2024 தேர்தலில் தமிழகத்திலிருந்து எப்படியாவது 25 சீட்டுகளை பெற்று விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஆர் எஸ் எஸ், பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது என்பதை வேலூருக்கு வருகை தந்த  அமித்ஷா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அந்த 25 சீட்டுகளை தமிழகம் பாரதிய ஜனதாவிற்கு கொடுத்தால், தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் அதாவது தமிழன் ஒரு பிரதமராக மாற முடியும் என்று நப்பாசை காட்டி உள்ளார்.

இது நடக்குமா? அமித்ஷாவின் கனவு பலிக்குமா? என்று பார்ப்பதற்கு முன்னால் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று பார்ப்பதும், இந்தியாவை தமிழன் ஆண்டால் நல்லது தானே என்று பேசுவதும், அமெரிக்காவில் செயல்படும் கூகுள் என்ற கார்ப்பரேட் கம்பெனியில் சுந்தர் பிச்சை என்ற தமிழர் வேலை பார்க்கிறார் என்று பெருமைப்படுவதும், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் இந்தியர் என்று பெருமைப்படுவதும் எப்படி வடிகட்டிய முட்டாள்தனமோ! அது போல தான் இந்தியாவின் பிரதமராக தமிழர் ஒருவர் வருவார் என்று கூறியவுடன்  மனக் கிளர்ச்சி அடைவதும் முட்டாள்தனமே ஆகும்.

2008 முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது ஈழத்தில் போர் நிறுத்தம், தமிழர்கள் வாழும் பகுதியில் ஈழம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற வேண்டுமானால் தமிழகத்தில் இலை மலர வேண்டும் என்றும், இலையுடன் கூட்டணியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் இலையும் தாமரையும் இணைந்து ஈழத்தை பெற்று வரும் என்றும் தகிடுதத்தம் செய்தார்கள் தமிழின பிழைப்புவாதிகள்.

ஈழப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவது அதனுடைய பிராந்திய மேலாதிக்க கண்ணோட்டத்தில் தானே ஒழிய தமிழீழம் உருவாக வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்து அல்ல என்பதை தொடர்ந்து புதிய ஜனநாயகம் வலியுறுத்தி வந்தது என்பதாலேயே ஈழ ஆதரவாளர்கள், புதிய ஜனநாயகம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மீது ஆத்திரம் கொண்டிருந்தனர்.

அப்போது எவ்வாறு தப்பு கணக்கு போட்டார்களோ அதே போல பாரதிய ஜனதா கட்சியினர் 25 இடங்களை பிடித்தால் தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என்று சவடால் அடித்த உடன், ஆஹா! இதை வைத்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்த்து விடலாம் என்ற நப்பாசையில்  தமிழகத்தில் உள்ள பார்ப்பன கும்பலுக்கும், பாஜகவின் அடிவருடிக் கும்பலுக்கும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க சென்ற 38 முக்கிய புள்ளிகளில் எஸ்ஆர்எம் கல்வி கொள்ளையன் பச்சமுத்து, எம்ஜிஆர் பல்கலைக்கழக கொள்ளையன் ஏசி சண்முகம், நல்லி குப்புசாமி செட்டியார், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஐசரி கணேஷ், மருத்துவ கார்ப்பரேட்டான அப்பல்லோ ரெட்டி போன்ற கல்வி மற்றும் மருத்துவம் போன்ற இதர துறைகளில் மூலமாகவியாபாரங்களின்  தமிழக மக்களுக்கு ‘இலவச சேவை’ செய்து வரும் பெரும் புண்ணியவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.

தலைக்கு இவ்வளவு என்று கூலி கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டத்தின் மத்தியில் கூச்சல் போடுவதற்கு அதிமுக, பாஜக போன்ற இத்தகைய அரசியல் கட்சிகள் சிறிதும் வெட்கப்படுவதே இல்லை. எத்தனை கோடி செலவு செய்கிறார்களோ அத்தனை தலைகளை திரட்ட முடியும் என்பது தான் பொதுக்கூட்டம், மாநாடு போன்றவற்றின் எழுதப்படாத விதியாக உள்ளது.

இப்படி கூலிக்கு கூட்டி வரப்பட்ட கும்பலுக்கு மத்தியில் அண்ணாமலை பெயரை உச்சரித்தவுடன் இரண்டரை நிமிடத்திற்கு ஆரவாரங்களும், கூச்சலும் அடங்க மறுத்தது என்று புளகாங்கிதம் அடைக்கிறது பாஜகவின் ஊதுகுழலான நியூஸ் 24 என்ற ஊடகம்.

தமிழகத்திற்கு அமித்ஷா ஜி வருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டது என்று உச்சகட்ட பிதற்றலில் பேச்சை தொடங்கிய அண்ணாமலை, எதிர்கால பிரதமர் கனவுடன் நாக்கை சுழற்றி பேசியுள்ளார்.

மேடையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, தமிழகத்திற்கு முந்தைய காங்கிரஸ் விட நிதியை உயர்த்தி ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக மார்தட்டிக் கொண்டார். தமிழகம் இந்திய ஒன்றிய அரசிற்கு நூறு ரூபாய் கொடுத்தால் அதில் 30 லிருந்து 34 ரூபாய் கொடுப்பதே பெரிய தர்மம் என்பதைப் போல அமித்ஷா பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

2022 -23 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் இருந்து 2,73 500 கோடி ரூபாய் பல்வேறு துறைகளின்  மூலமாக வரியாக செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடியை கொடுத்ததே மிகப்பெரிய செய்தியாக அமித்ஷா முன் வைக்க பாஜகவின் கைக்கூலிகள், எடுபுடிகள் கைதட்டி வரவேற்றுக் கொண்டிருந்தனர். என்பது அருவெறுக்கத்தக்கதும் கேவலமான நடவடிக்கையும் ஆகும்.

கார்ப்பரேட்டுகள் தமிழகத்தின் வளங்களை, எளிமையாக சுரண்டி செல்வதற்கு பொருத்தமான உள்கட்டுமான வசதிகளான சாலைகள் போடுவது, ரயில் போக்குவரத்தை ஏற்பாடு செய்வது போன்ற அம்சங்களையே தமிழகத்திற்கு செய்த சலுகையாக ஒரு உள்துறை அமைச்சர் பேச முடிகிறது என்றால் தமிழகத்தில் உள்ள மக்களைப் பற்றி ஒன்று முட்டாள்கள் என்று கருத வேண்டும் அல்லது எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் கேனையர்கள் என்று கருத வேண்டும்.

தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டிய எய்ம்ஸ் ஏன் வரவில்லை? என்ற கேள்விக்கு,காங்கிரஸோடு 18 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தீர்களே அப்போது ஏன் கேட்கவில்லை? என்று அமைச்சர் பேசியது அவருடைய முட்டாள்தனத்தின் உச்சகட்டம் என்றுதான் குறிப்பிட வேண்டும்.

“முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாம்” அது அவருடைய விருப்பம். ஆனால் அந்த விருப்பத்தையே உண்மை என்பதைப் போல முடவன் பேசிக் கொண்டிருந்தால், அவனை போகின்ற வருகின்ற அனைவரும் மன நோயாளி என்றுதான் கருதுவார்கள். அதுபோலத்தான் உள்ளது அண்ணாமலையாரின் நடவடிக்கை அனைத்தும்.

சமீபத்தில் கர்நாடகாவிற்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்த அண்ணாமலை இதே போல் கூலிக்கு சேர்க்கப்பட்ட கூட்டத்தின் நடுவில் வீரநடை போடுவதையும், நெஞ்சை புடைத்துக் கொண்டு நடப்பதையும், பல கோணங்களில் காட்டி கர்நாடகத்தின் சிங்கம் என்றெல்லாம் ஊதிப் பெருக்கியது பாஜகவின் கைக்கூலி ஊடகங்கள்.

அதேபோல தலைக்கு இவ்வளவு என்று கூட்டி வரப்பட்ட கூட்டத்தின் மத்தியில் வேகாத வெயிலில் கூச்சல் போட்டதற்கே தமிழகத்தின் பார்ப்பன கைக்கூலி ஏடுகளான தினமலர் துவங்கி நியூஸ் 24 என்ற செய்தி ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் சுற்றிவரும் பாஜகவின் தொழில்நுட்பக் கூலிப்படை ஆகிய அனைத்தும் சாமியாட துவங்கி கருத்தை உருவாக்குவதற்கு படாத பாடு படுகிறார்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக தீவிரமாக வேலை செய்கிறது என்பது நாடறிந்த உண்மை.

இதையும் படியுங்கள்: 

ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு தமிழகம் எப்போதும் தடையாக உள்ளது என்பதும், குறிப்பாக தமிழகத்தை ஆளுகின்ற திராவிட கட்சிகள் அதற்கு மிகப்பெரும் தடையாக உள்ளது என்ற ஆத்திரமும் எரிச்சலும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எப்போதும் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2024 தேர்தலை பயன்படுத்தி தமிழகத்தை கைப்பற்றுவதற்கு மிகப்பெரும் ஆசையுடன் இப்போதே தனது வேலையை துவங்கி விட்டது ஆர்எஸ்எஸ் பாஜக.

பிரபல கல்வி கொள்ளையர்கள், துணி வியாபாரிகள், சிறு குறு தொழில் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் காலை நக்குகின்ற முதலாளிகள், ஜோஹோ என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்துகின்ற வேம்பு ஐயர்கள் மற்றும் கருப்பு பார்ப்பனர்கள், பதிலி பார்ப்பனர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரிஜினல் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில் நூறு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா என்ற பயங்கரவாத இயக்கத்தையும், தேர்தல் அரசியலில் குறைந்தபட்சம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் போன்றவற்றை பேசிக் கொண்டிருக்கும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று பேசுகின்ற அரசியல் தற்குறிகள் தெரிந்தோ, தெரியாமலோ பாசிச பாஜகவை தமிழகத்திற்குள்ளும் கொண்டு வருவதற்கு சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான வேலையில்லா திண்டாட்டம், கடுமையான விலைவாசி உயர்வு, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை பறித்து பிற மாநிலங்களுக்கு வாரி வழங்குவது, ஜிஎஸ்டி மூலம் கொள்ளையடித்த தொகையை உரிய காலத்திற்குள் கொடுக்காமல் இழுத்தடிப்பது, நீட் தேர்வு துவங்கி பல்வேறு சட்டங்களை நீக்க மறுப்பது,, இந்திய ஒன்றிய வேலை வாய்ப்புகளில் தமிழகமும், தமிழர்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கு தொடர்ச்சியாக திட்டமிட்டு கொடுப்பது,, தூத்துக்குடியில் கொலை வெறியாட்டம் நடத்திய வேதாந்தாவை மீண்டும் கொண்டுவர துடிப்பது, தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் என்பதில் மிகக் குறைந்த தொகையை ஒதுக்குவது என்று அடுக்கடுக்காக இந்திய ஒன்றிய அரசு தமிழகத்திற்கு செய்து வரும் துரோகங்களை பட்டியலிட்டு புரிந்து கொண்டால், தமிழகத்தில் பாஜக காலூன்ற ஒரு காலத்திலும் முடியாது.

ஆனால் இதனை மீண்டும் மீண்டும் தமிழக மக்களிடம் கொண்டு செல்வதும் தேர்தல் மற்றும் தேர்தல் அரசியலுக்கு வெளியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் பாஜகவையும் வீழ்த்துவதற்கு பொருத்தமான அரசியல் முன் முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here