கடந்த ஜனவரி 23 அன்று தமிழ்நாட்டில் மதுராந்தகத்தில் முதல் கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துக் கொண்டு திரும்பினார் குஜராத் – மணிப்பூர் புகழ் மோடி!
அப்போது தமிழ்நாட்டில் இனி இரட்டை என்ஜின் ஆட்சி (பாஜக – அதிமுக) தான் தமிழ்நாட்டிற்கு தேவை என்று ‘முழங்கினார்’. மேலும் ஸ்டாலினின் டப்பா என்ஜின் ஆட்சி இனி தமிழகத்தில் எடுபடாது என ‘வீரவசனம்’ பேசிச் சென்றார்.
விளைவு எதிர்க்கட்சிகள் தத்தம் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்; வறுத்தெடுக்கவும் செய்தனர்.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றாமல் இருந்தால் சரி..!
தற்போது மீண்டும் 2-வது முறையாக தேர்தல் பரப்புரைக்காக எதிர்வரும் பிப்ரவரி 28 மதுரை வருகிறாராம் மோடி.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதனை அறிவிப்பொன்றில் தெரிவித்துள்ளார். காவிப் பாசிசத் தலைவன் தேர்தல் பரப்புரை என்ற பெயரில் வந்து கூத்தடித்து விட்டுச் செல்வதில் நமக்கேதும் ஆட்சேபனை இல்லை.
மதுரை வரும் அவர் திருப்பரங்குன்றத்திற்கும் வருகை தர இருக்கிறாராம். அந்நேர்வில் ‘அப்பன்’ ‘தமிழ் கடவுள்’ முருகனை தரிசித்து விட்டு ஆசி பெற்று செல்வதில் நமக்கேதும் ஆட்சேபனை இல்லை தான். ஆனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்கனவே, இந்து மத வெறியன் ராம.ரவிக்குமார், எச். ராஜா, GRS போன்றோர் அடுத்தடுத்துபற்ற வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டிருக்கும் வேளையில் மோடி (அத்வானி பாணியில்) மலை உச்சிக்குச் சென்று மேற்கொண்டு கூடுதலாக எண்ணெய் ஊற்றி, பற்றி எரிய வைத்து தமிழ்நாட்டை (இரு வேறு கூறுகளாக) கொளுத்தாமல் இருந்தால் சரி.
2026-’27 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பட்டை நாமம் சாற்றிவிட்டு, ரயில்வேக்கு, கல்விக்கு, எய்ம்ஸ்க்கு, இன்ன பிற பெரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், கீழடி அகழாராய்வு அறிக்கையை வெளியிடாமல் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்துத் துரோகம் செய்யும் இக்காவிக் கும்பல் தமிழ்நாட்டில் ‘ஓட்டுப் பிச்சை’க் கேட்பதற்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது? உரிமை இருக்கிறது? மத நல்லிணக்க உறவைக் கெடுத்து கலவரத்தை தூண்டி விடுவதைத் தவிர தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் இக்காவி(லி)க் கும்பல் சாதித்துக் கிழித்ததென்ன?
படிக்க:
♦ எய்ம்ஸ்: மதுரையை தொடர்ந்து தர்பங்கா பொய்யர் மோடி!
♦ இந்தியாவுக்கே தமிழன் பிரதமர், பாஜகவின் சவடால்! தூங்கியவன் தொடையில் திரித்த வரை ஆதாயம்!
ஆனாலும் மோடியும் – அமீத்ஷாவும் தமிழ்நாடு மட்டுமல்ல; மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்ற போவது உறுதி என நாடாளுமன்றத்திலும், வெளியிடங்களிலும் உறுதிபட – (எடப்பாடி கூவுவதை விட) ஓலமிடுகிறார்களே அது பொய்த்துப் போகுமா என்ன?
அது எப்படி சாத்தியம் என்று தானே ஆச்சரியப்படுகிறீர்கள்?
ஆம், ‘எல்லாம் வல்ல எம்பெருமான் ஞானேஷ் குமார் தலைமையிலான (சங்கி) தேர்தல் ஆணையம் அருள் பாவிக்கும் வரை’ பாஜக காட்டில் கன மழைதான்.SIR தில்லுமுல்லு மோசடிகள் ஒருபுறம் இருந்தாலும், EVM வாக்கு இயந்திர மோசடிகள் ஒருபுறம் இருந்தாலும், பீகார் SIR மோசடியை விட ரூ. 40,000 கோடி பணத்தை தண்ணீராய் வாரி இரைத்ததே தேர்தல் வெற்றிக்கு முதற் காரணம் என பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளது போல் தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் பண மழையை மக்கள் மத்தியில் கொட்டி வாக்கு அறுவடை செய்ய காத்திருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் பாஜக காவி(லி)க் கும்பல்.
எனவே எதிர்க்கட்சிகள் எவராக இருந்தாலும், அவர்கள் எப்படிப்பட்ட உதார்களை விட்டுக் கொண்டாலும், சங்கிக் கும்பலின் எதார்த்த ஆபத்து நிறைந்த வழிமுறைகளை கற்றுணர்ந்து மாற்றுத் திட்டங்களுடனான பெரும் போராட்ட வழிமுறைகளைக் கையாளாமல் பாசிசக் காவி கூட்டத்தை வீழ்த்துவதென்பது பெரும் கனவே…!
- எழில்மாறன்







ப..ரா..க்!ப..ரா..க்..! குஜராத் மணிப்பூர் மோடி புகழ்! ப..ரா..க்! ப..ரா..க்!
மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுராந்தகம் வந்ததும் அடுத்தது மதுரைக்கு வரப்போகும் குறித்து நயினார் நாகேந்திரன் அலப்பறை செய்து வருகிறார் என்ற செய்தியும் இரட்டை எஞ்சின் சர்க்கார் பற்றியும் திமுக டப்பா இஞ்சின் என்று விமர்சனம் செய்ததை தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன
பீகார் தேர்தலில் ஏவிஎம் தில்லுமுல்லு வி வி பாட் .எஸ் ஐ ஆர். தில்லுமுல்லு 40 ஆயிரம் கோடி பணத்தை வாரி இறைத்து பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதை அம்பலப்பட்டு போன மோடி குறித்தும் கட்டுரை சிறப்பாக உள்ளது
கட்டுரை ஆசிரியர்:
தோழர். எழில் மாறன்
அவர்களுக்கு நன்றி.