பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் எடை அதிகமாக இருப்பதாக காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களையே வென்றுள்ளனர் வீராங்கனைகள். இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு தரும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு தரப்படுவதில்லை என்பது அனைவரது குற்றச்சாட்டு. அதனாலயே மற்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் வெற்றிவாகை சூட முடிவதில்லை.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவிலிருந்து வெறும் 117 வீரர்களே இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை. மாறாக அவர்கள் நிர்ணயிக்கும் ‘தகுதியின்’ அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்தியாவில் சனாதன கட்டமைப்பில் பெண்கள் வெளியில் வருவதே குற்றமாக பார்க்கப்பட்டது. அரசியல் சமூக சீர்திருத்தங்களால் இன்று பெண்கள் பல துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளையாட்டுத் துறையிலும் அதிகாரம் மையங்களை பயன்படுத்திக் கொண்டு ஆணாதிக்க பாலிய வக்கிர கும்பல் பெண்களை துன்புறுத்துகிறது. இதையும் தாண்டி தான் அவர்கள் விளையாட்டில் வெற்றி நடை போடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு வீராங்கனை தான் வினேஷ் போகத். கடந்த ஆண்டு பாஜகவின் பாலியல் பொறுக்கி பிரிஜ் பூஷன் சரண் சிங்க்கு எதிராக ஆண்டு முழுவதும் போராடினார் வினேஷ் போகத்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால் ஆளும் பாசிச கும்பல் இந்த பாலியல் பொறுக்கியின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டு முழுவதும் வினேஷ் போகத் அவருக்கு உறுதுணையாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் டெல்லியின் தெருக்களில் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதனையடுத்து நடவடிக்கை எடுக்காத பாசிச கும்பலுக்கு பாடம் புகட்டும் விதமாக பஜ்ரங் புனியாகவும் வினேஷ் போகட்டும் தாங்கள் பெற்ற அர்ஜுனா விருது, கேல்ரத்னா விருதுகளை டெல்லியின் ந டைபாதைகளில் வைத்துவிட்டு, காவல்துறையிடம் இதனை பிரதமர் மோடியிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பாஜக சங்கிகள் பாலியல் குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளதா என திமிராக கேட்டனர். வீரர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சரண்சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் தான் தன்னை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் தயார்படுத்திக் கொண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றார் வினேஷ் போகத். நேற்று நடந்த மல்யுத்த போட்டியில் நான்கு முறை உலக சாம்பியனையும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனையும் தோற்கடித்தார். முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார்.
நேற்றும் இன்றும் சமூக வலைதளங்கள் முழுவதும் வினேஷ் போகத்தின் வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் “… வினேஷ் மற்றும் அவரின் போராட்டத்தை மறுத்தவர்கள், அவர்களின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பிய அனைவருக்கும் இதன் வாயிலாக பதில் கிடைத்துள்ளது. இந்தியாவை ரத்தக்கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்புக்கும் இன்று வீர மகளின் தீரம் பதிலாக கிடைத்துள்ளது. இதுதான் வெற்றியாளர்களின் அடையாளம். அவர்கள் களத்தில் இருந்து பதில்களை வழங்குகிறார்கள். வாழ்த்துக்கள் வினேஷ். உங்களின் பாரிஸ் வெற்றி டெல்லி வரை தெளிவாக கேட்கிறது” என கூறியுள்ளார்.
பாசிஸ்டுகளை எதிர்த்து களமாடிய வினேஷ் போகத்தின் வெற்றியை இப்படித்தான் கொண்டாடினார்கள் இந்திய மக்கள். ஆனால் இன்று ஒலிம்பிக் கமிட்டியின் முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது. 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது ஒலிம்பிக் கமிட்டி. இதனால் அவரின் பதக்க கனவு தகர்ந்துள்ளது.
இது பற்றி பேசிய பாஜகவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் “குத்துச்சண்டை வீரர்கள் நாங்கள் ஒரே இரவில் 4 முதல் 5 கிலோ உடல் எடை வரை குறைப்பது எப்படி என அறிந்தவர்கள். அப்படி இருக்கும் போது இதுபோன்று நடப்பது சந்தேகத்தை எழுப்புகிறது” எனக் கூறியுள்ளார்.
படிக்க:
♦ மல்யுத்த வீராங்கனைகள் மீதான அடக்குமுறை! பல்லிளிக்கும் ஜனநாயகம்!
♦ பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இந்தியா சாதிக்குமா?
ஒருவேளை வினேஷ் இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருப்பாரேயானால் இது பிரிஜ் பூஷன் சரண்சிங் உள்ளிட்ட பாஜக கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும்.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி டி உஷா “ ஒலிம்பிக் வில்லேஜ் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்தை பார்த்து இந்திய ஒலிம்பிக் சங்கமும் இந்திய அரசாங்கமும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன்” எனக் கூறியுள்ளார். பிடி உஷா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட பிறகு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி உள்ளனர் எதிர்க்கட்சிகள். எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்த விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா “வினேஷ் போகட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளது… பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக அவர் மொத்தம் ₹17,45,775 பெற்றார்.”
அமைச்சரின் இந்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். கடந்த காலங்களில் மல்யுத்த வீரர்களிடம் பாசிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை சுட்டிக் காட்டினர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை பேச அனுமதிக்க வில்லை என்ற காரணத்தினால் வெளிநடப்பு செய்தனர்.
வினேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற போது வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு “வினேஷ் நீங்கள் சாம்பியனுக்கெல்லாம் சாம்பியன்” என ‘ஆறுதல்’ ட்வீட் போடுகிறார்.
லட்சங்களில் சம்பளம் பெறும் பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள் நிச்சயம் இதனை கவனித்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. அவர் வெற்றி பெறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. இதிலிருந்தே நமக்கு சந்தேகம் கிளம்புகிறது. அதிகார மையங்களை எதிர்த்து துணிவோடு நின்று போராடிய வினேஷ் போகத் பாசிஸ்டுகளின் சூழ்ச்சிக்கு பலியாகி உள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.
எது நடந்திருந்தாலும் இந்திய மக்கள் வினேஷ் போகத் பக்கமே நிற்கிறார்கள். பாசிஸ்டுகளை எதிர்த்து களமாடிய போதே அவர் வென்றுவிட்டார்.
- நலன்
வினேஷ் போகத்தின் புகழை மறைக்க
எத்தனிக்கும் சங்கிக் கூட்ட பாசஸ்ட்டுகளே!
சூரியனை உள்ளங்கை கொண்டு மறைக்க
இயலாது. உங்களுக்குப் பாடை கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!
உண்மை தோழரே…