ச்ச்சை… ‘இரக்கமற்றவர்கள்’ எதிர்க்கட்சியினர்!

“சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்காகவும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அளித்ததால் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கிறார்கள். இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கிறார்கள்” என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி  ‘மனம் நொந்து’  பேசியுள்ளார்.

ச்ச்சை… இந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் எவ்வளவு இரக்கமற்றவர்கள். 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து குஜராத் இனப்படுகொலை நடத்திய ஆர்.எஸ்.எஸ்-இன் மாவீரனை கண்கலங்க வைத்து விட்டார்களே…

2024 மே மாதம் முதல் மணிப்பூர் ஒரு வருடமாக பற்றி எரிந்தது. குக்கி பழங்குடிகளும் அவர்களது  குடியிருப்புகளும் சூறையாடப்பட்டன. இரண்டு பெண்கள் நிர்வாணமாக நடுரோட்டில் காலிக் கும்பலால் இழுத்து வரப்பட்டார்கள். அதைப் பார்த்து நாடே நடுங்கிய போது அதைக்கண்டு கண்கலங்காமல் ‘கல்நெஞ்சுகாரனாய்’ நின்று கொண்டிருந்த மோடியை நா தழுதழுக்க பேச வைத்து விட்டீர்களே…

பெஹல்காமில் இந்திய ராணுவத்தின் பல அடுக்கு பாதுகாப்புகளையும் மீறி 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற போதெல்லாம் கண்கலங்காத பா(சி)ச மோடியை கண்கலங்க வைத்து விட்டீர்களே…

ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என தேர்தலில் விதவிதமாக வடை சுட்டு விட்டு,  இளைஞர்கள் வேலை இல்லையே என கேள்வி எழுப்பிய மறுகணமே பகோடா போட்டு பிழைத்துக் கொள்ளுங்கள் என அக்கறையுடன் பட்டதாரிகளை ‘சுய தொழில் முனைவோர்’ ஆக்கிய மோடியை கண்கலங்க வைத்து விட்டீர்களே…

கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பேன் என்று முழங்கி விட்டு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவித்து சுருக்குக் பை காசுவரை சுருட்டிய ‘தங்க தலைவனை’ கண்கலங்க வைத்து விட்டீர்களே…

கொரோனா நெருக்கடி காலத்தில் திடீர் அறிவிப்பு மூலம் இந்தியாவையே முடக்கி தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்காமல் ‘நடக்க வைத்தே சாகடித்த’ மோடியை கண்கலங்க வைத்து விட்டீர்களே…

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் எல்லாம் பட்டினி கிடக்க கூடாது என நமக்கு கொண்டைக்கடலையும், அம்பானி அதானிகளுக்கு செலவுக்கு ‘கொஞ்சமா 2 லட்சம் கோடியையும் வாரிக் கொடுத்த வள்ளலை’ புலம்ப வைத்து விட்டீர்களே….

தமிழ்நாட்டு மாணவர்கள் நன்றாக படித்து ‘முன்னேறி விடக்கூடாது’ என்ற நல்லெண்ணத்தில் கடந்த இரண்டு வருடமாக கல்வி நிதி ஒதுக்காத மோடியை கலங்கடித்து விட்டீர்களே…

இந்தியாவை வறுமை மற்றும் பட்டினி குறியீட்டில் ‘முன்னேற்றியவரும்’ அம்பானி அதானியை பணக்கார பட்டியலில் ‘முன்னேற்றியவரும்’ மோடி. இந்த நன்றி உணர்வை ஒரு போதும் மறக்காதீர்கள்.

ஒரு வருடத்திற்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடிய போதும், ‘அங்கு போய் அவர்களை சந்தித்தால் போராட்டம் கெட்டுவிடும் என்ற காரணத்திற்காக விவசாயிகளை சந்திக்காத மாமனிதர்’ அவருக்கு குழிப்பறிக்கும் எண்ணம் எப்படி தோன்றியது உங்களுக்கு?

அமெரிக்க நிதியாதிக்கக் கும்பல் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நாட்டையும் இயற்கை வளங்களையும் கூறு போட்டு முதலாளிகளுக்கு விருந்து படைத்து விட்டு, தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என நாடு நாடாய் சுற்றிக் கொண்டிருக்கும் மோடியை சீண்ட உங்களுக்கு எவ்வாறு மனம் வந்தது?

நேற்று கூட மோடி மீது கோபத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டு, நாடாளுமன்றத்திற்கு வந்து அவர்கள் என் மீது கோபத்தை காட்டி வீண் பழியை சுமக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் தான் அவர் வரவில்லை. மற்றபடி மோடிக்கு பயமெல்லாம் கிடையாது. இதைவிட மோசமான செயல்களை செய்தபோது பயப்படாதவர் இப்போது ஏன் பயப்பட போகிறார். ஆனாலும் அவருக்கு பயம் உண்டு பத்திரிகையாளர்களை கண்டால்…

இப்பேற்பட்ட மோடிக்கு குழி பறிக்க எண்ணி விட்டீர்களே… மோசக்கார எதிர்க்கட்சிகளே உங்களுக்கு இரக்கமே இல்லையா?

  • நந்தன்

3 COMMENTS

  1. சரியான அம்பலப்படுத்தல்தான். சற்றே செழுமைப்படுத்தி இருக்கலாம் என்பது எனது கருத்து தோழர்.

  2. மோடி அரசு இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என வாக்குறுதி அளித்தார் 1 கோடி என உள்ளது இதை மாற்றவும்

  3. ச்ச்ச… ‘இரக்கமற்றவர்கள் எதிர்க்கட்சியினர்!

    காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கியது குஜராத்தில் 2000 முஸ்லிம்களை படுகொலை செய்தது மணிப்பூரில் ஓர் ஆண்டுக்கு மேலாக தொடர்ச்சியாக பதட்டத்தில் இருப்பது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என மோடி அறிவித்தது. கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் டெபாசிட் செய்வது. கொரோனா காலகட்டத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் நடந்தே சென்று பல பேர் உயிரிழந்தது. தமிழகத்துக்கு கல்வி நிதி தராமல் ஒன்றிய அரசு வஞ்சிப்பது. டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக போராடியும் ஈவு இரக்கமற்ற மோடி போராடும் விவசாயிகளை சந்திக்காதது.பிரதமராக இருக்கும் மோடி பத்திரிக்கையாளர்களை கண்டாலே பீதி அடைவது .போன்ற விவரங்கள் செய்திகளாக உள்ளது. கட்டுரை வடிவமைப்பில் இல்லை.

    ஒரு கட்டுரை தயாரிக்கும் போது அந்த கட்டுரை படிப்பவர்கள் மனதில் நிலை நிற்க வேண்டும் ஆர்வத்தோடு படிக்க தூண்டும் அளவில் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட கட்டுரைகள் தான் வாசகர்களை ஈர்க்கும் மேலும் மேலும் படிக்கத் தூண்டும் வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தங்களுடைய எழுத்தாற்றலையும் படைப்பாற்றலையும் படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    கட்டுரை ஆசிரியர்:
    நந்தன்.அவர்களுக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here