இரட்டை எஞ்சின் சர்க்காரால் ஆளப்படும் மாநிலம் என்று சங்கிகளால் குறிப்பிடப்படும் மாநிலம் உத்தர பிரதேசம். இந்த மாநிலத்தில் 2017ல் இருந்து பிஜேபி தான் ஆட்சியில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் இருந்துதான் மோடி மூன்று முறை எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள தசாவா கிராமத்தில் வசிக்கும் லட்சுமினா — ஹரேஷ் தம்பதியினர் நுண்கடன் என்ற பெயரில் வாங்கிய கடனை கட்ட முடியாத காரணத்தினால், பிரசவம் பார்ப்பதற்கான மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால், இரண்டு வயது குழந்தையை ரூ. 20,000 விற்று மேற்கண்ட செலவுகளை செய்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டிலிருந்து பிஜேபியின் ஆட்சி நடந்து வரும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இவர்களுக்கு இதுவரையிலும் ரேஷன் கார்டு கிடைக்கல்லை. எனவே 80 கோடி மக்களுக்கு ஐந்து கிலோ அரிசி /கோதுமை கொடுப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மோடியின் இலவச அரிசி / கோதுமை இவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே இவர்களின் குடும்பம் இரண்டு வேளை உணவு கூட இன்றி, அரை பட்டினி, கால் பட்டினியில் வாடிக் கொண்டிருக்கிறது.
கிராமப்புற மக்களுக்கு ஓரளவுக்கு வருவாயை கொடுக்கக் கூடிய திட்டம் என்று கூறப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அதாவது, 100 நாள் வேலை திட்டத்திலும் இந்தக் குடும்பத்திற்கு வேலை கொடுக்கப்படாததால் (அந்தத் திட்டத்திலேயே இணைத்துக் கொள்ளப்படாததால்) அந்த சொற்ப வருமானமும் இந்தக் குடும்பத்திற்கு கிடைக்காத நிலையில் தான் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத அளவிற்கு இவர்கள் குடும்பம் கொடும் வறுமையில் மாட்டிக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட “ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் என்பது உலகத்திலேயே மிகப்பெரிய திட்டம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைப்பதற்கு மோடி வழி செய்து உள்ளார்” என்று சங்கிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தக் குடும்பத்திற்கு பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு அட்டை இன்னும் கிடைக்கவில்லை.
அந்தப் பகுதியில் அரசு மருத்துவமனை இல்லாத காரணத்தால் அந்தத் தம்பதியினர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லை. எனவே அந்தத் தம்பதியினர் தனியார் மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க சென்றுள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி அன்று குழந்தை பிறந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவத்தை முடித்துக் கொண்டு வெளியே வர வேண்டுமானால் பிரசவம் பார்த்த கட்டணம் ரூ. 4,000 கட்டி விட்டு தான் பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கட்டளையிட்டு விட்டது. (இத்தனைக்கும் இந்த மருத்துவமனையே அரசின் அங்கீகாரம் இன்றி சட்டப் புறம்பாக நடந்து வருகிறது என்பது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது) பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்த குடும்பத்திற்கு கிடைக்காததால் தங்களது இரண்டு வயது குழந்தையை விற்று மருத்துவ செலவை செய்ய வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆக, பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் எப்படி வெத்துவேட்டாக உள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது. அதே சமயம், இந்த திட்டத்தை பற்றி சங்கிகள் எவ்வளவு அயோக்கியத்தனமாக மக்கள் மத்தியில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்து நாறிக் கொண்டிருக்கிறது.
கொடும் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் நுண்கடன் என்ற பெயரில் 25% சதவீத வட்டியில் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி போன்ற ஐந்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் இருந்து சுமார் ரூ.2,00,000 கடன் வாங்கியுள்ளனர். இந்த இரண்டு லட்சம் ரூபாயில் பெரும் பகுதியை கடனை திருப்பிக் கட்டுவதற்கான தவணை தொகையாக கட்டி உள்ளனர்.
அதாவது முதலில் ஒரு கம்பெனியிடம் 30 ஆயிரம் கடன் வாங்கினால் அந்த தவணைத் தொகையை கட்ட இயலாத போது இன்னொரு பைனான்ஸ் கம்பெனியிடம் கடன் பெற்று முன்பு வாங்கிய கடனுக்கான தவணையை அடைத்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து கம்பெனிகளில் கடன் வாங்கி முந்தைய கடன் தொகையை அடைப்பது என்ற நிலையில் கடன்தொகை இப்படி பிரமாண்டமாக அதிகரித்து விட்டது.
படிக்க:
♦ உத்திரப்பிரதேசத்தில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை!
உள்ளூரில் இருக்கும் ஒரு நபர் நேரடியாக வீடுகளுக்கோ அல்லது கடைகளுக்கோ வந்து 10 % வட்டி 15 % வட்டிக்கு கடன் கொடுத்து வசூலித்தால், அதை கந்துவட்டி கொடுமை என்று குற்றம் சாட்டி அந்த நபரை தண்டிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கம்பெனியாக இருந்து கொண்டு 25%, 26% வட்டிக்கு கடன் கொடுத்து மக்களை சுரண்டினாலும் அதை கந்து வட்டி கொடுமை என்று இந்த சட்டம் கூறுவது இல்லை. இந்த சுரண்டலுக்கு இந்த சட்டமே சட்ட பாதுகாப்பு வழங்குகிறது. இதுதான் இந்த சட்டத்தின் யோக்கியதை.
கிராமங்களில் ஏழைகள் பணத்தை ஏமாற்றுவதில்லை. கடனை வாங்கிக் கொண்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்று விடுவதும் இல்லை. உயிரை கொடுத்தேனும் வாங்கிய கடனை கட்டிவிட வேண்டும் என்ற சிந்தனையில் இந்த நாட்டின் ஏழை மக்கள் இருப்பதால் ஏழைகளுக்கு நுண்கடன் என்ற பெயரில் 25 சதவீத வட்டியில் கடனை கொடுத்துவிட்டு வசூலிப்பது என்பது (பிற நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க முடியாத நிலையை விட) லாபகரமானதாக உள்ளதாக பைனான்ஸ் நிறுவனங்கள் கருதுகின்றன.
25 சதவீத வட்டியில் பரம ஏழைகள் கடன் வாங்கி, கொடும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பது தான் பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நிலை. இந்தியா முழுவதும் உள்ள நிலையும் ஏறக்குறைய இது தான்.
இதைப் பற்றி எல்லாம் சிந்திப்பதற்கும் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதற்கும் மோடி – அமித்சா கும்பலுக்கு நேரமில்லை. அவர்கள் நாட்டிற்கு நல்ல காலத்தை (அதாவது அட்சே தின்-ஐ) கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமானால், அம்பானி – அதானி வகையறாக்களுக்கு, இப்பொழுது இருப்பதைவிட, பல மடங்கு நல்ல காலத்தை கொண்டு வருவதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பானி – அதானிகளுக்கு நல்ல காலம் வருகிறது என்றால் நாட்டிற்கே வருவதாகத் தானே அர்த்தம்.
— குமரன்
செய்தி ஆதாரம்: Thewire