உத்திரப்பிரதேசத்தில் தற்பொழுது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தின் புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை, 2024 என்ற ஒரு பாசிச கொள்கையை யோகி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் கொள்கையின் படி மாநில பாஜக அரசை அதன் கொள்கைகளை, திட்டங்களை விமர்சித்து வெளியிடப்படும் செய்திகள் – வீடியோக்கள் சங்கிகளுக்கு பிடிக்கவில்லை எனில் அந்த செய்தியை – வீடியோவை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை பாயும்.
அதேசமயம் பாஜக அரசின் சட்டங்களையும் திட்டங்களையும் புகழ்ந்து செய்தி – வீடியோ வெளியிடுபவர்களுக்கு அவர்களின் செய்திகள் – வீடியோக்கள் எந்த அளவிற்கு மக்களிடையே சென்றடைகின்றனவோ அந்த அளவிற்கு அரசால் சன்மானம் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நபர் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை வருமானமாக அரசிடம் இருந்து பெற முடியும் என்று கொள்கை வரையப்பட்டுள்ளது.
அதாவது, யோகி அரசின் செயல்பாடுகளைப் புகழ்ந்து வீடியோக்கள் வெளியிட்டால் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். மாறாக யோகியின் உண்மை முகத்தை திரைகிழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டால் தண்டனை கிடைக்கும் என்று தற்பொழுது கொள்கை வரையப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் அரசினை பற்றி, அதன் திட்டங்களைப்பற்றி புகழ்ந்து வீடியோ வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உத்தரப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் வழங்கும் அளவிற்கு குறுகிய மனம் படைத்தவர் அல்லவா பாசிச யோகி யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில், நாடுகளில் வசிப்பவர்களாக இருந்தாலும் கூட, அவர்களும் கூட யோகியின் அயோக்கியத்தனங்களை புகழ்ந்து வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் பரப்புவார்களானால் அவர்களுக்கும் கூட ஒரு மாதத்தில் 8 லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது பாசிச ஆதித்யநாத்தின் அரசு.
மேலும் படிக்க:
♦ உத்தரப்பிரதேசமா? – யோகியின் கிரிமினல் கூடாரமா?
♦ பீதியில் மோடி! முட்டுக்கொடுக்கும் மீடியாக்கள்!
பிஜேபியின் ஆட்சியைப் பற்றி புகழ்ந்து வீடியோ வெளியிடுவதற்கும், அதேசமயம் பொய்களை பரப்பி எதிர்க்கட்சிகளை அவதூறு செய்வதற்கும், பொய்களை பரப்பி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி கலவரங்களை நடத்துவதற்கும் ஐடி விங்கை மிகப்பெரும் அளவில் கட்டமைத்து கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பாஜக பயன்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த செலவுகளையும் கூட இனி மக்கள் வரிப்பணத்தில் இருந்து செய்வதற்கு யோக்கியின் பாசிச அரசு தற்பொழுது இந்த கொள்கையை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி யோகியின் அரசை விமர்சிப்பவர்களின் குரல்வளையை நெரிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கும் சட்டபூர்வமான ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது.
பாசிச வெறி பிடித்த காவிகள் இப்படிச் செய்வது எவ்வகையிலும் நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. அதேசமயம் நாடு முழுவதும் இந்தக் கொள்கையை பாசிஸ்டுகள் விரிவு படுத்த மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மக்களை விழிப்படையச் செய்யாமல் பாசிஸ்டுகளின் இது போன்ற ஜனநாயக விரோத செயல்களை முறியடிப்பதற்கு வழியே இல்லை.
— குமரன்