லெபனான் நாட்டில் நேற்று (18.09.2024ல்) வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறி உள்ளன. இதில் தற்போது வரை 20 பேர் கொல்லப்பட்டும், 450 பேர் காயப்பட்டும் உள்ளனர்.

நேற்று முன் தினம்  லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சுமார் 5,000 பேஜர்கள் வெடித்து சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2,800 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் இறக்கும் பட்சத்தில் மேலும் சாவு எண்ணிக்கை உயரக்கூடும். அதேபோல், முகத்தின் அருகில் வெடித்துச் சிதறியதால் கண் பார்வை இழப்பவர்களின் எண்ணிக்கையும், உடல் உறுப்புகளை  இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

ஜியோனிச இன வெறி பிடித்த இஸ்ரேல் அரசானது, பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதையும், அம்மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்து திறந்தவெளி சிறைச்சாலையாக ஆக்கி நசுக்கி வருவதையும், அதற்கு எதிராக ஹமாஸ் அமைப்பினர் ஆயுதம் தாங்கி போராடி வருவதையும், ஹமாசை ஒழிப்பதின் பெயரால் பகிரங்கமான போரை காசாவின் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வருவதையும் நாம் அறிவோம்.

அமெரிக்க ஆசி பெற்ற ஜியோனிச இஸ்ரேலானது, பாலஸ்தீனர்களை கொன்று குவிப்பதை பார்த்து அண்டை நாடுகளான சிரியா, லெபனான், ஈரான், ஏமன் போன்றவை களமிறங்கின. அல்லது, அந்நாடுகளில் செயல்படும் போராளி குழுக்கள் பதில் தாக்குதலில், ஏவுகணை வீச்சில் இறங்கினர். உள்நாட்டு போர் என்ற மட்டத்தில் இருந்து விரிவாகி, வளைகுடா பிராந்தியத்தில் அல்லது மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் போராக விரிவடைந்தது.

தாக்குதலின் அடுத்த இலக்காக ஹெஸ்புல்லா!

காசாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்றதோடு, சுமார் ஒரு லட்சம் பேரை படுகாயப்படுத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம். மக்களோடு சேர்த்து காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளையும் ஏறக்குறைய ஒழித்துக் கட்டிவிட்ட இஸ்ரேல், தனது பார்வையை காசாவில் இருந்து அண்டை நாடுகளின் மீது, குறிப்பாக வடக்கு எல்லையில் உள்ள லெபனானின் மீது, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது திருப்பி உள்ளது. பேஜர் போன்ற மின்னணு பொருட்களை வெடிக்கவும் வைத்துள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியங்களால் ஆதரிக்கப்படும் இஸ்ரேலிய ராணுவமானது, தனது எதிரிகளை வீழ்த்த எந்த எல்லைக்கும்  போகும் என்பதற்கு, தற்போதைய அதிநவீன மின்னணு தாக்குதல் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.

போராளிக் குழுக்களின் திட்டமும்; மொசாட்டின் எதிர் திட்டமும் !

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள், உளவு செயற்கைகோள்கள் உள்ளிட்ட உலக மக்களை கண்காணிக்கும் அதிநவீன வசதிகளை பெற்றுள்ள ஏகாதிபத்தியங்கள், அதன் மூலம் உலக மக்களை எந்நேரமும் தாக்கவும் தயாராகி வருகிறார்கள்.

உளவுக்கு இலக்காகும் பொருட்களில் நாம் பயன்படுத்தும் நவீன ஆண்ட்ராய்டு போன்களும் அடக்கம். எனவே இஸ்ரேலை எதிர்த்து போராடும் குழுக்கள் தமக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு இத்தகைய ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, பழைய தொழில் நுட்பமான பேஜர், வாக்கி டாக்கி போன்றவற்றையே பயன்படுத்தி வருகின்றனர்.

போராளிக் குழுக்களை வீழ்த்த, அவர்கள் பயன்படுத்தும் கருவிகளையே அவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாற்ற, இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட் களமிறக்கப்பட்டுள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் கள்ள மவுனம் சாதித்து வருகிறது.

பேஜர்களை தயாரித்த கோல்டு அப்பல்லோ என்ற  தைவான் நிறுவனமோ தனக்கு இதில் சம்பந்தம் இல்லை; அவுட்சோர்சிங் முறையில் ஐரோப்பாவில்தான் பேஜர்களை தாயாரித்து வாங்கி சப்ளை செய்தோம் என கையை விரித்துள்ளது.

ஆனால், பேஜர் தயாரிக்கும் ஆலையிலேயே 3 கிராம் வெடி மருந்துகளைக் கொண்டு போர்ட் என்ற சாதனத்தை பொருத்தி குறிப்பிட்ட பாஸ்வேர்டு அனுப்பப்பட்டவுடன் வெடிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெடிக்காத பேஜர்கள் பிரித்து ஆராயப்பட்டுள்ளன. இவை நன்கு திட்டமிட்டு, பொருத்தமான நாள், நேரத்துக்காக காத்திருந்து, தொடர் வெடிப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன மின்னணு தாக்குதல் லெபனானோடு நிற்கவில்லை; சிரியாவிலும் பேஜர்கள் வெடித்துச் சிதறியுள்ளன. நன்கு திட்டமிட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள,  போர் குற்றமான இதை, ஐநாவின் செயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் கண்டித்துள்ளதோடு, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலையும் வெள்ளிக்கிழமை கூட்டி விவாதிக்க உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை நமக்கும் இது நடக்கலாம்!

தகவல் தொடர்பு கருவிகளை போராளிகள் மட்டும்தானா  பயன்படுத்துவர்?  உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே சீராக தொழில் நுட்ப வளர்ச்சியின் பலன்களை அனுபவிப்பது இல்லை. உதாரணமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கண்டுபிடிப்புகள் உடனே இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் நுழைவதில்லை இன்னும் ஆப்பிள் ஐபோனையே பார்க்காத கிராமங்களும் உண்டுதான்.

வளைகுடா, மத்திய கிழக்கு நாடுகளின் அரபு ஷேக்குகளும் ஆட்சியாளர்களும் செல்வச்செழிப்பில் புரள முடிகின்றது. ஆனால், எளிய மக்கள் இன்னமும் வல்லரசு நாடுகள் கைவிட்ட தொழில்நுட்பங்களையே பயன்படுத்த முடிகிறது. நமது நாட்டிலும் கூட இன்னும் அடிப்படை மாடல் செல்போன்கள் புழக்கத்தில் உள்ளன தான். இத்தகைய பொருட்களை தனது தாக்குதல் கருவிகளாக ஏகாதிபத்தியங்கள் வடிவமைக்கின்றன என்பதுதான் தற்போது ஆபத்தான புதிய போக்காக உள்ளது.

இன்று லெபனான் மீது ஏவப்பட்டு இருக்கும் இத்தகைய அதி நவீன மின்னணு தாக்குதலானது நாளை உலகின் பிறப்பகுதிகளுக்கும் விரிவாக கூடும். பாசிச அரசுகள் தமது எதிரிகளை ஒழிக்க தம்மை எதிர்க்கும் போராளி குழுக்களையோ அல்லது போராடும் மக்களையோ நசுக்க இத்தகைய தாக்குதல்களை முன்னெடுக்க கூடும். சீல் செய்யப்பட்ட மின்னணு பொருட்களின் உள்ளே வெடிபொருள் இருப்பதை அறியாமல்தான் மக்கள் புழங்குவர்.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் உள்ள தொழில்நுட்பமானது, எந்த நேரத்திலும் அவர்களுக்கு உரிய ஆயுதமாக மாற்றப்பட்டு, மக்களை கொன்றொழிக்க முடியும் என்பதற்கு, வெடித்துச் சிதறிய பேஜர்களும் வாக்கி டாக்கிகளுமே ஓர் உதாரணம்.

நன்கு திட்டமிட்டு, கையடக்க கருவிகளுக்குள் வெடிமருந்துகளை இணைத்து, தான் விரும்பிய நேரத்தில் அதை தூண்டி வெடிக்க செய்ய முடியும் என்பது உலக மக்களை அச்சத்தில் உறைய வைப்பதாக உள்ளது.

நமது வீட்டிலும் மின்னணு பொருட்கள் உள்ளன. அவற்றில் பல்வேறு விதமான மின் கலன்கள் அதாவது பேட்டரிகள் புழக்கத்தில் உள்ளன. அவை இயல்பாக வெடிக்கின்றனவா, அல்லது புதிய வெடிப்புக்கான களச் சோதனை எலிகளாக நாம் பயன்படுத்தப்பட்டு விபத்துக்கள் நடக்கின்றனவா என்ற அச்சத்தை இது உலகெங்கும் பரப்பவே செய்யும். இதையெல்லாம் தூண்டிவரும் ஏகாதிபத்தியங்களும் பல தருணங்களில்  அஞ்சியே நடுங்கியுள்ளனர்.

மின்வெட்டுக்கே அலறிய அமெரிக்கா!

அமெரிக்கா சாதாரண மின்தடைக்கே அஞ்சி, தீவிரவாத தாக்குதலோ என நடுங்கி, விடிய விடிய தெருக்களில் காத்திருந்ததையும்,  விமான நிலையங்களில் பற்பசை, குழந்தைகளுக்கான பால்பாட்டில் உள்ளிட்டவைகளில் திரவ வெடிபொருட்கள் இருக்குமோ என அலறி தடை விதித்ததையும் பார்த்துள்ளோம். கவருக்குள் ரசாயன தூளை வைத்து கடிதம் மூலமே தாக்குதல் தொடுப்பார்கள் என்றும்கூட அமெரிக்க ஆட்சியாளர்கள் அச்சப்பட்டனர். வல்லரசுகளுக்கு ஏன் இந்த அச்சம்? ஏகாதிபத்தியங்கள் நேர்வழியில் செல்வதில்லை. அதன் எதிர்விளைவாக போராளிக்குழுக்களும் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கிறார்கள்.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தை, சுரண்டலை எதிர்த்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் அடுத்தடுத்து புற்றுநோயால் பலியானதை அமெரிக்க சதியாகவே உலகம் சந்தேகிக்கிறது. தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய வேண்டாமா? அதுதான் மத்திய கிழக்கில் பேஜர் வெடிப்பாக நடக்கிறது. இது ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட எதிர்தரப்பை மேலும் மூர்க்கமாக எதிர்வினையாற்றவே தூண்டும். அதையே இஸ்லாமிய பயங்கரவாதமாக ஏகாதிபத்தியங்கள் மடைமாற்றும்.

எந்த எல்லைக்கும் செல்லும் மேலாதிக்க வெறியர்கள்!

மொசார்ட் போன்று இன்று மின்னணு பொருட்கள் மூலம் தாக்குதல் தொடுப்பவர்கள் நாளை காற்றில் விஷத்தையும் பரப்புவார்கள்; குடிக்கும் நீரில் நஞ்சையும் கலப்பார்கள்; உயிர் காக்கும் மருந்துகளில் கூட தமது கைவரிசையை காட்டுவார்கள். தமது மேலாதிக்க வெறிக்காக இன மோதல்களை வளர்த்துவிடும் ஏகாதிபத்தியங்கள் நம்மை போர்ப்பதற்றத்திலும், தாக்குதல் அச்சத்திலும் வைத்திருக்கவே விரும்புகின்றனர். இதன்மூலம் ஒவ்வொரு நாடும் தமது பட்ஜெட்டில் பெரும் தொகையை பாதுகாப்புத்துறைக்கு, ஆயுத தளவாட கொள்முதலுக்கு ஒதுக்குவதை நியாயப்படுத்த தமது கைப்பாவைகளான ஆட்சியாளர்களுக்கு அழுத்தமும் தருகின்றனர்.

இஸ்ரேலுக்கான டிரோன்களை மோடியின் நண்பரான அதானிதான் தயாரிக்கிறார். இதன்மூலம் மொசார்ட்டால் கொல்லப்படும் மக்களின் ரத்தக்கறை இந்தியர்களின் கரங்களிலும் படிகிறது. பேஜர் தயாரித்த ஐரோப்பிய நாட்டினர், ஒப்பந்தத்தை தந்த தைவான் நாட்டினரின் கரங்களையும்கூட கறைப்படுத்துகிறது.

இன்றைய தாக்குதல் மூலம் நாம் புழங்கும் எதையுமே நம்ப முடியாத நிலைக்கு கொண்டு வருகிறார்கள். உலகை இப்படி அதிநவீன தொழில்நுட்ப தாக்குதல்களால் நாசமாக்கவும் , உலக மக்களை அச்சத்தில் உறைய வைக்கவும் துணிந்து உள்ள ஏகாதிபத்தியங்களையும், அவர்களின் அடியாட்களான ஜியோனிச, கார்பரேட்-காவி பாசிஸ்டுகளையும் இனியுமா விட்டு வைப்பது?

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here