லகம் முழுவதும் பிழைப்புத் தேடி ஒரு நாட்டிற்குள்ளேயே தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறி வாழ்கின்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக இருந்தாலும் சரி! நாடு விட்டு நாடு சென்று வேலை செய்கின்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக இருந்தாலும் சரி! சமகாலத்தில் கொடூரமான உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

எந்த அடிப்படை வசதியுமற்ற வியர்வைக்கூடங்கள் என்று சொல்லக்கூடிய நவீன கான்கிரீட் கூடுகளில் அடைக்கப்பட்டு அவர்களின் உழைப்பு சக்தி பல மடங்கு உறிஞ்சப்படுகிறது என்பதைத்தான் சமீபத்தில் குவைத் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பலியான தொழிலாளர்களின் அவல வாழ்க்கை அம்பலப்படுத்துகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக போராடி ’8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற அறிவியல் பூர்வமான வாழ்க்கையை பெற்ற உழைப்பு சக்திகளில் பிரதானமான மனித இனம். மீண்டும் ஒரு நூறு ஆண்டு ஆவதற்குள் முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறைகளில் நடத்தப்பட்ட கொடூரமான வாழ்க்கை நிலைமைக்கு திரும்பவும் செல்ல பணிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவிற்கு 120 பில்லியன் அமெரிக்க டாலர் அன்னிய செலாவணியை ஈட்டி தருவதில் முன்னிலை வகிக்கின்ற மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த உழைப்புச் சுரண்டலில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள தொழிலாளர்களை விட சராசரியாக கூடுதலாக சம்பளத்தை பெறுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த அதிக சம்பளத்தை பெறுவதற்கு சித்திரவதை மிகுந்த வாழ்க்கையை அன்றாடம் அனுபவித்து வருகிறார்கள்.

தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு, தான் வசித்து வந்த வீட்டை விட்டு, தனது உறவுகள் மனைவி, மக்கள் மற்றும் சுற்றத்தார் அனைவரையும் விட்டு பிழைப்புக்காக இன்னும் சொல்லப்போனால், அதிகபட்ச விலைக்கு தனது உழைப்பு சக்தியை விற்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அலை அலையாக படையெடுக்கிறார்கள் இந்திய தொழிலாளிகள்.

அவர்களில் அதிகமாக செல்வது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்துதான் என்பது சமீபத்திய காலம் வரை நீடித்த கொடுமையான வாழ்க்கை அவலமாகும். பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய இந்தியா என்று அழைக்கப்படும் உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இந்தியாவிற்குள் வேலைவாய்ப்பைத் தேடி தென்னிந்தியாவிற்கு படையெடுக்கிறார்கள் இளம் தொழிலாளர்களான புலம்பெயர் தொழிலாளர்கள். தென்னிந்தியாவில் உள்ளவர்கள் அதிக சம்பளத்தை தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் படையெடுக்கிறார்கள்.

நாட்டின் வருமானத்தில் கணிசமான தொகையை தனது படிப்புக்காக பயன்படுத்திக் கொள்கின்ற மேட்டுக்குடிகள் மற்றும் மேட்டுக்குடிகளாக உயர விரும்புகின்ற குறிப்பிட்ட சதவீதம் உள்ள மேல் சாதிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை தேடி செல்வதும் படிப்படியாக அந்த நாட்டிலேயே பிரஜைகளாக மாறி விடுவதும் நடந்து கொண்டிருக்கும் சூழலில் தினக்கூலி தொழிலாளர்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகள், நிரந்தரமற்ற வேலைகளில் துன்பப்படுகின்ற தொழிலாளர்களின் வாரிசுகள் போன்ற அனைவரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடி செல்கிறார்கள்.

இவ்வாறு வேலைக்கு செல்பவர்கள் ஒரு ஏஜென்ட் மூலம் விசா பெற்று குறிப்பிட்ட காலத்திற்கு பணியாற்றுகின்ற ஒப்பந்தத்தின் கீழ் செல்கிறார்கள். அவ்வாறு செல்பவர்களின் பாஸ்போர்ட் விமான போக்குவரத்து மற்றும் தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பு அந்த ஒப்பந்ததாரருக்கு உள்ளது. இந்த ஒப்பந்ததாரரை கஃபீல் என்று அழைக்கிறார்கள்.

ஒப்பந்ததாரர்கள் சொந்த நாட்டில் உள்ள போதே உழைப்பாளிகளை எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள். பணியிடத்தில் எந்த பாதுகாப்பு வசதியுமின்றி, எந்த அடிப்படை வசதியுமின்றி அவர்களின் உழைப்பு சக்தியை சக்கையாக பிழிந்து எடுக்கிறார்கள் என்பதை கண்ணெதிரே பார்க்கின்றோம்.

கண்காணாத தொலைவில் மொழி, இனம், இடம் போன்ற எந்த புரிதலும் இல்லாத சூழலில் ஒப்பந்தத்திற்காக செல்கின்ற தொழிலாளர்கள் எந்த அளவிற்கு கொடுமையாக நடத்தப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே மனம் பதறுகிறது.

குவைத்தில் நடந்த விபத்தும் இப்படிப்பட்டது ஒன்றுதான். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 196 பேர் ஒரே இடத்தில் கும்பலாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது அதிலிருந்து வெளியேறுவதற்காக எந்த வசதி வாய்ப்புகளும் இல்லை. மொட்டை மாடிக்குச் சென்று தப்பி பிழைக்கலாம் என்றாலும் அதற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு இருந்தது என்ற காரணங்களினால் இந்த கொடூரமான படுகொலை நடத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது தனிநபர்களிடம் பல மடங்கு அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்கின்றனர். ஒரு தொழிலாளியின் பெயரில் போடப்படும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை அந்த தொழிலாளிக்கு கிடைப்பதே இல்லை. ஒப்பந்த தொழிலாளிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் குறைந்த கூலிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறார்கள் என்பது தனிக்கதை..

இதை எதிர்த்து போராட முடியாது இந்திய தூதரகம் அங்கிருந்து நாங்கள் வெளியேறுகிறோம் என்று கூறினால் சில உதவிகளை செய்வார்களே தவிர சட்டப்பூர்வமான வழிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஒரு போதும் வலியுறுத்துவதில்லை.

தொழிலாளர் நலச் சட்டங்கள், பாதுகாப்பு வசதிகள் போன்றவை அனைத்தும் ஏட்டளவில் இருந்தாலும் அதனை அமல்படுத்துவதற்கு போராடும் சூழலும் இல்லை, போராடினால் அதைக் கேட்பதற்கு நியாயமான அரசும் அங்கு இல்லை என்கின்றார்கள் மனித உரிமை போராளிகள்.

தனியார் பள்ளி கொள்ளையர்களின் லாப நோக்கத்திற்காக கும்பகோணத்தில் நடந்த தீ விபத்து எப்படி மழலைகளை கருக்கியதோ அதேபோன்று குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ள இந்த தீ விபத்தானது இளம் தொழிலாளர்களை கருக்கியுள்ளது.

தனது வாழ்க்கை தேவைக்காக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தொழிலாளர்களின் அவலம் ஏகாதிபத்திய முதலாளித்துவ காலகட்டத்தின் கொடூரமான உழைப்பு சுரண்டலுக்கு துலக்கமான எடுத்துக்காட்டாகும்.

நாம், ’குறைந்தபட்ச கூலி, பணி பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே!’ என்று போராடிக் கொண்டிருக்கும் சூழலில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ’உயிரோடு எங்களை கொன்று புதைக்காதே! குறைந்தபட்ச வசதிகளுடன் சுவாசிக்கவும், நல்ல குடிநீரை குடிக்கவும் உயிர் வாழவும் அனுமதி கொடு!’ என்று போராடுகின்ற சூழலிலேயே உள்ளனர் என்பது தான் மிகப் பெரும் துயரமாகும்.

  1. படிக்க:

♦ சர்தாம் நெடுஞ்சாலை சுரங்க விபத்து! பிடில் வாசிக்கும் பிரதமர் மோடி!

♦ ரயில் விபத்தும் சங்கிகளின் கலவர புத்தியும்!

தனது வாழ்க்கையை நடத்துவதற்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது என்பதை தாண்டி உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்தில் பணிபுரிகின்ற ஒப்பந்த தொழிலாளர்களாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராக போரிடுகின்ற இஸ்ரேல் ராணுவத்தில் பணிபுரிகின்ற ஒப்பந்த தொழிலாளர்களாகவும் மாறுகின்ற அளவிற்கு தான் இந்தியாவில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை அவலம் உள்ளது.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்ற மோடியின் பித்தலாட்டம் இருக்கின்ற வேலையை பறித்து விட்டது என்பது மட்டுமின்றி நிலமற்ற கூலி விவசாயிகளின் வீட்டு பிள்ளைகளை குறைந்த கூலிக்கு தனது உழைப்பு சக்தியை விற்கின்ற நவீன கொத்தடிமைகளாக மாற்றுவதற்கு வழி வகுத்துள்ளது.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொண்டு எதிர்த்து போராடுவதும், அதற்குரிய புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து செயலாற்றுவதும், அதன் மூலமாக பாசிச எதிர்ப்பு தொழிலாளர் முன்னணியை உருவாக்கி, உள்நாட்டில் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கும், வெளிநாட்டில் உழைப்பு சக்தியை கொள்ளையடிக்கின்ற நிறுவனங்களுக்கும் எதிராக போராட வேண்டும் என்பதுதான் இன்றைய தேவை ஆகும்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here