ரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அமைச்சரவை புதன்கிழமை ஏற்றுக் கொண்டது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

முதல் கட்டமாக, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். இரண்டாம் கட்டமாக, பொதுத்தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் குறித்த உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டிருப்பது நாட்டில் துடிப்பான ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் முக்கிய படி என்று நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்ததோடு பலதரப்பினருடன் கலந்தாலோசித்து, இந்த மிகப்பெரிய முயற்சியை முன்னெடுத்துச் சென்றதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். தற்போது தங்கள் ஆட்சிக்கு உள்ள எண்ணிக்கை பலத்தைக் கொண்டு இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது எனத் தெரிந்தும் மோடி கும்பல் இதை தூக்கித்திரிய இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மைனாரிட்டியான தனது ஆட்சி பலமாக இருப்பதாக காட்டவும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பிரச்சினையை தொடர்ந்து செய்திகளில் உலாவ விடுவதன் மூலம் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குவதுமாகும். இதற்கு வெகுமக்கள் பலியாகாமல் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தின் நோக்கத்தை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

முன்பிருந்த “ஒரே நாடு ஒரே தேர்தல் “– ஏன் மாறியது?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய அரசமைப்பு சட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்தல் 1952ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகும் 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளிலும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடத்தப்பட்டது.

இருப்பினும், அதற்கிடையே இந்தத் தேர்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது.

இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி 1957ஆம் ஆண்டு கேரளாவில் ஆட்சி அமைந்தது.

அந்த ஆட்சியின் ஐந்தாண்டுக் காலம் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே அரசமைப்பு சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்தது அப்போதிருந்த ஒன்றிய காங்கிரஸ் அரசு. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால் 1960இல் கேரள சட்டமன்றத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டியதானது. ஜனநாயக விரோதமாக மாநில அரசு கலைக்கப்பட்டதன் விளைவாகவே “ஒரே நாடு ஒரே தேர்தல்” சாத்தியமில்லாமல் போனது.

இந்தியாவில் 1967 வரை மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. எனவே அப்போது மத்திய அரசிலும், மாநில அரசிலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்ததால், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது எளிதாக இருந்தது. ஒன்றியத்திலோ மாநிலத்திலோ அரசுகள் கலைக்கப்பட தேவை இல்லாமல் இருந்தது.

செலவை குறைக்கலாம் எனும் பொய்!

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த பிறகு நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது,

“நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரசியல் கட்சிகள், நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான நிபுணர்களை கலந்தாலோசித்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளது,” என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

“தேர்தல் காரணமாக ஏற்படும் அதிக செலவு குறைய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படக்கூடாது. இன்றைய இந்தியாவும், இன்றைய இளைஞர்களும் வளர்ச்சி விரைவாக நடக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தேர்தல் பணியால் வளர்ச்சிக்கு இடையூறு இருக்கக்கூடாது என்று கருதுகின்றனர்.” என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

ஒரே நாடு ஓரே தேர்தலை செயல்படுத்த வேண்டுமானால், மொத்தம் 35 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை.

இதனடிப்படையில், தற்போதைய நிலையில் கூடுதலாக 12 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதே எண்ணிக்கையில் விவிபேட் இயந்திரங்களும் தேவைப்படும்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரம் ஒன்றின் விலை தலா 17 ஆயிரம் ரூபாய் ஆகும்.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு என அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால், தற்போதுள்ள எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படும் என்பதே உண்மை நிலை.

உண்மை நிலை இப்படி இருக்க மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “தேர்தல் காரணமாக ஏற்படும் அதிக செலவு குறைய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படக்கூடாது. இன்றைய இந்தியாவும், இன்றைய இளைஞர்களும் வளர்ச்சி விரைவாக நடக்க வேண்டும்” என்று கூறுவது அப்பட்டமான பொய் என்று வெளிச்சமாக தெரிகிறது.

தேர்தல் நடத்துவதற்கு செலவு கணக்கு பார்ப்பது சரியா?

அப்படியே ஒன்றிய அமைச்சர் கூறுவதுபோல செலவை குறைக்கலாம் என்று யோசித்தாலும் அதைவிட முக்கியமானது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் இறையாண்மை.

படிக்க:

♦ ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் முன்னே! ஒரே கட்சி ஒரே அதிபர் வரும் பின்னே!

♦ தேர்தல் ஆணையர் நியமனம்: ‘ஜனநாயகத்துக்கு’ சாவுமணியடிக்கும் பாசிச பாஜக!

“சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கான உரிமை அந்தந்த மாநில அரசுக்குத்தான் உண்டு. ஒரு மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுவது போன்ற தருணங்களில்தான் மத்திய அரசு அங்கு நடைபெற்று வரும் ஆட்சியைக் கலைக்க முடியும். ஆனால், ஒரே நேரத்தில் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் மத்திய அரசால் முன்கூட்டியே கலைக்க இயலாது,” என்கிறார் ஆச்சாரி.

எந்தவொரு மாநிலத்தின் சட்டமன்றத்தையும் அதன் பதவிக்காலத்துக்கு முன்பாகக் கலைப்பது அரசமைப்பு நெருக்கடியை உருவாக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும் இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானதாகவும், அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானதாகவும் இருக்கும் எனவும் ஆச்சாரி கூறுகிறார்.

அடிக்கடி தேர்தல் நடப்பதால் வளர்ச்சி திட்டங்கள் தேங்குகிறது எனும் மற்றொரு பொய்!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது மட்டுமே நாடு முழுவதும் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும். மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கும் தேர்தல் நடக்கும் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தேர்தல் விதிகள் அமலில் இருக்கும். இந்த நிலையில் நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கும் எனக் கூறுவது பச்சை பொய்.

மாறாக, மாநிலத்தில் தேர்தல்கள் நடைபெறும் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஒன்றிய அரசுக்கும் ஏற்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஐந்து மாநிலத் தேர்தல் நடக்க இருந்ததையொட்டி விவசாயிகள் போராட்டத்துக்கு பணிந்து மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய மோடி அரசு திரும்பப் பெற்றது அதற்கு ஒரு சான்று.

மேலும் மோடி- அமித் ஷா கும்பல் ஒரு நகராட்சி தேர்தல் என்றாலும் தங்கள் அமைச்சர் வேலைகளை பார்க்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதையே முழு நேர பணியாக செய்வது அவர்கள் தவறுதான். அந்த பழியை தேர்தல் மீது போட முடியாது.

உண்மையில் “ஒரே நாடு ஒரே தேர்தலால்” பலன் யாருக்கு?

இந்தியா என்பதே பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதும், பல மொழிகள், பல மதங்கள், பல தேசிய இனங்கள் சேர்ந்த மக்கள் ஒரு நாடாக வாழ்ந்து வருகிறார்கள்.. இந்த வரலாற்று ரீதியான உண்மையை மறைத்து விட்டு அனைத்திலும் ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்று பாசிச முறையில் சிந்திக்கிறது ஆர் எஸ் எஸ் – பாஜக.

ஏற்றத்தாழ்வுகள் என்பது வர்க்க ரீதியாக மட்டுமல்ல, இயற்கை வளங்கள், கல்வி அறிவு, மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி என்று அனைத்திலும் ஏற்றத்தாழ்வு நீடிக்கின்ற நிலையில், “ஒரே நாடு” என்ற கோஷம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் பாஜகவின் புரவலர்களான குஜராத்தின் பார்ப்பன பனியா முதலாளிகளான அதானிகள், அம்பானிகள் விரும்புகின்ற “ஒரே சந்தை” உருவாக்க துடித்துக் கொண்டிருப்பதுதான் முக்கிய காரணம்.

தான்விரும்பிய இந்து இந்தி இந்தியா என்ற அகண்ட பாரத தன்மை கொண்ட ‘இந்துராஷ்டிரத்தை’ அமைப்பதற்கு இந்த நாட்டில் நிலவும் பல்வேறு தேசிய இனங்களில் பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவை பெரும் தடையாக உள்ளது என்று ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறது.

“ஒரே நாடு” என்ற கோஷத்தின் பின்னணியில் பார்ப்பன கும்பலில் கேள்விக்கிடமற்ற ஆதிக்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் நீண்டகால திட்டமாகும். பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளையும், பொருளாதாரத்தையும் அடக்கி ஒடுக்கி, எதிர்ப்பில்லாத ஒரே நாடு உருவாக வேண்டும்” என்பதை தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

இது தேர்தலில் பங்கு பெறும் கட்சிகளின் பிரச்சனை என்று சித்தாந்தம் பேசிக் கொண்டிருந்தால் பாசிச பயங்கரவாத அடக்குமுறையின் கீழ் நாடு மீள முடியாத படுகுழியில் விழுந்து விடும். இந்த அபாயத்தை மக்களுக்கு உணர்த்தவதோடு நாட்டை கார்ப்பரேட்-காவி பாசிசத்தின் கீழ் கொடூரமான அடக்குமுறை நிறைந்த பிரதேசமாக மாற்றுவதற்கு எத்தனித்து வரும் ஆர்எஸ்எஸ்-இன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கண்காணித்து எதிர்த்து முறியடிப்பதும் கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்துவதுமே நமது பிரதான கடமை.

  • பரூக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here