ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஆதித்ய பிர்லா குழுமத்தின் துணை நிறுவனம். இது நிலக்கரியை சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கும் நிறுவனம். இந்த நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்றதை விட 3.045 மில்லியன் டன் அளவு நிலக்கரியை அதிகப்படியாக தோண்டி எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
2011 ஆம் ஆண்டு சுற்றுச்சூழலை கெடுக்கும் வகையில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் இயக்குனரான சாந்தினி, ஹிண்டல்கோ நிறுவனத்திற்கு முறைகேடாக கொடுத்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.
இப்படிப்பட்ட முறைகேடு வாஜ்பாயின் ஆட்சிக்காலமான 2000 வது ஆண்டிலிருந்து தொடங்கி விட்டதாக சிபிஐ கூறுகிறது. 2011 – 13 காலகட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி (environment clearance) பெறுவதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஹிண்டல்கோ நிறுவனத்தின் அதிகாரிகள் மீது 2016 ஆம் ஆண்டில் சிபிஐ முதற்கட்ட விசாரணையை பதிவு செய்தது. இந்த நிறுவனத்தில் சோதனை செய்த பொழுது சிக்கிய டைரியில் இருந்த, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியதாக சிபிஐ கூறியது.
எட்டு ஆண்டுகள் முதல் கட்ட விசாரணையை நடத்திய சிபிஐ இப்பொழுது அந்த விசாரணையை முழுமையான விசாரணையாக கொண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் கட்ட தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இப்படிப்பட்ட ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது விருப்பம், மக்களின் விருப்பம்.
ஆனால் சிபிஐ -யின் விருப்பம் அது அல்ல. ஒரு முதல் கட்ட விசாரணையை முடிப்பதற்கு சிபிஐ -க்கு எட்டு ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது உண்மை அல்ல. அதேபோல இப்பொழுது இந்த நிறுவனத்திற்கு எதிரான சிபிஐ -யின் செயல்பாடுகளுக்கு காரணம் ஊழலை தடுக்க வேண்டும் என்ற நோக்கமும் அல்ல.
இந்தியா சிமெண்ட்ஸ் என்ற நிறுவனத்தை கைப்பற்றுவதற்கு அதானியின் ஏசிசி சிமெண்ட் நிறுவனம் முயன்றது. அதே சமயம் இந்த ஹண்டல்க்கோ நிறுவனம் அதானி குடும்பத்திற்கு எதிராக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற முனைந்தது.
மோடியின் நண்பரான அதானியின் நிறுவனத்திற்கு எதிராக ஹிண்டல்கோ செயல்பட்டதால் தான் சிபிஐ 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிண்டல்கோ நிறுவனத்தின் மீது பாய்ந்துள்ளது என்பதுதான் இதில் உள்ள செய்தி.
ஊழலை தடுக்க வேண்டும் என்பதற்காகவோ, நாட்டில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பதற்காகவோ சிபிஐ வழி நடத்த வேண்டும் என்று காவிகள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை. அது இந்த விசயத்திலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
படிக்க:
♦ மோடி ரெய்டு கொள்ளை: 10 வருட பார்முலா!
♦அதானி குழுமத்தின் வர்த்தக மோசடிகளுக்கு பின்புலமாய் இருந்த மர்ம மனிதன் வினோத் அதானி!
சிபிஐ -யையும் ED -யையும் தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் காவிகள் வல்லவர்கள். காவி பாசிஸ்டுகளுக்கு இவற்றைப் பயன்படுத்தி தங்கள் கட்சிக்கு கல்லா கட்டவும் தெரியும்; இவற்றை பயன்படுத்தி தங்களுக்கு எதிரான கட்சிகளை உடைக்கவும், மிரட்டவும் அதன் மூலம் தங்கள் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை கூட்டிக் கொள்ளவும் தெரியும்.
இவற்றை புரிந்து கொள்வதற்கு கீழ்க்கண்ட விவரங்களை பரிசீலித்தால் போதும்.
2014 முதல் 2024 வரை ED ஆல் (PMLA இன் கீழ்) மொத்தம் 5,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்குகளின் கீழ் 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஆண்டுகளில் 40 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது போக மூன்று வழக்குகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆக 5,297 வழக்குகளில் வெறும் 43 வழக்குகள் மட்டுமே வழக்கு நடத்தப்பட்டு ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகள் அனைத்தும் சிபிஐ -யால் தாலாட்டி தூங்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
பிஜேபி -க்கும் அம்பானி – அதானி வகையறாக்களுக்கும் தேவைப்படும் பொழுது இந்த வழக்குகள் தட்டி எழுப்பப்பட்டு பொதுவெளியில் நடமாட விடப்படும்.
— குமரன்






