சிறை: அரசின் உண்மை முகத்தை மறைபொருளாக காட்டிய கண்ணாடி!
”அப்துல்ங்கற பேரோட நான் தப்பிச்சு போய் என் காதலியோட எப்படி சார் இங்க வாழ முடியும்? பயமாயிருக்கு சார். அதனாலதான் தப்பிக்கலை”

விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் ‘சிறை’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். அவரும் இயக்குநரும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

பெரும்பாலானோர் படத்தை பற்றி நேர்மறையாகத்தான் பாராட்டி எழுதியுள்ளனர். நாமும் இப்படைப்பை மனதார பாராட்டுகிறோம். திரைக்கதையின், இசையின், ஒளிப்பதிவின், நடிப்பின் அழகியலை பலரும் பாராட்டி எழுதி விட்டனர். எனவே நாமும் கூடுதலாக அதையே எழுத தேவையில்லை. கதாநாயகி என்றாலே சிகப்பு நிறத்தில் இருந்தாக வேண்டும், கவர்ச்சியாக நடித்தாக வேண்டும் என்பதை சமீபத்திய படங்கள் மாற்றி வருகின்றன. அந்த வகையில் கதாநாயகியின் தேர்வு கவனத்தை பெறுகிறது.

ஆனால் இப்படம் சங்கிகளில் சிலருக்கு ”முஸ்லீம் தலையில் தூக்கி வெச்சு ஆடுறாங்க” என்ற ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாம் முன்வைக்கப்படும் பாராட்டும் விமர்சனமும் ஏன்? எதற்கு ?எப்படி? என்பதையும் பார்ப்போம்.

அரசின் உண்மை முகமான சிறை!

சிறை திரைப்படத்தில் மையமாக வருபவன் ஒரு கைதி. வேலூர் சிறையில் ஐந்து ஆண்டுகளாக விசாரணைக்கைதியாகவே இருக்கிறான் அப்துல் ரௌஃப். இவனைப் போலத்தான் கோவை குண்டுவெடுப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டுகள் வதைபட்டனர். ஆண்டுகள் பல கடந்தும் அப்துல் வழக்கை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு தராதது ஏன் என்ற கேள்வியை படம் நேரடியாக எழுப்பவில்லை. நாம் எழுப்ப வேண்டும்.

ஒரு குற்றம் நடந்தால் காவல்துறை தான் சந்தேகிக்கும் அனைவரையும் விசாரித்து, தான் குற்றவாளி என கருதும் நபர்களின் மீது வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும். அவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பு.

நீதிமான்கள் தமது கடமையை சரியாகத்தான் செய்கின்றனரா என்றால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. இந்திய சிறைகளில் தண்டனை பெற்றவர்களைவிடவும் விசாரணைக்கைதிகளின் எண்ணிக்கைதான் கூடுகிறது.

நாம் நீதிமன்றத்தின் அதிக பணிச்சுமை என்று கடந்து போக முடியாது. வேலையை முடிக்காதவர்களுக்கு எதற்காக சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறைகள்? ஒரு நாளைக்கு 8 மணி நேரம்கூட வேலை செய்ய முடியாதா என நாம் கேள்வி எழுப்பியாக வேண்டும். கூடுதல் நேரம் விசாரணையை நடத்தினால் குறைந்தா போய்விடுவார்கள்? ’மக்கள் நல’ அரசின் முகத்திரையை கிழிப்பதாகவே சிறைச்சாலைகளின் எதார்த்தம் உள்ளது. அதையும் பார்ப்போம்.

சட்டம் அனைவருக்கும் சமமில்லை!

அரசாங்கம் ஏன் சரியாக விசாரணை நடப்பதை, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யாமல் தட்டிக்கழிக்கிறது என்ற கேள்வியை படம் நேரடியாக எழுப்பவில்லை. ஆனால், இந்த படத்தை பார்த்து சிந்திப்பவர்களின் மூளை நிச்சயம் இக்கேள்வியை எழுப்பவே செய்யும்.

வல்லரசு என மார்தட்டும் இந்தியாவானது தனது குடிமக்களின் வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்ல மறுக்கிறது. அரசும் அதன் உறுப்பான நீதிமன்றமும் நீதியை நிலைநாட்ட விரும்பவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ஒருவன் குற்றவாளியா நிரபராதியா என்பதை தீர்மானிக்காமலேயே பத்து அல்லது பதினைந்து வருடங்கள் வரை விசாரணைக் கைதியாக வதைப்பதைத்தான் இந்திய அரசு செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இப்படி வதைபடுகின்றனர். அதில் ஒரு துளியை சிறை திரைப்படம் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

வங்கிக்கடன் மோசடியில் பல்லாயிரம் கோடிகளை சுருட்டுபவர்களும், கனிமங்களுக்காக பல லட்சம் மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பவர்களும், சுற்றுச்சூழலை கெடுத்து கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு மக்களை பலியிட்டவர்களும் இப்படியா நடத்தப்படுகின்றனர்? கார்ப்பரேட் கிரிமினல்களில் ஒருவர்கூட ஆண்டுக்கணக்கில் விசாரணைக்கதியாக சிறையில் வதைபட்டதில்லை.

விதிவிலக்காக கண்துடைப்புக்காக கைதுசெய்து சிறையில் அடைத்தாலும், அதிலும் முதல்வகுப்பு தரப்படுகிறது. ஜெயாவோ, சசிகலாவோ, சங்கராச்சாரியோ விசாரணையின்போது தங்க வைக்கப்பட்டதை சிறை என்றா அழைக்க முடியும்?

தம்மிடம் பிடிபட்டுள்ள கைதிகளை ஒப்படைக்க ஐரோப்பிய நாடுகள் நிபந்தனைகள் விதித்துள்ளன. அந்நிபந்தனைப்படி இந்திய அரசானது மல்லையா, முகுல்சோக்ஷிகளை அடைக்க திகார் சிறையில் சொகுசு அறைகளை கட்டி வைத்துள்ளதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். இப்படத்தில் கையில் காசு இல்லாமல் சிவகங்கை நீதிமன்றம் போவதற்காக வேலூர் சிறையிலிருந்து அழைத்து வரும் கைதியை காட்டியதன் மூலம் சிறைத்துறையின் வர்க்க சார்பை மறைபொருளாக உணர்த்துகிறது.

வர்க்க வெறுப்பும், மத வெறுப்பும்!

ஸ்டெர்லைட் முதலாளியோ, யூனியன் கார்பைடு முதலாளியோ, கார்ப்பரேட்டு கயவர்களோ இப்படி விசாரணைக் கைதியாக வதைபட்ட வரலாறு உண்டா? உலக நாடுகளில் பொதுவாக சிறையில் வதைபடுபவர்கள் உரிமையை கேட்கும் சாமானிய உழைக்கும் மக்களும், அவர்களின் நலனுக்காக குரல் எழுப்புபவர்களும்தான்.

இந்தியாவிலோ கூடுதலாக, காவி பாசிசத்தின் இலக்காக உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரும்தான் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர். மோடி அமித்ஷா கும்பலை கேள்வி கேட்கும், ஜனநாயகத்திற்காக குரல் எழுப்பும் அனைவரும் தாக்குதல் இலக்காக்கப்படுகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் கார்பரேட் விசுவாசம் மக்களை வதைத்ததென்றால், பாஜக ஆட்சியில் கூடுதலாக காவி பாசிசம் தன் பங்கிற்கு தாக்குதலை தொடுக்கிறது.

படிக்க:

 ஆயிரம் நாட்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உமர் காலித்!

 விடுதலை – பாகம் 2: வெற்றிமாறனின் தெளிவும் வாத்தியாரின் தெளிவின்மையும்!

குஜராத் பாலியல் வல்லுறவு குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். உன்னாவ் வல்லுறவு, படுகொலை குற்றவாளியான பாஜக சட்டமன்ற உறுப்பினரின் ஆயுள் தண்டனை ரத்தாகிறது. இங்கு சட்டத்தின் ஆட்சி இல்லை. வர்க்கத்தின் மத வெறியின் ஆட்சியே நடக்கிறது. அதன் தாக்கம் தமிழகத்தில் குறைவாக உள்ளது என்று நாம் ஏமாந்துவிடக்கூடாது என்பதைத்தான் சிறை திரைப்படம் ஆழமாக பதியவைக்கிறது.

”அப்துல்ங்கற பேரோட நான் தப்பிச்சு போய் என் காதலியோட எப்படி சார் இங்க வாழ முடியும்? பயமாயிருக்கு சார். அதனாலதான் தப்பிக்கலை” என்று ஒரு விசாரணக் கைதி மீண்டும் சரணடைகிறான் என்றால் நாம் வாழும் சமூகம் இஸ்லாமியர்களை எப்படி நடத்துகிறது? மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கவேண்டிய கேள்வி இதுதான்.

திமிருடன் பிறந்த அதிகார வர்க்கம்!

விசாரணைக்கைதி ஒரு இஸ்லாமியன் என்பதாலேயே துப்பாக்கியில் தோட்டாவை பொருத்தி எடுத்து வரும் இந்து காவலாளியை கேள்வி கேட்கும் இஸ்லாமிய ஆய்வாளரின் கதாபாத்திரம் பாராட்டுக்குரியது.

ஒரு நீதிபதி தனது கடமையை செய்யாத தவறை உணர்ந்து விசாரணைக்கைதியிடம் மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் மற்றொரு நீதிபதியோ ஒரு கடைநிலை காவலரோ, ஆய்வாளரோ தனக்கு சட்டம் பற்றி வகுப்பெடுக்கலாமா என கொதிக்கிறார். விளக்கம் தந்ததை கூட குற்றமாக்கி தண்டிக்க விரும்புகிறார். (அ) நீதித்துறையில் இவரைப் போன்றவர்கள்தான் பெரும்பான்மை!

ஆனால் கதாநாயகன் தனது வரம்பிற்குட்பட்டு மனசாட்சியுடன் நடந்து கொள்கிறான். இத்தகையவர்கள் விதிவிலக்குகள் மட்டுமே! நாம் இத்தகைய விதிவிலக்குகளை மட்டும்தான் கொண்டாட முடியும்; திமிருடன் சாமானியர்களிடம் மட்டும் சட்டம் பேசி அடக்கும் போலீசு, நீதித்துறை, சிறைத்துறை உள்ளிட்ட துறைகளையோ, அதில் கோலோச்சும் அதிகார வர்க்கத்தையோ அல்ல. வரம்பிற்குட்பட்டு அரசின் முகத்திரையை கிழித்துள்ள சிறை திரைப்படத்தை வரவேற்போம். உண்மையை மறைபொருளாகவேனும் அம்பலப்படுத்தியுள்ள படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here