டனையா, கொடு! தீர்ப்பை முடிவு செய்துவிட்டு விசாரணை என்று ஏன் நாடகமாடுகிறாய்?” என்று கலகக் குரல் எழுப்பினார்கள்.

ஆகவே, எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது.

ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.

ஆனால் இதற்குப் பெயர் ஏன் நக்சல்பாரி என்று வந்தது?

நக்சல்பாரி –

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறுகிராம்ம். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ளது அந்த கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள் மிட்டா மிராசுகள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்கு முறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டுள்ள இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.

அன்று, அரசாங்கக் குறிப்பேடுகளில் மட்டுமே அறியப்பட்ட இருள்கப்பிய கிராமமாகத்தான் இருந்தது, அந்த நக்சல்பாரி.

ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. உலகின் எல்லா மொழி அகராதியிலும் அதற்குத் தனி விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இனிமேலும் நக்சல்பாரி என்ற சொல் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை.

நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் அச்சம் கொள்ள வைக்கிறது.

பண்ணை நிலப்பிரபுக்களையும், கந்து வட்டி லேவாதேவிக்காரர்களையும், கொள்ளை வியாபாரிகளையும், அதிகார வர்க்கத்தினர்களையும் குலைநடுங்கச் செய்கிறது.

ஏனென்றால் நக்சல்பாரி என்பது இப்போது,

– ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது.

– ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது.

– நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது.

– நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது.

– எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது.

– உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாகத் தெரிகிறது.

நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும் அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது.

அது இப்படித்தான் நிகழ்ந்தது.

1871-ம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் முதலாளிகளின் அரசு அமைப்பைத் தகர்த்து பாரிசு கம்யூன் என்னும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினார்கள். அது இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு தோல்வியுற்றாலும் அதன் மூலம் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வதற்கான முன் மாதிரி ஒன்றை உலகுக்கு எடுத்து காட்டினார்கள்.

அதைப் போலத்தான் “உழுபவனுக்கே நிலம்,உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன் வைத்து, 1967-ம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி, விவசாயிகள் இந்தியப் புரட்ச்க்கான போர்ப் பிரகடனம் செய்தார்கள்.

அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.

மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சுமார் முன்னூறு சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய மூன்று கிராமங்கள் நக்சல்பாரி, கரிபாரி, பன்சிதேவா ஆகியவை. வடக்கே நேபாளம், கிழக்கே சிக்கிம், பூடான், தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இவற்றுக்கு இடையே வடகிழக்கிந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, நக்சல்பாரி கிராமம்.

படிக்க:

 மார்க்சிய லெனினிய பாரம்பரியத்திலிருந்தும்,  நக்சல்பாரி அரசியலிலிருந்தும்  அதிகாரப் பூர்வமாக வெளியேறிய வினவு கும்பல்!

 மே 25: நக்சல்பாரி எழுச்சியே இன்றைய தேவை!

நக்சல்பாரி விவசாயிகளில் பெரும்பாலும் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்த “ஜோத்திதார்” எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது அக்கிராமம் முழுவதும்.

ஜோத்திதார்களின் ஆதிக்கம் கண்டஞ்சி எப்போதும் சும்மா அடங்கிக் கிடந்தவர்கள் அல்ல நக்சல்பாரி கிராம மக்கள். 1951- 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் மூலம் வலுவான விவசாயிகள் சங்கமாகவும், கம்யூனிசக் கட்சி அமைப்பாகவும் அணி திரண்டனர். 1955 – 57 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தேயிலைத் தோட்ட முதலாளிகளின் அடியாட்களாகக் கொண்டு வரப்பட்ட போலீசுப் படையைப் பின்வாங்கும்படி விரட்டியடித்தவர்கள்.

அங்கே தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரண்டதும், தொழிலாளர்- விவசாயிகள் கூட்டணி உருவானதும் இயல்பாகவும் அவசியமாகவும், தவிர்க்கவியலாத்தாகவும் அமைந்தது.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளர்களையே தங்களது விவசாய விளைநிலங்களில் குத்தகைதார்ர்களாகப் பயன்படுத்தினர். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோது விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி ஏய்த்தனர். ஒருபுறம் தாங்கள் நினைத்த போதெல்லாம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். மறுபுறம் ஜோத்திதார்கள் பெருமளவு விவசாயிகளை தமது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றினர்.

1958 – 62 ஆகிய ஆண்டுகளில் நக்சல்பாரியில் விவசாயிகளின் இயக்கம் மேலும் போர்க்குணமடைந்தது. நில வெளியேற்றத்துக்கு எதிராக “குத்தகைதார விவசாயிகளே அறுவடையைக் கைப்பற்றுவது, பயிர்களைக் காப்பதற்காக ஆயுதமேந்துவது, போலீசின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராயிருப்பது” என்று நக்சல்பாரி விவசாயிகளுக்குத் தலைமையேற்றிருந்த கம்யூனிஸ்டுக் குழு வழிகாட்டியது.

1966–ல் சிலிகுரி பகுதியில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 16 நாள் வேலை நிறுத்தம், அடுத்த ஆண்டு வெடிக்கக் காத்திருந்த நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியில் முன்னணிப் பாத்திரமாற்றத் தொழிலாளர்களைத் தயார் செய்தது.

1967-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற அரசியலில் கூட முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சர், போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார்கள்.

நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முனனும் பின்னும் வாக்குறுதிகிகளை வாரி வழங்கினர், போலிக் கம்யூனிஸ்டுகள். அவர்களது நிலம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த அரே கிருஷ்ண கோனார் அதையே உறுதிசெய்ததோடு, நில விநியாகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழ் இருந்து “முன் முயற்சி” எடுக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தார்.

கீழிருந்து கட்டவிழ்ந்து கிளம்பும் விவசாயிகளின் “முன் முயற்சி” போலி மார்க்சிஸ்டுகளின் முகத்திரையைக் கிழித்துவிடும், அவர்களுடைய பதவி நாற்காலியையே பறித்து விடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்பு வந்தது. ஆனால் ஒரு துண்டு நிலம் கூட நிலப்பிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்படவில்லை. வழக்கம்போல நிலங்கள் எல்லாம் பினாமி பெயர்களுக்கு மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான வழக்குகளும், வழக்கு மன்றத் தடையுத்தரவுகளும் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீது போடப்பட்டன. அதிகாரவர்க்கம் நிலப்பிரபுக்களுக்குத் துணை நின்றது.

“பினாமி பெயரால் நடந்துள்ள மோசடியான மாற்றங்களைப் பற்றி அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தாலும் நீதிமன்றங்களாலும் காகிதக் கட்டுக்களாலும் ஆவணங்களாலும் போடப்படுகின்ற தடங்கல்கள் ஏராளம், ஏராளம்” என்று புலம்பினார் அரே கிருஷ்ண கோனார்.

மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், வர்க்கப் போராட்டத்தின் கருவியாக அரசாங்கத்தைப் பயமன்படுத்துவதற்காகவுமே பதவியேற்பதாகக் கூறிக் கொண்ட அந்தப் போலி இடது சாரிகளால் எதையுமே செய்ய முடியவில்லை.

இன்னொருபுறம், ஏராளமான குத்தகை விவசாயிகளை நில வெளியேற்றம் செய்வது அதிகரித்தது. அவற்றைத் தடுக்கவோ, பண்ணை நிலப்பிரபுக்களிடமிருந்து சட்டப்படியான உபரி நிலங்களைக் கைப்பற்றி வாக்களித்தபடி கூலி, ஏழை விவசாயிகளுக்கு வழங்கவோ இல்லை. அப்படிச் செய்தால் தரகு அதிகார முதலாளிகள் – நிலப்பிரபுக்களின் கருவியான மத்திய அரசு இவர்களின் மாநில அரசை பதவி நீக்கம் செய்துவிடும் என்று அஞ்சினர்.

படிக்க: 

 மே-25: நக்சல்பாரி எழுச்சியின் 57 –ம் ஆண்டு! மறையாது மடியாது நக்சல்பரி!

 நக்சல்பாரி கதை என்ற அரச முலாமுடன் வெளிவந்திருக்கும் படம், ரத்தசாட்சி! | ராஜசங்கீதன்

பேசாமல் மனுக்களை சமர்ப்பித்து விட்டு பொறுமையாகக் காத்திருக்கும்படி விவசாயிகளுக்கு உபதேசம் செய்தார்கள், போலி மார்க்சிஸ்டு அமைச்சர்கள். மேற்கு வங்க ஐக்கிய முன்னணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாகாமல் தடுப்பதே விவசாயிகள் உட்பட எல்லா இயக்கங்களின் கடமையாக இருக்கவேண்டுமென அறிவுறுத்திவந்தனர்.

அரசியல் நிர்ணயச் சட்டம், வழக்குமன்றம், அதிகார வர்க்கம் ஆகியவற்றிக்குக் கட்டுப்பட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்வதா, அல்லது இவற்றை மீறி உபரி, குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்து விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதா? தங்களது பதவியா, விவசாயிகளுக்கு நிலமா? இரண்டிலொன்றை தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி போலி இடதுசாரிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் தமது வர்க்க பாசத்தை, வர்க்க குணத்தை, துரோகத்தனத்தைக் காட்டிவிட்டார்கள். அரசாங்கப் பதவிதான் தமக்கு அவசியமானது, அதைக் காப்பதற்காக உழைக்கும் மக்களின் நலனைப் பலியிடவும், தாங்களே அவர்களை ஒடுக்கவும் துணிந்து விட்டார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் முழங்கி வரும் முற்போக்கு, சீர்திருத்தம் எல்லாம் வெறும் மோசடிகள் தாம் என்பதற்குச் சாட்சியமாக அமைந்தது நக்சல்பாரி உழவர்களின் எழுச்சி.

மார்ச் – 18, 1967 சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணிக்கு, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.

“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். பறிமுதலும் விநியோகமும் செய்யும் அதிகாரம் விவசாயிகள் கமிட்டிகளுடையதுதான். இதைச் செய்ய வேண்டுமெனில் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும். நிலப்பிரப்புத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்பது நிலப்பிரபுக்களை எதிர்ப்பதுடன் முடிந்துவிடாது; அவர்களுக்கு ஆதரவாக வருகின்ற மத்திய, மாநில அரசுகளையும் நாம் எதிர்த்து நின்றாக வேண்டும்.

எனவே ஒரு நீண்டகாலப் போருக்கு நாம் தயாராக வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி தாலுகா செயலர் ஜங்கல் சந்தாலும், ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அழைப்பை பெரும் எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.

(நாளை தொடரும்…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here