மனிதகுலம் தோன்றிய காலத்தில் இருந்து பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்கள் அனுபவிக்கின்ற துன்ப துயரங்கள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன அவர்களது கலை, இலக்கியங்கள்.
இத்தகைய கலை இலக்கியங்களில் கவனம் செலுத்துகின்ற போதே உடல் வலிமையை பேணுகின்ற வகையில் வீர விளையாட்டுகளில் இறங்கி தனது வலிமையை பிறருக்கு காட்டுவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தனர். அப்போதும் சரி, இப்போதும் சரி, ஆளும் வர்க்கத்தினரின் மகிழ்சிக்காகவே எமது மக்கள் விளையாட வேண்டியிருக்கிறது.
இதனால் புராதன சமூகத்தில் தோன்றிய முதல் மனிதர்களிடம் இருந்த இயல்பான குணநலன்கள் அனைத்தும் அடுத்தடுத்த வர்க்க சமுதாயங்களில் படிப்படியாக மாறத் துவங்கியது. அதிலும் தற்போதைய காலகட்டத்தில் விளையாட்டு உள்ளிட்டு அனைத்து பொழுது போக்குகளும் பண உறவாக மாறிவிட்டது. இதனையே ”மனிதனுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவை காசு பண உறவாக சிறுமையுறச் செய்து விட்டது” என்று முதலாளித்துவத்தின் குண நலன்களை தோலுரிக்கின்றார் காரல் மார்க்ஸ்.
இன்றோ விளையாட்டு போன்றவை மனிதர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவது என்பதை தாண்டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபத்தை கொட்டுகின்ற ஒரு தொழிலாக மாறியுள்ளது.
சமீபத்தில் யூரோ கோப்பைக்கான கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இது 2.4 பில்லியன் யூரோக்களை குவித்தது. அதேபோல கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் மூலம் பல்லாயிரம் பில்லியன் டாலர் வருவாய் கொட்டியது. அதற்கு முன்பு கிரிக்கெட் போட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 26 முதல் பிரான்சின் தலைநகரான பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளை முன்வைத்து ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்புவது, ஸ்பான்சர் செய்வது, விளையாட்டு வீரர்கள் தலை முதல் கால் வரை அவர்கள் பயன்படுத்துகின்ற அனைத்து பொருட்களின் மீதும் தனது கார்ப்பரேட் நிறுவனங்களில் இலட்சினைகளை பொறிப்பது ஆகிய அனைத்து விதமான அமசங்களிலும் லாபம் பார்க்கின்றனர் கார்ப்பரேட் முதலாளிகள். இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ஒட்டியும் பல்வேறு வகைகளில் லாபம் குவிப்பதற்கு துடித்துக் கொண்டுள்ளனர்.
எனினும் இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது: தனித்திறன்களை வெளிப்படுத்துவது போன்றவை மூலமாக அந்த விளையாட்டு வீரன் சார்ந்துள்ள நாடு பெருமை அடைகிறது என்ற வகையிலேயே ஒலிம்பிக் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளில் பெரிய அளவிற்கு எதனையும் சாதித்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகின்ற காலங்களில் பல்வேறு நாடுகள் பதக்கங்களை குவித்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவின் வீரர்கள் ஏதாவது ஒரு பதக்கம் வாங்க மாட்டார்களா என்று ஏங்க வைக்கின்ற நிலைமை தான் நீடிக்கின்றது.
அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் வகிக்கின்ற பார்ப்பன கும்பல் விளையாட்டு துறையை விட்டு வைப்பதில்லை. தேர்வு கமிட்டி முதல் விளையாட்டு வீரர்களாக தங்களை பதிவு செய்வது வரை அனைத்திலும் பார்ப்பனக் கும்பல் ஒரு தனி முன்னுரிமை பெற்றுக் கொள்வதால் இயல்பான திறமை உள்ள பல பேர் ஒழித்து கட்டப்படுகின்றனர்.
143 கோடி பேர் கொண்ட ஒரு நாட்டில் இருந்து அனைத்து துறைகளிலும் சிறப்பாக பரிணமிக்கின்ற விளையாட்டு வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தற்செயலான சிக்கல் அல்ல.
படிக்க: டோக்கியோ 2020 ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆதிக்க சாதி அடக்குமுறை! வெட்கக்கேடு!
லாப வெறி பிடித்த முதலாளித்துவ ஓநாய்கள் எவ்வாறு விளையாட்டை பணம் கொழிக்கும் மரமாக பார்க்கிறதோ, அதேபோல இந்தியா போன்ற நாடுகளில் அதிகார வர்க்கம் இதனை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்துக் கொள்வதற்கு ஒரு வழியாக விளையாட்டு துறையை பயன்படுத்துகின்றனர். இதனால்தான் திறமையுள்ள பலர் சாதாரண விளையாட்டுப் போட்டி முதல் ஒலிம்பிக் வரை பங்கு கொள்ள முடிவதில்லை.
மிகவும் பழமை வாய்ந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது, 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா அறிமுகமானது. கல்கத்தாவில் பிறந்த நார்மன் பிரிட்சார்ட், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே தடகள வீரர் – சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் படி, இது மற்ற வரலாற்று பதிவுகளில் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும். பிரிட்சார்ட் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவை பதக்கப் பட்டியலில் பஙெடுக்க வைத்தார்.
1900 ஆம் ஆண்டு அதாவது போலி சுதந்திரத்திற்கு முந்தைய ஒலிம்பிக்கிலிருந்து இந்தியா பங்கெடுத்த கடந்த 120 ஆண்டுகளில் நடந்துள்ள 24 ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 35 பதக்கங்களையே வென்றுள்ளது, கடைசியாக டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வென்று இந்தியா 48 வது இடத்தைப் பிடித்தது,
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுப்பதற்கு சுமார் 117 விளையாட்டு வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களது திறன்களை வளர்த்துக் கொண்டு கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். இந்த வெற்றி நாட்டின் முயற்சியாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் விளையாட்டு துறையை பொறுத்த வரை திறமையாளர்களை கண்டுபிடிப்பது முறையாக வளர்ப்பது ஊக்குவிப்பது பயிற்றுவிப்பது போன்றவற்றை செய்வதற்கு பொருத்தமாக தற்போதைய அரசு கட்டமைப்பு இல்லை.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வீர்ர்களை உருவாக்க இந்திய பொதுத் துறையான பாரத் பெட்ரோலியம், ரிலையன்ஸ் பவுண்டேசன், அதானி மற்றும் ஆதித்திய பிர்லா அறக்கட்டளை ஆகியவை ஒலிம்பிக் அசோசியேசனுடன் இணைந்துள்ளது.
தற்போதைய அரசு கட்டமைப்பின் கீழ் தேசிய விளையாட்டான ஹாக்கி ஊக்குவிக்கப்படுவதில்லை. அதுபோலவே தனித்திறன்களை வளர்ப்பதற்கு பொருத்தமான விளையாட்டு மையங்களை உருவாக்கி நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள திறமைசாலிகளை கண்டுபிடித்து உருவாக்க முயற்சிப்பதில்லை. இதனால்தான் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம் பெறாமல் போவதும் அல்லது கடைசி இடத்திற்கு தள்ளப்படுவதும் என்ற நிலைமை நீடிக்கின்றது.
அரசியல், பொருளாதார மாற்றம் மட்டுமல்ல, பண்பாடு மற்றும் விளையாட்டு துறைகளில் பொருத்தமான முன்னேற்றத்தை கொண்டு வருவதற்கு தற்போதைய அரசு கட்டமைப்பை ஆக்கிரமித்து மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் காவி பாசிச கும்பலை தூக்கி எறிந்து விட்டு ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவும் போது அனைத்து துறைகளிலும் மாற்றம் வருவதை போல விளையாட்டு துறையிலும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
- மருது பாண்டியன்.